முகத்தின் கருவளையங்களைப் போக்க சில அருமையான குறிப்புகள் 

நம்முடைய பரபரப்பான வாழ்க்கை முறையில், நேரமின்மை காரணமாக நமது ஆரோக்கியத்திற்கு நாமளிக்கும் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. குறிப்பாக, பெண்களில் பெரும்பாலானோர் வேலைக்கும் சென்று கொண்டு குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளும் நிலை உள்ளதால், அவர்களால் தங்களை அழகுபடுத்திக்கொள்ள, ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள நேரம் ஒதுக்க முடிவதில்லை. தொடர்ந்து மிகுந்த அழுத்தத்தில் இருப்பதன் காரணமாக, அவர்கள் சோர்வான தோற்றம் பெறுகிறார்கள், அதன் முதல் அறிகுறியாக முகத்தில் தெரிவது கண்களுக்குக் கீழே தோன்றும் கருவளையங்கள்.

இன்னும் சரியாகக் கூறுவதானால், கண்ணைச் சுற்றியுள்ள அல்லது கண்ணுக்குக் கீழுள்ள சருமம் நிறம் மாறுவதையே கருவளையம் என்கிறோம். நம் எல்லோருக்குமே கருவளையம் வந்திருக்கும், வாழ்வின் மிகவும் பணிச்சுமை மிகுந்த பரபரப்பான காலகட்டத்தில் இருப்பதை நம் முகத்தில் தோன்றும் கருவளையங்கள் உணர்த்தும்.

காரணங்கள் (Causes):

கண்களைச் சுற்றி கருப்பான நிறமாற்றம் ஏற்பட பல்வேறு வகையான காரணங்கள் உள்ளன. பல காரணங்கள் இருந்தாலும், களைப்பே முதன்மையான காரணம் என்றே பலர் கருதுகின்றனர். தூக்கமின்மையும் அதிக மது அருந்துவதும் கண்களுக்குக் கீழ் கருவளையம் உண்டாகக் காரணமாகலாம், பிற பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளும் இதற்குக் காரணமாகலாம். சில காரணங்கள் பின்வருமாறு:

மரபியல்: சில சமயம் மரபியல் தொடர்ச்சி காரணமாகவும் சிறு வயதில் ஒருவருக்கு கண்களுக்குக் கீழ் கருவளையம் தோன்றலாம், சில குழந்தைகளுக்கு வளரும்போது மறைந்துவிடும், சிலருக்கு அப்படியே இருக்கும்.தூக்கமின்மை: கருவளையங்கள் ஏற்பட மிகவும் பொதுவான காரணம் தூக்கமின்மையாகும், போதுமான நேரம் தூங்கினாலே இவற்றைத் தடுக்கலாம். புத்துணர்வு பெறும் வரை தூங்க வேண்டும், குறைந்தபட்சம் 8 மணிநேரம் தூங்குவது போதுமானதாக இருக்கும்.அளவுக்கு அதிகமாகத் தூங்குவது:அளவுக்கு அதிகமாகத் தூங்கினாலும் கருவளையங்கள் உண்டாகலாம் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.வயது: வயது அதிகமாகும்போது, கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொழுப்பும் கொல்லேஜனும் இழக்கப்படும். இவை இழக்கப்படுவதாலும், சருமம் மெலிதாவதாலும் கருவளையங்கள் உண்டாகலாம்.மன அழுத்தம்: அதிக பணிச்சுமை அல்லது தேவையற்ற மன அழுத்தம், அதிக நேரம் கணினியில் வேலை செய்வது போன்றவையும் கண்களைச் சுற்றி கருவளையங்கள் தோன்றக் காரணமாகலாம்.வாழ்க்கை முறை: அதிகம் புகைபிடித்தல் மது அருந்துதலும் கருவளையங்கள் உண்டாகக் காரணமாகலாம். சிலர் தேநீர் காபி போன்றவற்றை அதிகம் அருந்துவார்கள் அல்லது பிற வடிவங்களில் காஃபின் அதிகம் எடுத்துக்கொள்வார்கள். இவர்களுக்கு போதுமான தூக்கம் வராது, இதனால் கருவளையங்கள் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.ஒவ்வாமைகள்: மூக்கடைப்பு இருந்தால் கண்களைச் சுற்றியுள்ள இரத்தக் குழாய்கள் விரிவடையலாம், இதனாலும் கருவளையங்கள் தோன்றலாம்.

அழுவது, உடலில் திரவம் சேர்வது, வெயிலில் திரிவது, உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்வது போன்ற பிற காரணங்களாலும் கருவளையங்கள் தோன்றலாம். மேலே குறிப்பிட்ட காரணங்களை மனதில்கொண்டு, உங்களுக்கு கருவளையங்கள் உருவாக எது காரணம் என்பதைக் கண்டறியலாம்.

எப்படி சமாளிப்பது (The management):

கருவளையங்கள் உண்டாக என்ன காரணம் என்று தெரிந்த பிறகு, அவற்றை எப்படிப் போக்குவது என்பது தான் அடுத்த வேலை அல்லவா! இரவில் நன்றாகத் தூங்கினாலே கருவளையங்கள் போய்விடும் என்று நீங்கள் நினைக்கலாம். சிலசமயம் அதுமட்டும் போதாது, தூங்குவதால் அவற்றின் தோற்றம் குறையும், அதாவது மங்கலாகலாம் ஆனால் முற்றிலும் மறையாது, அவற்றை முற்றிலுமாகப் போக்க சில குறிப்புகளை இங்கே காணலாம்.

பாதாம் எண்ணெய்: பாதாம் எண்ணெய் பல ஊட்டச்சத்துகள் நிறைந்தது, அது கண்களுக்குக் கீழே இருக்கும் சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. தொடர்ந்து பாதாம் எண்ணெய் போட்டு மசாஜ் செய்துவந்தால், கருவளையங்கள் மறையும். தினமும் படுக்கச் செல்லும் முன்பு பாதாம் எண்ணெய் போட்டு மசாஜ் செய்யவும், காலை எழுந்த பிறகு குளிர் நீரால் கழுவவும். இதை தொடர்ந்து செய்துவந்தால், சில நாட்களில் கருவளையங்கள் மறையும்.வெள்ளரிக்காய்: கண்கள் ஊதியிருப்பது போன்ற தோற்றத்தைக் குறைக்கவும், சருமம் புத்துணர்வு பெறச்செய்யவும் பல காலமாக, வெள்ளரித் துண்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வெள்ளரி சருமத்தை வெளுக்கும் பண்புகளும், சருமத்திற்கு இதமளிக்கும் பண்புகளும் கொண்டது. குளிரவைத்து, நறுக்கிய வெள்ளரித் துண்டுகளை கண்களின் மேல் பத்து நிமிடம் வைத்திருந்து, பிறகு எடுத்துவிட்டு குளிர் நீரால் கழுவவும். எலுமிச்சைச் சாறுடன் வெள்ளரிச் சாற்றைக் கலந்து பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட பகுதியில் பூசிவிட்டும் இதே போல் செய்யலாம்.வேகவைக்காத உருளைக்கிழங்கு:வேகவைக்காத உருளைக்கிழங்கு வெளுப்பாக்கும் பொருள்களைக் கொண்டுள்ளது, அவை கண்களுக்குக் கீழே இருக்கும் கருவளையங்களைப் போக்க உதவும். உருளைக்கிழங்கைத் துருவி, சாற்றை பிழிந்து எடுத்து, அதில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் அந்தப் பஞ்சை வைத்துக்கொள்ளலாம். நேரம் குறைவாக செலவாக வேண்டுமானால், பெரிய துண்டாக உருளைக்கிழங்கை வெட்டி அதனையே கண்களின் மேல் வைத்துக்கொள்ளலாம்.

குளிரவைத்த ஸ்பூன்: சிலருக்கு இந்த முறை மிகுந்த பலன் கொடுக்கலாம். ஒரு ஸ்பூனை இரவு முழுதும் ஃப்ரீசரில் வைத்து காலை எடுத்து, கருவளையம் இருக்கும் பகுதியில் வைத்துக்கொள்ள வேண்டும். ஸ்பூன் சாதாரண வெப்பநிலைக்கு வரும் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும்.பன்னீர்: சருமத்தைப் பராமரிக்க பன்னீர் மிகவும் நல்லது. அது களைத்துப்போன கண்களுக்கு ஆறுதலளித்து புத்துணர்வூட்டும் பண்பு கொண்டது. பஞ்சுப் படைகளை பன்னீரில் நனைத்து கண்களை மூடிக்கொண்டு அவற்றை மேலே வைத்துக்கொள்ளவும். சுமார் 15 நிமிடங்கள் விட்டு பிறகு கழுவவும்.குளிர் டீ பேக்: டீ பேகில் இருக்கும் டேன்னின் எனும் பொருள் நிறமாற்றத்தைக் குறைக்கிறது. படுத்துக்கொண்டு குளிர்ந்த டீ பேகை கண்களின் மீது வைத்துக்கொண்டு சுமார் 15 நிமிடங்கள் அப்படியே இருக்கவும்.

இந்தக் குறிப்புகளைப் பின்பற்றுவது மட்டுமின்றி, விற்பனைக்குக் கிடைக்கும் சருமப் பராமரிப்புத் தயாரிப்புகளையும் முயற்சித்துப் பார்க்கலாம்.

வைட்டமின் K மற்றும் ரெட்டினால் ஆகியவற்றைக் கொண்டுள்ள கிரீம்: வைட்டமின் K பற்றாக்குறையாலும் கருவளையங்கள் உருவாகலாம். காரணம் எதுவாக இருந்தாலும், ரெட்டினால் மற்றும் வைட்டமின் K கொண்டுள்ள கிரீம்களைப் பயன்படுத்துவது நிறமாற்றத்தையும் கண்கள் ஊதியது போன்ற தோற்றத்தையும் குறைக்க உதவும். தினமும் தொடர்ந்து பயன்படுத்தினால், நாள்போக்கில் நல்ல பலன் கிடைக்கும்.கண்களுக்குக் கீழே பயன்படுத்துவதற்கான கிரீம்:கன்சீலர் கிரீம்களைப் பயன்படுத்தலாம், இவை நிறமாற்றத்தை மறைத்து, ஓரளவு இயல்பான நிறத்தைக் கொடுக்க உதவும். உங்கள் சருமத்தின் நிறத்திற்கு ஏற்ற சரியான கன்சீலரைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.

பயன்படுத்தும் முன் சோதனை செய்து பார்க்க வேண்டும் (Test before you use):

சருமப் பராமரிப்புத் தயாரிப்புகள் எதையும் பயன்படுத்தும் முன்பு, சோதனை செய்து பாருங்கள். கிரீமை கொஞ்சமாக கைகளில் போட்டு, ஒரு மணிநேரம் விட்டுப் பாருங்கள். எரிச்சலோ தோல் தடிப்போ ஏற்பட்டால் அதனைப் பயன்படுத்த வேண்டாம்.

கருவளையங்கள் இருப்பது உண்மையில் தர்மசங்கடம் தான். ஆனால் இப்போதுதான் அவற்றைப் போக்கும் பல வழிகள் உங்களுக்குத் தெரிந்துவிட்டதே! இனி கவலை வேண்டாம், இவற்றில் உங்களுக்கு ஏற்ற குறிப்புகளைப் பின்பற்றிப் பாருங்கள்!

கருவளையங்களைப் போக்கி, தன்னம்பிக்கையுடன் நடைபோடுங்கள்!

%d bloggers like this: