உதயநிதி ஸ்டாலின் திடீரென அரசியலில் குதிக்க காரணம் என்ன? பின்னணி தகவல்கள்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும் திரைப்பட நடிகருமான உதயநிதி ஸ்டாலின் திடீரென அரசியலில் குதித்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஏன் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

உதயநிதி ஸ்டாலின், தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டு, நயன்தாரா, ஹன்சிகா போன்ற முன்னணி கதாநாயகிகள், காமெடியன்களுடன் நடிக்க வைக்கப்பட்டபோதே, அவரை அரசியலுக்கு கொண்டுவர போடப்படும் அச்சாரம் இது என்ற கருத்தை அரசியல் விமர்சகர்கள் கூறினர்.

ஆனால், 10 படங்களை கூட தொடாத நிலையில், அவசரமாக அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளதுதான், விமர்சகர்கள் புருவங்களை உயர்த்தியுள்ளது.

 

திராவிட இயக்கங்கள் எப்போதுமே வெகுஜன ஊடகங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவை. பத்திரிகைகள், மேடை நாடகங்கள், திரைப்பட வசனங்கள் வழியாக திராவிட கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தபடி இருந்தன. கருணாநிதி, தனது வசனங்களால் கட்சி கொள்கையை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்தார். எம்ஜிஆர் பாடல்களில் அவை எதிரொலித்தன. ஸ்டாலினும் கூட சென்னை மேயராகும்முன்பு, சன் டிவி சீரியலில் நடித்துள்ளார்.

சினிமா மோகம்

மக்கள் தங்களுக்கு நினைவில் உள்ள பிரபல முகங்களை தேடி தேடியே ஓட்டு போட்டு பழகிவிட்டதால், தமிழகம் முழுக்க மக்களை ஒரே நேரத்தில் சென்றடைய எளிய வழி சினிமாதான். எனவேதான் உதயநிதியும் சினிமாவை தனது சாதனமாக தேர்ந்தெடுத்தார். ஸ்டாலின் மகன் என மக்கள் முன்னால் புதிதாக சென்று அறிமுகமாவதைவிட நடிகர் என்ற அறிமுகத்தோடு செல்லும்போது எளிதாக அடையாளம் காணப்படுகிறார், அங்கீகரிக்கப்படுகிறார். சினிமா கதாப்பாத்திரங்கள் நிஜத்திலும் அதேபோலத்தான் இருப்பார்கள் என்ற பொது மனநிலை அரசியலுக்கு வருவோருக்கு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.

உதயநிதி திடீர் அரசியல் பிரவேசம்

உதயநிதி இப்போது திடீரென அரசியல் அறிவிப்பை வெளியிட காரணம், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம்தானாம். தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகியுள்ளது என இவ்விருவருமே கூறி அரசியலில் குதித்துள்ளனர். கடந்த தேர்தலில் வைகோ உள்ளிட்டோர் அடங்கிய மக்கள் நல கூட்டணி, திமுகவுக்கு வர வேண்டிய வாக்குகளை பிரித்து அதிமுக வெற்றிபெற்றது. அதேபோல ரஜினி, கமலால் வாக்குகள் பிரிந்தால், திமுகவுக்கு சுணக்கம் வரும் என நினைக்கும் ஸ்டாலின், பதிலடியாக உதயநிதியை உடனே களத்திற்கு அழைத்துள்ளதாக கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

 

எம்ஜிஆர் மக்கள் மத்தியில் பெரும் புகழை பெற்ற நேரத்தில், தனது மகன் மு.க.முத்துவை திரைப்படங்களில் நடிக்க வைத்த கருணாநிதியின் அதே யுக்திதான் இது என அவர்கள் சுட்டி காட்டுகிறார்கள். மு.க.முத்துவும், எம்ஜிஆரை போலவே ‘மேனரிசம்’ செய்து நடித்து வந்தார். ஆனால், அவர் மக்கள் மத்தியில், எம்ஜிஆர் அளவுக்கு புகழை பெற முடியவில்லை. இருப்பினும் உதயநிதி ஏற்கனவே மக்கள் மத்தியில் சினிமா வாயிலாக புகழ்பெற்றுவிட்டதால், ரஜினி, கமலுக்கு மாற்றான ஈர்ப்புக்காரராக இவரை முன்னிறுத்துகிறாராம் ஸ்டாலின்.

மக்கள் மனநிலை

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு மாற்றாக உதயநிதி மீது சினிமா ஆர்வமுள்ள மக்களுக்கு ஈர்ப்பு வருமா, அல்லது திமுகவில் மீண்டும் வாரிசு அரசியல் தலைதூக்குகிறது என்ற அதிருப்திதான் வருமா என்பதெல்லாம், அடுத்தடுத்த நாட்களில் அம்பலமாகிவிடும்.

%d bloggers like this: