Advertisements

மன இறுக்கம் மீள்வது எப்படி?

இன்றைய இளம்தலைமுறையை வதைக்கும் பிரச்னைகளில் முக்கியமானது மனஅழுத்தம். வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், பதற்றமான பணிச்சூழல் காரணமாக பெரும்பாலானோர் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். மனஅழுத்தம் – ஒரு நோய் என்ற விழிப்புணர்வே மக்கள் மத்தியில் இல்லை. “தொடர்ச்சியான மன அழுத்தமானது, ஒரு கட்டத்தில் மன இறுக்கத்தில் கொண்டுபோய் நிறுத்தும்’’ என்கிறார்கள் மருத்துவர்கள். உலக

சுகாதார அமைப்பு கடந்த 2015-ல்  நடத்திய ஆய்வில், 5 கோடியே 66 லட்சம் இந்தியர்கள் மன இறுக்கத்தால்  பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தனி மனிதனின் மன நலமே உடல்  நலத்துக்கும், சமூக நலத்துக்கும் பிரதானமானது. அதில் கூடுதல் கவனம் செலுத்த  வேண்டியது முக்கியம்.மன அழுத்தம் ஏற்படுவதன் பின்னணியில், அழுத்தமான ஓர் ஏமாற்றமோ, வலியோ, கவலையோ இருக்கக்கூடும். கால ஓட்டத்தில் இந்த மன அழுத்தம் தாமாகவே சரியாகிவிடும். ஆனால், சில நேரங்களில் மனம் இறுக்கமாக இருக்கும்; இதுதான் காரணம் என சரியாக சுட்டிக்காட்ட முடியாது. சம்பந்தமே இல்லாமல், பழைய விஷயங்களை ஆராய்ந்து, அதுவா, இதுவா என்று காரணத்தை தேடி குழம்புவார்கள். சந்திக்கும் ஒவ்வொரு சூழலும், மேலும் மனதை இறுக்கமாக்கும். இதுதான் மன இறுக்கத்தின் அறிகுறிகள். இன்றைய வாழ்க்கை முறை மிகவும் பரபரப்பாக இருக்கிறது.
காரணமே இல்லாமல் பதற்றம் மனதை சூழ்ந்துகொள்கிறது. அதனால் பெரும்பாலானோர் மன இறுக்கத்துக்கு ஆளாகிறார்கள். மன அழுத்தத்துக்கு காரணம் தெரியும். ஆனால், மன இறுக்கத்துக்கு காரணத்தை கண்டறிய முடியாது. எப்போதோ இழந்த விஷயங்கள், பிரிந்த உறவுகள், விட்டுப்போன வேலைவாய்ப்பு என ஏதேதோ ஓட்டங்கள் மனதை பீடித்திருக்கும். மன இறுக்கத்தில் இருந்து மீள்வது என்பது ஒவ்வொருவரின் மன வலிமையை பொறுத்தது. ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் சில காலங்களுக்கு பிறகு அதிலிருந்து எப்படி மீள்வது என தேடத்தொடங்குவார். ‘’புதிதாக ஒரு வாழ்வை முன்னெடுக்க வேண்டும்’’ என்ற எண்ணம் அவருக்கு உதிக்கும். அப்போது கிடைக்கும் உறவுகள் மற்றும் தோழமைகளின் துணையுடன் அழுத்தத்தில் இருந்து எளிதில் வெளியே வந்துவிடுவார். ஆனால், மன இறுக்கத்துக்கு ஆளானோர் பல நாட்களுக்கு அந்த பிரச்னையோடு போராடுவர். அன்றாட செயல்களை ஈடுபாடின்றி, மேலோட்டமாக செய்வார். பலர், அவரை சூழ்ந்து இருந்தாலும், அவர், தனிமையை உணர்வார். மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களால் யாரோடும் சகஜமாக பேச முடியாது. எந்த விஷயமும் மகிழ்ச்சி தராது. மனநிலை குறுகிவிடும். தன்னம்பிக்கை குறைந்துவிடும். வெறுப்பு அதிகரிக்கும். சட்டென்று கோபமடைவார்கள். அதே வேகத்தில் மனமுடைந்து போய்விடுவார்கள். தூக்கமின்மை அல்லது அதிக நேரம் தூங்குவது, உடல் எடை குறைவது, யோசிக்காமல் அல்லது கவனக்குறைவாக இருப்பது, முடிவு எடுக்க முடியாமல் திணறுவது போன்றவையும் மன இறுக்கத்தின் அறிகுறிகளாகும்.
இவை தொடர்ந்தால், மனநல ஆலோசகரை உடனடியாக அணுகுவது நல்லது. நண்பர்களிடம் பிரச்னையை ஷேர் செய்வது, வீட்டில் உள்ளவர்களிடம், தனது நிலையை எடுத்துக்கூறி அவர்களின் ஆதரவை பெறுவது,  ஆரோக்கியமான விஷயங்களை விவாதிப்பது, வேறு வேலைகளில் கவனம் செலுத்துவது, போதுமான தூக்கம், சரியான நேரத்தில் சரியான உணவு உட்கொள்வது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். இதுபோன்ற முயற்சிகளுக்கு பிறகும், வெறுப்பான மனநிலை தொடரும் பட்சத்தில், தாமதிக்காமல் மனநல ஆலோசகரை அணுகுவதே சிறந்தது. மனம் சார்ந்த பிரச்னைகளுக்கு, மருத்துவர்களை நாடுவது பற்றி போதிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. அதனால்தான் மன இறுக்க நோயாளிகள் அதிகரிக்கிறார்கள். மன இறுக்கம் என்பது சமூகம் தொடர்பான நோய். அதனால் அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பொறுப்பு மொத்த சமூகத்துக்கும் இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

Advertisements
%d bloggers like this: