குழந்தைகள் முன் சண்டையிடும் பெற்றோரா நீங்கள்?!

விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?’ என்பார்கள். இந்தப் பழமொழி குழந்தை வளர்ப்புக்கு நூறு சதவிகிதம் பொருந்தும். யெஸ்… பிள்ளை வளர்ப்பில் பெற்றோர் என்ன விதைக்கிறார்களோ, அதுவே முளைக்கும். நீங்கள் எந்த வகை பெற்றோரோ, அதற்கு ஏற்பவே உங்கள் பிள்ளைகள் வளர்வார்கள். அப்படியென்றால், நீங்கள் எந்த வகை பெற்றோர் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அப்படித் தெரிந்துகொண்டால் மட்டுமே உங்கள் பிள்ளையை நீங்கள் தி பெஸ்ட்டாக வளர்க்க முடியும்.

நீங்கள் அதிகாரம் செய்யும் பெற்றோரா? 

சில பெற்றோர்கள், ‘எம்டன் மகன்’ நாசர்போல, தன் விருப்பமே பிள்ளைகள் விருப்பம் என்று நினைப்பார்கள், நடத்துவார்கள். பிள்ளைகளுக்கும் உணர்வு இருக்கும் என்பதே இவர்களுக்குத் தெரியாது. அதனால், இவர்கள் பிள்ளைகளுக்கு நல்லதே செய்தாலும், அதைப் பிள்ளைகள் புரிந்துகொள்ள மாட்டார்கள். 

இப்படிப்பட்ட பெற்றொரின் பிள்ளைகள் எப்படி வருவார்கள் தெரியுமா? உண்மையைச் சொன்னால் அம்மா திட்டுவாளோ, அல்லது அப்பா அடிப்பாரோ என்று பயந்துகொண்டு பொய் சொல்லப் பழகுவார்கள். எந்தவொரு இக்கட்டான சூழ்நிலைகளையும் இவர்களால் சமாளிக்க முடியாது. ஆழ்மனதில் இவர்களுக்குத் தங்களைப் பற்றிய உயர்ந்த சுயமதிப்பீடு இல்லாததால், டிஸிஷன் மேக்கிங் செய்யமுடியாமல் தவிப்பார்கள். வீட்டில் காட்டமுடியாத கோபத்தை வெளியில் காட்டுவார்கள். ஸோ, நீங்கள் அதிகாரம் செய்யும் பெற்றோர் என்றால், அதை இன்றே மாற்றிக்கொள்வது நலம். 

நீங்கள் ஓவர் செல்லம் கொடுக்கும் பெற்றோரா? 

இவர்கள் எந்நேரமும் பிள்ளைகளைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பார்கள். அதனால், ஓவர் செல்லமும் சுதந்திரமும் கொடுப்பார்கள். நான்தான் என் பிள்ளைக்கு எல்லாம் செய்வேன் என்று மனதில் ஒரு பிடிவாதம் இந்த வகை பெற்றோர்களுக்கு இருக்கும். 

இப்படி ஓவர் செல்லத்தை அனுபவித்து வளர்ந்த பிள்ளைகள், வீட்டைத் தவிர வெளியிடங்களிலும் இப்படியே பிறரிடம் எதிர்பார்ப்பார்கள். விளைவு, ஏமாற்றமடைவார்கள். அந்த ஏமாற்றம், கோபம் மற்றும் பழிவாங்குதல் போன்ற தீய குணங்களில் கொண்டுபோய் விடும். இவர்கள் யாரிடமும் அட்ஜஸ்ட் செய்து போகமாட்டார்கள். மனதளவில் இந்தப் பிள்ளைகள் முதிர்ச்சி குறைவாகவே இருப்பார்கள். 

அதனால்தான், ‘செல்லம் கொடுத்துக் கொடுத்து பிள்ளையைக் குட்டிச் சுவராக்காதே” என்று பெரியவர்கள் கடிந்துகொள்கிறார்கள். 

பிள்ளைகள் முன்னிலையில் சண்டையிடும் பெற்றோரா? 

பிள்ளைகள் முன்னிலையிலேயே சண்டையிடுவது; பிள்ளைகளையே தங்கள் சண்டைக்கு மத்தியஸ்தம் செய்யவைப்பது; பிள்ளையின் தலைமீது சத்தியம் செய் என்று வாழ்க்கைத் துணையை மிரட்டுவது; பிள்ளைகள் மூலமாக ஒருவரை ஒருவர் வேவு பார்ப்பது எனக் குழந்தை வளர்ப்பில் என்னவெல்லாம் செய்யக்கூடாதோ அத்தனையையும் செய்யும் இந்த வகை பெற்றோர்களின் பிள்ளைகள், கோள் பேசும் பிள்ளைகளாக வளர்வார்கள். 

தன் நண்பர்களைப் பற்றி டீச்சர்களிடம் கோள்மூட்டி விடுவார்கள். தனக்கு ஒரு வேலையாக வேண்டுமென்றால், அம்மா பற்றி அப்பாவிடமும், அப்பா பற்றி அம்மாவிடம் போட்டுக்கொடுக்கவும் செய்வார்கள். ‘அய்யோ பிள்ளைகள் இப்படியும் செய்வார்களா’ என்று யோசிக்க வேண்டாம். என்ன விதைக்கிறமோ அதுதானே முளைக்கும். தவிர, இந்த வகை பெற்றோரின் பிள்ளைகள் பொறுப்பானவர்களாக இருக்க மாட்டார்கள். 

நீங்கள் பிள்ளைகளுக்கு மரியாதை கொடுக்கும் பெற்றோரா? 

இந்த வகை பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு முழு சுதந்திரம் தருவார்கள். அதேநேரம், அவர்கள் அளவுகோல் மீறாதபடி ஒரு செக் பாயின்ட்டை பிள்ளைகளே அறியாத வகையில் வைத்திருப்பார்கள். நிறையப் பொறுப்புகளை பிள்ளைகளுக்குத் தருவார்கள். கேலி, கிண்டல், மட்டம் தட்டுதல் போன்ற நெகட்டிவ் விஷயங்கள் இந்த பேரன்டிங்கில் இருக்காது. பிள்ளைகள் தவறு செய்து அப்பா தண்டித்தால், அம்மா கண்டுகொள்ள மாட்டார். அம்மா தண்டித்தால், அப்பா தலையிட மாட்டார். பிள்ளைகளுக்கும் மரியாதை கிடைக்கும் இந்த வகை வளர்ப்பில்.

இப்படிப்பட்ட தெளிவான பெற்றோர்களின் குழந்தைகள், பொறுப்பானவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு மரியாதை தருவதில் முதலிடத்தில் இருப்பார்கள். சமூகத்தைக் கண்ணியமாக அணுகுவார்கள். மொத்தத்தில் இந்த வகை பெற்றோர்களின் பிள்ளைகள்தாம்  பின்னாளில் ‘தி பெஸ்ட்’டாக வளர்வார்கள்.

இப்போது சொல்லுங்கள், நீங்கள் எந்த வகை பெற்றோராக இருக்கப்போகிறீர்கள்?

%d bloggers like this: