Advertisements

மண்ணுக்கடியில் மகேஸ்வர தரிசனம்! – குகைக்கோயில் அற்புதம்

‘உத்தராயன புண்ணிய காலத்தின் தொடக்க நாளான மகர சங்கராந்தியன்று, மேற்கில் அஸ்தமிக்கும் சூரியன், தெற்குப் பார்த்து குரு மூர்த்தியாய் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை சுமார் 20 நிமிடங்கள் வழிபடும் அற்புதமான குகைக் கோயில் பெங்களூரு நகரத்தில் அமைந்திருக்கிறது’ என்று சக்தி விகடன் வாசகர் ஒரு தகவலை நம்மிடம் பகிர்ந்துகொண்டபோது, நமக்கு வியப்பாகத்தான் இருந்தது.
‘தெற்குப் பார்த்து அமைந்திருக்கும் சிவபெருமானுக்கு, மேற்கில் மறையும் சூரியன், ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரம் சிவபெரு மானை வழிபடுவது எப்படி சாத்தியம்?’ என்ற கேள்வியும் நமக்கு எழவே செய்தது. சூரியன் வழிபடும் கோயில் என்பதால், ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் நாம் அந்தக் கோயிலுக்குச் சென்றோம். பெங்களூரு கெம்பெகௌடா பகுதியில் கவிபுரம் என்ற இடத்தில் அமைந்திருக்கும் கவி கங்காதரேஸ்வரர் கோயில் பார்ப்பதற்குச் சிறிதாகத் தோன்றினாலும், ‘மூர்த்தி சிறிது; கீர்த்தி பெரிது’ என்று சொல்வார் களே,  அதன் உண்மையை நமக்கு நிதர்சனமாக உணர்த்தியது அந்த அற்புதக் கோயில்.

ஆலய வாயிலில் கோபுரம் எதுவும் இல்லை. ஆனால், 18 அடி உயரத்தில் ஒரே கல்லினால் ஆன, அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட நான்கு தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. இரண்டு தூண்களில் சிவபெருமானின் ஆயுதமான திரிசூலமும்,  டமருகம் என்னும்

உடுக்கையும் நிறுவப்பட்டிருக்கின்றன. அவற்றைக் கடந்து சென்றால்  கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. கோயில் நுழைவு வாயிலுக்குச் சற்று முன்பாக உள்ள இரண்டு தூண்களில் இறைவனுக்குச் செய்யும் உபசாரங்களான ஆலவட்டம், தாளவட்டம் ஆகியவை அமைந்துள்ளன. இவற்றை சூரிய சந்திரர்கள் என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள்.
நந்தியெம்பெருமானை தரிசித்துவிட்டு கோயிலுக்குள் செல்கிறோம்.   மண்ணுக்கடியில் – நிலமட்டத்துக்குக் கீழே மூன்று பிராகாரங் களுடன்  அமைந்திருக்கிறது இந்த குகைக் கோயில். உள்ளே நுழையுமுன் கூரையைப் பார்த்தாலே தெரியும்… குகையின் அமைப்பு ஏற்றமும் தாழ்வுமாகத் திகழ்வது. அதற்கேற்ப நாமும் உள்ளே குனிந்தும், ஏறியும், இறங்கியும்தான் வலம் வரவேண்டும்.

சுவாமியின்  பிராகாரத்தில் நமக்கு நேராகத் திருக்காட்சி தருகிறார் அருள்மிகு கவி கங்காத ரேஸ்வரர். `கவி’ என்றால் `குகை’ என்று பொருள். குகைக்குள் சுவாமி எழுந்தருளியிருப்பதால் சுவாமிக்கு இந்தப் பெயர் ஏற்பட்டதாகச் சொல் கிறார்கள். மேற்குப் பார்த்த ஆவுடையார்மீது தெற்குப் பார்த்து சுயம்புவாக எழுந்தருளிய ஐயனை தரிசித்து, வலத்தைத் தொடர்ந்தோம்.
சுவாமியின் அர்த்தமண்டப பிராகாரத்தில் சுவாமி சந்நிதிக்கு வலப்புறம் அம்பிகை பார்வதி தேவி என்ற திருப்பெயர் கொண்டு காட்சி தருகிறார். அம்பிகையின் சந்நிதிக்கு அடுத்து துர்கை சந்நிதி அமைந்திருக்கிறது. தேவியர் இருவரையும் தரிசித்துவிட்டு நாம் வலம் வரும்போது, கௌதமர், பரத்வாஜர், சண்டிகேஸ்வரர், உமாமகேஸ்வரர் சந்நிதிகளை தரிசிக்கலாம். அர்த்தமண்டப பிராகாரத்துக்கு வெளியில் தட்சிணாமூர்த்தி, கால பைரவர், வீரபத்திரர், லட்சுமி நாராயணர், சூரியன், சந்திரன் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

மூன்றாவது பிராகாரத்தில் அக்னி மூர்த்தி இரண்டு முகங்கள், நான்கு கொம்புகள், ஏழு கரங்கள், மூன்று பாதங்களுடன் காட்சி தருகிறார். சப்த மாதர்கள், ஸ்ரீதேவி, பூமிதேவி ஆகியோரையும் இந்தப் பிராகாரத்தில் நாம் தரிசிக்கலாம். குகைக் கோயிலுக்குள் தெய்வ மூர்த்தங்களை மனமுருக வழிபட்டுவிட்டு, வியர்த்து விறுவிறுக்க வெளியில் வந்தாலும், நமக்கு எந்த வலியும் தெரியவில்லை. மாறாக மனதுக்குள் பரவச உணர்வுதான் நிறைந்திருந்தது.

புராதனப் பெருமைகள் கொண்ட இந்தக் கோயில் முற்காலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருந்ததாம். 16-ம் நூற்றாண்டில் பெங்களூரு நகரத்தை நிர்மாணிக்க முற்பட்ட கெம்பெ கௌடா, வனப்பகுதியில் ஒருநாள் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது, தெற்குத் திசையிலிருந்து மணியோசை கேட்டது.

ஓசை வந்த திசையில் வந்து பார்த்தபோது குகைக்கோயிலில் சுவாமியும் நந்திதேவரும் இருப்பதைக் கண்டார். இறைவனை மனமுருக வழிபட்ட கெம்பெ கௌடா, `பெங்களூரை அழகுற நிர்மாணிக்க வேண்டும்’ என்ற தனது எண்ணமும் விருப்பமும் வெற்றிகரமாக முடியவேண்டும் என்று  பிரார்த்தனை செய்துகொண்டு, கோயிலைக் கட்டி முடித்ததாக வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து தெரியவருகிறது.
அவருடைய காலத்தில்தான், இறைவனின் திருவுள்ளக் கட்டளையின்படி இப்போது நாம் தரிசிக்கும் பல தெய்வ மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மகரிஷிகளின் தவ வலிமையால் தோன்றியதால், இந்தக் கோயிலில் காரணாகம முறைப்படி மூன்று கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கோயிலின் சிறப்புகள் குறித்து கோயிலின் தலைமை அர்ச்சகரும், ஆகம சாஸ்திர விற்பன்னருமான சோமசுந்தர தீக்ஷித்திடம் கேட்டோம். அவர் கூறிய விஷயங்களும் தகவல்களும் நம்மைச் சிலிர்க்கவைத்தன. அவை அப்படியே உங்களுக்காகவும்…

காசி… கவிபுரம்… சிவகங்கா!
திரேதாயுகத்தில் மகரிஷிகள் மூன்று தலங்களில் இறைவனை பூஜிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். உஷத் காலத்தில் காசி, உச்சிக்காலத்தில் கவிபுரம், மாலையில் சிவகங்கா ஆகிய தலங்களில் பூஜை செய்திருப்பதாக ஐதீகம். அதற்கேற்ப இந்தக் கோயிலில் இரண்டு சுரங்கப் பாதைகள் ஒன்று காசிக்கும், ஒன்று சிவகங்காவுக்கும் செல்வது போல் அமைந்திருந்தனவாம் தற்போது அவை மூடப்பட்டுவிட்டன.
பிற்காலத்தில் இந்தத் தலத்துக்கு வந்த கௌதம ரிஷி, இறைவனைக் குறித்து தவமியற்றினார். அவருடைய தவத்துக்கு அருள்புரியத் திருவுள் ளம் கொண்ட சிவபெருமான் சுயம்பு லிங்கமாகக் காட்சி தந்தார். நந்தியும் சுயம்புவாகத் தோன்றியது தான் சிறப்பு. பதஞ்சலி மகரிஷியும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டிருக்கிறார்.
‘சக்திச் சித்த ரனுக்த உத்தமம்’ என்று சொல் லியபடி அம்பிகைக்குதான் இந்தக் கோயிலில் பிரதானம் தரப்பட்டுள்ளது. எனவேதான் அம்பிகை சுவாமிக்கு வலப்புறத்தில் சந்நிதி கொண்டிருக்கிறார்.

ஆதவனின் அபூர்வ வழிபாடு!
சூரியபகவான் தன்னுடைய வடதிசைப் பயணமான உத்தராயனக் காலத்தின் தொடக்க நாளான மகர சங்கராந்தியன்று மாலை அஸ்தமிக்கும் வேளையில் சிவபெருமானை சுமார் 20 நிமிடங்கள் வழிபடுகிறார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அந்த அற்புதக் காட்சியை  தரிசிப்பது சிலிர்ப்பூட்டுவதாக மட்டுமல்லாமல், பக்திப்பரவசத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். தெற்குப் பார்த்திருக்கும் கோயிலில் மேற்கில் அஸ்தமிக்கும் சூரியன் சுவாமியை வழிபடுவது, இறைவனின் அருளால் சிற்பக் கலைஞர்கள் நிகழ்த்திய அதிசயம் என்றே சொல்லலாம்.

வழிபாட்டுச் சிறப்புகள்…
திருமணம் தடைப்படும் அன்பர்கள் செவ்வாய்க்கிழமைகளில் தலைக்கு ஸ்நானம் செய்துவிட்டு, ஈர வஸ்திரத்துடன் சப்தமாதர்களை பிரதட்சிணம் செய்து வழிபட்டால், விரைவில் திருமணத் தடை விலகி நல்ல இடத்தில் வரன் அமைகிறது.
ல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், வியாழக்கிழமை மாலையில் கோயிலுக்கு வந்து, தெற்குப் பார்த்து குருமூர்த்தியாக அருள்புரியும் கங்காதரேஸ்வரரையும், தட்சிணா மூர்த்தியையும் வழிபட்டால், கல்வியில் நல்ல முறையில் தேர்ச்சி பெறலாம்.
ண் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கும் வரப்பிரசாதியாகத் திகழ்கிறார் அக்னி மூர்த்தி. ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் அக்னி மூர்த்திக்குப் பாலபிஷேகம் செய்து, சூரியனை நமஸ்காரம் செய்தால் கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
திரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட வேண்டுமானால், கோயிலுக்கு வந்து சக்தி கணபதிக்குச் சிவப்புத் தாமரை மலர்களை அர்ப்பணித்தால், எதிரிகளின் தொல்லை நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.  இங்கே, பிரதோஷம், சோமவாரங்கள், மாத சிவராத்திரி போன்ற வழிபாடுகளும், மகா சிவராத்திரியும் விசேஷ மாகக் கொண்டாடப்படுகிறது.


கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 7 முதல் 12.30 வரை; மாலை 5 முதல் 8.30 வரை
எப்படிச் செல்வது..?
பெங்களூரு சிட்டி மார்க்கெட்டிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் குட்டஹள்ளி கவிபுரம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. பஸ், ஆட்டோ வசதி உண்டு.

Advertisements
%d bloggers like this: