Advertisements

பட்ஜெட் – 2018 முழு விபரம்

10 கோடி குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு

நிதி அமைச்சர், அருண் ஜெட்லி கூறியதாவது: ஆரோக்கியமான இந்தியாவே, வளமான இந்தியாவை உருவாக்க முடியும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. மக்களின் சுகாதாரத்தை மனதில் வைத்தே, தேசிய மருத்துவக் கொள்கை, 2017ல் அறிவிக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக, ஏழை, எளிய மக்களுக்கு தரமான, உரிய மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய, தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டம் கொண்டு வரப்படுகிறது.

இத்திட்டத்தில், நாடு முழுவதும் உள்ள, 50 கோடி ஏழை, எளியவர்கள், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மருத்துவ சிகிச்சைகளை, மருத்துவமனைகளில் பெற முடியும்.ஒவ்வொரு குடும்பமும், ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சையை பெறலாம். இத்திட்டத்தால், 50 கோடி பேர் பயனடைவர். உலகிலேயே மிகப்பெரிய மருத்துவ திட்டமாக, இது அமையும்.

தற்போதுள்ள, ‘ராஷ்ட்ரீய ஸ்வஸ்திய பீமா யோஜனா’ திட்டத்தில், ஒரு குடும்பம், 30 ஆயிரம் ரூபாய் வரையிலான சிகிச்சை மட்டுமே பெற முடியும். பல்வேறு மாநிலங்களிலும், மருத்துவக் காப்பீட்டு திட்டங்கள் உள்ளன. லட்சக்கணக்கான குடும்பங்கள், போதிய பணம் இல்லாமல் சிகிச்சை பெற முடியாமல் போவதை தடுக்கும் வகையில், தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டம் கொண்டு வரப்படுகிறது.

அனைவருக்கும் தரமான சிகிச்சை கிடைக்கும் வகையில், 24 மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். இதன் மூலம், மூன்று லோக்சபா தொகுதிக்கு, ஒரு மருத்துவக் கல்லுாரி அல்லது குறைந்தபட்சம், மாநிலத்துக்கு ஓர் அரசு மருத்துவக் கல்லுாரி அமைவது உறுதி செய்யப்படும்.

ஏற்கனவே உள்ள தேசிய மருத்துவக் கொள்கையின்படி, 1.5 லட்சம் மருத்துவ சேவை மையங்கள் அமைக்க, 1,200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இத்திட்டத்தில் இணையும்படி, தனியார் மருத்துவமனைகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அதே போல், தனியார் நிறுவனங்களும், தங்கள் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில், இதில் பங்கேற்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் மூலம், 2022ல், ஆரோக்கியமான புதிய இந்தியாவை உருவாக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

கல்வி, சுகாதார தீர்வை உயர்வு

வருமான வரி மற்றும் மாநகராட்சி வரிகளுடன் வசூலிக்கப்பட்டு வந்த, 3 சதவீத கல்வித் தீர்வை, 4 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.வருமான வரி மற்றும் மாநகராட்சி வரி செலுத்தும் போது, அதனுடன் சேர்த்து, 3 சதவீதம் கல்வித் தீர்வை வரி, தற்போது வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில், 2 சதவீதம், ஏழை குழந்தைகளின் ஆரம்பக் கல்விக்கும், 1 சதவீதம், அவர்களது உயர் கல்விக்கும் செலவிடப்படுகிறது; இது, 4 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் அரசுக்கு, 11 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் நிதி கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

ராணுவத்திற்கு அதிக நிதி விமானம், கப்பல் வாங்க திட்டம்!

நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது: நாட்டில், எல்லைகளில் எழும் சவால்களை, நம் ராணுவம் திறமையான முறையில் எதிர்கொண்டு முறியடித்து வருகிறது. அதே சமயம், ஜம்மு – காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்களில், உள்நாட்டு பாதுகாப்பு பணிகளையும், ராணுவம் சிறப்பாக கையாண்டு வருகிறது.

வரும், 2018 – 19ம் நிதியாண்டில், ராணுவத்துக்கு, 2.95 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும். முந்தைய ஆண்டில் ஒதுக்கப்பட்ட, 2.74 லட்சம் கோடி ரூபாயை விட, தற்போது, 7.81 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

ராணுவத்துக்கான மொத்த ஒதுக்கீட்டில், 99 ஆயிரத்து, 947 கோடி ரூபாய், முப்படைகளுக்கு, புதிய ஆயுதங்கள், போர் விமானங்கள், போர்க்கப்பல்கள், பிற ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்காக ஒதுக்கப்படும்.ராணுவ வீரர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளம், ராணுவ நிறுவனங்களின் பராமரிப்பு மற்றும் பிற தொடர்புடைய செலவினங்களுக்காக, 1.95 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும். தவிர, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதிய தொகை வழங்குவதற்காக, தனியாக, 1.08 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

முப்படைகளின் செயல் திறனை மேம்படுத்த, மூன்றரை ஆண்டுகளாக, அதிகளவில் முக்கியத்துவம் தரப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், தொழில் துறை வளர்ச்சிக்கு உதவும் வகையிலான, ராணுவ தளவாடங்கள் உற்பத்தி கொள்கை, விரைவில் வெளியிடப்பட உள்ளது.

மொத்த பட்ஜெட் தொகையான, 24.42 லட்சம் கோடி ரூபாயில், ராணுவத்துக்கு, 12.10 சதவீதம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ராணுவ தளவாடங்களை தயாரிப்பதற்கான, இரு தொழில் உற்பத்தி பாதைகள் நிர்மாணிக்கப்படும். ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில், தனியார் துறை முதலீடு அனுமதிக்கப்பட்டு உள்ளது; அன்னிய நேரடி முதலீடும், தாராள மயமாக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

‘கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை தொடரும்’

”கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடரும்,” என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்து உள்ளார்.பட்ஜெட் தாக்கலின் போது, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி பேசியதாவது: கறுப்புப் பண பதுக்கல்காரர்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள், மகத்தான வெற்றி பெற்றுள்ளன.
வரி ஏய்ப்புக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் மூலம், இரு நிதியாண்டுகளில், 90 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வரி வருவாய் கிடைத்துள்ளது. 2016ல், மத்திய அரசு அறிவித்த, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, கறுப்புப் பண ஒழிப்பின் முக்கிய அம்சமாக இருந்தது.

இது, அரசுக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது. இதனால், கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை தொடரும். இரு ஆண்டுகளாக, நாட்டின் பொருளாதாரம், வளர்ச்சி பாதையில் செல்கிறது. நேரடி வரி வருவாய் வளர்ச்சி விகிதம், குறிப்பிடத்தகுந்த அளவு உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

கிராமங்களின் வளர்ச்சியே நம் நாட்டின் வளர்ச்சி!

மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ளதாவது: வரும் நாட்களில், புதிய வேலைவாய்ப்பை உருவாக்கவும், கிராமப்புற கட்டமைப்பை மேம்படுத்தவும், மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. சாலை மேம்பாட்டு திட்டத்தில், 3.17 லட்சம் கி.மீ., சாலைகள், 51 லட்சம் புதிய வீடுகள், 1.88 கோடி கழிப்பறைகள் கட்ட, நிதி ஒதுக்கப்படும்.

தவிர, 1.75 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட திட்டங்களை நிறைவேற்ற, வரும் நிதியாண்டில், 14.34 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இதன் மூலம், பல துறைகளிலும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதன் மூலம், கிராமப்புற கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.

கிராமங்களில் வசிப்போரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அங்கு உள்ளவர்களுக்கு சுய வேலைவாய்ப்பளிக்கும் வகையிலும் செயல்படுத்தப்படும், என்.ஆர்.எல்.எம்., எனப்படும் தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்திற்கான நிதி, 4,500 கோடி ரூபாயிலிருந்து, 5,750 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.

பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை, 2016 – 17ம் நிதியாண்டில், 42 ஆயிரத்து, 500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, 2019 மார்ச்சில், 75 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என்ற நம்பிக்கை, இந்த அரசுக்கு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சம்பளதாரர்கள் ஏமாற்றம் கழிவு மட்டுமே மிஞ்சியது

தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில், எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், சம்பளம் பெறும் ஊழியர்கள், வருமான வரி செலுத்தும் போது, நிரந்தர கழிவாக, 40 ஆயிரம் ரூபாய் வரை, வரிச்சலுகை பெறலாம் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறியதாவது: கடந்த நிதியாண்டான, 2016 – 17ல், சம்பளம் பெறும் ஊழியர்களில், 1.89 கோடி பேர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். அதன் மூலம், 1.44 லட்சம் கோடி ரூபாய் வரி வசூலாகி உள்ளது. இதன்படி, சம்பள வருவாய் மூலம், வரி செலுத்தும் ஒரு நபரின் சராசரி வரி தொகை, 76 ஆயிரத்து, 306 ரூபாயாக உள்ளது.

இதுவே, தொழில் புரியும் நபர்களில், 1.88 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். அதன் மூலம், 48 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்துள்ளது. இதன்படி, தொழில் செய்து வருவாய் ஈட்டும், வரி செலுத்தும் ஒரு நபரின் சராசரி வரி தொகை, 25 ஆயிரத்து, 753 ஆக உள்ளது.

மூன்று நிதியாண்டுகளில், தனிநபர் வருமான வரி செலுத்துவோருக்கு, ஏராளமான சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளன. எனவே, இம்முறை, தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில், எந்த மாற்றமும் செய்யவில்லை.
எனினும், மாத சம்பளதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் வரி செலுத்தும் போது, நிரந்தர கழிவாக, 40 ஆயிரம் ரூபாய் வரிச்சலுகை பெறலாம். மருத்துவ செலவுகள், போக்குவரத்து செலவுகளுக்கான கழிவுகள் இதில் அடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

சலுகை எப்படி?

தற்போதைய நடைமுறையின் படி, சம்பளம் பெறும், தனிநபர் வருமான வரி செலுத்துவோர், மருத்துவ செலவினங்களுக்காக, ஆண்டுக்கு, 15 ஆயிரம் ரூபாயும், போக்குவரத்து செலவாக, மாதம், 1,600 ரூபாயும் வரியில் சலுகை பெறலாம். அதன்படி, ஆண்டுக்கு, மருத்துவ செலவு, 15 ஆயிரம் மற்றும் போக்குவரத்து செலவு, 19 ஆயிரத்து, 200 ரூபாய் என, மொத்தம், 34 ஆயிரத்து, 200 ரூபாய் வரிச்சலுகை பெறலாம். இது, தற்போது, 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

 

ஜனாதிபதி, கவர்னருக்கு சம்பளம் உயர்கிறது

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் கவர்னர்களின் மாதச் சம்பளம், 11 ஆண்டுகளுக்கு பின், தற்போது உயர்த்தப்பட்டு உள்ளது.
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர்களுக்கான சம்பளம், மத்திய அமைச்சரவை செயலரின் சம்பளத்தை விட, குறைவாகவே உள்ளது. ஜனாதிபதி என்பவர், நாட்டின் முப்படைகளுக்கும் தலைவராக உள்ளார். ஆனால், அந்த முப்படைத் தளபதிகளின் மாத சம்பளத்தை விட, ஜனாதிபதிக்கு குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் கவர்னர்களின் மாதச் சம்பளம், 2006 ஜனவரியில் உயர்த்தப்பட்டது. அதன்பின், ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதையடுத்து, நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், அவர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மாதம், 1.50 லட்சம் ரூபாயாக இருந்த ஜனாதிபதியின் சம்பளம், ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

துணை ஜனாதிபதியின் சம்பளம், 1.25 லட்சம் ரூபாயிலிருந்து, நான்கு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. கவர்னர்களின் சம்பளம், 1.10 லட்சம் ரூபாயிலிருந்து, 3.5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

எம்.பி.,க்கள் சம்பளம் உயரும்

எம்.பி.,க்களின் சம்பளம், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, தானாகவே உயர்த்தப்பட உள்ளது.லோக்சபா மற்றும் ராஜ்யசபா, எம்.பி.,க்களுக்கு, ஒவ்வொரு மாதமும், அடிப்படை ஊதியமாக, 50 ஆயிரம் ரூபாயும், தொகுதி படியாக, 45 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. இது தவிர, இதர படிகள் தனியாக வழங்கப்படுகின்றன. மொத்தத்தில், ஒரு எம்.பி.,க்கு, மாதந்தோறும், 2.7 லட்சம் ரூபாயை, அரசு செலவு செய்கிறது. எம்.பி.,க்களின் மாத ஊதியத்தில், மத்திய நிதி அமைச்சர், அருண் ஜெட்லி, சில மாறுதல்களை அறிவித்துள்ளார்.

இது குறித்து, நேற்று அவர் கூறியதாவது: எம்.பி.,க்களின் மாதச் சம்பளம் தொடர்பாக செய்திகள் வரும்போதெல்லாம், மக்களால், பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. எம்.பி.,க்களின் சம்பளத்தை, அவர்களே நிர்ணயித்துக் கொள்ளும் நடைமுறையை, மக்கள் விமர்சிக்கின்றனர். இதை முடிவுக்கு கொண்டு வர, அரசு விரும்புகிறது. எனவே, விலை வாசி உயர்வுக்கு ஏற்றபடி, எம்.பி.,க்களின் சம்பளத்தை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது, ஏப்., 1ல் இருந்து நடைமுறைக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.

எளியவர்களும் இனி பறக்கலாம் மத்திய அரசு அசத்தல் திட்டம்

மக்களுக்கு சேவை அளிக்காத, 56 விமான நிலையங்களையும், 31 ஹெலிபேடுகளையும், ‘உதான்’ திட்டம் மூலம் இணைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.பட்ஜெட் தாக்கல் செய்து, மத்திய நிதி அமைச்சர், அருண் ஜெட்லி பேசியதாவது:விமான சேவை வழங்கும் திறனை, ஐந்து மடங்கு அதிகரிக்கவும், ஆண்டுக்கு, 100 கோடி விமான பயணங்களை கையாளவும், ‘உதான்’ எனப்படும், பிராந்திய விமான சேவை இணைப்பு திட்டம், 2017ல் துவக்கப்பட்டது.

மக்களுக்கு சேவை வழங்காத அல்லது குறைவான சேவை அளிக்கும், விமான நிலையங்களை, விமான சேவை அளிக்கும் வகையில் மாற்றி பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.இதன் மூலம், அடித்தட்டு மக்களும் விமான சேவைகளை எளிதில் பெற முடியும். அரசின் இத்திட்டத்தால், ஹவாய் செருப்பு அணியும் எளிய மக்கள் கூட, விமானத்தில் செல்லும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

இத்திட்டத்தில் நாடு முழுவதும், மக்களுக்கு சேவை அளிக்காத, 56 விமான நிலையங்களையும், 31 ஹெலிபேடுகளையும் இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவற்றில், ஏற்கனவே, 16 விமான நிலையங்கள் இணைக்கப்பட்டு விட்டன.மூன்று ஆண்டுகளில், உள்நாட்டு விமான போக்குவரத்து, ஆண்டுக்கு, 18 சதவீதம் என்ற வகையில் அதிகரித்து வருகிறது. நம் விமான சேவை நிறுவனங்கள், 900 விமானங்களுக்கான, ‘ஆர்டர்’களை அளித்துள்ளன.அரசுக்கு சொந்தமான, இந்திய விமான நிலைய ஆணையம், 124 விமான நிலையங்களை நிர்வகிக்கிறது. விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு, அதிக நிதியாதாரத்தை பெறும் வகையில், விமான நிலைய ஆணையத்துக்கு அதிகாரம் அளிக்கப்படும்.

உட்கட்டமைப்பு, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்துசக்தியாக அமையும். மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், உட்கட்டமைப்பை மேம்படுத்த, 50 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதன் மூலம், சாலைகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், உள்நாட்டு நீர்வழித்தடங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

நிறுவன வரி குறைப்பு

மத்திய பட்ஜெட்டில், ஆண்டுக்கு, 250 கோடி ரூபாய் வரை, விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களுக்கான வரி, 30 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால், இத்தகைய வரி செலுத்துவதில், 99 சதவீத பங்களிப்பை கொண்ட, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பெரிதும் பயனடையும்.

நிறுவனங்களிடம், உபரி முதலீடு அதிகரிக்கும் என்பதால், அவை, வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்தும். இதன் மூலம், வேலைவாய்ப்புகள் பெருகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இச்சலுகையால், மத்திய அரசுக்கு, 7,000 கோடி ரூபாய் செலவாகும். கடந்த, 2015 – 16ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், கார்ப்பரேட் நிறுவன வரி, 30 சதவீதத்தில் இருந்து, நான்கு ஆண்டுகளில், 25 சதவீதமாக குறைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில், ஐந்து கோடி ரூபாய்க்கும் குறைவான விற்றுமுதல் உள்ள நிறுவனங்களுக்கு, 29 சதவீதமாக வரி குறைக்கப்பட்டது. வரும் நிதியாண்டில், விற்றுமுதல் வரம்பு உயர்த்தப்பட்டு, வரி மேலும் குறைக்கப்பட்டு உள்ளது.

முதன்முறையாக அதிக நிதி ரயில்வே துறை வேகமெடுக்கும்

கடந்தாண்டு முதல், ரயில்வே துறைக்கு, பொது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. இது தொடர்பாக, பார்லி.,யில் நேற்று, பட்ஜெட் தாக்கல் செய்த போது, நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறியதாவது: ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்தவும், பயணியர் மற்றும் சரக்கு கையாளும் திறனை மேம்படுத்தவும், இந்தாண்டு ரயில்வேக்கு, 1.48 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. 2017ல், ரயில்வேக்கு, 1.31 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ரயில்வே வரலாற்றில், முதன்முறையாக, இந்தாண்டு, மிக அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

ரயில் பயணியரின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தரும் திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. நாடு முழுவதும், 600 பெரிய ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளன. 25 ஆயிரம் பயணியர் வருகை தரக்கூடிய அனைத்து ரயில் நிலையங்களிலும், ‘எஸ்கலேட்டர்’ எனப்படும், மின் படிக்கட்டு வசதி செய்யப்படும். அனைத்து ரயில்களிலும், படிப்படியாக, வை – பை வசதி வழங்கப்படும்; பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

நாடு முழுவதும், 18 ஆயிரம் கி.மீ., துாரம், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன; 5,000 கி.மீ., துாரம், ரயில் பாதைகள் அகல ரயில் பாதைகளாக மாற்றப்படும். இதன் மூலம், மொத்த ரயில் கட்டமைப்பும், அகல ரயில் பாதை உடையதாக மாறும்.ரயில் பாதை கட்டமைப்பை பராமரிப்பதற்கு, முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. 3,600 கி.மீ., துார ரயில் பாதைகள், நடப்பு நிதியாண்டில், புதுப்பிக்கப்பட உள்ளன.

நாடு முழுவதும், 4,267 ஆளில்லா ரயில்வே லெவல் கிராசிங்குகள், அடுத்த இரு ஆண்டுகளில் மாற்றி அமைக்கப்படும். ரயில் பாதுகாப்பு, எச்சரிக்கை கருவிகள் பொருத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை, பெரம்பூரில் உள்ள, ஐ.சி.எப்., எனப்படும், ரயில் பெட்டி தொழிற்சாலையில், நவீன வசதிகளுடன் கூடிய, தரம் வாய்ந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும். இங்கு தயாரிக்கப்படும், அதிநவீன ரயில் பெட்டிகளுடன் கூடிய ரயில், 2018 – 19ம் நிதியாண்டில் இயங்கத் துவங்கும்.

பெங்களூரு மாநகராட்சி மக்களுக்கு உதவும் வகையில், 17 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 160 கி.மீ., துார, புறநகர் ரயில் கட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

விவசாயத்திற்கு, ‘பம்பர்’ பரிசு ஆதார விலை அதிகரிப்பு

விவசாயிகளின் வருவாயை, 2022க்குள் இரட்டிப்பாக மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதன்படி, வரும் கரீப் பருவத்துக்கான அடிப்படை ஆதார விலை, உற்பத்தி செலவைவிட, 1.5 மடங்கு அதிகம் தரப்படும் என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில், விவசாய துறைக்கு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள்:* விவசாயிகளின் வருவாயை, 2022க்குள் இரட்டிப்பாக்குவதில் அரசு உறுதியாக உள்ளது* ஏற்கனவே, ரபி பருவத்துக்கான அடிப்படை ஆதார விலை உயர்த்தப்பட்டது* வரும் கரீப் பருவத்தில், விவசாயிகளின் உற்பத்தி செலவைவிட, 1.5 மடங்கு அதிகமாக அடிப்படை ஆதார விலை நிர்ணயிக்கப்படும்* பயிர் கடன், 10 சதவீதம் உயர்த்தப்பட்டு, 11 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது* மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு துறைகளில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த, 10 ஆயிரம் கோடி ரூபாயில் தனி நிதியம்* வேளாண் சந்தை, கொள்முதல் நிலையங்கள் கட்டமைப்பு நிதிக்காக, 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு* தேசிய மூங்கில் இயக்கத்துக்காக, 1,290 கோடி ரூபாய் ஒதுக்கீடு* தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலையில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதை தடுக்கும், ‘ஆப்பரேஷன் கிரீன்’ திட்டத்துக்கு, 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு* மருத்துவ மற்றும் நறுமண பயிர்கள் பயிரிடுவதை ஊக்கவிக்க, 200 கோடி ரூபாய்* சந்தை விலை குறைந்தாலும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உறுதி செய்ய, மத்திய – மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி, நிடி ஆயோக் புதிய திட்டத்தை உருவாக்கும்* விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிசான் கிரெடிட் கார்டு திட்டம், மீன் வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோருக்கும் விரிவுபடுத்தப்படும்* நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்வோருக்கும் பயிர் கடன் வழங்குவதற்தான வழிமுறைகள் உருவாக்கப்படும்.

உணவு பதப்படுத்துதல் துறைக்கு, ‘ஜாக்பாட்’

புதுடில்லி : விவசாயிகளின் வருவாயை உயர்த்தும் வகையில், அது சார்ந்த, உணவு பதப்படுத்துதல் துறையை ஊக்குவிக்க, அதற்கான ஒதுக்கீடு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில், உணவு பதப்படுத்துதல் துறைக்கான அறிவிப்புகளில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டில், இந்த துறைக்கான ஒதுக்கீடு, 715 கோடி ரூபாய்; அது, வரும், 2018 – 19ம் நிதியாண்டு, 1,400 கோடியாக உயர்த்தப்படுகிறது. இதில், 1,313 கோடி ரூபாய், ‘பிரதான் மந்திரி கிசான் சம்பாதா யோஜனா’ திட்டத்துக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், உணவு பூங்காக்கள் அமைப்பது போன்றவை மேற்கொள்ளப்படுகிறது.

இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில் நுட்ப மையம், தேசிய உணவு பதப்படுத்துதல் தொழில் முனைவோர் மற்றும் நிர்வாக மையம் அமைக்க, 61.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறப்பு உணவு பதப்படுத்துதல் திட்டங்களுக்கு நிதி வழங்க, தனி அமைப்பும் உருவாக்கப்பட உள்ளது. உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்க, வெளிநாடுகளில் இருந்து வரும் ஆரஞ்சு ஜூஸ் வகைகளுக்கான சுங்க வரி, 30 சதவீதத்தில் இருந்து, 35 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. மற்ற பழ மற்றும் காய்கறி ஜூஸ்களுக்கான வரி, 30ல் இருந்து, 50 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதைத் தவிர, உணவு பொருள்களுக்கான சுங்க வரி, 30ல் இருந்து, 50 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.முந்திரி பதப்படுத்துதல் துறையை ஊக்குவிக்க, சுங்க வரி, 5 சதவீதத்தில் இருந்து, 2.5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மொபைல் விலை உயரும்

மத்திய பட்ஜெட்டில், இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன்களுக்கான வரி, 15லிருந்து, 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மொபைல் போன் உதிரிபாகங்களுக்கு, அதிகபட்ச வரி, 10லிருந்து, 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விலை உயரும் இறக்குமதி பொருட்கள்

தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள், வைரங்கள், ஸ்மார்ட் வாட்சு, கவரிங் நகைகள், கார், கார் உதிரி பாகங்கள், டிரக், பஸ் ரேடியல் டயர்கள், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், மூன்று சக்கர வண்டி, பழரசம், வாசனை திரவியம், காலணி, குளிர் கண்ணாடி, ஷேவிங் பொருட்கள், எல்.இ.டி., மற்றும் எல்.சி.டி., ‘டிவி’ பேனல்கள், நீச்சல் குள பயன்பாட்டு பொருட்கள், மரச்சாமான்கள். விளக்குகள், கை கடிகாரங்கள், பொம்மைகள், வீடியோ விளையாட்டு சாதனங்கள், விளையாட்டு பொருட்கள், சிகரெட், மெழுகுவர்த்தி, காற்றாடி, ஆலிவ் எண்ணெய், கடலை எண்ணெய் உ ள்ளிட்ட சமையல் மற்றும் தாவர எண்ணெய் வகைகள், சோயா புரதம் தவிர்த்த உணவுப் பொருட்கள், பல் பராமரிப்பு பொருட்கள்.விலை
குறையும் இறக்குமதி பொருட்கள்
கச்சா முந்திரி, சூரிய மின் உற்பத்தி பேனல் தயாரிப்பிற்கான கண்ணாடி உள்ளிட்ட மூலப் பொருட்கள், காது கேட்கும் கருவி தயாரிப்பு பொருட்கள், ஒரு சில பொறியியல் மற்றும் மின்னணு உதிரிபாகங்கள்.

8 கோடி பெண்களுக்கு இலவச சமையல், ‘காஸ்’

‘உஜ்வாலா’ திட்டத்தில், நாடு முழுவதும், ஐந்து கோடி ஏழை குடும்பங்களுக்கு, இலவச சமையல் காஸ் இணைப்பு வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் பெயரில் இணைப்பு வழங்கப்படும். தற்போது, எட்டு கோடி பேருக்கு இலவச சமையல் காஸ் இணைப்பு வழங்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தவிர, பணியில் இருக்கும் பெண்களுக்கு, பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதிக்கான ஊழியரின் பங்கு, 8 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. தற்போது, பி.எப்., திட்டத்தில், ஊழியர்களும், நிறுவனங்களும் தலா, 10 அல்லது, 12 சதவீத தொகையை செலுத்த வேண்டும்.

பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளதையடுத்து, பெண்கள் வேலைக்கு செல்வதை ஊக்குவிக்கும் வகையில், ஊழியருக்கான பங்கு, முதல் மூன்று ஆண்டுகளுக்கு, 8 சதவீதமாக குறைக்கும் அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது; அதே நேரத்தில், நிறுவனத்தின் பங்கு குறைக்கப்படவில்லை.

இயற்கை வேளாண்மையில் ஈடுபட, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் ஊக்குவிக்கப்படும். பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில், ‘சுகன்யா சம்ரிதி முதலீட்டு’ திட்டத்தில், 1.26 கோடி பேர், 19 ஆயிரத்து, 183 கோடி ரூபாய் முதலீடு செய்து உள்ளதாக, பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

பொது காப்பீட்டு நிறுவனங்கள் இணைப்பு

பொதுத் துறையைச் சேர்ந்த, ‘நேஷனல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா அஸ்யூரன்ஸ், ஓரியண்டல் இந்தியா இன்சூரன்ஸ்’ ஆகிய மூன்று நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்படும். இதையடுத்து, ஒருங்கிணைந்த நிறுவனம், பங்கு வெளியீடு மேற்கொள்ளும் என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்களுக்கு ‘ஆதார்’ வழங்க திட்டம்

மக்களுக்கு வழங்கப்படும், ‘ஆதார்’ அடையாள அட்டை போல, தொழில் நிறுவனங்களுக்கும் தனிப்பட்ட அடையாள எண் வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ”நாட்டில், தற்போது, 119 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதுபோல, சிறிய அல்லது பெரிய நிறுவனங்கள் அனைத்திற்கும், தனிப்பட்ட அடையாள எண் உடைய அட்டை வழங்கப்படும்,” என, அருண் ஜெட்லி தெரிவித்தார்.

பங்கு வருவாய்க்கு மூலதன ஆதாய வரி

மத்திய பட்ஜெட்டில், பங்கு விற்பனையில், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட வருவாய்க்கு, 10 சதவீதம் மூலதன ஆதாய வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்தாண்டு, ஜன., 31 வரை, பங்கு விற்பனையில் பெற்ற வருவாய்க்கு, மூலதன ஆதாய வரியில், விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.”பங்கு முதலீட்டில் நல்ல வருவாய் கிடைப்பதால், நீண்ட கால மூலதன ஆதாய வரி திட்டம், மீண்டும் அறிமுகமாகிறது,” என, அருண் ஜெட்லி தெரிவித்து உள்ளார். தற்போது, ஓராண்டுக்குள் பங்கு விற்பனையில் கிடைக்கும் ஆதாயத்திற்கு, 15 சதவீதம் குறுகிய கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படுகிறது.

சிறு நிறுவனங்களின் வாராக்கடனுக்கு தீர்வு

வரும் நிதியாண்டில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, ‘முத்ரா’ திட்டத்தின் கீழ், மூன்று லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களுக்கு மறுநிதியுதவி மற்றும் தகுதி குறித்து மறுபரிசீலனை செய்யவும், அரசு முடிவு செய்துள்ளது. இதனால், மேலும் அதிக அளவிலான நிறுவனங்கள் பயன் அடையும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வாராக் கடன் மற்றும் இடர்ப்பாட்டு கடன்களுக்கு தீர்வு காணும் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும். இதன் மூலம், நிதி தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள், புத்துயிர் பெறும்.பொதுத் துறை வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் வர்த்தக, நிதிப் பரிவர்த்தனை விபரங்களை, ‘ஆன்லைன்’ மூலம் இணைத்து, ஜி.எஸ்.டி.என்., வலைதளத்தில் ஒருங்கிணைக்கும் திட்டம், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.

இதன் மூலம், இந்த நிறுவனங்களின் ஒட்டுமொத்த தகவல் தொகுப்பு உருவாக்கப்படும். இது, நடைமுறைச் செலவினம் உட்பட, நிறுவனங்களின் நிதி தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய உதவுமென, அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Advertisements
%d bloggers like this: