Advertisements

அமைச்சரவையில் ஓர் அதிருப்தி குரல்! மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவிக்கும் முதல்வர்

தமிழக அமைச்சர்களிலேயே புள்ளி விவரத்தோடு பேசுவதில் மிகுந்த ஆற்றல் படைத்தவர் அந்த அமைச்சர். சமீப நாட்களாக ஆளும்கட்சி தலைமையோடு அவருக்கு ஏற்பட்டுள்ள உரசல்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் சக அமைச்சர்கள்.

‘அவருடைய செயல்பாடுகளை தலைமையில் உள்ளவர்கள் ரசிக்காததன் விளைவு இது. பா.ஜ.க புள்ளிகள் ஆதரவோடு அவர் அத்துமீறிச் செயல்படுகிறார்’ என்கின்றனர் அமைச்சர்கள் தரப்பில்.

சசிகலா குடும்பத்துக்கு எதிராக தர்மயுத்தம் நடத்துவதற்காக பன்னீர்செல்வம் கிளம்பிய நேரத்தில், கூவத்தூரில் எம்.எல்.ஏக்களை வைத்து ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தது மன்னார்குடி கோஷ்டிகள். அந்தநேரத்தில், சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசி வந்தார் அந்த அமைச்சர்.

முக்கிய துறை கைவிட்டு போனது

அடுத்து வந்த நாட்களில் தர்மயுத்தத்தில் ஐக்கியமாகிவிட்டார். இதற்காக அவர் கொடுத்த விலையும் அதிகம். துறைரீதியான பணிகளில் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போகவே, அனைத்து தரப்பில் இருந்தும் நெருக்குதல்களுக்கு ஆளானார். இணைப்பு முயற்சிகள் தாமதமாகிக் கொண்டே போகவே, பா.ஜ.கவில் உள்ள சிலரது துணையை நாடினார்.

புறக்கணித்த அமைச்சர்

நீண்ட இழுபறிக்குப் பிறகு இரு துருவங்களும் இணைந்தன. இதற்குப் பலனாக வலுவான துறையை எதிர்பார்த்தவருக்கு, மிகச் சாதாரண துறையே கிடைத்தது. ‘ எதுவுமே செய்ய முடியாத துறை கிடைத்ததற்குக் காரணம், ஆளும்கட்சியில் உள்ள சிலர்தான்’ எனக் கொதித்தார். இந்தக் கோபத்தை பல்வேறு வழிகளில் காட்டத் தொடங்கினார். அவரது சொந்தத் தொகுதிக்குள்ளேயே முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சி அண்மையில் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு ஆட்களை ஏற்பாடு செய்யாமல் ஒதுங்கிக் கொண்டார்.

டெல்லியுடன் தொடர்பு

அந்தநேரத்தில், அந்த நபர் சென்னையில்தான் இருந்தார். முதல்வரின் கூட்டத்தில் தலைகாட்டாமல் ஒதுங்கிக் கொண்டார். ஆட்சியில் நடக்கும் விஷயங்கள் எல்லாம் அவர் மூலமாகத்தான் டெல்லிக்குச் செல்கிறது என்ற சந்தேகமும் அமைச்சர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதற்கு அடையாளமாக சில விஷயங்களையும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

முதல்வருடன் அதிருப்தி

இதனை எதிர்பார்க்காத முதல்வர், ‘ என்னப்பா நடக்குது? அவரவர் துறை வேலைகளை மட்டும் சரியாகச் செய்தால் போதும்’ என அனைவர் முன்னிலையும் கடிந்து கொண்டார். இது அந்த நபருக்குக் கூடுதல் கோபத்தை வரவழைத்துள்ளது. ‘ ‘ சமூக ஊடகங்களில் என்னைப் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகம்’ என வெளிப்படையாக அவர் அறிவித்தாலும், அவரது சமூக வலைத்தளப் பக்கங்களில் முதல்வர் பற்றியோ அரசின் முக்கிய அறிவிப்புகள் குறித்தோ எந்தத் தகவலையும் பதிவிடுவதில்லை. இதுகுறித்தும் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர் அமைச்சர்கள் சிலர்.

கூடுதல் நிதி

அப்போது பேசிய மூத்த நிர்வாகி ஒருவர், ‘ தன்னுடைய தொழில் தொடர்புகளால் எந்த இடத்தையும் நெருங்க முடியும் என நினைக்கிறார் அவர். ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக ஒரு மில்லியன் டாலர் பணம் கொடுக்கலாம் என அரசு முடிவு செய்திருந்தது. ஆனால், குறிப்பில் ஒன்றரை மில்லியன் டாலர்களைக் குறித்திருந்தார்.

கொடுக்கலாமே

இதுகுறித்துப் பேசிய முதல்வர், ‘ மிகுந்த நெருக்கடியில் அரசு இருக்கிறது. ஒரு மில்லியன் டாலர் கொடுக்கலாம் என முடிவு செய்திருந்தோம். ஒன்றரை கோடி எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நான் ஒரு மில்லியன் எனக் குறிப்பிட்டால், வெளியில் வேறு மாதிரி தகவல்கள் பரவும் இல்லையா?’ எனக் கேட்க, ‘ கண்டிப்பாகக் கேட்பார்கள். ஒன்றரை மில்லியன் டாலராகக் கொடுத்துவிடுவோம்’ எனக் கூறியிருக்கிறார். ‘ இப்படி முதல்வரின் அனுமதியில்லாமல் முடிவெடுப்பதை சக அமைச்சர்கள் விரும்பவில்லை. அவருடைய டெல்லித் தொடர்புகளை நினைத்துத்தான் பலரும் அமைதியாக இருக்கின்றனர்’ என்கின்றனர் அ.தி.மு.கவினர்.

Advertisements
%d bloggers like this: