Advertisements

அ.தி.மு.க.,வில் மீண்டும் இணைப்பு சசி தரப்புடன் மந்திரிகள் ரகசிய பேச்சு

அ.தி.மு.க., – எம்.எல். ஏ.,க்கள், 18 பேர் தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பை பொறுத்து, தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழும் என்பதால், தீர்ப்பை, அனைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களில், 18 பேர், தினகரன் ஆதரவாளர்களாக மாறி, முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, கவர்னரிடம் மனு கொடுத்தனர். அதன் தொடர்ச்சியாக, அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்.
அதை எதிர்த்து, அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. எப்போது வேண்டுமானாலும், தீர்ப்பு வெளியாகலாம்.

 

117 எம்.எல்.ஏ.,க்கள்

இந்த தீர்ப்பை பொறுத்து, தமிழக அரசிய லில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம். தற்போது, சட்டசபையில், அ.தி.மு.க.,விற்கு சபாநாயகரை சேர்த்து, 117 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். தி.மு.க.,விற்கு, 89, காங்கிரசுக்கு, 8, முஸ்லிம் லீக்கிற்கு ஒரு எம்.எல்.ஏ., உள்ளனர். சுயேச்சை எம்.எல்.ஏ.,வாக, தினகரன் உள்ளார்.

‘தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர் தகுதி நீக்கம் செல்லாது’ என, தீர்ப்பு வந்தால், முதல்வர் பழனிசாமி, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
அப்போது, எம்.எல்.ஏ.,க்களை இழுக்க, குதிரை பேரம் நடக்கும். தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களில் சிலரை, அ.தி.மு.க., தரப்பு இழுத்தால், ஆட்சி தொடரும்.அதே சமயம், அ.தி.மு.க.,வில் உள்ள எம்.எல்.ஏ.,க்களை இழுக்க, தினகரன் தரப்பினரும், தி.மு.க.,வும் முயற்சிக்கும்.
இழுபறி நீடித்தால், சட்டசபையை முடக்கிவிட்டு, கவர்னர் ஆட்சி கொண்டு வர வாய்ப்புண்டு.ஆட்சி கவிழ்ந்தாலும், கவர்னர் ஆட்சி வரும். ‘எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லும்’ என, தீர்ப்பு வந்தால், ஆட்சி நிலைக்கும். காலியான, 18 தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் வரும்.
உயர் நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே, தமிழக அரசின் ஆயுள் அமையும். எனவே, அனைத்து கட்சியினரும், தீர்ப்பை எதிர்நோக்கி உள்ளனர். இதற்கிடையே, சசிகலா தரப்பினருடன், ஆளும் கட்சி சார்பில் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், தகவல் ெவளியாகி உள்ளது. சசிகலா குடும்பத்தில், திவாகரன், ராவணன் போன்றோர், அரசு தரப்பில் இன்னமும் தொடர்பில் உள்ளனர்.

மத்தியஸ்தம்

முதல்வர் பழனிசாமி தரப்பில், ஜெ., இருந்தபோது செயல்பட்டதுபோல், பின்னால் இருந்து செயல்பட்டால், தேவையானதை வழங்க ஒப்புதல் அளித்துள்ளனர்.தினகரன் தரப்பில், முதல்வர் பதவி வேண்டும் என, வலியுறுத்தப்படுகிறது. இதனால், இழுபறி நீடிக்கிறது. டெல்டா மாவட்ட அமைச்சரும், தென் மாவட்ட அமைச்சர் ஒருவரும், இரு தரப்பிலும் மத்தியஸ்தம் செய்து வருகின்றனர்.
ஆட்சி கவிழாமல் இருந்தால் தான், அனைவருக்கும் லாபம் என்பதால், முதல்வர் தரப்பினர் கூறுவதை கேட்க, சசிகலா உறவினர்கள் தயாராக உள்ளனர். தினகரன் மட்டும், எதிர்ப்பாக உள்ளார்.எனவே, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பின், அரசியலில் எத்தகைய மாற்றங்களும் ஏற்படலாம்.
சசிகலா தரப்பினர், முதல்வர் தரப்புடன் இணக்கமாகி, ஆட்சி கவிழாத நிலை ஏற்பட்டால், அடுத்து என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது குறித்து, தி.மு.க.,விலும் ஆலோசனை நடந்து வருகிறது.

Advertisements
%d bloggers like this: