Advertisements

2018- இனி அரசியல் இருவர் கையில்!

பிரமாண்டமான கழுகு ப்ளோ-அப் அச்சிட்ட காலண்டருடன் உள்ளே நுழைந்தார் கழுகார். கைகுலுக்கி, ‘‘உமக்கும் ஜூ.வி வாசகர்களுக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துகள்’’ என்றார். அவர் முன்கூட்டியே சொல்லியிருந்த தலைப்பை வைத்து டிசைன் செய்திருந்த ஜூ.வி அட்டையைக் காண்பித்தோம்.

‘‘ஸ்டாலினுக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் முக்கியமான ஆண்டாக புத்தாண்டு இருக்கப்போகிறது. ஜெயலலிதா மறைவு, கருணாநிதி உடல்நலமின்றி வீட்டுக்குள் இருப்பது போன்ற காரணங்களால், தமிழக அரசியல் 2017-ல் வித்தியாசமாக இருந்தது. இதுவரை அரசியல் பேசாத பலரும் அரசியல் பேசினார்கள். திடீர் தலைவர்கள் உருவானார்கள். ஆனால், 2018-ல் பழையபடி இருதுருவ அரசியலுக்குத் தமிழக அரசியல் போகக்கூடும். அந்த இரண்டு துருவங்களாக ஸ்டாலினும் தினகரனும் இருப்பார்கள்’’ என்று முன்னோட்டம் கொடுத்தார் கழுகார்.
‘‘ஆர்.கே. நகர் தேர்தல் முடிவை வைத்துச் சொல்கிறீரா?’’ என்று கேட்டோம்.
‘‘ஆமாம்.’’
‘‘ஜெயலலிதா இல்லை, ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை, அ.தி.மு.க-வில் பிளவு… எல்லாம் இருந்தும் தி.மு.க சறுக்க என்ன காரணம்?’’

‘‘நடக்கும் ஆட்சியைக் கலைத்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற நம்பிக்கையை ஆர்.கே.நகர் மக்களிடம் தி.மு.க வலிமையாக ஏற்படுத்தவில்லை. ஆனால், தினகரன் தனக்கு வாய்ப்புக் கிடைக்கும் ‘கேப்’பில் எல்லாம், அந்த நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்திக்கொண்டே இருந்தார். அதுதான், தி.மு.க கோட்டைவிட்ட மிக முக்கியமான இடம். இன்னொரு முக்கியக் காரணம், பணம். கடந்த வாரம், ‘ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அணி, ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்போகிறது’ என்ற தகவல் பரவியதும், தி.மு.க ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், ‘இப்போது அவர்கள் 6 ஆயிரம் கொடுக்கிறார்கள் என்றால், நாம் எவ்வளவு கொடுப்பது? இது மிகப்பெரிய கமாடிட்டியாகப் போகிறது. அதனால், இந்தத் தேர்தலைப் பணம் கொடுக்காமல் எதிர்கொள்வோம்; என்ன நடக்கிறது என்று பார்ப்போம்’ என்று ஸ்டாலின் தெளிவாகச் சொல்லிவிட்டார். அதைத்தான் தேர்தல் முடிவுக்குப் பிறகு வெளியிட்ட அறிக்கையிலும், ‘தேறுதல் மடல்’ என்ற பெயரில் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்திலும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.’’
‘‘ஸ்டாலின் தொண்டர்களை உற்சாகப் படுத்தியிருக்கலாமே?’’
‘‘அவர், இந்தத் தேர்தலை மிக அலட்சியமாகக் கருதிவிட்டார். கடந்தமுறை ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டபோதே, 50 ஆயிரத்துக்கும் மேலான வாக்குகள் கிடைத்தன. ‘இந்தமுறை ஜெயலலிதா இல்லை; தினகரன் புண்ணியத்தில் அ.தி.மு.க வாக்குகள் இரண்டாக உடையும்; கூட்டணிக்கட்சிகளின் தயவில், நமக்குக் கூடுதலாக 10 ஆயிரம் வாக்குகள் கிடைக்கும்; நடுநிலை வாக்காளர்கள், பொதுமக்கள் சார்பில் 10 ஆயிரம் வாக்குகள் கிடைக்கும்’ என்று கணக்குப் போட்டுவிட்டார். ஆர்.கே. நகர் தேர்தல் முடிவு வெளியாவதற்கு முந்தின நாள்கூட, தி.மு.க வெற்றி பற்றி நம்பிக்கையாக ஸ்டாலின் பேசியிருக்கிறார். ‘மூன்றாவது இடத்துக்கு யார் போவார்? தினகரனா… மதுசூதனனா?’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் கேட்டாராம்.’’
‘‘முடிவு அவருக்கு அதிர்ச்சி தந்திருக்குமே?’’
‘‘அந்த அதிர்ச்சியில்தான் ஒரு கமிட்டியை அமைத்திருக்கிறார். ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் தி.மு.க-வினர் செயல்பாடு பற்றி ஆராய்வதற்காக தி.மு.க கொறடா சக்கரபாணி, தி.மு.க சட்டப்பிரிவுச் செயலாளர் கிரிராஜன், துணைச் செயலாளர் கண்ணதாசன் ஆகியோர் கொண்ட மூன்று நபர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு டிசம்பர்  31-ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. இது ஒருபுறமிருக்க, ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆலோசனை நடக்கிறது.’’

‘‘டிசம்பர் 29-ம் தேதி தி.மு.க உயர்நிலை செயல்திட்டக் குழு கூடுவதாக திடீரென அறிவிக்கப்பட்டுள்ளதே? 31-ம் தேதிதான் ஆர்.கே. நகர் பற்றிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதற்கு முன்பு கூடும் உயர்நிலை செயல்திட்டக் குழுவில் வேறு ஏதும் இருக்கப்போகிறதா?’’
‘‘புரிகிறது. ‘2ஜி வழக்கில் விடுதலையாகி வந்திருக்கும் ஆ.ராசா, கனிமொழிக்கு புதிய பொறுப்புகள் கொடுக்கப்படுமா?’ என்று கேட்கிறீர்கள். ஆ.ராசா இப்போது தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். அவருக்குத் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. தி.மு.க-வில் எப்போதும் துணைப்பொதுச் செயலாளர்களாக மூன்று பேர் இருப்பார்கள். ஒரு பதவி பொதுவானதாகவும்; மற்றொன்று, தலித் ஒருவருக்குப் பிரதிநிதித்துவம் அளிப்பதாகவும்; மூன்றாவது, பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிப்பதாகவும் இருக்கும். இப்போது, தி.மு.க-வின் துணைப்பொதுச்செயலாளர்களாக  ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன் இருக்கின்றனர். இவர்களில் வி.பி.துரைசாமி மாற்றப்பட்டு அந்த இடத்துக்கு ராசா கொண்டுவரப்படுவார் என்று தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கனிமொழி, புதிய பொறுப்புகள் எதையும் கேட்கவில்லை. அவர், இப்போது மகளிரணித் தலைவியாக இருக்கிறார்; தி.மு.க-வின் நாடாளுமன்றக்குழுத் தலைவராகவும் இருக்கிறார். இதுபற்றி கனிமொழியிடம் சிலர் பேச முயன்றபோது, ‘இப்போது இருக்கும் பொறுப்புகளே எனக்கு நிறைவாக இருக்கிறது. அதில், முன்பைவிட வேகமாக செயல்படுவதுதான் என் நோக்கம்; புதிய பொறுப்புகள் எதையும் நான் எதிர்பார்க்கவில்லை’ என்று சொல்லிவிட்டார். அதனால், அதில் எந்தப் பிரச்னையும் இருக்காது.’’
‘‘ஆனால், கனிமொழியும் ராசாவும் டெல்லியிலிருந்து சென்னை வந்தபோது சரியாக வரவேற்பு கொடுக்கவில்லை என ஒருதரப்பு சொல்கிறதே?’’
‘‘ஆமாம். 2011-ல் திகார் ஜெயிலிலிருந்து கனிமொழி வந்தபோது இருந்த உற்சாகம், இந்த முறை மிஸ்ஸிங்! அப்போது, விமான நிலையம் முதல் கோபாலபுரம்வரை பேனர்களும் கொடிகளும் அணிவகுத்தன. தொண்டர்களின் ஆட்டமும் பாட்டும் அதிரவைத்தன. இத்தனைக்கும் அது ஜாமீனில் வெளிவந்த விடுதலைதான். ஆனால், இந்த முறை விடுவிக்கப்பட்டு முழுமையான தீர்ப்பு வந்துவிட்டது. ஒருவகையில் கனிமொழி, ராசா மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல இது; தி.மு.க-வுக்கும் பெரிய நிம்மதியைக் கொடுத்த தீர்ப்பு. அப்படியிருந்தும், கட்சியின் முன்னணித் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பெருமளவில் வரவில்லை. இந்த முறை   பெரிய கொண்டாட்டம் இல்லை. அந்த வருத்தம் கனிமொழி தரப்பிடம் இருந்தது.’’
‘‘என்ன காரணம்?’’
‘‘தலைமையிலிருந்து முறையான அறிவிப்பு எதுவும் வராமல் போனதுதான் உற்சாகக் குறைவுக்குக் காரணமாம்! விமான நிலையத்துக்கு வந்த கனிமொழியை வரவேற்க அந்தப் பகுதி மாவட்டச் செயலாளர் என்ற முறையில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் மட்டுமே சென்றுள்ளார். ஸ்டாலின், டி.ஆர்.பாலு, துரைமுருகன் ஆகியோர் காத்திருந்தனர். கனிமொழியும் ராசாவும் வி.ஐ.பி ரூமுக்கு வந்தவுடன் ஸ்டாலின் முதலில் சால்வை அணிவித்தார். தொடர்ந்து டி.ஆர்.பாலுவும் துரைமுருகனும் சால்வை அணிவித்துள்ளார்கள். கனிமொழி, ஸ்டாலினைக் கட்டியணைத்து சால்வை போட்டுள்ளார். இந்த வைபவங்கள் முடிந்த பிறகு, கோபாலபுரத்துக்குக் கிளம்பி னார்கள். வழியில் சில இடங்களில் மட்டுமே கனிமொழியை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருந்தன. வெளிமாவட்டத்தினர்தான் அந்த போஸ்டர்களையும் ஒட்டியிருந்தார்கள். மறுநாள் வெளியான ‘முரசொலி’யிலும் மிகப்பெரிய விளம்பரங்கள், வரவேற்புகள் இல்லை. அதே நேரம், கனிமொழியின் வீடான சி.ஐ.டி காலனியில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. அந்தப் பகுதி முழுவதும் கனிமொழியின் ஆதரவாளர்கள் ஃப்ளெக்ஸ் வைத்து அமர்க்களப்படுத்தி விட்டார்கள்.’’
‘‘ஓஹோ! கருணாநிதி நீண்ட நாள்களுக்குப் பிறகு சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்தாரே?’’
‘‘ஆம். கோபாலபுரத்தில் அன்பழகன், கருணாநிதி இருவருமே வரவேற்பறையில் காத்திருந்து, கனிமொழிக்கும் ராசாவுக்கும் வரவேற்பு அளித்தனர். கனிமொழிதான் விடுதலையான செய்தியை கருணாநிதியின் காதில் சொல்ல, அவரும் மகள் கனிமொழியின் கன்னத்தைக் கிள்ளி முத்தம் கொடுத்தார். ராசா விடுதலையான செய்தியை துரைமுருகன் சத்தமாக கருணாநிதி காதில் சொன்னதும் சிரிப்பைப் பதிலாகத் தந்தார் கருணாநிதி. துரைமுருகன் உணர்ச்சிவசப்பட்டதால், கண்களிலிருந்து கண்ணீர் ததும்பியது.’’

‘‘அ.தி.மு.க தரப்பில் நடப்பதைச் சொல்லும்!’’
‘‘ஆர்.கே. நகர் ரிசல்ட் வெளியாகிக்கொண்டிருந்த ஞாயிற்றுக்கிழமை… தினகரன் உற்சாகத்தில் இருந்த அந்த நேரத்திலேயே எடப்பாடி பழனிசாமி அலெர்ட் ஆகிவிட்டார். தினகரன் என்ன செய்வார் என்பது தெரிந்திருந்ததால், அவரை முந்திக்கொள்ள எடப்பாடி திட்டமிட்டார்.’’
‘‘என்ன செய்தார்?’’
‘‘தினகரன் பக்கம் போனதால், 18 எம்.எல்.ஏ-க்கள் பதவி இழந்திருக்கிறார்கள் அல்லவா? அதில் 15 பேருக்கு போன் போனது. ‘அவரை நம்பிப் போன நீங்களெல்லாம் இப்போது பதவி இல்லாமல் இருக்கிறீர்கள். ஆனால், அவர் இப்போது சட்டசபைக்கு வந்துவிடுவார். நீங்கள் உள்ளே வர முடியாது. என்ன செய்யப்போகிறீர்கள்?’ என உருக்கமாகப் பேசினார்களாம். ‘இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. கவர்னரிடம் கடிதம் கொடுத்ததால்தான், நீங்கள் பதவியை இழந்தீர்கள். மீண்டும் கவர்னரிடம் போய், பழைய கடிதத்தைத் திரும்பப் பெறுவதாக ஒரு கடிதம் கொடுத்துவிட்டால் போதும். அதன் நகலை இணைத்து, சபாநாயகரிடம் ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்தால் போதும். உங்களுக்கு மீண்டும் பதவி கிடைத்துவிடும்’ என்று ஆசை காட்டப்பட்டதாம்.’’
‘‘அது தொடர்பான வழக்குதான் நீதிமன்றத்தில் இருக்கிறதே?’’
‘‘அதைத்தான் அந்த எம்.எல்.ஏ-க்களில் சிலர் கேட்டார்கள். ஆனால், ‘நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு சபாநாயகரைக் கட்டுப்படுத்தாது. பதவிநீக்கத்தை ரத்து செய்து சபாநாயகர் உத்தரவு போட்டு, அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் போதுமானது. உங்களுக்குப் பதவி கிடைத்துவிடும்’ என்றார்களாம். ‘தங்கள் தரப்பில் அதிருப்தியுடன் இருக்கும் எம்.எல்.ஏ-க்களில் சிலரை தினகரன் இழுப்பார்’ என எடப்பாடி நினைக்கிறார். அப்படி ஏற்படும் இழப்புகளைச் சமாளிப்பதோடு, தினகரன் பக்கம் இருப்பவர்களை இழுத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவும் எடப்பாடி திட்டம் போடுகிறார்.’’
‘‘இது எங்கே போய் முடியும்?’’
‘‘தெரியவில்லை. தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பாகவே, எடப்பாடி தரப்பில் இருக்கும் மூன்று எம்.எல்.ஏ-க்கள் தினகரனுக்கு போன் செய்து வாழ்த்து சொன்னதாகத் தகவல். இனி ஒவ்வொரு நாளிலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம். ‘அமைச்சர் பதவி’ என்ற தூண்டிலைப் போட்டு ஏராளமான மீன்களைச் சிக்க வைக்கமுடியும் என்பது தினகரனின் நம்பிக்கை.’’
‘‘அது நடக்குமா?’’
‘‘எதையும் நிச்சயமாக இப்போது சொல்ல முடியாது. தினகரன் தரப்பில் இருக்கும் சீனியர் ஒருவர், தனக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொண்ட ஒரு தகவலைச் சொல்கிறேன் கேளும். எடப்பாடியிடமிருந்தே நேரடியாக ஒரு தூது வந்ததாம். ‘உங்களுக்கும் எங்களுக்கும் பொது எதிரி பன்னீர்செல்வம்தான். இப்போது அவரை விலக்கிவைத்துவிடலாம். இதுபற்றி டெல்லியிடம் பேசி நாங்கள் சரிக்கட்டிவிடுகிறோம். எங்களுடன் வந்துவிடுங்கள். பன்னீர் வகிக்கும் துணை முதல்வர் பதவியை உங்களுக்குத் தந்துவிடுகிறோம்’ எனத் தினகரனிடம் சொன்னார்களாம். தினகரன் அட்டகாச சிரிப்பொன்றை உதிர்த்து, ‘இப்போதே என் கைவசம் 60 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். நான்தான் முதலமைச்சர். எனக்கு யாரும் துணை முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்கத் தேவையில்லை’ என்று சொல்லி அனுப்பினாராம்.’’

‘‘முரண்பட்டவர்கள் இணைவதை டெல்லி ஆசீர்வதிக்குமா?’’
‘‘தமிழக அரசியலில் எது நடந்தாலும் இனி ஆச்சர்யப்பட முடியாது. தினகரன் வெற்றியை வாழ்த்தி ஒட்டப்பட்ட சில போஸ்டர்களில், ‘வழக்குக்கும் பயந்ததில்லை… வடதிசையையும் வணங்கியதில்லை’ என இருந்த வாசகங்களை மத்திய உளவுத்துறை குறிப்பெடுத்துள்ளது. அதுமட்டுமல்ல… ஒரு நடுநிலையாளர் மூலமாகத் தேர்தலுக்கு முன்பு தினகரனுக்கு எடப்பாடி தகவல் அனுப்பினாராம். ‘ஆர்.கே. நகரில் தினகரன் தோற்றுவிட்டால் பிரச்னை இல்லை. ஜெயித்தால் அவர் ஜெயிலுக்குப்போக வேண்டியிருக்கும்’ என்பதுதான் அந்தத் தகவல். ‘ஃபெரா அபராத வழக்கில் தினகரனுக்கு நெருக்கடி விரைவில் முற்றக்கூடும்’ என்பது யூகம்.’’
‘‘தேர்தல் தோல்விக்குப் பிறகு தினகரன் ஆதரவாளர்கள் ஒன்பது பேரைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்களே?’’
‘‘ஆமாம். திங்கள்கிழமை காலை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் காரசாரமான கூட்டம் நடந்தது. அதில் துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி, ‘தினகரனுக்குப் பக்கபலமாக இருந்த வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், கலைராஜன் போன்றவர்கள் இன்னும் அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்களாகத் தொடர்கி றார்கள். நம்மை எதிர்த்து அரசியல் செய்துவரும் அவர்களை, கட்சியை விட்டு ஏன் நீக்கவில்லை. அவர்களை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் புதிய நிர்வாகிகளைப் போட்டிருந்தாலே உற்சாகமாக கட்சிக்காரர்கள் வேலை பார்த்திருப்பார்கள். நீங்கள் தலைமைப் பொறுப்புக்கு வந்தபிறகு எந்த நிர்வாகியையும் நியமிக்கவில்லை. ஆனால், தினகரன் தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்துவந்தார். நாம் துரோகிகளைக்கூட நீக்க முடியாமல் இருந்தது பெரும் தவறு’ என்று பேசினார். பிறகுதான் இந்த அறிவிப்பு வெளியானது. பன்னீரும் எடப்பாடியும் எப்போதும் இல்லாத ஆவேசத்துடன் பேசினார்கள்’’ என்ற கழுகார் பறந்தார்.

Advertisements
%d bloggers like this: