Advertisements

எக்ஸ்ரே ஒரு நொடியில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்!

ருத்தருக்குக் கால் உடைஞ்சி போகுதுன்னு வெச்சுக்குவோம். நம் முன்னோர்கள் என்ன பண்ணிட்டிருந்தாங்கன்னா… அந்த ஆளைப் படுக்கப் போட்டு இரண்டு பக்கமும் நாலு பேர் உட்கார்ந்து கையையும் காலையும் அமுக்கிப் பிடிச்சுக்குவாங்க. ஒருத்தர் மேலே இருந்து கொஞ்சம் கொஞ்சமா கையை வெச்சு அமுக்கிப் பார்த்தே அவரோட அனுபவத்தை வெச்சுக் குத்துமதிப்பா எத்தனை இடத்தில, என்ன டிசைன்ல உடைந்திருக்கும்னு கணக்குப் போட்டு ஒரு தப்பையை வெச்சுக் காலைச் சுத்தி இறுக்கிக் கட்டிவிட்டுருவார். 

பத்து நாளைக்கு ஒரு தடவை திறந்து பார்த்து, சரியாச்சுன்னா பெருமையை அவர் எடுத்துக்குவார். ஆகலைன்னா, சாமி மேலையும் விதி மேலையும் பழியைப் போட்டு முடிச்சுக்குவார். அவன் வலியோடவே அலைய வேண்டியதுதான். இப்படிக் கெட்டிக்காரத்தனமா சிகிச்சை செய்துட்டிருந்த அனைத்துலக முன்னோர்களுக்கும் 1895-ல  ஓர் இன்ப அதிர்ச்சி கிடைச்சுது. ஆமா, இனிமே குத்துமதிப்பா செய்ய வேணாம். `உடலை ஊடுருவும் ஒரு கதிரை நான் கண்டுபிடிச்சுட்டேன்’னு ஜெர்மனியைச் சேர்ந்த வில்லெம் ரோன்ட்கன் அறிவிச்சிருந்தார்.
அதுவரைக் குழம்பிக்கிட்டிருந்த வைத்தியர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டாங்க.  கண்டுபிடிக்கப்பட்ட வெகு சில நாள்களிலேயே பயங்கர ஃபேமஸ் ஆனது, என்ன பெயர் வைப்பதுன்னு தெரியாமல் X-ray என்று பெயர் சூட்டப்பட்ட அந்தக் கதிர்.

ரோன்ட்கன் ஒரு பிசிக்ஸ் ஆராய்ச்சியாளர்.  வேற ஏதோ ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தவர் தன்னுடைய அறையின் ஒரு மூலையில் ஏதோ வெளிச்சம் தெரிய… அது எங்க இருந்து வருதுன்னு தெரிஞ்சிக்கத் தேடியிருக்கார். வெளிச்சம் வருவதற்கான வழியே இல்லாத அந்த அறையின் பல்வேறு தடுப்புகளைக் கடந்து, பக்கத்து அறையில் இருந்து வருவதை அறிந்து, அடர்த்தியான கறுப்புத் துணியைப் போட்டு  மூடிப்பார்த்தும் அந்த வெளிச்சம் வர…. இரும்புபோன்ற பொருள்களைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் துளைக்கும் கதிர் அது எனத் தெரிந்துகொண்டார்.
உடனே, `போட்டோ எடுக்கலாம் வா’ன்னு மனைவியைக் கூப்பிட்டிருக்கார். அந்தம்மா மேக்கப் எல்லாம் போட்டு, ‘ஏங்க மோதிரம் போட்டோல நல்லா வரணும் பாத்துக்கோங்க’ன்னு சொல்லி போஸ் கொடுத்திருக்காங்க. இவர் எடுத்த படத்துல கை எலும்பும் மோதிரமும் மட்டுமே தெரிய. ‘என்னையப் பேய் மாதிரியா எடுத்து வெச்சிருக்க’ன்னு அந்தம்மா கொலை வெறியானது வரலாறு.  ஆனால், உலகின் முதல் எக்ஸ்ரே  மாடல்  என்ற  பெருமை அந்தம்மாவுக்குக் கிடைத்தது.

மருத்துவ உலகில் எக்ஸ்ரே மிகப்பெரிய மாறுதலைக் கொண்டு வந்தது. ஏற்கெனவே வளைத்து வளைத்துப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜெர்மனி 1897-லேயே எக்ஸ்ரேவைப் பயன்படுத்தி `குண்டு எங்க இருக்கு’ என அறிந்து சிகிச்சை கொடுக்க ஆரம்பித்தது. ரோன்ட்கன் பேடன்ட் வாங்க மறுத்து விட்டதால், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் என்று உலகம் முழுதும் பரவியது எக்ஸ்ரே.
மருத்துவப் பயன்பாடு தவிர்த்து செருப்புக் கடைகளில், ‘உங்கள் கால் எலும்புக்குப் பொருத்தமான செருப்பை, எக்ஸ்ரே உதவியுடன் கண்டுபிடித்துத் தருகிறோம். தரம் நிரந்தரம்’னு பிசினஸுக்கும் பயன்பட்டது. கொஞ்சம் முத்தின கேஸ்கள், `எக்ஸ்ரேவை வைத்துப் புதையலைக் கண்டுபிடிக்கப் போகிறோம்’னு கிளம்பிப் போனது தனிக் கதை.  

கண்டுபிடிக்கப்பட்ட 10 ஆண்டுகளுக்குள், 1901-ல் ரோன்ட்கன்க்கு நோபெல் பரிசு கிடைத்தது. ஆனால், தாமஸ் ஆல்வா எடிசன், டெஸ்லோ மாதிரியான பிரபலங்கள் எக்ஸ்ரேல வேலை பார்த்துக் கண்ல ஏதோ எரிச்சல் வருதுன்னு புகார் சொல்ல, எடிசனின் அசிஸ்டென்ட் டாலி, 1904-ல் சருமப் புற்றுநோயால் மரணமடைந்தார். அவ்ளோதான்… அதுவரைக்கும் எக்ஸ்ரேவை வைத்து விளையாடிட்டிருந்தவன் எல்லாம் துண்டைக் காணோம், துணியைக் காணோம்னு ஓட, மருத்துவ உலகம் விழித்துக்கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது.
இன்னிக்கு சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன், எக்ஸ் ரே என மருத்துவத்தில் துல்லியமாக நோயைக் கண்டறியவும், விமானம், கப்பல் போக்குவரத்துகளில், ஆபத்தான பொருள்களைக் கண்டறியவும்  தீவிரவாதிகளை,  கடத்தல்காரர்களை, வெடிபொருள்களைக் கண்டறியவும் உலகம் முழுக்க எக்ஸ்ரே பயன்படுகிறது.  எக்ஸ்ரே இல்லாத உலகத்தை இதே வசதிகளுடன் நினைத்துக்கூடப்  பார்க்க முடியாது.  ஒவ்வொருவர் பையாக ஆள்களை வைத்துச் சோதனை செய்து, அதன் பின் விமானத்தைக் கிளப்புவதைக் கற்பனை செய்து பாருங்கள். உலகம் 100 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடும்.
கட்டுப்பாடுகளைச் சரிவரக் கடைப்பிடிக்காமல் இன்றும் பலரைக் கேன்சருக்கு பலி கொடுக்கிறோம். எக்ஸ்ரேபோல இன்னும் பல விஷயங்கள், பல்வேறு அதிசயங்கள் ஏதோ ஒரு நொடியில் கண்டுபிடிக்கப் படக் காத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றை  ஒளித்துவைத்து இயற்கை, பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறது.

Advertisements
%d bloggers like this: