Advertisements

சசிகலா குடும்பத்தில் உச்சகட்ட மோதல்! விவேக்குக்கு எதிராக வரிந்து கட்டும் தினகரன்!

சசிகலா குடும்பத்தில் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. விவேக்குக்கு எதிராக தினகரன் வரிந்து கட்டிக் கொண்டு செயல்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சசிகலா குடும்பத்தில் நடக்கும் மோதல்களால் உற்சாகத்தில் திளைக்கின்றனர் அ.தி.மு.க அமைச்சர்கள். அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு வீழ்வார்கள்’ என முதல்வர் தரப்பு உறுதியாக நம்புகிறது. விவேக்கை வழிநடத்தும் சிலர் மீது தினகரன் தரப்பு கடும் கோபத்தில் இருக்கிறது. அதிகாரத்தில் உள்ளவர்களோடு கைகோர்த்துக் கொண்டு குடும்பத்துக்கு எதிராக விவேக் செயல்படுகிறார் என சீறிக் கொண்டிருக்கிறார் தினகரன் என்கின்றனர் குடும்பத்தினர்.

கன்னத்தில் அறைவேன்’ என நடராஜன் கூறிய வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள முடியாமல், தினம் ஒரு ஃபேஸ்புக் பதிவைப் போட்டுக் கொண்டிருக்கிறார் கிருஷ்ணபிரியா. இளவரசி குடும்பத்துக்கு எதிராக நேரடியான மோதலில் இறங்கிவிட்டது தினகரன் தரப்பு.

சசிகலாவிடம் புகார்

ஜெயா டி.வி. நிர்வாகத்தை அந்தப் பையனால் திறம்பட நடத்த முடியவில்லை. எனக்கு ஒரு அவசரத் தேவையென்று பணம் கேட்டாலும், ‘சின்னம்மா சொல்லட்டும்’ எனக் கூறுகிறார். ஆட்சிக்கு எதிராக நான் செய்கின்ற அரசியலுக்கு அந்தக் குடும்பம் இடையூறு செய்கிறது’ என சசிகலாவை நேரில் சந்தித்துப் புலம்பினார் தினகரன். இதையடுத்து, விவேக்கை நேரடியாக வரவழைத்து சத்தம் போட்டார் சசிகலா.

விவேக் லிங்க் பட்டியல்

இந்த விவகாரம்தான் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவாளர் ஒருவர், விவேக்கின் செயல்பாடுகளை குடும்பத்தினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அதிகாரத்தில் உள்ளவர்களுடன் அவருக்கு இருக்கும் தொடர்புகளை விரிவாக ஆராய்ந்துள்ளனர். கடந்த பத்து மாதங்களாக அவர் யாருடன் எல்லாம் பேசினார்? சந்திக்க வந்த நபர்கள் யார்? என்பதையெல்லாம் அலசி எடுத்துள்ளனர்.

நமது எம்ஜிஆர் ஊழியர்

தமிழக அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்கள், நேரடியாகவே விவேக்குடன் தொடர்பில் இருந்துள்ளனர். இதற்குப் பாலமாக தற்போது அ.தி.மு.கவில் இருக்கும் ஒரு பிரமுகரைச் சுட்டிக் காட்டுகிறார்கள். நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில் வேலை பார்த்த அந்த நபர்தான், தினகரனுக்கு எதிராக கொம்பு சீவிக் கொண்டிருக்கிறார். ‘அந்த நபரை வேலையை விட்டுத் தூக்குங்கள்’ என தினகரன் பகிரங்கமாகக் கூறியபோது, ‘ அப்படியெல்லாம் நீக்க முடியாது’ எனக் கூறிவிட்டார் விவேக்.

விவேக் பேட்டிக்கு எதிர்ப்பு

இப்படியொரு பதில் வரும் என்று தினகரனும் எதிர்பார்க்கவில்லை. இதைப் பற்றி சசிகலாவிடம் பேசும்போது, ‘ தினமும் ஏராளமான பிரச்னைகளைச் சந்தித்து வருகிறோம். இதை உணராமல் அந்த நபர் செயல்படுகிறார். அவருக்கு விவேக் ஆதரவாக இருக்கிறார்’ எனக் கூறியிருக்கிறார். இதன்பிறகு, போயஸ் கார்டனில் நடந்த ரெய்டின்போது மீடியாக்களை சந்தித்துப் பேசினார் விவேக். இந்த பத்திரிகையாளர் சந்திப்பை தினகரன் விரும்பவில்லை. ‘ என்னை ஓரம்கட்டி அரசியல்வாதியாகும் ஆசை அந்தப் பையனுக்கு வந்துவிட்டது. ஆளாளுக்கு பேட்டி கொடுத்தால், தேவையற்ற விளைவுகள் ஏற்படும்’ என குடும்பத்துப் பெரியவர்களிடம் பேசினார் தினகரன். இதையும் விவேக் கண்டுகொள்ளவில்லை. ‘ தினகரனை அனுசரித்து நடந்து கொள்’ என சசிகலா அறிவுறுத்தியதையும் அவர் விரும்பவில்லை. இதற்கு ஒரே காரணம், ஆட்சியில் உள்ளவர்கள் கொடுக்கும் தைரியம்தான்.

அரசுடன் இணக்கம்

விவேக்கை வைத்தே தினகரனுக்கு செக் வைக்க வேண்டும்’ எனக் கணக்கு போடுகின்றனர். எனவேதான், குடும்பத்திற்குள் களையெடுப்பை நடத்த வேண்டும் என சசிகலாவிடம் உறுதியாகக் கூறிவிட்டார். வரும் நாட்களில் கார்டன் சொத்துக்களைப் பராமரிப்பதில் நிறைய மாற்றங்கள் வரலாம்” என்கிறார். இதைப் பற்றிப் பேசும் விவேக் தரப்பினர், அமைச்சர்கள் சிலர் விவேக்குடன் தொடர்பில் இருப்பது உண்மைதான். எந்தப் பிரச்னை நடந்தாலும் வர்த்தகம் நன்றாக நடக்க வேண்டும். அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தி.மு.கவினர் நடத்தும் சாராய ஆலைகளில் இருந்தும் மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. அதேபோல் வியாபாரம் தொடர்ந்து நடக்க வேண்டும் என விவேக் ஆசைப்படுகிறார்.

போயஸ் கார்டன் கஜானா

இளவரசி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் மிடாஸ் ஆலையின் பொறுப்புகளில் இருக்கிறார்கள். தினகரனின் செயல்பாடுகளால் மிடாஸ் கொள்முதலை அரசு குறைத்தது அ.தி.மு.க அரசு. இப்படிப்பட்ட நிலையில், ஆட்சியில் உள்ளவர்களுடன் அனுசரனையாக இருந்து வர்த்தகத்தைக் கவனிப்பதில் தவறில்லை. குடும்பத்துக்கு எதிராக சதிவேலைதான் செய்யக் கூடாது. ஆர்.கே.நகர் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்தது முதல் தினகரனின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மக்களுக்குக் கொண்டு சென்றது ஜெயா டி.வி. எந்நேரமும் ஆர்.கே.நகரிலேயே தொலைக்காட்சி ஊழியர்கள் தவம் கிடந்தனர். அவருக்கு எதிராக சதிவேலை செய்தார்கள் என்றால், அவருடைய வெற்றிக்காக விவேக் ஏன் இரவு பகலாக உழைக்க வேண்டும்? தினகரனுக்குத் தேவை, சசிகலா விட்டுவைத்துள்ள கஜானா சாவி. இந்த சாவி வந்துவிட்டால், ஆட்சி அதிகாரத்தையே வளைத்துவிடலாம் என நினைக்கிறார். அதற்காகத்தான், ஒரே மாதத்தில் இரண்டு முறை சசிகலாவை சந்தித்தார். என்ன நடந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியம் விவேக்குக்கு உண்டு என்கின்றனர்.

Advertisements
%d bloggers like this: