Advertisements

பூனையால் வருமா பிரச்னை?

பூனைகள் வெகுவாக மனிதனிடம் பழகக்கூடியவை. தன் அன்பினை வெளிப்படுத்த வாலை ஆட்டி, உரசித் தெரியப்படுத்தும். பெயர் சொல்லி அழைத்தால், கொஞ்சினால், சிரித்தால் புரிந்துகொள்ளும் திறன் பூனைகளுக்கு உண்டு. தம்மை வளர்ப்போரின் அருகே அடிக்கடி வந்து படுத்துக்கொள்ளும். பூனை தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்கிற பழக்கம்கொண்டது.

தன்னுடைய உடலை நாக்கால் முழுமையாகச் சுத்தம் செய்யும். சுத்தம் செய்யும்போது நாக்கில் ஒட்டிக்கொண்டுவரும் முடிகளைப்  பந்துபோல் வாயில் எடுக்கும் திறன் பெற்றது. பூனைகளின் முடி அலர்ஜி என்கிற எண்ணம் பரவலாக மக்களிடம் இருக்கிறது. அதனால் வீடுகளில் பூனை வளர்க்கலாமா என்கிற சந்தேகம் சிலருக்கு எப்போதுமே இருக்கிறது.  

வீட்டில் வளர்க்கப்படுகிற பிராணிகளான நாய், பூனை போன்ற விலங்குகளால் மனிதர்களுக்கு சில இன்ஃபெக்‌ஷன் வருவது உண்மைதான். குழந்தைகள் வீட்டில் செல்லப் பிராணிகளோடுதான் விளையாடுகிறார்கள். அப்படியான நேரத்தில்  பூனையின் நகம், பற்கள், முடி போன்றவற்றால் இன்ஃபெக்‌ஷன் உருவாகிறது. இவற்றைத் தடுக்கப் பூனையைச் சரியாகப் பராமரிக்க வேண்டும். பூனையின் முடி, மூச்சுத்திணறலுக்கு ஒரு காரணமாக இருக்கிறது. ஆஸ்துமா இருப்பவர்கள் பூனை வளர்ப்பதைத் தவிர்க்கலாம். பூனை என்றில்லை; எந்த விலங்கை வளர்க்க வேண்டுமென்றாலும் நம் வீட்டில் சில விஷயங்களில் மாற்றங்கள் தேவைப்படும். அது அந்த விலங்குகளின் நலனுக்காக இருக்கலாம். அல்லது நம் நலனுக்காக இருக்கலாம். நாம் வளர்க்க விரும்பும் பிராணிகளைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு வளர்ப்பதுதான் நல்லது.
பூனை வளர்ப்போருக்கான டிப்ஸ்
* பூனைகள் சுத்தமான உணவுத்தட்டையே விரும்பும். அதனால் அதை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.
* பூனை ஓடுவதற்கு ஏற்ற விசாலமான இடம் அவசியம்.
* பூனைகள் உறங்க ஒன்றுக்கு மேற்பட்ட இடங்கள் இருப்பது அவசியம்.
* பூனைகள் தம் உடலைச் சுத்தம்செய்யும்போது அந்த முடிகளை விழுங்காமல் இருக்கக்கூட உணவு உண்டு. அதுபோன்ற பூனைக்கேற்ற உணவுகளைத் தேடி வாங்கவேண்டும்.
* மற்ற பூனைகளோடு, விலங்குகளோடு அதற்கு நெருக்கம் இல்லாமல் போவதால் நீங்கள் அதனுடன் நிறைய நேரம் செலவழிக்க வேண்டும்.

Advertisements
%d bloggers like this: