Advertisements

புரோஸ்டேட் புற்றுநோய் உண்டாகும் ஆபத்தைக் குறைக்க உதவக்கூடிய உணவுகள்

ஆண் இனப்பெருக்க மண்டலத்தில், அக்ரூட் பருப்பின் அளவில் சிறிய சுரப்பி ஒன்று உள்ளது. அதை புரோஸ்டேட் சுரப்பி என்கிறோம். இது சிறுநீர்ப்பைக்குக் கீழே, மலக்குடலுக்கு முன்பாக அமைந்துள்ளது. இது விந்து உற்பத்தி செயல் தொடர்பான பணிகளைச் செய்கிறது.

புரோஸ்டேட் சுரப்பியின் செல்கள் கட்டுப்பாடற்ற விகிதத்தில் அதிகரித்துப் பெருகி, புரோஸ்டேட் சுரப்பியையும் தாண்டி பிற பகுதிகள் வரை பரவும்போது புரோஸ்டேட் புற்றுநோய் உருவாகிறது. உலகளவில், பொதுவாகக் காணப்படும் புற்றுநோய் வகைகளில் புரோஸ்டேட் புற்றுநோய் இரண்டாம் இடத்தில் உள்ளது. புற்றுநோய் தொடர்பான மரணங்களுக்குக் காரணமாக இருப்பதில் ஆறாம் இடத்தில் உள்ளது.

உலகளவில், வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தில் செய்யும் மாற்றங்கள், புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் வீதங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கைமுறையும் ஊட்டச்சத்துள்ள உணவுப் பழக்கமும் பல வகைகளில் உதவும்:

புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்க உதவும்புற்றுநோய் பரவும் வேகத்தைக் குறைக்க உதவும்புற்றுநோய் இன்னும் தீவிரமான நிலையை அடைவதைத் தடுக்க உதவும்

புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுப்பதில் பங்குள்ளதா என சில உணவு வகைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம்:

தக்காளி: தக்காளியில் உள்ள லைக்கோபீன் எனும் பொருள் புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுப்பதில் பங்களிப்பதாகத் தெரிகிறது. ஓர் ஆய்வில், புரோஸ்டேட் புற்றுநோய் இல்லாத 1294 பேர் மற்றும் அடுத்த 13 ஆண்டுகளில் புரோஸ்டேட் புற்றுநோய் உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட 578 பேர் என இரு பிரிவினரின் மருத்துவ விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் புரோஸ்டேட் புற்றுநோய் வரும் ஆபத்துக்கும் கரோட்டினாய்டு எடுத்துக்கொள்வதற்கும் உள்ள சம்பந்தம் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில், பிளாஸ்மாவில் லைக்கோபீன் அதிகமாக இருப்பவர்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவது குறைவாக இருந்தது தெரியவந்தது. லைக்கோபீன் உள்ள உணவுகளையும் தக்காளியையும் அதிகமாக உட்கொள்வதால் புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தும் அது பரவுவதையும் குறைக்க உதவலாம் என்று அந்த ஆய்வு தெரிவித்தது.

கிரீன் டீ: உலகளவில், கிரீன் டீ பரவலாக அருந்தப்படுகிறது. பல்வேறு வகை புற்றுநோய்களைத் தடுப்பதில் கிரீன் டீக்கு பங்கிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிரீன் டீயில் சக்திமிக்க ஆன்டிஆக்சிடன்ட் பொருள்கள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு குணம் கொண்ட பொருள்களும் உள்ளன. அவற்றில் சில:

எப்பிகேட்டச்சின்எப்பிகேட்டச்சின்-3-கேலேட்எப்பிகேல்லோகேட்டச்சின்எப்பிகேல்லோகேட்டச்சின்-3-கேலேட்

இத்தாலியில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், புரோஸ்டேட் இன்ட்ராஎப்பித்தீலியல் நியோப்ளாசியா (புற்றுநோய்க்கு முந்தைய நிலை) உள்ள 60 ஆண்கள் பங்கேற்றனர். அதில் கிரீன் டீயின் மூலம் 600 மி. கி. கேட்டச்சின் உள்ளெடுப்பதற்கும் புற்றுநோயின் தாக்கத்திற்கும் உள்ள சம்பந்தம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதனை எடுத்துக்கொண்ட ஆண்களில், புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் வீதம் கணிசமாகக் குறைந்ததாக அந்த ஆய்வு தெரிவித்தது.

கொழுப்பு நிறைந்த மீன்: ஒமேகா-3-கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கும் கொழுப்புள்ள மீன்களை உண்பது புரோஸ்டேட் புற்றுநோய் உள்ள ஆண்களின் இறப்பு வீதத்தை கணிசமாகக் குறைத்துள்ளதாகத் தெரியவருகிறது. சால்மன், வாளை மீன், கானாங்கெளுத்தி ட்ராட் ஆகிய மீன்கள் இதற்கு உதாரணம்.

கனடாவின் மாண்ட்ரீலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தின் ஹெல்த் செண்டர் 2010இல் நடத்திய மருத்துவ ஆய்வுகளின் விவரத் தொகுப்புகளைப் பகுப்பாய்வு செய்ததில், புரோஸ்டேட் புற்றுநோய் சம்பந்தமான இறப்புகள் 63% குறைந்ததற்கும், அவர்கள் இந்த மீன்களை எடுத்துக்கொண்டதற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இறுதிக் கருத்து

ஊட்டச்சத்து விஷயத்தில் சரியான தெரிவுகளைச் செய்வது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறுவதன் மூலம் புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை நீங்கள் குறைக்க முடியும். எனினும் இதனை முற்றிலும் தடுக்க குறிப்பிட்ட வழிகள் ஏதுமில்லை.

Advertisements
%d bloggers like this: