ஆன்மிக அரசியல் என்றால் என்ன?’ – ரஜினிகாந்த் புது விளக்கம்

ஆன்மிக அரசியலை அனைவரும் சேர்ந்து முன்னெடுப்போம்’ என்று கூறி தன் அரசியல் பிரவேசத்தை சில நாள்களுக்கு முன்னர் ஆரம்பித்தார் நடிகர் ரஜினிகாந்த். இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தொடர்ந்து கருத்துகள் கூறி வரும் நிலையில், `ஆன்மிக அரசியல் என்றால் என்ன?’ என்ற கேள்விக்கு ரஜினி விளக்கமளித்துள்ளார்.

ரஜினி

சென்னைக் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்கள் மத்தியில் கடந்த 31-ம் தேதி பேசிய நடிகர் ரஜினிகாந்த், ‘அரசியலுக்கு வருவது உறுதி. வரும் சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். ஆன்மிக அரசியலை முன்னெடுப்போம்’ என்று அறிவித்தார். ரஜினியின் அரசியல் பிரவேசம் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மறுபுறம் விமர்சனங்களும் குவிந்தன. 

இப்படிப்பட்ட சூழலில் இன்று `ஆன்மிக அரசியல் என்றால் என்ன?’ என்ற கேள்விக்கு `உண்மையான, நேர்மையான, நாணயமான, ஜாதி, மதச் சார்பற்ற அரசியலே ஆன்மிக அரசியல். அறவழி அரசியலே ஆன்மிக அரசியல். எனது கட்சியின் சின்னம், பெயர் போன்றவை போகப் போகத் தெரியும்’ என்று விளக்கமளித்துள்ளார் ரஜினி.

பின்னர் சென்னையில் இருக்கும் தனியார் விடுதியில் தனது ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி,`கட்சி கொடி தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கட்சிக் கொடியை அறிமுகம் செய்யும் போது பத்திரிகையாளர் சந்திப்பும் இருக்கும்’ என்று தகவல் தெரிவித்துள்ளார்.

%d bloggers like this: