குடும்பம்… சமூகம்… அலுவலகம்…பணிச்சுமையால் தத்தளிக்கும் நவீன வாழ்க்கை ஆளைக் கொல்லுது வேலை

காலமாற்றத்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சியாலும் ஒருபக்கம் வாழ்க்கை எளிதாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதன் மறுபக்கத்தில் இதே நவீன வாழ்க்கையால் ஒவ்வொரு தனிமனித வாழ்வும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தாங்க முடியாத வேலைச்சுமைகளோடு

மூச்சுத்திணறுகிறார்கள். இந்த பணிச்சுமை என்பது அலுவலகம் அல்லது பணி சார்ந்த இடங்களில் பணம் வாங்கிக் கொண்டு பார்ப்பதுதான் என்று இல்லை. குடும்பத்துக்கான வேலைகள், உறவுகளுக்கான/சமூகத்துக்கான வேலைகள் என்று எல்லா தரப்பிலுமே தொடர்புடையதுதான் இந்த பணிச்சுமை.
இன்று ஒருவர் சராசரி வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்பினால் வீட்டு வேலைகளையும் கவனிக்க வேண்டும், அலுவலகத்துக்கும் பதில் சொல்ல வேண்டும், உறவுகளுக்கும்/சமூகத்துக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். இந்த மூன்றில் ஏதாவது ஓர் இடத்தில் கவனக்குறைவாக இருந்தாலும் சிக்கல்தான். இந்த நவீன வாழ்க்கை கொடுக்கக் கூடிய அழுத்தத்தால் வாழ்க்கைமுறை நோய்கள்(Lifestyle disease) என்ற பெயர் சமீபகாலமாக அதிகம் கேள்விப்படும் ஒன்றாகிவிட்டது.
இந்த பிரச்னையிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது எப்படி என்று பொதுநல மருத்துவர் பவித்ராவிடம் கேட்டோம்… ‘‘தற்போதைய நவீன யுகத்தில் தனது குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து, சமூகத்தில் தனக்கென்று ஓர் அந்தஸ்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காக உடல்நலத்தையும், மன நலத்தையும் கருத்தில் கொள்ளாமல் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு இரவு பகல் பாராமல் ஓய்வின்றி பலரும் உழைக்கிறார்கள். இப்படி ஓய்வின்றி அதிக நேரம் பணிசெய்யும் பலர் பல்வேறு உடல் மற்றும் மனநல பிரச்னைகளுக்கு ஆளாகி உயிரைப் பறிகொடுப்பதையோ அல்லது உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதை பல செய்திகளின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம். ஆண், பெண் என்று இருபாலருக்குமே பணிச்சுமையால் பல்வேறு பிரச்னைகள் உண்டாகிறது. ஆனால் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகளவு பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பெண்களில் பலர் அலுவலகப் பணி முடிந்து வீட்டுக்கு சென்றாலும் வீட்டு வேலைகளை செய்வது, குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட பிற தேவைகளைப் பூர்த்தி செய்வது போன்ற பல பணிகளை செய்கின்றனர். இதுபோன்று பல வேலைகளை செய்யும்போது அனைத்திலும் முழுகவனம் செலுத்த முடியாமல் போகும் சமயங்களில் அவர்கள் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.
இந்த அதிக மன அழுத்தமானது பல்வேறு மனநல மற்றும் உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. இந்த பிரச்னை நகர்ப்புறங்களிலுள்ள பெண்களுக்கு இன்னும் அதிகமாகவே உள்ளது.’’ வேலைப்பளுவால் என்னென்ன உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகிறது? ‘‘ஒரு பணியை ஒரு நபர் அளவுக்கு அதிகமான நேரம் தொடர்ந்து செய்யும்படி பல்வேறு காரணங்களால் நிர்பந்திக்கப்படும் சூழலில் அதுவே அவருக்கு வேலைப்பளுவாக மாறிவிடுகிறது. இது அலுவலகத்தில் 8 மணி நேரத்துக்கும்  அதிகமாகப் பணிபுரிகிற நிலையாகவும் இருக்கலாம் அல்லது சென்னையில் பணியாற்றுகிற ஒருவர் தன்னுடைய உறவினர் திருமணத்துக்கு கோயமுத்தூர் சென்றுவிட்டுத் திரும்ப வேண்டிய சூழலாகவும் இருக்கலாம்.
வீட்டில் செய்யப்படுகிற வேலைகளை பலர் வேலை என்றே நினைப்பதே இல்லை. இதுபோல் அலைச்சலும், மன அழுத்தமும், வேலைப்பளுவும் அதிகரிக்கும்போது உண்ணும் உணவுகள் சரியாக ஜீரணமாவதில்லை. மன அழுத்தம் அதிகரிக்கும்போது ஜங்க் ஃபுட் உணவுகளையும் அதிகம் உண்ணும் மனோநிலை வந்து விடும். இதனால் நெஞ்செரிச்சல், செரிமான பிரச்னைகள் உண்டாவதோடு, உடலில் கொழுப்புச்சத்தும் அதிகரிக்கிறது. உடலில் கொழுப்புச்சத்து அதிகமாகி உடல் பருமனால் பல பிரச்னைகள் உண்டாகிறது.
இந்த கொழுப்பு இதயத்துக்கு சென்று படிவதால் இதய நோய்களும், மூளையில் சென்று படிவதால் பக்கவாதப் பிரச்னைகளும் ஏற்பட வழி வகுக்கிறது. மேலும் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்தல், ரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்தல் போன்ற பிரச்னைகளும் உண்டாகிறது. உடலுக்குத் தேவையான ஓய்வை கொடுக்காமல் தொடர்ந்து பணி செய்யும் நபர்களுக்கும், இரவு நேர பணி செய்பவர்களுக்கும் தூக்கமின்மை பிரச்னைகள் உண்டாவதோடு, கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் ஏற்படுகிறது. இதுபோன்ற நபர்களுக்கு உடல் சோர்வு, ஹார்மோன் சுரப்பு பிரச்னைகள், உடல்பருமன் மற்றும் செரிமானப் பிரச்னைகள் உண்டாகிறது. இவர்களுக்கு இதய நோய், நீரிழிவு நோய் போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.’’
வேலைப்பளு பிரச்னையை சமாளிக்க உங்களுடைய ஆலோசனைகள்…
‘‘நாம் செய்யும் வேலைகளை உடல் திறனால் செய்கிற வேலைகள், அறிவுத் திறனால் செய்கிற வேலைகள் அல்லது இந்த இரண்டையும் பயன்படுத்தி செய்கிற வேலைகள் என்று வகைப்படுத்தலாம். உடல் மற்றும் மூளையின் திறனும், ஆற்றலும் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. எனவே, அவரவர் திறனுக்கேற்ற அளவில் வேலைகளை செய்யும்போதுதான் அவற்றை சிறப்பான முறையில் செய்து முடிக்க முடியும் என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம். உடல்திறன் மற்றும் அறிவுத்திறனால் உழைப்பவர்கள் உடலுக்கும், சிந்தனைக்கும் போதுமான அளவு ஓய்வு கொடுப்பது அவசியம்.
பணிநேரம், ஓய்வு நேரம், தூக்கம் ஆகிய மூன்றுக்கும் சரியான நேரத்தை ஒதுக்க வேண்டும். சரியான உணவு பழக்கவழக்கம், முறையான உடற்பயிற்சி முறைகளைப் பின்பற்றுவதோடு, வாழ்வியல் முறை மாற்றங்களைச் சரிசெய்து கொள்வது அவசியம். நம் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வதற்கு தேவைப்படும் பணத்தை சம்பாதிக்கவே பல்வேறு பணிகளை செய்கிறோம் என்பதால் வாழ்வின் சந்தோஷத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஆனால், அதை மறந்துவிட்டு பணம், புகழ் போன்றவற்றை சம்பாதிக்கும் ஓர் இயந்திரமாக மட்டுமே நாம் மாறிவிடக்கூடாது.  ஒருவரின் குடும்பம், சமூகம், அலுவலகம் அல்லது பணி செய்கிற இடம் ஆகிய இம்மூன்றும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடையது. இந்த மூன்றுக்கும் சரியான அளவு நேரம் ஒதுக்குவதோடு, சரியான முறையில் அமைத்துக் கொள்வதே நமது ஒவ்வொருவருடைய சந்தோஷமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்’’ என்கிறார் மருத்துவர் பவித்ரா.

நன்றி குங்குமம் டாக்டர்

%d bloggers like this: