டாக்டருக்கு குடும்பம் தெரியணும்

முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன் வரையில் கூட, ‘குடும்ப டாக்டர்’ என்ற ஒருவர் உண்டு. பழைய சினிமாக்களில், வீட்டில் யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்றால், ‘பிரீப்கேசு’டன் டாக்டர் வீட்டிற்கே வந்து, நோயாளியை பரிசோதித்து, தேவையான மருத்துவத்தை செய்த பின், வீட்டில் அனைவரிடமும் நலம் விசாரித்து போவார். குடும்ப

டாக்டருடன், உறவினர் போல நெருங்கி பழகுவர். வீட்டில் உள்ள பிறந்த குழந்தை முதல், வயதான தாத்தா வரை, அனைவரின் உடல் நலமும், அவர்கள் குடும்பத்தில் உள்ள பரம்பரை நோய்கள் என, அனைத்தும் டாக்டர் தெளிவாக தெரிந்து வைத்திருப்பார்.
உலக மயமாக்கல் வந்த பின், கார்ப்பரேட் மருத்துவமனைகள் அதிகமாகி விட்டன; சிறப்பு மருத்துவர்களும் பெருகி விட்டனர். நவீன தொழில்நுட்ப வசதி, நோய்கள் குறித்த விழிப்புணர்வு, அதிலும், அறிகுறிகளை வைத்தே, இணையத்தில் தேடி, முழு தகவல்களையும் எளிதாகப் பெற முடிகிறது.நவீன தொழில்நுட்பம் கைக்கு எட்டும் துாரத்தில் இருக்கும் போது, அதை பயன்படுத்துவதில் தவறில்லை; ஆனால், மருத்துவ ஆலோசனை, சிகிச்சை என வரும் போது, இது சரியான அணுகுமுறை இல்லை. காரணம், கால் வலி, முதுகு வலி, கை வலி என்றால், உடனடியாக சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவரிடம் செல்லக் கூடாது.
முதலில், பொது மருத்துவ ஆலோசனை பெற்று, அவரின் ஆலோசனையின்படி மட்டும், சிறப்பு மருத்துவரிடம் செல்ல வேண்டும். காரணம், நெஞ்செரிச்சல் இருந்தால், அது இதயம் தொடர்பாகவும் இருக்கலாம்; வயிறு தொடர்பாகவும் இருக்கலாம். தேவையான பரிசோதனை செய்து தான், டாக்டர் முடிவு செய்ய முடியும். இப்படி, பல உடல் பிரச்னைகளுக்கு, ஒரே அறிகுறிகள் வரும்.இன்னொரு முக்கிய விஷயம், பெரும்பாலான நேரங்களில், மனதில் ஏற்படும் பிரச்னைகள், உடலில் அறிகுறிகளாக வெளிப்படும். இதையெல்லாம், அனுபவம் மிக்க டாக்டரால் தான், உறுதி செய்ய முடியும்.பிரச்னை வந்தவுடன் பெயர் பலகையைப் பார்த்து, அறிமுகமாகாத டாக்டரிடம் போவதை விட, நம்மை, நம் குடும்பத்தை முழுமையாகத் தெரிந்த டாக்டரிடம் போவது நல்லது. இந்தியாவின் இந்த குடும்ப டாக்டர் முறை மற்றும் குடும்ப மருத்துவ முறை, இங்கிலாந்தில், மருத்துவக் கல்லூரியில் ஒரு பாடமாகவே உள்ளது. தமிழகத்தில், தனியார் மருத்துவ டாக்டர்கள், இங்கிலாந்து வந்து, குடும்ப மருத்துவத்தில் பயிற்சி பெறுகின்றனர். ‘பெரும்பாலும், குடும்ப டாக்டர் முறை, தற்போது வழக்கத்தில் இல்லாத நிலையில், என் குடும்ப டாக்டரை எப்படி தேர்வு செய்வது?’ என்ற கேள்வி வரலாம்.
ஒரு நோயாளி எங்களிடம் வரும் போது, அவரின் குடும்பம் மற்றும் பரம்பரை பற்றிய முழு விபரங்களையும் கேட்டு, உடல் நலம் மட்டுமல்லாமல், மனநலம் குறித்தும் பேசி, மாதத்திற்கு ஒரு முறை, எங்களிடம் வரச் சொல்வோம்; இதனால், ஓராண்டில் நோயாளியின் குடும்பம் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். இதனடிப்படையில், தற்போது உள்ள பிரச்னைகள் மற்றும் எதிர்காலத்தில் வர வாய்ப்புள்ள பிரச்னைகள் ஆகியவற்றை முழுமையாகத் தெரிந்து, அதற்கேற்ற மாதிரியான ஆலோசனைகளைத் தருகிறோம். இப்படி, ஒவ்வொரு மருத்துவரும், தங்களிடம் வரும் நோயாளிகள் குறித்து, ஓராண்டு தொடர்ந்து பேசி, தகவல்களைப் பெறும் போது, ‘குடும்ப டாக்டர் கலாசாரம்’ மீண்டும் நடைமுறைக்கு வருவது எளிது.உடல், மன பிரச்னைகளுக்கு எங்கே போவது என்ற குழப்பம் இல்லாமல், குடும்ப டாக்டரிடம் வந்தால், வழிகாட்டுதல் எளிதாக கிடைக்கும்; பாதுகாப்பானதும் கூட!

டாக்டர் ஆனெட் ஸ்டீல், ராயல் மருத்துவக் கல்லுாரி பொது மருத்துவமனை, லண்டன். annettesteele1@gmail.com

%d bloggers like this: