Advertisements

ஹேக்கிங் – டிஜிட்டல் பூதத்தை அடக்குவது எப்படி?

நாம் ஃபேஸ்புக்கில் உலா வரும்போது அவ்வப்போது தட்டுப்படும் பதிவுகளில் இதுவும் ஒன்று. `என் அக்கவுன்ட்டை யாரோ ஹேக் செய்து விட்டார்கள். கடைசியாக நான் அப்டேட் செய்த நிலைத்தகவல்கள், பகிர்ந்த லிங்க்குகள் என்னுடையவை அல்ல. மன்னிக்கவும்’ என்கிற ரீதியில் நண்பர்கள் புலம்பியிருப்பார்கள். நாமும் பதறியடித்து நம் டைம்லைனில் அதேபோல ஏதேனும் இருக்கிறதா என்று தேடியிருப்போம். நம்மில் பலர் சந்தித்த ஹேக்கிங் பிரச்னை இந்த அளவில்தான் இருக்கும். ஆனால், ஹேக்கிங்கால் தினமும்

அரங்கேறும் பிரச்னைகளில் இதற்குக் கடைசி இடம்தான்.
ஹேக்கிங் என்ற ஆங்கில வார்த்தையின் பொருளை `அங்கீகரிக்கப்படாமல் ஓர் அமைப்புக்குள் நுழைந்து அது செயல்படும் விதத்தையே மாற்றுவது, அதன் செயலை முடக்குவது, அந்த அமைப்பைப் பயன்படுத்தும் பயனீட்டாளருக்கு எதிராக அதைத் திசை திருப்புவது’ என மூன்று விதங்களில் எடுத்துக்கொள்ளலாம். பெரும்பாலும் ஹேக்கிங் நிகழ்வதற்கு வழிவகுப்பது பலவீனமாக இருக்கும் பாதுகாப்புக் கட்டமைப்புகள்தாம். உங்கள் ஸ்மார்ட்போன், லேப்டாப் தொடங்கி உங்கள் தனிப்பட்ட இ-மெயில் கணக்குகள், ஒரு பெரும் நிறுவனத்தின் சர்வர் வரை அனைத்தும் ஹேக் செய்யப்படலாம்.

சரி, நீங்கள் ஹேக் செய்யப்பட்டு உள்ளீர்கள் என்று எப்படித் தெரிந்துகொள்வது?
சாமானியர்களுக்கு இது மிகவும் கடினமான கேள்வி. உங்கள் தெருவில் ஒரு திருடன் நுழைந்திருக்கிறானா என்று எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?
சந்தேகத்துக்கு இடமாக ஏதேனும் நடக்கிறதா, அதுவும் முக்கியமாக இரவில் ஏதும் நடக்கிறதா என்று விடிய விடிய உளவு பார்க்க வேண்டும். அதே கோட்பாட்டையே இங்கேயும் பொருத்திப் பார்க்க வேண்டும். ஒரு தேர்ந்த ஹேக்கர் உங்கள் கருவிக்குள் நுழைந்ததை வெளியே காட்டிக்கொள்ளவே மாட்டான். அவன் உள்ளே செலுத்திய ஃபைல்கள், யாரும் அறியாவண்ணம் உங்கள் விண்டோஸ் மென்பொருளின் முக்கிய ஃபைல்களைப் போலவே வேடமணிந்து உள்ளே தங்கி விடும். அந்த முக்கியமான ஃபைல்கள் செய்யவேண்டிய பணிகளுடன் சேர்த்து வேறு சில வேலைகளையும் செய்யத் தொடங்கிவிடும். விபரீதம் நிகழும் வரை அந்த ஸ்லீப்பர் செல்கள் குறித்து உங்களுக்குத் தெரியவே தெரியாது. எனவே, சற்றே வித்தியாசமான செயல்பாடுகள் உங்கள் கணினியிலோ, ஸ்மார்ட்போனிலோ புலப்பட்டால் உடனே என்ன பிரச்னை என்று அலசி ஆராய்ந்துவிடுங்கள்.

ஹேக்கிங் செய்வதைத் தடுக்கப் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்…
அவ்வப்போது ஆன்டிவைரஸ் (Antivirus) மென்பொருளை அப்டேட் செய்து கொள்ளுங்கள். வாரத்துக்கு ஒருமுறை முழு ஸ்கேன் செய்வது மிகவும் அவசியம்.
கள்ளச்சந்தையில் கிடைக்கும் மென்பொருள் களைப் பயன்படுத்தாமல் அதிகாரபூர்வ மென்பொருள்களையே பயன்படுத்துங்கள். அதையும் அவ்வப்போது அப்டேட் செய்யுங்கள். முக்கியமாக வெப் பிரவுசர்கள் புதியனவாக இருத்தல் அவசியம்.
எளிதில் கண்டறிய முடியாத, யூகிக்க முடியாத பாஸ்வேர்டுகளை வைத்துக்கொள்ளுங்கள். இ-மெயில் கணக்குகளைப் பொறுத்தவரை எண்கள், ஸ்பெஷல் கேரக்டர்ஸ் எனக் கலந்து பாஸ்வேர்டுகளைக் கட்டமைத்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது அவற்றை மாற்றும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள்.
சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் புதிய முகவரியிலிருந்து இ-மெயில்கள் வந்தால் அவற்றைக் கவனமாகக் கையாளுங்கள். அவை வைக்கும் வேண்டுகோள்களைச் செய்யாது இருத்தல் நலம்.
விண்டோஸ் மென்பொருளின் ஃபயர்வால் (Firewall) எப்போதும் செயல்பாட்டிலேயே இருக்கட்டும். சில இணையதளங்களுக்குச் செல்லும்போது, அது ஃபயர்வாலை ஆஃப் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கும். அதை ஒருபோதும் செய்யக் கூடாது.

இலவச வைஃபை (WiFi) கிடைக்கிறது எனக் கிடைத்த இடத்தில் எல்லாம் உங்கள் கருவிகளை இணைக்காதீர்கள். அதன்மூலம் உங்கள் கருவிக்குள் நுழைந்து டேட்டாவை களவாட ஹேக்கர்கள் கூட்டம் காத்திருக்கும். பொது இடத்தில் கிடைக்கும் வைஃபைகள் வேண்டவே வேண்டாம். முக்கியமாக, அப்போது உங்கள் வெப் கேமரா, ஆடியோ போர்ட் போன்றவற்றைப் பயன்படுத்தவே கூடாது. அதைக்கொண்டு உங்கள் பிரைவசி விலை பேசப்படும் (பார்க்க, பெட்டிச் செய்தி).

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் கடவுச்சொல், வங்கிக் கணக்கு குறித்த தகவல் கள் மற்றும் இதர முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
ஸ்மார்ட்போனில் சந்தேகத்துக்கு இடமான அல்லது பிளே ஸ்டோரில் கிடைக்காத ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்ய வேண்டாம். உங்களின் தனிப்பட்ட தகவல்களை (இ-மெயில், புகைப்படம், மொபைல் எண்) குறிப்பிட்ட ஆப் கேட்கிறது என்றால், பலமுறை யோசித்து, `அது அவசியமா’ என்று உறுதி செய்துவிட்டு அளிக்கவும்.
ஒரு சில ஆப்கள் உங்களுக்குத் தேவையற்றதாகத் தோன்றினாலும், உங்கள் போனின் மென்பொருளுக்கு அவை மிகவும் முக்கியமான ஒன்றாக, அதன் பாதுகாப்புக்கு வேண்டப்பட்டவையாக இருக்கும். எனவே, அவ்வகை ஆப்ஸ்களை அழிக்க வேண்டாம்.
கூகுள் அல்லது ஃபேஸ்புக் சேவையை இலவசமாகப் பயன்படுத்த நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் உங்கள் பிரைவசியே. இப்படிப்பட்ட வியாபார டிஜிட்டல் யுகத்தில் நாம் வாழ்வதால், இங்கே யாரையும் குற்றம், குறை சொல்ல முடியாது. நம் தகவல்களுக்கு, நாமே பொறுப்பு. ஹேக்கிங்கால் ஏற்படும் விபரீதங்களை ஒருமுறை உணர்ந்தால் மட்டுமே, முன்னெச்சரிக்கையாக இருக்கப் பலர் முயல்கிறார்கள். அதை முன்னரே செய்ய உறுதி எடுத்துக் கொள்வோம்.


ஹேக்கிங்கில் வகை நான்கு!

சிஸ்டம் ஹேக்கிங்: ஒரு சிஸ்டத்தை நிர்வகிப்பவருக்கு (Admin) தெரியாமல் உள்ளே நுழைந்து வேண்டிய காரியங்களைச் சாதித்துக்கொள்வது.
இணையதள ஹேக்கிங்: நன்கு செயல்படும் வெப்சைட் ஒன்றைச் செயலிழக்கச் செய்து, அதை நிர்வகிப்பவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வேண்டிய காரியத்தைச் சாதித்துக் கொள்வது.
டேட்டாபேஸ் (Database) ஹேக்கிங்: வங்கிக் கணக்கு போன்ற முக்கியமான தகவல்கள் அடங்கியிருக்கும் டேட்டாபேஸ் சமூக விரோதிகள் கையில் கிடைத்தால் என்னவாகும்? அப்படிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பதே ஹேக்கர்களின் தலையாய குறிக்கோள்.
இ-மெயில் ஹேக்கிங்: நம்மில் பலர் இதற்கு நிச்சயம் பலியாகி இருப்போம். இதன்மூலம் உங்கள் இ-மெயிலில் பதிந்திருக்கும் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்கள் வசம் சென்று விடும்.


விலை பேசப்படும் பிரைவசி!
இப்போது சிஸ்டம் ஹேக்கிங்கின் தொடர்ச்சியாக வேறு ஒரு பயமுறுத்தும் செயலும் அரங்கேற்றப்படுகிறது. அது உங்கள் பிரைவசியை காலி செய்வது.   
மார்க் சக்கர்பெர்க்கின் பெரும்பாலான புகைப்படங்களில், அவரது லேப்டாப்பின் வெப் கேமரா டேப் கொண்டு மூடப்பட்டிருக்கும். ஹேக்கர்கள் ஒரு லேப்டாப்பின் உள்ளே நுழைந்துவிட்டால், வெப் கேமராவைக்கூடத் தங்கள் விருப்பத்துக்குக் கட்டுப்படுத்தலாம் என்பதால், அதைத் தடுக்கவே மார்க் டேப் ஒட்டியிருப்பதாகச் சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கின்றனர். கணினியை ஹேக் செய்தால் அதிலிருக்கும் தகவல்களை மட்டும்தான் திருட முடியும். வெப் கேமராவை ஹேக் செய்தால் நம்மைச் சுற்றி என்னவெல்லாம் நிகழ்கின்றன என்பதையும் ஹேக்கர்கள் தெரிந்துகொள்ள முடியும்.
இது அதீத கற்பனை, மார்க்கின் லேப்டாப்பை ஹேக் செய்தால் வேண்டுமானால் நிறைய விஷயங்கள் கிடைக்கும், நம் லேப்டாப்பை நோண்டுவதால் ஹேக்கர்களுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது என்று பலர் கூறலாம். இந்த அலட்சியம்தான் ஹேக்கர்களை இன்றுவரை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. முக்கியமாக, பெண்கள் பயன்படுத்தும் லேப்டாப்களில் இவ்வகை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்து கொண்டால் நல்லதுதானே? பயன்படுத்தும்போது மட்டும், டேப்பை அகற்றிவிட்டு, மற்ற நேரத்தில் அதை மூடியே வைத்திருப்பதால் நமக்கு ஒன்றும் நஷ்டம் இல்லையே?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: