Advertisements

ஹேப்பியா சாப்பிடலாம் ஹெல்த்தி ஸ்நாக்ஸ்

நாள் முழுவதும் முழு எனர்ஜியுடன் இருந்தால்தான் பள்ளி, பணியிடங்களில் சுறுசுறுப்பாக வளையவர முடியும்.  அதற்குக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் தங்கள் உணவுத் திட்டத்தை முறைப்படுத்த வேண்டியுள்ளது. மூன்றுவேளை உணவில் மட்டும் சரிவிகிதச் சத்துணவைப் பின்பற்றி விட்டு, இடையில் கொறிக்கும் நொறுக்குத்தீனிகள்  கொழுப்பு மிகுந்தவையாக இருந்தால்

கண்டிப்பாக அவை உடல் நலனைக் கெடுக்கும். உடல்பருமன் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு ஆரோக்கியமற்ற  நொறுக்குத்தீனிகளே முக்கியமான காரணம். நாள் முழுக்க நீங்கள் தேனீயாய் பறக்க நொறுக்குத்தீனியிலும் போதிய சத்துகள் அவசியம். ஹெல்த்தி ஸ்நாக்ஸின் அவசியம் குறித்து விளக்குகிறார், சேலத்தைச் சேர்ந்த டயட்டீஷியன் சங்கீதா.


ஏன் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும்?

மூன்று வேளையும் ஒரே மாதிரியான உணவு வகைகளை உட்கொள்வது முழுமையான ஆரோக்கியம் தராது. ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகள் உடல் வளர்ச்சிக்கும் திறன் மேம்பாடுகளுக்கும் கைக்கொடுக்கும். அதிகளவில் மாவுச்சத்து, சர்க்கரை  சேர்ந்த ஸ்நாக்ஸையும் தவிர்க்க வேண்டும். நீங்கள் சாப்பிடும் ஸ்நாக்ஸில் புரதச்சத்து, நார்ச்சத்து, நல்ல கொழுப்பு, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் ஆகியவை இருக்க வேண்டும்.


எப்போதெல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்?

வழக்கமான உணவை, காலை 8 மணி, மதியம் 2 மணி, இரவு 8 மணி எனச் சாப்பிடலாம்.  காலை 11 மணி, மாலை 4 மணி, 6 மணிக்கு ஸ்நாக்ஸ் எடுத்துக்கொள்ளலாம். எல்லா நேரத்திலும் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக்கொண்டே இருப்பது உடல்நலனுக்கு ஏற்றதல்ல. நள்ளிரவில் சினிமாவுக்குச் செல்பவர்கள், அந்த நேரத்தில் பப்ஸ், சமோசா, பாப்கார்ன் போன்றவற்றைச் சாப்பிடுகின்றனர். லேட் நைட்டில் இத்தகைய பண்டங்களைச் சாப்பிடுவதைத்  தவிர்க்க வேண்டும்.


பள்ளிக் குழந்தைகளின் ஸ்நாக்ஸ் பாக்ஸில் என்ன இருக்க வேண்டும்?
 
பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் கொடுக்கும் ஸ்நாக்ஸில் உலர் பழங்கள், நட்ஸ் வகைகள், பயறு, சிறு தானியம், வெல்லம், நாட்டுச்சர்க்கரை, எள், நிலக்கடலை, கீரை, சிறிதளவு நெய், பழங்கள், பால் இவற்றில் ஏதாவது இடம்பெற்றிருக்கலாம். இவற்றைச் சாப்பிடுவதன் மூலம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதம் உள்ளிட்ட சத்துகள் கிடைக்கின்றன. கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற சத்துகள், சிந்திக்கும் திறன், கவனத்திறன், நினைவாற்றல், கிரியேட்டிவிட்டி ஆகியவற்றை மேம்படுத்தத் துணைபுரிகின்றன.


இன்றைய குழந்கைளின் ஸ்நாக்ஸ் பாக்ஸில் என்ன இருக்கிறது?

இன்றைய குழந்தைகள் ஸ்நாக்ஸ் என்ற பெயரில் அதிகம் விரும்பிச் சாப்பிடும் பண்டங்களில் மைதா, உருளைக்கிழங்கு, எண்ணெயில் பொறித்த அசைவ வகைகள், சாப்பிடத் தூண்டும் ரசாயனங்கள், உணவுப் பொருள் கெடாமல் தடுப்பதற்கான ரசாயனங்கள் நிரம்பியுள்ளன. இவற்றைத் தொடர்ந்து சாப்பிடுவதால்  உடல் எடை கூடுவதுடன் மந்த நிலையும் ஏற்படுகிறது.  கெட்ட கொழுப்பும் உடலில் சேர்கிறது. இதுபோன்ற ஸ்நாக்ஸ் வகைகள் விரைவில் உள்ளுறுப்புகளைத் தாக்கி பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன. மிகச்சிறு வயதில் சர்க்கரைக் குறைபாடு வர இதுவும் ஒரு காரணம்.


ஸ்நாக்ஸில் தவிர்க்க வேண்டியவை

ஸ்நாக்ஸ் என்ற பெயரில் ஜங்க் ஃபுட், பாக்கெட் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் வேண்டவே வேண்டாம். முடிந்தவரை வீட்டில் செய்த ஸ்நாக்ஸைப் பயன்படுத்தலாம். வெளியிடங்களில் செய்யப்பட்ட ஸ்நாக்ஸ் வகைகள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டவையா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. மேலும், அவர்கள் பயன்படுத்தும் எண்ணெய்களின் தரம் பற்றியும்  நமக்குத் தெரியாது. சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் ஸ்நாக்ஸ் வகைகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதிக உப்பு மற்றும் அதிகக் காரம் கொண்ட உணவுகளும் உடல் நலனைப் பாதிக்கும். குழந்தைகள் தவறான ஸ்நாக்ஸ் வகைகளைச் சாப்பிடுவதால் சத்தான உணவுகளைத் தவிர்ப்பதோடு,  ஹைபர் ஆக்டிவ் ஆகவோ, சோர்வடையவோ வாய்ப்புகள் உள்ளன.


ஹெல்த்தி ஸ்நாக்ஸ் சாப்பிடாவிட்டால் என்னவாகும்?

அதிக டென்ஷன் மற்றும் வேலைப்பளுவின் காரணமாக, ஒரு சிலர் உணவு தவிர இடைவேளைகளில் எதையும் சாப்பிடாமல் தவிர்க்கின்றனர்.பழங்கள், கீரைகள், காய்கறிகள், பயறுகள் எனச் சரிவிகித சத்துகள் இல்லாமல் ஒரே மாதிரியாகச் சாப்பிடுவதால், ரத்தச்சோகை, குறை ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை அளவு குறைவது, சோர்வு, மந்தநிலை மற்றும் அல்சர் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஹெல்த்தி ஸ்நாக்ஸ் வகைகள் இது போன்ற குறைபாடுகள் வராமல் தடுக்க உதவும்.


கர்ப்பிணிகளுக்கான ஸ்நாக்ஸில் என்னவெல்லாம் இருக்க வேண்டும்?

தாய்மை அடைந்துள்ள பெண்களுக்குப் புரதம், இரும்பு, கால்சியம் போன்ற சத்துகள் அதிகம் தேவை.  குழந்தைகளுக்கும் சேர்த்து இந்தச் சத்துகள் தேவைப்படுகின்றன. பால், பீன்ஸ், பயறு வகைகள், பிரெட், கீரை வகைகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்ட சாலட்,  எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை ஸ்நாக்ஸில் சேர்த்துக் கொள்வது நல்லது.


சர்க்கரை நோயாளிகளுக்கான ஸ்நாக்ஸ்

சர்க்கரை நோயாளிகள், கேழ்வரகு அடை, வறுத்த வெள்ளைப் பொரி, தாளித்த அவல், கோதுமை பிரட் டோஸ்ட், ஓட்ஸ் சேர்த்த ஸ்நாக்ஸ் வகைகள் எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும் போது ஆப்பிள், கருப்பு திராட்சை, பப்பாளி ஆகியவற்றைக் குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம். நேரடியாக சர்க்கரை சேர்த்த ஸ்நாக்ஸ் வகைகளைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும். ஒருவரது சர்க்கரையின் அளவைப் பொறுத்து மருத்துவரின் அறிவுரையைப் பின்பற்றி ஸ்நாக்ஸ் எடுத்துக்கொள்வது சரியாக இருக்கும்.


மெனோபாஸ் காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஸ்நாக்ஸ்

பெண்கள் மெனோபாஸ் பருவத்தை எட்டும்போது. அவர்களுக்குக் கூடுதல் கால்சியம் தேவைப்படுகிறது. பால் சேர்த்த கேரட் கீர் எடுத்துக் கொள்ளலாம். ஏதாவது ஒரு பழத்துடன் பால் சேர்த்து கீராக எடுத்துக் கொள்வது போதிய சத்துகளைத் தரும். கீரை மற்றும் காய்கறிகளும் ஸ்நாக்ஸில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளலாம்.


வயதானவர்களுக்கான ஸ்நாக்ஸ் எவை?

வயதானவர்கள் பெரும்பாலும் ஓய்வாக இருப்பதால் அவர்களுக்கு எதையாவது சாப்பிடவேண்டும் என்று தோன்றும். எண்ணெய்ப் பதார்த்தம், கெட்ட கொழுப்பு அடங்கிய உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஆவியில் வேக வைத்த, எளிதில் ஜீரணம் ஆகும் ஸ்நாக்ஸ் வகைகளை எடுத்துக் கொள்ளலாம். கீரைகளை  அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது.

Advertisements
%d bloggers like this: