Advertisements

விஷத்தைக் காசு கொடுத்து வாங்குறோம்…

தினமும் நாம் சாப்பிடும் உணவுகள் சத்தானவையா என்கிற கேள்வி காணாமல்போய், கலப்படமற்றதாக இருந்தாலே போதும் என்கிற நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். உணவுப்பொருள் உற்பத்தி முதல் விற்பனை வரை கார்ப்பரேட்டுகளின் கைகள் ஓங்க ஆரம்பித்ததிலிருந்து, அதை வைத்து நடத்தப்படும் தில்லாலங்கடி வேலைகள் கொஞ்சநஞ்சமல்ல. அதை அத்தனையையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘வேலைக்காரன்’ திரைப்படம்.

‘எனர்ஜி டிரிங்க், சத்து டானிக், வைட்டமின் டானிக் இப்படிப் பல பேருல நாம வாங்கிக் குடிக்கிற பானங்கள், பெரும்பாலானவை கெமிக்கல் விஷம் கலந்ததுதான். இந்த விஷத்தைத்தான் காசு கொடுத்து வாங்கிக் குடிச்சிட்டிருக்கோம்’ என்று நம் ஒவ்வொருவருடைய பொட்டிலும் அறைந்து சொல்கிறான் வேலைக்காரன்.

விளம்பரங்களில் காட்டுவதுபோல நூடுல்ஸ், ஜூஸ், பிஸ்கட், ஜாம் என அனைத்து ஜங்க் ஃபுட்களையும் பழங்கள், பால், கோதுமை என இயற்கையான பொருள்களை மட்டும் பயன்படுத்தித் தயாரிப்பதில்லை. அவற்றில் ரசாயனங்களையும் சேர்த்தே தயாரிக்கிறார்கள். இவை கெட்டுப்போகாமல் இருப்பதற்காகவும், சுவைக்காகவும் கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. இந்த உண்மையை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக, தன்னையே பலிகடாவாக்கி, கலப்பட உணவுப் பொருள்களைச் சாப்பிட்டு பாதிக்கப் பட்டவராக நடித்திருக்கும் சிநேகாவைப் பார்க்கும்போது, மனது பகீரிடுகிறது. ‘குழந்தைகளுக்காக விளம்பரப்படுத்தப்படும் உணவு ஒவ்வொன்றும், குழந்தைகளின் நாக்கால் சுவைத்துச் சாப்பிடப்படுவதில்லை. அவர்கள், மூளையால் தூண்டப்பட்டே சாப்பிடுகிறார்கள். பெரும்பாலான உணவுப் பொருள்களில் நிறத்துக்காக, சுவைக்காக, நீண்ட நாள்கள் கெடாமல் இருப்பதற்காக என அதிக ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. பால், பிரெட், பிஸ்கட், ஜூஸ் என எல்லாவற்றிலுமே இந்த ரசாயனங்கள் நிறைந்திருக்கின்றன. தெரிந்தே, குழந்தைகளுக்கு இவற்றையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறீர்கள். அவர்கள் சாப்பிடுவது உணவா, விஷமா என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லி, நம்மை நடுநடுங்க வைக்கிறார்கள்.
சட்டங்களால் முடியாததை, கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களை வைத்தே சாதிப்பதுதான் கதை. இது, நிஜத்தில் சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால், படம் பார்த்த ஒவ்வொருவரின் மனதிலும் ஆயிரமாயிரம் கேள்விகளை எழுப்பி விட்டிருக்கிறது என்பது நிஜம். இதற்காகவே இயக்குநர் மோகன் ராஜா, நடிகர் சிவகார்த்திகேயன் உட்பட மொத்தப் படக்குழுவினரையும் பாராட்டலாம்.
அந்த ஆயிரமாயிரம் கேள்விகள்… லட்சம், கோடி என உயர்ந்து… இயற்கையான, பாரம்பர்யம் மிக்க உணவுகளை நோக்கி மக்களைத் திசை திருப்பட்டும்!

Advertisements
%d bloggers like this: