மோடியின் முதல்வர் வேட்பாளர்?

திர்பார்த்ததைவிட லேட்டாக கழுகார் தரிசனம் தந்தார். ‘‘ரஜினியைப் போல லேட்டாக வந்தாலும், லேட்டஸ்ட்டாக வந்துவிட்டீரே?” என்றோம். சிரித்தபடி செய்திகளைச் சொல்ல ஆரம்பித்தார்.
‘‘30 ஆண்டுகளுக்கும் மேலாக புரியாத புதிராக இருந்த அரசியல் பிரவேசத்துக்கு டிசம்பர் 31-ம் தேதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்

ரஜினி. 2018 புத்தாண்டுக் கொண்டாட்டங்களையும் மிஞ்சிய ஹைலைட்டாக ரஜினியின் அறிவிப்பு இருந்தது. ரஜினி ரசிகர்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி; தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளுக்குக் கலக்கம்; தமிழக மக்களுக்கு வியப்பு. தமிழக அரசியலில் போயஸ் கார்டன் மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது.’’
‘‘எப்படி இருக்கிறது அந்த ஏரியா?”
‘‘ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, போயஸ் கார்டன் களைகட்டியிருக்கும். ஜெயலலிதா வீட்டுக்கு அருகில்தானே ரஜினியின் வீடு இருக்கிறது! ரஜினியின் அறிவிப்புக்குப் பிறகு அரசியல் பிரமுகர்களின் நடமாட்டம் அங்கு அதிகரித்துள்ளது. கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்கள் சந்திப்பின்போது பக்கா அரசியல்வாதிகளைப் போல வெள்ளை வேஷ்டி-சட்டையில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் வந்திருந்தார்கள். அநேகமாக அதுதான் கட்சியின் தலைமை அலுவலகமாக இருக்கும். போயஸ் கார்டன் ஏரியாவில் கூட்டத்தைக் குறைக்க உடனடியாக இந்த ஏற்பாட்டைச் செய்யச் சொன்னாராம் ரஜினி. இதற்காக, மார்கழி மாதம் ஆரம்பிக்கும் முன்பே, மண்டபத்தில் சில மாற்றங்களைச் செய்யச் சொன்னாராம் ரஜினி. அதன்பிறகு, மண்டபத்தின் ஒரு பகுதிக்கு அலுவலகம் மாற்றப்பட்டது. நீண்ட ஹால் ஒன்றை ரெடி செய்கிறார்கள். ரஜினி அவரது அறையிலிருந்து அந்த ஹாலுக்கு வரும்விதமாக கட்டடத்தில் வேலைகள் நடந்து வருகின்றன.” 
‘‘ரஜினி வீட்டுக்குப் போயிருந்தீரா?’’
‘‘ஆமாம். புத்தாண்டு தினத்தன்று மதிய வேளையில் போயிருந்தேன். வீட்டில் ஏதோ யாகம் நடந்தது. பசுமாடு ஒன்றை உள்ளே அழைத்துப்போய் பூஜை செய்தார்கள். வெளியாட்களை உள்ளே விடவில்லை. ‘இனி இதுபோல் நிறைய நடக்கும்’ என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள்.”

‘‘ஓ… இதுதான் ஆன்மிக அரசியலா?”
‘‘கிண்டல் செய்யாதீர்! ‘ரஜினியின் அரசியல் என்ட்ரிக்கு எங்கிருந்து ஆதரவும் வாழ்த்துகளும் வருகின்றன, எந்தப் பக்கமிருந்து எதிர்ப்புகளும் விமர்சனங்களும் வருகின்றன, பட்டும் படாமல் வாழ்த்துச் சொல்வது யார்…’ இதையெல்லாம் கூர்ந்து கவனித்தாலே, ரஜினி அரசியலின் பின்னணி புரிந்துவிடப்போகிறது. அது என்ன பெரிய விஷயமா?”
‘‘தெளிவாகச் சொல்லும்?”
‘‘ரஜினி அறிவிப்பு வெளியிட்டதும், தமிழக பி.ஜே.பி-யின் அனைத்து மட்டங்களிலிருந்தும் ஆதரவு வரத் தொடங்கியது. ‘மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்’ என்று பி.ஜே.பி-யினர் வெளிப்படையாக வாழ்த்துளைப் பரிமாறினர். இன்னொரு பக்கம் ஆடிட்டர் குருமூர்த்தி அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘ரஜினியின் அரசியல் வருகை தமிழகத்தை 60 ஆண்டு காலமாக உறைய வைத்திருக்கும் திராவிட அரசியலுக்கு மாற்றாக இருக்கும். ரஜினியின் ஆன்மிக அரசியல், தமிழகத்திலும் வெளியிலும் இருக்கும் மற்ற யாருடையதை விடவும் மோடியின் அரசியலுக்கு நெருக்கமாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்ததைப் படித்தீரா? இவற்றையெல்லாம் வைத்துத்தான் பி.ஜே.பி-யின் கை இதில் அதிகம் இருப்பதாக பலருக்கும் சந்தேகம் வந்துள்ளது.’’
‘‘ஆனால், பி.ஜே.பி-யைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி எதிர்த்திருக்கிறாரே?’’
‘‘அவர் பி.ஜே.பி அலுவலகத்தில் இருக்கிறாரே தவிர, பி.ஜே.பி-யில் இருக்கிறாரா? அவர் தினகரனை ஆதரித்தார்; ஆனால், பி.ஜே.பி ஆதரிக்கவில்லையே? தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் பி.ஜே.பி இரண்டு விஷயங்களுக்காகக் காத்திருந்தது. ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் தோற்றுவிடுவார் என எதிர்பார்த்தார்கள்; 2ஜி வழக்கின் தீர்ப்பு தி.மு.க-வின் கதையை முடிக்கும் என்று நினைத்தார்கள். இந்த இரண்டுமே நடக்கவில்லை. இந்த நிலையில், மக்கள் செல்வாக்குள்ள ஒருவரைக் களத்தில் இறக்காமல் பி.ஜே.பி-யை வளர்க்க முடியாது என்று புரிந்துவிட்டது. இதற்காகத்தான் டிசம்பர் வரை ரஜினியை அமைதியாக இருக்கச் சொன்னார்கள். இரண்டு முடிவுகளும் வந்ததும் ரஜினியை வெளியே அழைத்து வந்துவிட்டார்கள். இப்படித்தான் காட்சிகளை விவரிக்கிறார்கள், உள்விவரங்களை அறிந்தவர்கள்.”
‘‘ரஜினி சொன்ன ‘ஆன்மிக அரசியல்’ என்பது, பி.ஜே.பி.யின் வார்த்தைகள்தானா?”
‘‘அப்படித்தான் சொல்கிறார்கள். ‘ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து முதல்வர் வேட்பாளராக ஆனால் மட்டுமே, தமிழகத்தில் மாற்று அரசியல் முயற்சிகள் தலைதூக்கும்’ என்று நினைக்கிறாராம் மோடி. அதனால்தான் ‘மோடியின் முதல்வர் வேட்பாளர்’ என்கிறார்கள் அவரை! அமித் ஷாவும் அதைத்தான் சொல்கிறாராம். ‘மத்திய அரசின் ஆசிபெற்றவர்களாக இருக்கிறார்கள் என்ற பேச்சுதான் தமிழக ஆளுங்கட்சியினரைக் கவிழ்த்தது. அதனால், பிஜே.பி-யோடு தொடர்பில்லாத தனிக்கட்சியை ரஜினி ஆரம்பிப்பதே சரியாக இருக்கும். ரஜினியின் வெற்றி நம்முடைய வெற்றிதான்’ என்று நினைக்கிறாராம் அமித் ஷா. அதனால்தான் ரஜினிக்காக மோடியும் அமித் ஷாவும் காத்திருந்தார்கள்.”
‘‘ரஜினி அரசியலுக்கு வருவதை கமல் வரவேற்றுள்ளாரே?”
‘‘கமல், ‘நான் அரசியலுக்கு வரப்போகிறேன்’ என்று சொன்னபோது ரஜினி வரவேற்றார்; இப்போது ரஜினியை கமல் வரவேற்றுள்ளார். கமல் பிப்ரவரி மாதம் தனது அரசியல் இயக்கம் பற்றி அறிவிப்பேன் என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவரை முந்திக்கொள்ள நினைத்த ரஜினி, டிசம்பர் மாதமே அறிவித்துவிட்டார். இந்த வகையில் ரஜினியின் அறிவிப்புக்கு கமல்ஹாசனும் மிக முக்கியமான காரணம்.”
‘‘ரஜினி அரசியலில் இறங்கியிருப்பது, மற்ற கட்சிகளில் என்ன விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது?”
‘‘தி.மு.க வட்டாரத்தில் பேசியபோது, ‘ரஜினியின் வருகை அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியைப் பாதிக்கும்’ என்கிறார்கள். ரஜினியை பி.ஜே.பி பின்னாலிருந்து இயக்குவதாகக் கருதுவதால், கம்யூனிஸ்ட்டுகள் எதிர்க்கின்றனர். தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் ரஜினிக்குத் தனிப்பட்ட முறையில் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். வைகோவும் திருமாவளவனும் மையமாகச் சொல்லியிருக்கிறார்கள். தினகரன் வாழ்த்துத் தெரிவித்தாலும், ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டைக் கேலி செய்யும் தொனியில்தான் பேசியிருக்கிறார்.”
‘‘மற்றக் கட்சிகளிலிருந்து ரஜினி பக்கம் தாவும் எண்ணத்தில் யாராவது இருக்கிறார்களா?”
‘‘முறையாகக் கட்சியை ஆரம்பித்தபிறகு முன்னாள்கள் பலரும் சேருவார்கள் என்று சொல்லப்படுகிறது. தென் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர் ரஜினியிடம் பேசினார். முன்பு ஒருமுறை ரஜினி இவரைப் புகழ்ந்திருந்தார். இந்த அமைச்சர், தன் மகனை ரஜினியுடன் சேர்க்கும் தொனியில் பேசினாராம். அ.தி.மு.க வட்டாரத்தில் ‘ஓ’ என அதிர்ச்சியோடு இதுபற்றிப் பேசுகின்றனர். ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் போன்றவர்களும் தனிப்பட்ட முறையில் ரஜினியை ஊக்கப்படுத்தியுள்ளனர்.”

‘‘ஆனாலும் உற்சாகம் குறைந்தவராகக் காணப்படுகிறாரே ரஜினி?”
‘‘மன்றங்களை ஒருங்கிணைப்பது, இணையதளம், மொபைல் ஆப் எனப் பரபரப்பாகக் காணப்பட்டாலும், ரஜினியின் ‘ஹெல்த்’ விவகாரம்தான் அவருக்கு இருக்கும் மிகப்பெரிய முட்டுக்கட்டை. கட்சி நடத்த பணத்தைக் கொட்ட ஆட்கள் இருக்கிறார்கள். ஆலோசனைகள் வழங்குவதற்கு மத்திய-மாநில அரசாங்கத்தில் உயர்  பொறுப்புக்களை வகிக்கும் அதிகாரிகள் பட்டாளம் தயாராக உள்ளது. மத்திய அரசின் பூரண ஆசியும் இருக்கிறது. வேலை செய்ய ரசிகர்கள் இருக்கின்றனர். பொதுமக்களிடமும் ஆதரவு நிலை இருக்கிறது. ஆனால், இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து தலைவனாகத் தமிழகம் முழுக்க வலம்வர ரஜினியின் உடல்நிலை நிச்சயம் ஒத்துழைக்காது. இப்போது அவர் நடத்தும் ரசிகர்கள் சந்திப்பையே, அவருடைய உடல்நிலையைக் கவனித்துக் கொள்ளும் டாக்டர்கள் கடுமையாக எதிர்த்தனர்.’’ 
‘‘ரஜினியின் பாட்சா டீமில் இருப்பவர்கள் யார் யார்?”
‘‘ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் படித்த சஞ்சய்தான் ரஜினியின் தனிப்பட்ட உதவியாளர். தகவல் தொழில்நுட்பப் பிரிவை சாமுவேல் என்பவர் கவனிக்கிறார். ரசிகர் மன்றத்தினருடனான நிர்வாகத்தை சுதாகர் பார்க்கிறார். இவர்களைத்தவிர, ரஜினியின் கமாண்டென்ட்களாக ஆறு பேர் உள்ளனர். மொபைல் ‘ஆப்’ பிரிவு, வெப்சைட் பிரிவு, சமூக வலைதளப் பிரிவு, கன்டென்ட் கிரியேஷன்ஸ் (அமெரிக்காவில் உள்ளவர்களின் ஆலோசனையுடன்) பிரிவு, மீம்ஸ் கிரியேஷன்ஸ் பிரிவு, மார்கெட்டிங் டீம் என்று ஏராளமானவர்கள் வேலை செய்கிறார்கள். டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் ஆறு பேர் முழு வேகத்தில் பணி செய்கிறார்கள். தவிர, ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா, பெங்களூரு நண்பர் ராஜ்பகதூர், மனைவி லதாவின் உறவினர்கள் ரவி ராஜேந்திரன் மற்றும் எஸ்.வி.ரமணன், ரஜினியுடன் படித்த விட்டல் பிரசாத், ராகவேந்திரா மண்டப நிர்வாகத்தைக் கவனிக்கும் முரளி பிரசாத் ஆகியோரும் ரஜினியின் உள் வட்டத்தில் இருக்கிறார்கள்.”

‘‘முதலில் ரசிகர் மன்றங்களை முறைப்படுத்தும் நடவடிக்கையை ரஜினி ஏன் செய்கிறார்?’’
‘‘ரஜினி பெயரில் தமிழகம் முழுக்கப் பதிவு செய்யப்பட்ட 22 ஆயிரம் மன்றங்கள், பதிவு செய்யப்படாத 30 ஆயிரம் மன்றங்கள் செயல்படுகின்றன. 1998-ம் ஆண்டுக்குப் பிறகு புதிய மன்றங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. மன்ற நிர்வாகத்தை சுதாகர் கவனிக்கிறார். சிவ.ராமகிருஷ்ணன் உடன் இருக்கிறார். இவர்களுடன் ராமதாஸ், சூர்யா, ரவி…ஆகியோர் உள்ளனர். இருந்தாலும், முழுமையான கட்டமைப்பு இல்லாமல் தள்ளாடுகிறது ரஜினி மன்றம். அதனால்தான் இந்த அறிவிப்பு. ஆனால், ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப் பிறகு, புதிய பிரமுகர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ‘எங்கே பழையவர்களை ரஜினி புறக்கணித்து விடுவாரோ’ என்ற மிரட்சியுடன் பலர் களையிழந்து கிடக்கிறார்கள்’’ என்று சொல்லிவிட்டு கழுகார் பறந்தார்.

%d bloggers like this: