Advertisements

முந்தும் ‘தம்பி சார்’… பிந்தும் ‘மாப்பிள்ளை சார்’

முந்தும் தம்பி சார்… பிந்தும் மாப்பிள்ளை சார்’ என்று காகிதத்தில் எழுதி எடுத்துவந்து காண்பித்தார் கழுகார். முதலில் நமக்குப் புரியவில்லை. அதன்பிறகு, ‘தி.மு.க’ என்று எழுதி அதைக் காண்பித்தார். ‘புரிந்துவிட்டது’ என்று தலையசைத்தோம். சிரித்தபடியே செய்திகளைச் சிதறவிட்டார் கழுகார்.

“தி.மு.க-வில், ‘தலைவர்’ என்றால் கலைஞர்; ‘தளபதி’ என்றால் ஸ்டாலின். இது அனைவருக்கும் தெரியும். நெருங்கியவர்களுக்கு மட்டும்தான், ‘தம்பி சார்’ என்றால் உதயநிதி, ‘மாப்பிள்ளை சார்’ என்றால் சபரீசன் என்று தெரியும்.”
‘‘ஓஹோ!”
‘‘அதனால்தான், ‘தம்பி சார் முந்துகிறார்’ என்று சொன்னேன். உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் குறித்து இரண்டு இதழ்களுக்கு முன்பு நான் கொடுத்த விஷயங்களெல்லாம் அச்சுப்பிசகாமல் அப்படியே நடக்கின்றன. மா.சுப்பிரமணியன் நடத்திய பொங்கல் விழாவில் உதயநிதி பங்கெடுத்ததுகூட ஆச்சர்யம் இல்லை. பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து தாம்பரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொண்டு அதிர்ச்சியைக் கொடுத்தார் உதயநிதி. அந்த நிகழ்ச்சிதான், அவரது அரசியல் பயணத்தின் தொடக்கமாக அமைந்தது.’’
‘‘தாம்பரத்திலிருந்து புதிய தலைவர் புறப்பட்டுவிட்டார் என்கிறீரா?”
‘‘அப்படித்தான் சொல்கிறார்கள் தி.மு.க-வில். மு.க.ஸ்டாலினின் மகன் என்ற அளவிலும், திரைப்பட நடிகர் என்ற அளவிலும்தான் உதயநிதி ஸ்டாலினை வெளியில் எல்லோருக்கும் தெரியும். ஆனால், முரசொலி அறக்கட்டளையின் தலைவர் பொறுப்பில் உதயநிதிதான் இருக்கிறார். ‘முரசொலி’ பத்திரிகையின் நிர்வாக இயக்குநரும் உதயநிதிதான். கடந்த ஏழு வருடங்களாக அவர் இந்தப் பொறுப்பில் இருக்கிறார். முரசொலி அலுவலகத்தை நவீனப்படுத்தியது அவர்தான். ஆனாலும், நேரடி அரசியலிலிருந்து அவர் ஒதுங்கியே இருந்தார். முரசொலி பவள விழா நிகழ்ச்சிகளில்தான், மேடைக்கு வந்து முன்வரிசையில் அமர்ந்தார். முரசொலியின் நிர்வாக இயக்குநர் என்ற வகையில், அவர் உட்கார வைக்கப்பட்டதாக அப்போது சொன்னார்கள். இந்த நிலையில், கையில் கொடி பிடிக்கவும் ஆரம்பித்துவிட்டார் உதயநிதி.”
‘‘ஏன் இந்தத் திடீர் ஆசை?”
‘‘ரஜினி, கமல், விஷால் என நட்சத்திரப் பட்டாளம் மொத்தமும் அரசியலை நோக்கி நகர்ந்துவருவதைப் பார்த்துத்தான், உதயநிதியும் உள்ளே இறங்கத் தயாராகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. பொங்கல் தினத்தன்று ஸ்டாலினிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு, அரசியல் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார் உதயநிதி. அப்போது, அரசியலுக்கு நடிகர்கள் வருவது பற்றிப் பேச்சு வந்தது. ‘அவங்க அரசியலுக்கு வர்றாங்க. நான் அரசியல்லயே இருக்கேன். இனி, நானும் எல்லா கூட்டங்களுக்கும் வர்றேன்’ என்று உதயநிதி சொல்ல… அதற்கு ஸ்டாலினும் தலையாட்ட… அரசியல் பிரவேசம் நடந்துள்ளது.”

‘‘ஸ்டாலினின் மருமகன் சபரீசன்தானே இதுவரை ஆக்டிவாக இருந்தார்?”
‘‘ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ பயணம் தொடங்கி, கடந்த ஐந்து ஆண்டுகளாக அவருக்கு ‘ஆல் இன் ஆல்’ ஆக இருந்தவர் சபரீசன். ‘ஸ்டாலினின் கட்டளையே சாசனம்’ என்று செயல்பட்டவர் அவர். ‘உதயநிதிக்கு அரசியல் ஆர்வம் இல்லை. அதனால், சபரீசனைக் கொண்டுவருகிறார்கள்’ என்று அப்போது பேச்சு எழுந்தது. இப்போது, உதயநிதிக்கே அந்த ஆசை வந்துவிட்டது. அதனால், சபரீசன் வழக்கம்போல் பின்னால் இருந்து செயல்படுவாராம். உதயநிதியையும் சபரீசனையும் ஒன்றாக உட்கார வைத்து ஸ்டாலின் பேசியுள்ளார். சபரீசனின் சம்மதத்துடன்தான், உதயநிதியின் செயல்பாடுகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதை வைத்துத்தான், ‘தம்பி சார் முந்துகிறார்… மாப்பிள்ளை சார் பிந்துகிறார்’ என்று சொன்னேன்.”
‘‘ஓஹோ!”
‘‘உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிரவேசம், பொங்கல் நாளன்றே ஒத்திகை பார்க்கப்பட்டது என்கிறார்கள்.”
‘‘என்ன ஒத்திகை?”
‘‘ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் திருநாளன்று, கட்சிக்காரர்களை வீட்டில் வைத்து மு.க.ஸ்டாலின் சந்திப்பார். அப்போது, ஒவ்வொருவருக்கும் புதிய 20 ரூபாய் நோட்டை ஸ்டாலின் கொடுப்பார். இந்த ஆண்டும் அந்த நிகழ்வு நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் வழக்கம்போல், 20 ரூபாய் நோட்டைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் நின்று, நோட்டுகளை எடுத்துக்கொடுத்தவர் மகேஷ் பொய்யாமொழி. திடீரென்று மகேஷ் பொய்யாமொழி இடத்துக்கு உதயநிதி வந்தார். அவரே 20 ரூபாயை எடுத்துக்கொடுத்தார். அப்போதே அங்கிருந்தவர்களின் புருவங்கள் ஆச்சர்யத்தில் உயர்ந்தன. உதயநிதி, சபரீசன், மகேஷ் பொய்யாமொழி, கார்த்திக் மோகன் ஆகிய நால்வர் அணி உருவாகிவிட்டது. இதுதான், இனி தி.மு.க-வின் புதிய படையாகச் செயல்படப் போகிறது.”
‘‘ம்!”
‘‘சமீபத்தில் நாளிதழ் ஒன்றுக்கு ஸ்டாலின் பேட்டியளித்தார். அப்போது, ‘உங்களுக்கு அடுத்த நிலையில் வலுவான அடுத்த தலைமுறைத் தலைவர்கள் வரிசை ஒன்று வெளியே தெரியவில்லையே. அப்படி இருக்கிறார்களா? இருந்தால், அவர்களை எப்போது எப்படி வெளியே கொண்டுவரப் போகிறீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு ஸ்டாலின், ‘ஒரு படையே இருக்காங்க. சீக்கிரம் பார்ப்பீங்க’ என்று சொல்லியிருந்தார் ஸ்டாலின். அவர் சொல்லும் படை இதுதான் போலும்!”
‘‘சென்னையின் அடுத்த மேயர் உதயநிதி என இப்போதே தி.மு.க-வில் ஒரு குரூப் கிளம்பிவருகிறதே?”
‘‘உதயநிதியை முதலில் சென்னை மேயராகக் கொண்டுவருவதுதான் இவர்களது திட்டமாம். அதனால்தான், அவருக்கு அரசியல் பயிற்சி கொடுக்கும் பொறுப்பை சென்னை மாநகர முன்னாள் மேயரும், தற்போதைய எம்.எல்.ஏ-வுமான மா.சுப்பிரமணியன் வசம் ஒப்படைத்துள்ளனர். மாநகராட்சி நிர்வாக வேலைகள் பற்றித் துல்லியமாகத் தெரிந்தவர் மா.சுப்பிரமணியன். ‘சென்னை மாநகராட்சி என்பது தமிழக அரசாங்கத்தின் ‘மினி மாடல்’. அது ஒரு குட்டி அரசாங்கம். அங்கு மேயராக இருப்பவருக்கு, ஏறத்தாழ தமிழக முதலமைச்சருக்கு இருப்பதைப்போலவே நிர்வாக வேலைகள் இருக்கும். பட்ஜெட் போடுவது முதல் மற்ற நடைமுறைகளும் தமிழக அரசாங்கத்தைப் போலத்தான் சென்னை மாநகராட்சியிலும். அதனால், அந்தப் பதவியில் இருந்து உதயநிதி முதலில் பயிற்சி எடுக்கட்டும் என நினைக்கின்றனர்’ என்று சொல்கிறார்கள் தி.மு.க-வில்!” என்றபடி எழுந்தார் கழுகார்.
டேபிளில் இருந்த அல்வா பொட்டலத்தை அவர் பக்கம் திருப்பினோம். பார்த்துச் சிரித்தவர், ‘‘நடராசன் அனுப்பி வைத்த ‘அல்வா நியூஸ்’ பற்றிச் சொல்கிறேன் கேளும்…’’ என்றார்.
‘‘சொல்லும்’’ என்றோம்.

‘‘சென்னையில் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய நாள்களில் உலக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாடு நடைபெற்றது. உலகம் முழுவதுமிருந்து வந்திருந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்துகொண்டனர். சமீபத்தில், கல்லீரல் மற்றும் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட சசிகலாவின் கணவர் நடராசனும் அதில் கலந்துகொண்டார். அவருக்கு, அந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து காப்பாற்றிய டாக்டர் முகமது ரீலாவும் அதில் கலந்து கொண்டார். இரண்டாவது நாள் நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வதாக இருந்ததால், அன்று நடராசன் போகவில்லை. முதல் நாள் நிகழ்ச்சியில் காலை 10.30 மணிக்கு கலந்துகொள்ள வந்தவர், மதியம் 1.30 வரை இருந்தார். அதன்பிறகு, டாக்டர் ரீலா வீட்டில் விருந்து நடைபெற்றது. அந்த விருந்தில், நடராசன் சார்பில் அனைவருக்கும் திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய், பண்ருட்டி முந்திரி ஆகியவை அடங்கிய பை ஒன்று வழங்கப்பட்டது. அந்தப் பைகளில் ஒன்றை, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கும் அனுப்பிவைத்தார் நடராசன்’’ என்றபடி பறந்தார்.

Advertisements
%d bloggers like this: