Advertisements

ஆட்சி, கட்சியை கைப்பற்ற… சதி திட்டத்துடன் பாசாங்கு வலை வீசிய சசிகலா.. உதாசீனப்படுத்திய அமைச்சர்கள்

பெங்களூரு சிறையில் மவுன விரதத்தை முடித்துள்ள சசிகலா கட்சி, ஆட்சியை கைப்பற்றுவதற்காக தான் கூறியதாக சில தகவல்களை அதிகாரத்தில் இருக்கும் அமைச்சர்களுக்குத் தூது விட்டுள்ளார். ஆனால் அவரின் பாசாங்கு வலையில் சிக்காமல் சசிகலாவின் பேச்சுகளை அமைச்சர்கள் உதாசீனப்படுத்தியதாக தெரிகிறது.

 

ஆட்சி மற்றும் கட்சி அதிகாரத்தைக் குறிவைத்து சசிகலா குடும்பத்தினர் நடத்தும் தகிடுதத்தங்களால் கொதிப்பில் உள்ளனர் அமைச்சர்கள். ‘ வாயில் வடை சுடுகிறார் தினகரன்’ என அமைச்சர் ஜெயக்குமார் கொதித்தாலும், ‘ கட்சி அதிகாரம் நமது கைக்குள் வர வேண்டும்’ என்பதில் உறுதியாக இருக்கிறார் சசிகலா. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவின் விளக்கத்தை அறிவதற்குத் தயாராக இருக்கிறது ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுக சாமி ஆணையம். ‘ சசிகலா குறித்து தெரிவித்தவர்கள் கூறிய ஆவணங்களைக் கொடுங்கள்’ என ஆணைய விசாரணைக்கே போக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றனர் மன்னார்குடி கோஷ்டிகள்.

கட்சியை கேட்கும் சசி குடும்பம்

‘ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவை மட்டுமே குற்றவாளியாக்கிவிட்டால், கட்சி அதிகாரத்துக்குள் மன்னார்குடி கோஷ்டிகளால் கோலோச்ச முடியாது’ என்பதால் முதல்வரிடம் தூதுப் படலத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். இதனையொட்டித்தான், திவாகரன் கூறியதாக சில தகவல்கள் வெளியானது. ‘எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆட்சியை நீங்களே வைத்துக் கொள்ளங்கள். கட்சியை மட்டும் எங்களிடம் கொடுத்துவிடுங்கள்’ என்பதுதான் அவர்களின் ஒற்றை அஜெண்டா.

18 எம்எல்ஏக்களால் சிக்கல் ஏற்படாது

இதற்கு எடுத்துக்காட்டாக, ‘தினகரன் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் சசிகலா. 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வந்தாலும் ஆட்சிக்கு எந்தவித சிக்கலையும் எங்களுடைய எம்.எல்.ஏக்கள் ஏற்படுத்த மாட்டார்கள். இதில் சசிகலாவும் உறுதியாக இருக்கிறார்’ என ஆட்சியில் உள்ளவர்களுக்குத் தெரிவித்தனர். இந்தத் தூது முயற்சியை அமைச்சர்கள் பலரும் விரும்பவில்லை.

ஆட்சி மாற்றத்திற்கு என்ன வழி?

‘நீர்க்குமிழி, எரிநட்சத்திரம் என எத்தனை வார்த்தைகள் இருக்கிறதோ அவை அனைத்தையும் அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்திவிட்டோம். இவர்களால் ஆட்சிக்கு எந்தவித சிக்கலும் வரப் போவதில்லை. பதவியில் இருந்து விலகுவதற்கு எந்த எம்.எல்.ஏவும் தயாராக இல்லை. ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்றால், தி.மு.கவுடன் கைகோர்த்தால்தான் முடியும். அப்படிச் செய்தாலே மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப் போவார் தினகரன்.

அமைச்சர்கள் நம்பிக்கை

நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என தினகரன்தான் கூறிக் கொண்டிருக்க வேண்டும். ஆட்சிக்கு எந்தவித சிக்கலும் இல்லை. மத்திய அரசும் மாநில அரசுடன் இணக்கமாக இருக்கிறது’ எனப் பேசி வருகின்றனர் அமைச்சர்கள் தரப்பினர்.

சசிகலா விட்ட தூது தகவல்

இந்நிலையில், பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா கூறியதாக சில தகவல்கள் அதிகாரத்தில் உள்ளவர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதில், ‘இன்றளவும் சின்னம்மா உங்கள் மீது மிகுந்த பாசத்தில் இருக்கிறார். உங்களுடைய செயல்பாடுகள் மீது அவருக்கு எந்த வருத்தமும் இல்லை.

படத்தை அகற்றியதால் பாதித்தேன்

அந்தநேரத்தில் யாராக இருந்தாலும் இப்படித்தான் முடிவெடுத்திருப்பார்கள் என்பதையும் நம்புகிறார். அவருக்கு உங்கள் மீது சிறு வருத்தம் மட்டுமே உள்ளது. அது என்னவென்றால், ‘ தலைமைக் கழகத்தில் என்னுடைய படத்தை எடப்பாடி பழனிசாமி அப்புறப்படுத்தியிருக்கக் கூடாது. அது ஒன்றுதான் என்னை மிகவும் பாதித்தது’ எனக் கூறினார்.

தினகரனை பெரிதாக நினைக்க வேண்டாம்

அம்மா பாடுபட்டு மீண்டும் கொண்டு வந்த இந்த ஆட்சி முழுமையாக நிறைவடைய வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணம். தினகரன் தரப்பினர் பேசும் கருத்துக்களையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம். 18 எம்.எல்.ஏக்களில் ஒருசிலர் மட்டுமே தினகரன் பேச்சைக் கேட்பார்கள். மற்றவர்கள் எல்லாம் சின்னம்மா மீது மிகுந்த பாசத்தில் இருப்பவர்கள்.

தினகரனை ஒதுக்கவும் தயார்

அதனால்தான், தினகரனின் தனிக்கட்சி முடிவுக்கு அவர்கள் யாரும் ஆதரவு கொடுக்கவில்லை. நீங்கள் விரும்பினால், தினகரனை ஒதுக்கி வைக்கவும் அவர் தயாராக இருக்கிறார்’ என விவரித்துள்ளனர் தூதுவர்கள்.

அவர்களை நம்புவதற்கில்லை

இதற்குப் பதில் அளித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், ” அந்தக் குடும்பத்தைப் பலகாலமாக பார்த்து வருகிறோம். யார் மீதும் குற்றம் சுமத்திப் பேசிவிட முடியாது. அந்தளவுக்கு அவர்களிடையே ஒற்றுமை இருக்கிறது. வெளியில் மோதல் இருப்பதைப் போலக் காட்டிக் கொள்வார்கள். உள்ளுக்குள் யாரையும் விட்டுக் கொடுத்துவிட மாட்டார்கள். இதை உணராமல் கட்சிப் பதவி, அமைச்சர் பதவியை இழந்தவர்கள் ஏராளம்.

அதிகாரத்திற்குள் நுழைய

அதிகாரத்துக்குள் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்பதற்காகத்தான், இப்படியெல்லாம் செய்கிறார்கள். இதை எடப்பாடியாரும் புரிந்து வைத்திருக்கிறார். வழக்கம்போல, மவுனமாக இருந்து சாதிக்க விரும்புகிறார். அதனால்தான், தினகரனின் பேச்சுக்களுக்கு அமைச்சர்களே பதிலடி கொடுக்கிறார்கள். சசிகலாவின் முயற்சி ஒருநாளும் பலிக்கப் போவதில்லை” என்றார்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-s-idea-crab-power-minister-ousters-the-plan/articlecontent-pf293381-310708.html

Advertisements
%d bloggers like this: