Advertisements

குடைச்சல் கொடுக்கும் குட்கா விவகாரம்?

ண்டும் ஒருமுறை குட்கா விவகாரம் தமிழக அரசுக்குத் தலைவலியைக் கொடுக்கிறது’’ என்றபடி வந்தார் கழுகார்.
‘‘ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஜெயக்கொடி அதிரடியாக மாற்றப்பட்டுள் ளாரே… அதைச் சொல்கிறீரா?’’ என்றோம்.

‘‘ஆமாம்! ‘இந்த டிரான்ஸ்ஃபரில் உள்நோக்கம் உள்ளது’ என்று தி.மு.க குற்றம் சாட்டுகிறது. சென்னை உயர் நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக வழக்கு போடப்பட்டுள்ளது. குட்கா விவகாரம் தொடர்பான இரண்டு வழக்குகள் தமிழக ஆட்சியாளர்களுக்கு மீண்டும் குடைச்சலைக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் தி.மு.க உள்ளது.’’
‘‘விளக்கமாகச் சொல்லும்…’’
‘‘பான் குட்கா விவகாரத்தில் அடிபடும் முக்கியத் தலைகள் யாரென்று உமக்குத் தெரியாதா? சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரைத்தான் இந்த விவகாரத்தில் தி.மு.க குறிவைக்கிறது. இவர்களுக்கு எதிராக ‘மெட்டீரியல்’ எவிடென்ஸ் வலுவாக உள்ளன. 2016-ம் ஆண்டு, சென்னை அருகே செங்குன்றத்தில் எம்.டி.எம் பான் குட்கா நிறுவனத்தில் வருமானவரித் துறை ரெய்டு நடந்தபோது சிக்கிய டைரி மற்றும் வரவு செலவு லெட்ஜரில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பல போலீஸ் உயரதிகாரிகளின் பதவி விவரங்களும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தொகையின் அளவும் குறித்துவைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, வருமானவரித் துறை அந்த விவரங்களைத் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்து, கடிதமும் எழுதியது. ‘இந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தி.மு.க வழக்கு போட்டது. ‘நேர்மையான ஓர் அதிகாரியை நியமித்து விசாரிக்க வேண்டும்’ என 2017 ஜூலை 28-ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஊழல் கண்காணிப்பு ஆணையராக ஜெயக்கொடி நியமிக்கப்பட்டார். ஆறு மாதங்கள் கூட ஆகாத நிலையில் அவரை மாற்றியுள்ளனர்.’’
‘‘எதனால் இந்த மாற்றம்?’’
‘‘குட்கா விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் உள்துறைக்கும் நடந்த கடிதப்போக்குவரத்து அனைத்தும், வலுவான ஆதாரங்களாக உள்ளன. இந்த விவகாரத்திலிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், ஜெயக்கொடியை வளைக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. இந்த விவகாரத்தில் யாருக்காவது சலுகை காட்டினால் ஆபத்து என ஜெயக்கொடி கருதினார். அதனால், கறாராக நடந்துகொண்டார். அதன் விளைவாக, அவர் தூக்கியடிக்கப்பட்டார். நில நிர்வாகத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் மோகன் பியாரே, இப்போது ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.’’
‘‘மோகன் பியாரே எப்படிப்பட்டவராம்?’’
‘‘மோகன் பியாரே, அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நன்கு அறிமுகமானவர். 2014 முதல் 2017 வரை இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையராக இருந்தவர். அப்போது இருவருக்கும் நல்ல பழக்கம் உண்டு. ‘அந்தப் பழக்கம், இப்போது அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சாதகமாக இருக்குமா’ என்பதைப் போகப் போகத்தான் புரிந்துகொள்ள முடியும். இன்னொரு விஷயம்… இந்த டிரான்ஸ்ஃபர் உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரம் படைத்தவர் தலைமைச் செயலாளர்தான். ஆனால், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் விடுப்பில் இருந்த நேரத்தில், அந்தப்பொறுப்பைக் கூடுதலாக வகித்த நிதித்துறைச் செயலாளர் சண்முகம் இந்த டிரான்ஸ்ஃபர் உத்தரவைப் பிறப்பித்தார். இதிலும் உள்நோக்கம் இருப்பதாக தி.மு.க சந்தேகிக்கிறது. அதனால், ஆர்.எஸ்.பாரதி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.’’

‘‘குட்கா தொடர்பாக இன்னொரு வழக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கிறதே?’’
‘‘ஆம். ‘குட்கா விவகாரத்தை சிபி.ஐ விசாரிக்க வேண்டும்’ என தி.மு.க எம்.எல்.ஏ-வான  ஜெ.அன்பழகன் போட்டிருக்கும் பொதுநல வழக்கு அது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வில், அது ஜனவரி 8-ம் தேதி விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. தலைமை நீதிபதி அன்று ரொம்பவே கடுமை காட்டினார். ‘என் அப்பாவும் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தவர்தான். போலீஸ் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். இப்போதெல்லாம் காக்கிச்சட்டைகள் பற்றி வெளியாகும் தகவல்கள் ரொம்பவே வேதனை தருகின்றன. உங்களுக்குப் பயமில்லை என்றால் ஏன் எதிர்க்க வேண்டும்’ என்று கேட்டார் இந்திரா பானர்ஜி. எப்படியும் இந்த வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தி.மு.க  நம்புகிறது. அதனால்தான், சட்டசபையிலும் இந்தப் பிரச்னையைக் கிளப்ப முயன்றது.’’
‘‘சட்டசபை எப்படிப் போகிறது?’’
‘‘தினமும் வெளிநடப்புகளாகப் போகிறது. தி.மு.க வெளிநடப்பு ஒருபக்கம் என்றால், தினகரனும் வெளிநடப்பு செய்தார். சபாநாயகர் தனபால்தான் தினகரனைச் சமாளிக்கப் பெரும்பாடுபடுகிறார்.’’
‘‘அப்படியா?’’
‘‘ஜனவரி 12-ம் தேதி வெள்ளிக்கிழமை சசிகலாவைப் பார்க்க பெங்களூரு செல்ல இருந்ததால், ஜனவரி 11-ம் தேதி பேச வாய்ப்புக் கேட்டிருந்தார் தினகரன். நேரமிருந்தால் வாய்ப்புத் தருவதாக சபாநாயகர் தரப்பிலும் சொல்லப் பட்டுள்ளது. ஆனால், அன்று அவருக்கு வாய்ப்புத் தரப்படவில்லை. தினகரன் கையை உயர்த்தி எழுந்தபோது ‘தமிமுன் அன்சாரி… நீங்கள் பேசுங்கள்’ என்று சொன்னார் சபாநாயகர். அன்சாரியைப் பார்த்த தினகரன், ‘பேசுவதை நிறுத்துங்கள்’ என்று கூற, அன்சாரியும் அமைதி யானார். இப்படியே மூன்று முறை நடைபெற்றது.அவையில் உறுப்பினர்களைப் பேசச் சொல்லவோ, நிறுத்தச் சொல்லவோ, சபாநாயகருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. ஆனால், தினகரன் அதைக் கையில் எடுத்துக்கொண்டார்.’’
‘‘ஓஹோ!’’
‘‘அது மட்டுமல்ல, அவையில் பன்னீருக்கும் தினகரனுக்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது. தினகரனை ஆதரித்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18     எம்.எல்.ஏ-க்கள் விவகாரம் தொடர்பான அந்த அரை மணி நேர விவாதம் முழுவதையும் சபைக்குறிப்பிலிருந்து சபாநாயகர் நீக்கினார். முன்பெல்லாம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களின் பேச்சுக்கள் மட்டும்தான் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஆளும்கட்சி உறுப்பினர்கள் பலரின் பேச்சுக்களே நீக்கப்படுவது வழக்கமாகியுள்ளது.’’

‘‘ஜெ.தீபா மீண்டும் செய்திகளில் அடிபடுகிறாரே?’’
‘‘ஆமாம். அவருக்கு டிரைவராகவும், ‘எம்.ஜி.ஆர்-அம்மா தீபா பேரவை’யில் பொறுப்பிலும் இருந்த ராஜாவை விலக்கி விட்டதாக அறிவிப்பு செய்திருக்கிறார். அமைப்பில் பொறுப்பு வாங்கித் தருவதாக, ராஜா பலரிடம் லட்சக்கணக்கில் வசூல் செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அவர்களில் பலரும் பணத்தைத் திரும்பக் கேட்டு நெருக்குகிறார்கள். அதனால்தான் ராஜாவை நீக்கியதாக தீபா அறிவித்துள்ளார். ஆனால், ‘இப்போதும் தீபா என்னுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்’ என ராஜா தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்கிறாராம். தனக்கு வேண்டியவர்களை ஊரறியத் தள்ளி வைப்பதுபோல் தள்ளிவைத்து, அவர்களுடன் தொடர்ந்து பேசுவது ஜெயலலிதாவின் பழக்கம். தீபாவும் அதையே செய்கிறார்’’ என்ற கழுகார் பறந்தார்.

Advertisements
%d bloggers like this: