Advertisements

மணக்கோலம் காண்பது மனநலம் காக்கும்!

ம்மில் பலருக்குத் திருமண நிகழ்வுகள் போன்ற விழாக்களுக்குச் செல்லவே பிடிக்காது. “அப்புறம் தம்பி இப்ப என்ன சம்பளம் வாங்குறீங்க?” “உனக்கு எப்பம்மா கல்யாணம்?” போன்ற கேள்விகளைப் போகிறபோக்கில் கேட்டுவிட்டுப் போகும் முகங்கள் இருப்பதால், திருமண நிகழ்வு என்றாலே “தலைவலிம்மா… காய்ச்சல்ம்மா… வயிறு சரியில்லப்பா…” என்று ஸ்கூலுக்கு மட்டம் அடிக்கும் குழந்தைகளாக மாறிவிடுவோம். ஆனால், உண்மையில் திருமண விழாக்களில் பங்கெடுப்பது உடல் மற்றும் மனநலனுக்கு மிகவும் நல்லது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். 

அழைப்பிதழ் அழைத்துவரும் மகிழ்ச்சி!
முதல் நொடியில் இருந்து தொடங்குவோம்…
உங்கள் நண்பரோ, உறவினரோ தன் திருமணப் பத்திரிகையை நீட்டுகிறார்கள். அப்போது உங்கள் தலையில் இருக்கும் முன்மடல் புறணி (Prefrontal Cortex) புத்துணர்ச்சி பெறுகிறது. இதன் காரணமாக உங்கள் உள்ளத்தில் நற்சிந்தனைகள் பிறக்கின்றன. அடுத்த சில நாள்களுக்கு உங்களுக்குத் தாழ்வு மனப்பான்மையே ஏற்படாது. ஒரு புதிய பொருளை வாங்குவதைவிட, ஒரு திருமண நிகழ்வுக்குச் சென்று வருவது மகிழ்ச்சிக்கான  காரணியாக விளங்குகிறது என்கிறது ‘தி ஜர்னல் ஆஃப் பாசிட்டிவ் சைக்காலஜி’.
திருமண நாள் தித்திப்புகள்!
பல நூறு பேருக்கு முன்னால், இரண்டு பேர் மணவறையில் தங்களைத் திருமண பந்தத்தில் இணைத்துக்கொள்கின்றனர். வண்ண மலர்கள் தூவப்படுகின்றன. மங்கள வாத்தியங்கள் முழங்குகின்றன. தம்பதியரான இருவரும் ஆனந்தக் கண்ணீரில் திளைக்கின்றனர். பார்க்கும் உங்களுக்கு ‘மிரர் நியூரான்’ (Mirror Neuron) எனப்படும் மூளை செல்கள் வேலை செய்யத் தொடங்குகின்றன. இது மற்றவர்கள் செய்யும் செயல் உங்களுக்குப் பிடிக்கிறது என்றால், உங்களையும் அதையே செய்ய வைக்கும். இப்போது உங்களுக்கும் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கும். அந்தப் புதுமணத் தம்பதியருக்கு எவ்வளவு அருகில் நீங்கள் நிற்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் உங்களுக்கும் கண்ணீர் பெருக்கெடுக்கும். இப்படி உள்ளே எந்த உணர்ச்சிகளையும் அடக்கிக்கொள்ளாமல் வெளிப்படுத்துவதால், நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழலாம் என்கின்றனர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். மணமகனும் மணமகளும் தங்கள் வாழ்வில் பெரியதோர் முடிவை எடுக்கின்ற தருணம் அது. அதைப் பார்க்கிற  உங்களுக்கும் உள்ளே சில மாற்றங்கள் நடக்கலாம். தள்ளிப்போடப்பட்ட பெரிய முடிவுகளை உடனே  எடுப்பீர்கள். உதாரணமாக, வேறு வேலையில் சேர்வது, வேறு நகரத்திற்கு இடம்பெயர்வது போன்றவை நிகழலாம். இவ்வளவு ஏன், உங்கள் திருமணம் குறித்தும் தீர்க்கமான முடிவு ஒன்றை எடுக்கும் நிலைக்கு வருவீர்கள். 

வரவேற்பு நிகழ்வால் வரும் மாற்றங்கள்!
திருமண வரவேற்பு நிகழ்வின்போது, உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்து அரட்டை அடிப்பீர்கள். அப்போது உங்கள் இதயத் துடிப்பு சீரான நிலைக்குச் சென்று, ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. ஒருவேளை, மண்டபத்தில் யாரையும் உங்களுக்குத் தெரியவில்லை என்றாலும், உங்கள் வயதில் இருப்பவர்களுடன் பேச்சு கொடுங்கள். இது நீங்கள் சமூகத்துடன் ஈடுபாடுகொண்டு பழகுகிறீர்கள் என்ற எண்ணத்தை உங்கள் மூளையில் விதைக்கும். மகிழ்ச்சியைப் பெருக்கும். குழுவாக வந்து யாரேனும் உங்களை நடனமாடக் கூப்பிட்டால், தயங்காமல் கலந்துகொள்ளுங்கள். உங்கள் உடலை அசைப்பது இயற்கையாகவே உடலில் இருக்கும் வலி நிவாரண அமைப்புகளைத் தூண்டுகிறது என்கிறது பயாலஜி லெட்டர்ஸ் (Biology Letters) நிறுவனம் நடத்திய ஆய்வு. இதனால் உங்கள் உடலில் இருந்து எண்டோர்பின் (Endorphins) உற்பத்தி அதிகரிக்கிறது. மகிழ்ச்சிக்குக் காரணமான  ஹார்மோன் இது.

Advertisements
%d bloggers like this: