Advertisements

எல்லாம் தருவோம். ஆனால்…” – எடப்பாடி தூது… நிராகரித்த சசிகலா!

ழுகார் சொல்லியிருந்தபடி செய்தித்தாள் ஃபைலை டேபிளில் எடுத்து வைத்து விட்டுக் காத்திருந்தோம். வந்ததும் அதைப் புரட்டிய கழுகார், ‘‘ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ‘சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் பெற்றுத் தரவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெங்களூரு செல்கிறார்’ என்று சொல்லியிருப்பதைக் கவனித்தீரா?’’ என்றார்.
‘‘காவிரி நீரைக் கேட்கத்தானே முதல்வர் பெங்களூரு போகிறார்?’’ என்றோம்.

‘‘ஆமாம். ஆனால், அதைத்தாண்டி ஏதோ விஷயங்கள் இளங்கோவனுக்குத் தெரிந்திருக்கிறது.’’
‘‘சுற்றிவளைத்து ஏதோ சொல்ல வருகிறீர். அதை நேரடியாகவே சொல்லும்!’’ என்றோம்.
‘‘2017 ஏப்ரலில்தான் தினகரனுக்கும், எடப்பாடி தலைமையிலான கோஷ்டிக்கும் முட்டிக்கொண்டது. அதற்குச் சில நாள்களுக்கு முன்பாக, பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு எடப்பாடி ஒரு கடிதம் கொடுத்தனுப்பினார். தினகரன் தங்களுக்குக் கொடுக்கும் நெருக்கடிகளை அதில் பட்டியலிட்ட அவர், ‘உங்கள் தலைமையை ஏற்கிறோம். ஆனால், தினகரனை ஒதுங்கியிருக்கச் சொல்லுங்கள்’ என்று கேட்டிருந்தார். மின்துறை அமைச்சர் தங்கமணியின் ஏற்பாட்டில், ஓய்வு பெற்ற சிறைத்துறை அதிகாரி ஒருவர் மூலமாக ரகசியமாக அந்தக் கடிதம் சசிகலா கையில் கொண்டு சேர்க்கப் பட்டது.’’
‘‘சரி, அதற்கு என்ன ரியாக்‌ஷன்?’’
‘‘இந்த விஷயம் தினகரன் வழியாக சசிகலாவுக்கு முன் கூட்டியே தெரிந்துவிட்டது. அவர் அந்தக் கடிதத்தைப் பிரித்துக்கூட பார்க்கவில்லை. கோபத்தோடு அதைத் திருப்பிக் கொடுத்தவர், ‘எனக்கு உத்தரவு போடுகிற இடத்துல இருக்கறதா அவங்களுக்கு நினைப்பு வந்துடுச்சா? இந்த அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது?’ என்று கேட்டார். அத்துடன் அந்த சமாதான முயற்சி முறிந்துவிட்டது. அதன்பிறகு, எடப்பாடி அணியினர் தினகரனை ஒதுக்கி வைத்துத் தீர்மானம் போட்டார்கள்.’’

‘‘இந்தப் பழைய கதை இப்போது எதற்கு?’’
‘‘காரணம் இருக்கிறது. இதேபோன்ற ஒரு சமாதானத் தூது இப்போது திரும்பவும் நடந்திருக்கிறது. ‘ஆட்சியைத் தினகரன் கவிழ்த்துவிடுவார்’ என எடப்பாடி பயப்படவில்லை. நாற்காலிக்கு டெல்லி காவல் இருப்பதால், அவர் தைரியமாக இருக்கிறார். ஆனால், தினம் தினம் தினகரன் தரப்பு கொடுக்கும் குடைச்சல்களை அவரால் தாங்க முடியவில்லை. இப்போது தமிழ்நாடு முழுக்கச் சுற்றுப்பயணம் கிளம்பியிருக்கும் தினகரன், ஒவ்வோர் ஊரிலும் ஆளும்தரப்புக்கு எதிராகவே பேசப் போகிறார். அவர் வாயை அடைத்து, குடும்பத்துக்குள்ளேயே அவருக்குப் பிரச்னைகளைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எடப்பாடியின் திட்டம்.’’
‘‘அதற்கு என்ன செய்தார்?’’
‘‘உருக்கமான ஒரு தூதுப் படலத்தை நிகழ்த்தினார் எடப்பாடி. ‘இத்தனை காலமாக தினகரனை மட்டுமே விமர்சனம் செய்தேன். உங்களுக்கு எதிராக ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. இன்னமும் நான் உங்களுக்கு விசுவாசமாகத்தான் இருக்கிறேன். தினகரன் பேசும் விஷயங்களால் ஆட்சிக்கு மட்டுமில்லை, கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. இதைத் தடுக்க வேண்டும். இப்போதும் எதுவும் குறைந்து போய்விடவில்லை. தினகரனை ஒதுக்கிவையுங்கள். ஜெயலலிதா காலத்தில்கூட அவர் ஒதுக்கிதான் வைக்கப்பட்டிருந்தார். ஜெயலலிதா காலத்தில், உங்கள் குடும்பத்தில் மற்றவர்களுக்கு என்ன செல்வாக்கு இருந்ததோ, அது அப்படியே தொடரும். அவர்கள் எல்லோருக்கும் என்னென்ன மரியாதைகள் செய்துகொடுக்கப்பட்டனவோ, அவை எல்லாவற்றையும் மாதா மாதம் செய்யத் தயாராக இருக்கிறோம்’ என்று எடப்பாடி சொல்லியிருக்கிறார்.’’
‘‘இதைக் கடிதமாக அனுப்பினாரா?’’
‘‘இல்லை. சிறையிலும், சிறைக்கு வெளியிலும் இருக்கும் தினகரனின் ஆட்களுக்குத் தெரியாமல் இந்தத் தகவலை சசிகலாவுக்குக் கொண்டுசேர்க்க ஏற்பாடு செய்தார். முதலில் சசிகலாவின் தம்பி திவாகரன் மூலமாக இந்தத் தூதுப் படலத்தைச் செய்ய ஏற்பாடு நடந்தது. ஆனால், ‘தினகரனின் கோபத்துக்கு ஆளாவோம்’ என்ற தயக்கத்தில் அவர் பின்வாங்கிவிட்டார். அதன்பின் எடப்பாடிக்கு எல்லாமுமாக இருக்கும் சேலம் பிரமுகர் ஒருவர், எப்படியோ ஆளைப் பிடித்து சசிகலாவுக்கு இந்தத் தகவலைக் கொண்டுபோய்  சேர்த்தார்.’’
‘‘அதற்கு என்ன பதில் கிடைத்தது?’’
‘‘முன்புபோலவே இப்போதும் சசிகலா அதை நிராகரித்துவிட்டார். அவர் தினகரனை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. ‘எல்லா பக்கங்களி லிருந்தும் வரும் எதிர்ப்புகளைத் தாங்கிக்கொண்டு எனக்காக் கஷ்டப்படும் தினகரனை நான் எப்படி ஒதுக்கி வைக்க முடியும்? கட்சியையும் ஆட்சி யையும் எப்படி எங்கள் கைகளுக்குக் கொண்டு வருவது என்பதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று சொல்லிவிட்டாராம்.’’

‘‘இனி என்ன செய்வார் எடப்பாடி?’’
‘‘அவரின் கவனம் முழுக்க ‘பட்ஜெட் கூட்டத் தொடரின்போது ஆட்சியைக் காப்பாற்றுவது எப்படி’ என்பதில்தான் இருக்கிறது. தொலை நோக்குப் பார்வையோடு இப்போதே சிந்திக்கிறார். தினகரன் பக்கம் போன 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் விரை வில் தீர்ப்பு கொடுத்துவிடும் என நம்புகிறார் அவர். ‘அவர்களைத் தகுதிநீக்கம் செய்தது செல்லாது எனத் தீர்ப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம்’ என வழக்கறிஞர்கள் தரப்பில் அவருக்குச் சொல்லப்பட்டது. அப்படி வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறார்.’’
‘‘எப்படி?’’
‘‘தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் தவிர மற்றவர்கள், தீர்ப்புக்குப் பிறகு தன் பக்கம் வந்துவிடுவார்கள் என நம்புகிறார் அவர். அவர்களுக்கு இப்போதே எடப்பாடி தரப்பிலிருந்து தூது போகிறது. ‘ஏற்கெனவே பல மாதங்களாக எல்லாவற்றையும் இழந்துவிட்டீர்கள். பழையபடி இந்தப் பக்கம் வந்தால் உரிய மரியாதை கிடைக்கும். இல்லாவிட்டால், இந்த வழக்கில் உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். மேலும் சில மாதங்கள், எதுவும் இல்லாமல் கஷ்டப்பட வேண்டியிருக்கும்’ எனச் சபலத்தை ஏற்படுத்து கிறார்களாம். இதற்கு நல்ல பலன் இருக்கும் என்கிறார்கள்’’ என்ற கழுகார், ‘‘உமக்குக் கோயில் விவகாரம் ஒன்றைச் சொல்கிறேன்’’ என்றார். 
‘‘காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் விவகாரமா?’’ என்றோம்.
‘‘ஷார்ப்பாக இருக்கிறீர்’’ எனப் பாராட்டிய கழுகார், ‘‘பொதுவாக ஐம்பொன் சிலைகளை வடிக்கும்போது, அதில் குறிப்பிட்ட அளவு தங்கத்தையும் சேர்ப்பார்கள். சிலையின் முகத்தில் தங்கம் சேர்ந்து ஒளியைக் கூட்டும் என்பதற்காகத் தான் இந்த நடைமுறை. இதற்கு நன்கொடை யாளர்களிடம் தங்கத்தை வசூலிப்பார்கள். அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில் களின் திருப்பணி, சிலைகள் செய்வது போன்ற வற்றுக்கெல்லாம் அந்தத் துறையிலிருந்து பணம் ஒதுக்கப்படுவதில்லை. இப்படி நன்கொடையாளர் களை வைத்துதான் காலத்தை ஓட்டுகிறார்கள்.’’
‘‘அறநிலையத்துறையில் கொட்டிக்கிடக்கும் பணத்தில் அதிகாரிகளுக்கு, அமைச்சர் களுக்கெல்லாம் கார் உள்ளிட்ட சொகுசு விஷயங்களைச் செய்துகொள்கிறார்கள். ஆனால், கோயில்களுக்குச் செலவு செய்ய மட்டும் பணம் இல்லையா?’’
‘‘பணம் இருந்தாலும் மனமில்லை. நன்கொடை என்கிற பெயரில் வாங்கினால்தானே அதிலும் ‘மஞ்சள் குளிக்க முடியும்’. அந்த வகையில்தான் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலையைச் செய்வதற்கும் ‘நன்கொடை’ என்ற பெயரில், ஏகப்பட்ட பேரிடம் தங்கத்தை வசூலித்துள்ளனர். பொதுவாக, தங்கம் உள்பட ஐந்து உலோகங்களையும் ஒன்றாக உருக்கி, அச்சில் ஊற்றித்தான் சிலையை வார்ப்பார்கள். இதில் தங்கம் மட்டும் முகத்துக்கு சென்று சேரும் என்று ஒரு நம்பிக்கை. குறைந்தபட்சம் ஆறு கிலோ தங்கமாவது இந்தச் சிலையில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், துளிகூட சேர்க்கப்படவில்லை. புதிதாக சிலை செய்வதற்கு முன்னதாக, தமிழக அரசின் அறநிலையத் துறையில் தலைமை ஸ்தபதியாக இருக்கும் முத்தையா ஸ்தபதியை அழைத்துக் கருத்துக் கேட்டார்கள். ‘பழைய சிலையில் 75 சதவிகித தங்கம் உள்ளது. அதேபோல புதிதாக ஒரு சிலையை அதிக தங்கம் கலந்து செய்யலாம்’ என்று பரிந்துரைக் கடிதத்தைக் கொடுத்துவிட்டார். அதை வைத்துக்கொண்டுதான் 100 கிலோ வரை தங்கம் வசூல் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், ஆய்வாளர்களை அழைத்து வந்து சோதனை போட வைத்து, புதிய சிலையில் துளிக்கூட தங்கம் இல்லை என்பதைக் கண்டுபிடித்துவிட்டார் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யான பொன்.மாணிக்கவேல்.”
‘‘அட ஈஸ்வரா!’’
‘‘இதையும் கேளும். அரசர்கள் காலத்தில் செய்யப்பட்ட பழைய சோமாஸ்கந்தர் சிலை ‘பின்னமாகி’விட்டது என்று சொல்லி, அதற்கு மாற்றாகத்தான் புதிய சிலையைச் செய்தார்கள். பழைய சிலையில் அந்தக்காலத்தில் நிறைய தங்கம் சேர்த்துதான் செய்திருப்பார்கள். ஆனால், தற்போது ஓரங்கட்டி வைக்கப்பட்டிருக்கும் அந்தப் பழைய சிலையிலும், துளிகூட தங்கம்  இல்லை எனத் தெரியவந்துள்ளது. அதனால், பழைய  சிலையை விற்பனை செய்துவிட்டு, அதேபோல ஒரு சிலையைச் செய்துவைத்து விட்டனரோ என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே, புதிதாக சோமாஸ்கந்தர் சிலையைச் செய்வதற்கு அனுமதி கொடுத்தது, அதற்கான ஆட்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்ததன் பின்னணியில் இருந்தது, தங்கம் இல்லை என்று தெரிந்தபிறகும் அதை மூடிமறைப்பதுபோல சான்றிதழ் கொடுத்தது, மரபுப்படி கோயிலிலேயே வைத்துச் சிலையைச் செய்யாமல் வெளியிடத்தில் வைத்துச் செய்தது என்று பல விஷயங்களும் சேர்ந்துகொள்ள, இந்த விஷயத்தில் முதல் குற்றவாளி என்று முத்தையா ஸ்தபதி மீதே வழக்குப் பதியப்பட்டுவிட்டது.’’

‘‘புகழ்பெற்ற ஸ்தபதியாயிற்றே… அவர் மீது அத்தனை எளிதாகவா வழக்குப் பதிந்தார்கள்?’’
‘‘சரியாகக் கேட்டீர். தமிழக அமைச்சரவையில் ‘பணிவு செல்வமாக’ இருக்கும் ஒருவருக்கும் இந்த ஸ்தபதி நெருக்கமோ நெருக்கம். அதை வைத்து, பொன்.மாணிக்கவேலை மடக்கப் பார்த்துள்ளனர். ஏற்கெனவே அவர் வேறு துறைக்கு மாற்றப்பட்டு, உயர் நீதிமன்ற உத்தரவுப்படிதான் பழையபடி சிலை கடத்தல் வழக்குகளையெல்லாம் பார்த்துவருகிறார். அதனால், அவரை இந்த வழக்கு விசாரணையிலிருந்து விலகி யிருக்கவும் செய்ய முடியாது. எனவே, கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்களாம்.
அறநிலையத் துறையில் உள்ள ஓர் அதிகாரி, ஸ்தபதிக்கு மிகவும் நெருக்கம். அந்த அதிகாரி மன்னார்குடி குடும்பத்துக்கு நெருக்கம். அதனால் பழைய தொடர்புகளை வைத்து ஸ்தபதியைக் காப்பாற்ற முயற்சி செய்கிறாராம்.’’
‘‘ஸ்தபதியைக் காப்பாற்ற அந்த அதிகாரி எதற்காகத் துடிக்க வேண்டும்?’’
‘‘அதைப் பற்றித் தகவல் இல்லை. ஆனால், அந்த அதிகாரியின் மகன் செய்துவரும் பளபளா தொழிலில் ஏகப்பட்ட பணம் முதலீடு செய்யப் பட்டிருக்கிறது. அந்த அதிகாரிக்குப் புதிதாக ஓர் அப்பார்ட்மென்ட் வாங்கித் தரப்பட்டுள்ளது என்றெல்லாம் புகார்கள் குவிந்துள்ளனவாம். அவையனைத்தையும் தற்போது போலீஸார் தோண்டித் துருவ ஆரம்பித்துள்ளனர் என்று கேள்வி. ஸ்தபதி என்றாலே ஆன்மிகத் தொடர்புகளும் அதிகம் இருக்கும். அந்த வகையில், ஒரு மடத்தைச் சேர்ந்தவர்களும் ஸ்தபதியைக் காப்பாற்றும் வகையில், பி.ஜே.பி தொடர்புகளை வைத்து, மாநில அரசுக்கு ஏக பிரஷர் கொடுத்து வருகிறார்களாம்.’’
‘‘தலைமறைவாக இருந்த ஸ்தபதியைக் கைதுசெய்ய தற்போது நீதிமன்றம் தடை விதித்துவிட்டதே?’’
‘‘ஒரு மாதமாக தலைமறைவு என்கி றார்கள். ஆனால், ஜனவரி 23-ம் தேதி சென்னையில் உள்ள அறநிலையத் துறை தலைமை அலுவலகத்தில் நடந்த ஸ்கிரீனிங் கமிட்டி கூட்டத்தில் ஸ்தபதி பங்கேற்றிருக்கிறார். தமிழகம் முழுக்க உள்ள பழைய கோயில்களில் திருப்பணி செய்வது பற்றிய கூட்டம் அது. மூன்று நாள்களுக்குக் கூட்டம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், முதல் நாளிலேயே ஏகப்பட்ட ஃபைல்களைப் பார்த்து ஒப்புதல் கொடுத்தாராம். என்ன நினைத்தார்களோ… அடுத்த இரண்டு நாள்களுக்கான கூட்டத்தை ரத்து செய்துவிட்டார்களாம் அதிகாரிகள்’’ என்ற கழுகார் பறந்தார்.

Advertisements
%d bloggers like this: