எதையும் தாண்டி வாழ்வதே வாழ்க்கை

ந்தத் தலைமுறை மனிதர்கள் எதிர்கொண்ட மிக மோசமான நிகழ்வு… சுனாமி! கடல் அலைகளை ரசித்துப் பழக்கப்பட்டவர்களுக்கு அதே அலைகள் அதிர்ச்சியையும் துயரத்தையும் வாரிக்கொடுத்து, பலரைக் கடலுக்குள் சுருட்டிக்கொண்டு போனது. தமிழகத்தின்,

தென்கோடி கன்னியாகுமரியில் இருக்கும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் உச்சி வரை எழுந்தன என்பதை வைத்தே அலைகளின் சீற்றத்தை உணர்ந்துகொள்ளலாம். சென்னை மெரினாவில் வாக்கிங் சென்றவர்கள், நாகை, கடலூர் போன்ற கடலோரப் பகுதிகளில் வாழ்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தார்கள். பல்லாயிரக்கணக்கானவர்களின் வீடுகளும் உடைமைகளும் கடல் நீரில் அடித்துச்செல்லப்பட்டன. இந்தக் கோரத் தாண்டவம், இதில் உயிர் பிழைத்தவர்களை மட்டுமல்ல… அதைத் தொலைக்காட்சியில் பார்த்தவர்களையும்கூட உலுக்கிப்போட்டது. சுனாமியை நேருக்கு நேர் எதிர்கொண்டவர்கள்,  இன்றும் அதைப்பற்றிக் கேட்டால், சொல்லத் தயங்குவார்கள் அல்லது கண்களில் மரண பயம் ஒளிர விவரிப்பார்கள். 

இயற்கைப் பேரிடர், விபத்து, கொலை, கொள்ளை, குண்டுவெடிப்புச் சம்பவம், நேசத்துக்குரியவரின் இழப்பு,  பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாதல்… என நம் வாழ்க்கையில் அதிர்ச்சி தரும் நிகழ்வுகளும் அசம்பாவிதங்களும் ஏற்படலாம். அந்த நேரத்தில் அதுவரை வாழ்க்கையில் இருந்து வந்த பாதுகாப்பு உணர்வும் தன்னம்பிக் கையும் ஆட்டம் கண்டுவிடும். பயமும் பதற்றமும் மனதை இறுகப் பற்றிக்கொள்ளும். யாராக இருந்தாலும் அந்த அதிர்ச்சி அனுபவத்தில் இருந்து மீள சில நாள்கள் ஆகும். ஆனால், இந்தப் பிரச்னை மாதக்கணக்கில், வருடக் கணக்கில் ஒருவருக்குத் தொடர்ந்தால், அது `பி.டி.எஸ்.டி’ (Post traumatic Stress Disorder) என்கிற ஒருவிதக் கடுமையான மனநலப் பிரச்னைக்கு அவரை உள்ளாக்கலாம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். இதற்குத் தீர்வு உண்டு. என்றாலும், இதை ஆரம்பநிலை யிலேயே அடையாளம் கண்டு மனநல ஆலோசனை பெறுவது சிறந்தது. சமீபகாலமாக இந்த பி.டி.எஸ்.டி பற்றியும் அதிலிருந்து தாங்கள் மீண்ட கதை பற்றியும் நிறைய பிரபலங் கள் பேச ஆரம்பித்திருக் கிறார்கள். சரி… பி.டி.எஸ்.டி என்றால் என்ன, அது எப்படிப் பட்ட பாதிப் புகளை உண்டாக்கும், அதிலிருந்து மீள்வது எப்படி என்பது பற்றிப் பார்ப்போம்…
பி.டி.எஸ்.டி
மனதை மிக மோசமாகப் பாதிக்கும் நிகழ்வுகளைப் பார்த்தவர்கள், எதிர் பாராத ஒரு நிகழ்வில் உயிர்பிழைத்தவர்கள் போன்றவர்களுக்கு மனதளவில் மிகப் பெரிய பாதிப்பு இருக்கும். பெரும்பாலானோர் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவிடுவார்கள். இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவார்கள். ஆனால், சிலரால் இப்படிப்பட்ட பாதிப்புகளில் இருந்து அவ்வளவு எளிதாக மீண்டு வர முடிவதில்லை. அவர்களுக்கு அந்த பாதிப்பு நீண்ட நாள்களுக்கு நீடித்திருக்கும்; உயிர்பயத்தையும் கடுமையான மன அழுத்தத்தையும் உண்டாக்கும்; மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்திவிடும். இந்த நிலையை `பி.டி.எஸ்.டி’ என்கிற ‘அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்த பாதிப்பு’ என்கிறோம். இதை ஆங்கிலத்தில் ‘போஸ்ட்ட்ரமாட்டிக் ஸ்ட்ரெஸ் டிஸ்ஆர்டர்’ (Post traumatic stress disorder) என்கிறார்கள்.

யாருக்கு வரலாம்?

* விபத்து, பேரழிவுகளிலிருந்து உயிர்பிழைத் தவர்கள்.
* இயற்கைப் பேரழிவு அல்லது விபத்தைக் கண்டவர்கள்.
* பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர்கள்.
* தாங்க முடியாத இழப்பு, தோல்வியைச் சந்தித்தவர்கள்.
சில நேரங்களில் அதீத மன அழுத்ததுக்கு ஆளானவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம். ஆனால், இவர்களுக்கு பி.டி.எஸ்.டி வருவதற்கான வாய்ப்பு உள்ளதே தவிர, கண்டிப்பாக வந்தே தீரும் என்பதில்லை. அது அவர்களின் சூழல், வளர்ந்த விதம் மற்றும் அவர்களின் மனநிலையைப் பொறுத்தது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த வயதினருக்கும் வரலாம்.

பாதிப்பை அறிவது எப்படி?

தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை திரும்பத் திரும்ப அனுபவித்தல் (Re Experiencing)
நடந்த அசம்பாவிதத்தைப் பற்றியே மறுபடி மறுபடி நினைக்கத் (Flashbacks) தோன்றும். அதேபோல, அதிர்ச்சியை அனுபவித்தபோது உண்டான அதே உணர்வுகளும் நினைவுகளும் விருப்பத்துக்கு எதிராக மனதை ஆக்கிரமிக்கும். அது கிட்டத்தட்ட நிகழ்காலத்தில் நடப்பதுபோலத் தோன்றும். மனதளவில் தொடர்ந்து அந்தத் துயரத்தை, வேதனையை அனுபவிக்க நேரிடும்.

எதிர்மறை உணர்ச்சி நிலை

வாழ்க்கையில் எதையோ பறிகொடுத்த மாதிரி, வாழ்வதற்கு அர்த்தமே இல்லாததுபோல, எல்லாமே அழிந்துபோனதுபோல உணர்வார்கள். எல்லா விஷயங்களையும் எதிர்மறையாக எடுத்துக்கொள்வது, குற்ற உணர்ச்சி, வெட்கம், விரக்தி, மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கியிருத்தல், யார் மேலும் நம்பிக்கையின்மை போன்றவை இவர்களுக்கு இருக்கும்.
மிகை உணர்வுக் கிளர்ச்சி (Hyperarousal)
எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. பதற்றமும் பயமும் அதிகரிக்கும். வழக்கத்துக்கு மாறாக நடந்துகொள்வது, எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பது, தூக்கத்தில் சிறு சத்தம் கேட்டாலும் திடுக்கிட்டு எழுந்துகொள்வது என இருப்பார்கள். கோபம், எரிச்சல், குழப்பம், குற்றஉணர்வு, கவலை போன்றவை அதிகமாக இருக்கும்.
தவிர்த்தல் (Avoidance)
அதிர்ச்சிக்குக் காரணமான சம்பவத்தையோ அல்லது நடந்த அந்த இடத்தையோ எப்போது பார்த்தாலும் இனம்புரியாத ஒரு பயம் ஏற்படும். உதாரணமாக, ஒரு பெண் லிஃப்டில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டு, அதனால் இந்த நிலையை அடைந்திருந்தால், அந்த லிஃப்டைப் பார்ப்பதையோ, பயன்படுத்துவதையோ தவிர்ப்பார். அதேபோல, ஓர் ஆணால் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியிருந்தால், மற்ற ஆண்களைப் பார்க்கும்போதுகூட அந்த நினைவுகள் ஏற்படலாம். இப்படிச் சில மனிதர்கள், சில இடங்கள்கூட உணர்வுகளுடன் சேர்ந்து பாடாய்ப்படுத்தும். இவற்றோடு, ஒரு சிலருக்கு உணர்வுகளின் நிலை மரத்துப்போதல், ஒரு நிகழ்வை மீண்டும் நினைவுகூர முடியாமல் போவது எல்லாம் இருக்கும்.
என்ன தீர்வு?
ஒருவருக்கு இந்த அறிகுறிகள் ஒரு மாதத்துக்கும் மேலாகக் காணப்பட்டால், அது பி.டி.எஸ்.டியாக இருக்கலாம். உடனே அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லவேண்டியது அவசியம். சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால், வேறு பல உடல்நல, மனப் பிரச்னைகளுக்கும் இது வழிவகுக்கும். குடும்பத்தையும் உறவுகளையும் பாதிக்கும். நீண்ட நாள் தொடர்ந்தால், அது நாள்பட்ட பி.டி.எஸ்.டி-யாக மாறும். அதன் விளைவுகள் ஒருவரைத் தற்கொலை வரைக்கும் கொண்டுசெல்லக்கூடக் காரணமாகிவிடும். மனக்காயங்களைக் குணப்படுத்துவதற்கு அந்த அனுபவத்தின் அத்தனை கோணங்களையும் ஓர் உணர்வு நிலையில் புரிந்துகொள்ள மருத்துவர்கள் முயற்சி செய்வார்கள். அதற்கு அந்த நிகழ்வைப் பற்றியும், அவர் அதனால் எப்படி பாதிக்கப்பட்டார், அதை அவர் எப்படி அர்த்தப்படுத்திக்கொண்டார் போன்ற விவரங்களை அறிந்துகொண்டு, அவருக்கு உளவியல் ஆலோசனைகள் அளிக்கப்படும். மேலும், மருந்து மாத்திரைகளுடன் வேறு சில சிகிச்சைகளும் அளிக்கப்படும்.
இந்தப் பிரச்னையைத் தவிர்க்க முடியாது. இருந்தாலும், இந்தப் பிரச்னைக்கு அடிப்படை, பாதிக்கப்பட்டவர்கள் வளர்ந்த, வாழ்ந்த சூழலே என்பதால். சிறுவயது முதலே, மன திடத்தை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இன்று 100-க்கு 99 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள்கூட ஒரு மதிப்பெண் குறைவாக எடுத்துவிட்டோம் எனத் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் இருக்கிறார்கள். இதற்குப் பெற்றோரும் ஒருவகையில் காரணம். வெறும் வெற்றி, தோல்வியில் இல்லை வாழ்க்கை. அனுபவித்து வாழ்வதுதான் வாழ்க்கை என்பதைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கு முதலில் பெற்றோர் முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும்.’’

%d bloggers like this: