Advertisements

அழகான ஆபத்து! ஷாம்பு முதல் லிப்ஸ்டிக் வரை

லைக்குப் பயன்படுத்தும் ஷாம்பு தொடங்கி பாதத்துக்கான மாய்ஸ்சரைசர் வரை அழகு சாதனப் பொருள்களில் கலந்துள்ள ரசாயனங்கள் ஏராளம். ‘`கண்டிஷனர், ஃபேஸ்வாஷ், ஃபேர்னஸ் க்ரீம், லிப்ஸ்டிக்,
ஐ லைனர் என நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு காஸ்மெடிக் பொருளிலும் ஆரோக்கியத்துக்கு எதிரான பொருள்கள் கலந்துள்ளன என்பதை மறுக்க முடியாது’’ என்று எச்சரிக்கும் சென்னையைச் சேர்ந்த காஸ்மெடாலஜிஸ்ட் மாயா வேதமூர்த்தி, அவற்றைப் பற்றிய விழிப்பு உணர்வுத் தகவல்களை வழங்கினார்.

விலை அதிகமானது என்றால் தரம் உயர்ந்ததா?

“பொதுவாக, விலை அதிகமாக இருக்கிற அழகு சாதனப் பொருள்கள் தரமானவையாக இருக்கும் என்பது இங்கு மக்களின் நம்பிக்கை. ஆனால், ஒரு காஸ்மெட்டிக் பொருளை ஏற்றுக்கொள்வதும் அலர்ஜி ஏற்படுவதும் அவரவரின் சருமத்தைப் பொறுத்த விஷயம். அடுத்ததாக, நிறம், வாசனை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தந்து வாங்கப்படும். ஆனால், அதுவும் தவறான தேர்வுமுறையே. எனவே, அவரவரின் சருமத்துக்கு ஏற்ற காஸ்மெட்டிக் அயிட்டங்களைக் கண்டறிந்து வாங்குவது நல்லது.

ஷாம்பு… செக் பாயின்ட்ஸ்!

அழுக்குத்துணியைத் துவைக்கப் பயன்படுத்துகிற சோப்பில் இருக்கிற அதே டிடர்ஜென்ட், கேசத்துக்குப் பயன்படுத்துகிற ஷாம்புவிலும் சேர்க்கப்படுகிறது. மேலும்  ஷாம்புவில் சோடியம் லாரல் சல்பேட், வாசனைக்காக சில கெமிக்கல்கள், நிறம் கொடுக்க சில கெமிக்கல்கள், வறண்ட கேசத்துக்கான பிரத்யேக ஷாம்புவில் சிலிக்கான் எனப் பல ரசாயனப் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. ‘அப்போ ஹெர்பல் ஷாம்பு பயன்படுத்தலாமா டாக்டர்?’ என்கிறீர்களா? ஒரு மூலிகையை ஷாம்புவாக மாற்றுவதற்கு முன்னால் எத்தனை எத்தனை வேதிவினைகள் நடக்கும்? எனவே, அதை 100 சதவிகித ஹெர்பல் என்று சொல்ல முடியாது. சிகைக்காய், சோப்புக்காயை அரைத்துப் பயன்படுத்துவது நல்லது.

பி.ஹெச் அளவு 5.5 இருக்கும் ஷாம்புவை வாங்கிப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.

ஸ்டீராய்டு கலந்த ஃபேர்னஸ் க்ரீம்கள்!

அறிவியல் உண்மை என்னவெனில், ஒருவரின் மரபுப்படியே அவருடைய சருமத்தின் நிறம் அமையும். அதை மாற்றுவது என்பது இயற்கைக்கு எதிரான முயற்சி. சத்தான உணவுகளைச் சாப்பிடுவதன் மூலமாகச் சருமத்தின் ஆரோக்கியம், பொலிவை மேம்படுத்தலாம். வெயிலில் அலைவது, மற்றும் ஸ்ட்ரெஸ் போன்ற பிரச்னைகளால் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகள்… இவையெல்லாம் சருமத்தைக் கறுக்கச் செய்யும்.

ஃபேர்னஸ் க்ரீம்களில் லெட், மெர்குரி  தவிர சமீபகாலமாக ஸ்டீராய்டும் கலக்கப்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் விஷயம். சில பியூட்டி பார்லர்களில் ஸ்டீராய்டு கலந்த ஃபேர்னஸ் க்ரீம்களைத் தங்கள் கஸ்டமர்களுக்குத் தருகிறார்கள். அதைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, வெயிலில் போனால் முகம் சிவந்துபோதல், முகத்தில் முடி முளைத்தல், பரு அதிகமாதல் போன்ற பிரச்னைகள் பெண்களுக்கு ஏற்படலாம். ஆனால், எதனால் இந்தப் பிரச்னைகள் என்பதே தெரியாமல் அவர்கள் சிரமப்பட்டுக்கொண்டிருப்பார்கள். சில ஃபேர்னஸ் க்ரீம்களில் `Hydroquinone’ என்கிற ஒரு ப்ளீச்சிங் ஏஜென்ட் கலந்திருக்கும். இதைச் சரும மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டும், அதிலும் அளவோடுதான் பயன்படுத்த வேண்டும்.   

கண்டிஷனர் அலர்ஜி தருமா?

தலையில் அப்ளை செய்து 10 நிமிடங்களில் அலசவேண்டிய கண்டிஷனரை அரைமணி நேரம் வைத்திருந்தால் அது அரிப்பையோ, எரிச்சலையோ ஏற்படுத்தலாம். அதனால் பேக்/பாட்டிலில் குறிப்பிட்ட கண்டிஷனரை எத்தனை நிமிடங்களில் வாஷ் செய்யச்சொல்லிப்  பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது என்பதைப் படித்துப் பார்த்து, அதைப் பின்பற்றவும்.

 ஹேர் கலரிங்கில் இதைக் கவனிக்கவும்!

ஹேர் கலரிங்கைப் பொறுத்தவரை, அதில் இருக்கிற அமோனியாதான் அலர்ஜியை ஏற்படுத்துவதாக நினைக்கலாம். உண்மையில் அதில் இருக்கிற PPD-தான் (Paraphenylenediamine) அலர்ஜியை ஏற்படுத்துகிறது. அடுத்ததாக, ‘பிளாக் ஹென்னா’ என்று விற்பனை செய்யப்படும் பொருள் பற்றிய கேள்வி. ஹென்னாவில் கறுப்பு எங்கிருந்து வரும்? இது டை கலந்த ஹென்னா.  டை அலர்ஜியை  ஏற்படுத்துபவர்களுக்கு, இதுவும் அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

ஐ மேக்கப் ஆபத்து!

ஐ மேக்கப் சாதனங்களில் அதன் கறுப்பு நிறத்துக்காக ஒருவேளை டையில் சேர்க்கப்படுகிற கெமிக்கல் சேர்க்கப்பட்டிருந்தால், அது கண்ணில் பட்ட உடனேயே சிவந்துபோகும். அவ்வாறான தயாரிப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.மொத்தத்தில், அழகுக்கான பொருள்கள் ஆரோக்கியத்துக்கும் துணையாக இருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில்கொள்ளவும்.

Advertisements
%d bloggers like this: