Advertisements

அழகான கூடு-ஹோம் மேக்கர் டிப்ஸ்

நம் எல்லோருக்குமே வீடு வாங்குவது அல்லது கட்டுவது என்பது கனவுதான். வீடு என்பது கட்டடம் மட்டுமல்ல; வீட்டின் ஒவ்வொரு சிறிய பொருளிலும் கலையம்சம் இருந்தால் வீடே அழகாக இருக்கும். பொருட்களை ரசித்து வாங்கும்பொழுது அதன் மகத்துவம் நமக்கு தெரிய வரும். நம் கண்களில் படும் பொருட்களை நாம் ஓரளவு தரம், அழகு பார்த்து வாங்குகிறோம். கண்களுக்குப் புலப்படாத அல்லது முக்கியத்துவம் தரப்படாத பொருட்கள் நம்மைக் கவர்ந்து

இழுப்பதில்லை. சிறு சிறு பொருட்கள் கூட பளிச்சென காணப்பட்டால் ஒவ்வொரு இடமும் கலையம்சத்துடன் திகழும். உதாரணமாக, பூட்டு என எடுத்துக் கொண்டால், அது எந்த விதத்தில் நமக்கு பாதுகாப்பு தரும் என்பதை மட்டும் தான் பார்ப்போம். கூடவே அதன் தாழ்ப்பாளின் அழகும் சேரட்டுமே.
ஒரு வீட்டிற்குச் சென்றிருந்தபோது மிகவும் பெரிய, அழகான ஷோகேஸ். அதன் உள்ளிருந்த பொருட்களும் பார்க்க அழகழகாய் இருந்தன. கண்ணாடி கதவுகளுக்கிடையே வித்தியாசமான கைப்பிடிகள் வித்தியாசமாகத் தெரிந்தன. அருகில் சென்று அதை உற்றுப் பார்த்தால் அந்த கைப்பிடியில் இருந்த சித்திரம் என்னை அசத்தியது. காரணம், அது ஒரு அழகான வீணை வடிவம். அதுவும் நல்ல பித்தளையால் ஆனது. பிறகு, பல கைப்பிடிகளை ஆராய்ந்து பார்த்தால் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான துல்லியமான ஓவியங்கள் காணப்பட்டன. பளபளக்கும் கண்ணாடி கதவோடு, ஜொலிஜொலிக்கும் கைப்பிடியும் அதன் ஓவியமும் பிரதிபலித்தால் எவ்வளவு அழகாக இருக்கும்.
அழகிய ஓவியத்தை, கற்பனைத் திறத்தோடு கதவுகளில் செதுக்குகிறோம். அதன் ஓவியத்தைப் பொறுத்து சதுர அடிக்கு விலை நிர்ணயம் செய்கிறார்கள். அப்படிப்பட்ட உறுதியான கலைநயம் கொண்ட கதவிற்கு ஏற்ற தரமானதொரு தாழ்ப்பாளும் பூட்டும் அமைக்க வேண்டாமா? முதலில் நல்ல அழுத்தமான ஒரு கைப்பிடியை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின்னர்தான் அழகையும், கலைத்திறனையும் பார்க்க வேண்டும். கத்தி வாங்கும்பொழுது, அதன் கைப்பிடியை மட்டும் பார்த்து வாங்கினால், அதன் அழகினால் எந்தப் பிரயோஜனமும் கிடையாது. அதன் கூர்மையைப் பார்த்து வாங்கினால் தான் அது காய்கறிகளை நறுக்க உதவும்.
அது போல் வீட்டிற்குத் தேவையான எந்தப் பொருள் வாங்குகிறோமோ, அதன் நோக்கம் முழுமையாக பூர்த்தியாகுமா என்பதைப் பார்த்து பின், அதன் அழகையும் விலையையும் சேர்த்துப் பார்க்கலாம். மற்ற பொருட்களை பார்த்து பார்த்து வாங்கும் நாம் பூட்டு, தாழ்ப்பாள் போன்றவற்றை ஒரு பெரிய விஷயமாக கருதுவதில்லை. ஆனால் அத்தகைய தாழ்ப்பாள், கைப்பிடி போன்றவற்றில் கூட அழகு ஒளிந்திருக்கிறது. சில இடங்களில் திருகு போன்ற வட்ட வடிவத்தில் கைப்பிடிகள் இருக்கும். அவை பித்தளையில் இருக்குமானால், அவ்வப்பொழுது பாலிஷ் செய்து துடைத்து வைத்தால் கதவு பளிச்சிடும்பொழுது, கைப்பிடியும் பளபளக்கும்.
இன்றைய காலகட்டம் அதிநவீன உபகரணங்கள் பயன்படுத்தப்படும் காலமாகி விட்டது. கதவின் அமைப்பிற்கேற்ற பூட்டும் தாழ்ப்பாளும் அமைப்பதுதான் சிறந்தது. திண்டுக்கல் பூட்டு என உறுதிக்காக சொல்வார்கள். அன்றைய காலகட்டம் அப்படியிருந்தது. இரும்புப் பூட்டு உறுதி மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்றதாக இருந்தது. அத்துடன் போடும் தாழ்ப்பாள், கைப்பிடி போன்றவையும் பளபளக்கும் சில்வர் போலவோ, பளபளக்கும் தங்கம் போன்ற பித்தளையிலோ அதிகம் காணப்படும். ஆனால் இப்பொழுது, தானே பூட்டிக் கொள்ளும் ஆட்டோமேட்டிக் பூட்டுகள்தான் அதிகம். புதிதாக கட்டும் கட்டடங்களில் முழுவதும் இவைதான் பயன்படுத்தப்படுகின்றன. அதிலும் மறைமுக கேமராக்கள் கூட பொருத்தப்படுகின்றன.
அத்துடனில்லாமல், தெரியாதவர்கள் திறக்க முயற்சித்தாலோ, கையை தெரியாமல் வைத்து விட்டாலோ, உள்ளே அலாரம் ஒலிக்கும். முன்னேற்றங்கள் வளர வளர நம் பாதுகாப்புக் கருவிகளும் நமக்குச் சிறந்த பாதுகாவலனாக அமைந்து விடுகின்றன. மேலை நாடுகளில், பெரிய அபார்ட்மென்ட் கட்டடங்களில், கார்டு செலுத்தினால்தான் கதவை திறக்க முடியும். பெரிய ஹோட்டல்கள் மற்றும் சில இடங்களிலும் கூட இந்த முறை காணப்படுகிறது. சம்பந்தப்பட்டவரிடம், கையெழுத்திட்டு உறுதி செய்யப்பட்ட கார்டு வாங்கிக் கொண்டு, அதை பயன்படுத்தினால் மட்டுமே உள்ளே நுழைய முடியும். நம் நாட்டிலும் அனேக இடங்களில் இந்த முறை வந்து விட்டது. இவையெல்லாம், நம் முன்னேற்றப்படியின் அஸ்திவாரங்கள்.
முதலில், உள்ளே செல்வதற்காக நாம் சிறிது நேரம் காத்திருந்தாலும், அது நம் பாதுகாப்பிற்காக மட்டுமேதான்! நம்மையும் நம் வீட்டுப் பொருட்களையும் பாதுகாக்க இவை நமக்கு வரப்பிரசாதமாக அமைந்து விட்டன. ஏ.சி, டி.விக்கு மட்டும் ரிமோட் இல்லை. நம் வீட்டுக் கதவிற்கும் ரிமோட் என்கிற காலம் வந்துவிட்டது. சமயங்களில், சில பிரச்சனைகளை நடைமுறை வாழ்க்கையில் எதிர் கொள்ள நேரிடும். உதாரணமாக டைனிங் ஹாலில்  வாஷ்பேஸின் அமைக்கும்போது அது நடைவழிப் பாதையை ஒட்டிய இடமாக இருக்கலாம். குழந்தைகள் சாப்பிட்டு முடித்து, கையலம்பும் போது குழாயை வேகமாக திறந்து விடுவர். வெளியே  தண்ணீர் தெறிக்கும்.
அப்படியானால் என்ன செய்யலாம்? இதை நாம் முன்பே யோசித்திருந்தால் ஆழம் அதிகம் கொண்ட வாஷ் பேஸினை பார்த்து செலக்ட் செய்திருக்கலாம். கொஞ்சம் பழகிய பின் இது தெரிவதால், அந்தக் குறையைப் போக்குவது எப்படி என யோசிக்கலாம். வாஷ்பேஸின் கீழும் பக்கவாட்டில் இருபுறமும் சேர்த்து கீழே பாக்ஸ் போன்று அமைத்து விடலாம். அதில் விளிம்பு போன்று அமைத்து விட்டாலும் தண்ணீர் வெளியே தெறிக்காது. கீழ்ப்பாகம் முழுமையும் ஸ்டோரேஜ் வசதியும் தந்து விடலாம். எல்லாவிதமான கிளீனிங் அயிட்டங்களையும் அதனுள் அழகாக அடுக்கி விடலாம். அதுவும் வரவேற்பறையையொட்டி இருந்தால், சாதப்பருக்கைகள், காய்கறிகள் உள்ளே அடையாமல் இருத்தலும் நம் சுகாதாரத்திற்கு நல்லது. அதன் சிறு துவாரங்களில் ஏதேனும் அடைப்பட்டாலும், அது கொசுக்களுக்கு இருப்பிடமாகி விடும்.
பெண்கள் தங்கள் சமையலறையின் கையலம்பும் சிங்க் போன்றவற்றை அவரவர் வசதிக்கேற்றபடி தேர்ந்தெடுத்து பொருத்திக் கொள்வது நல்லது. காரணம் சமையலறையில்தான், அதிக கனமுள்ள மற்றும் சமையல் செய்ய பயன்படுத்தும் பாத்திரங்களை துலக்குவதற்காக போட்டு வைப்பதுண்டு. அதன் ஆழம், அகலம், பரப்பளவு இவற்றைப் பார்க்க வேண்டும். ஏனெனில் பெரிய பாத்திரங்களை ஒன்றாகப் போடும்பொழுது, மிகவும் உரசாமல் நம் வேலைகளுக்கு ஏற்றவாறு, அதாவது துலக்குவதற்கு வசதியாக, பொருட்களின் அதிகப்படியான எடையை தாங்குமா? உறுதியாக இருக்குமா என யோசிக்க வேண்டும். பின் வேலைகள் செய்யும் பொழுது தண்ணீர் வெளிப்புறம் தெறிக்காமல் இருக்குமா என்பதைப் பார்க்கலாம்.
முன்னர் சமையலறையில் பாத்திரம் அலம்பும் இடமென்றால், கடப்பா கல்லில்தான் இருக்கும். ஆனால் இப்பொழுது சில்வர் முதல் பலப்பல உலோகங்களில் உறுதியாக அமையும் விதத்திலான பலப்பல வடிவங்களில் கிடைக்கின்றன. வெளிநாடுகளில் போர்ஸிலின் என்று சொல்லக்கூடிய பீங்கான் வடிவங்கள் நிறைய பயன்படுத்தப்படுகின்றன. இவை மிகவும் உறுதியாகவும், பார்க்க அழகாகவும் கனமாகவும் காணப்படுகின்றன. அகலமான தொட்டி அமைப்பு கொண்டிருப்பதால், வெளியே நீர் வராது. இதே போல சமையலறை சிங்க் உடன் தண்ணீர் வடிய பிளேட் போன்று அமைத்திருப்பார்கள். நாம் பாத்திரங்களை துலக்கியபின், அங்கு கவிழ்த்து வைத்தால் தண்ணீர் வடிந்து விடும். பின், பாத்திரங்களை அதனதன் இடத்தில் அடுக்கி வைப்போம்.
அது மாதிரி செய்வது நமக்கு ரொம்ப வசதிதான். ஏனெனில் அந்த பிளேட் போன்ற பாகத்தில் தண்ணீர் வடிவதற்காக பட்டை பட்டையாக வடிவமைத்திருப்பர். ஆனால் அதன் இடுக்குகளில் தண்ணீர் இறங்கி விடுவதால் குறிப்பிட்ட இடம் கோடுகள் போன்ற பகுதியில் அழுக்கு அடைய வாய்ப்புண்டு. அதே சமயம், உப்பு நீர் பயன்படுத்தும் இடங்களில் குறிப்பிட்ட பகுதிகள் பட்டை பட்டையாக உப்புப் படலம் அடைந்து அவ்விடத்தின் அழகே போய் விடும். அது போல், உப்புக் கலந்த நீர்தான் குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கிறதென்றால், நாம் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது.
அப்படியானால் கையலம்பும் சிங்க் உடன் ஒட்டிய தகடு பிளைன் ஆக இருந்தால் போதும். டிசைன் இருந்தால் தானே, இடுக்குகளில் அழுக்கு அடையும். டிசைன் இல்லாதவாறு இருக்கும் பட்சத்தில் கறைகள் படிய வாய்ப்பிராது. நமக்குக் கலையார்வம் நிறைய இருக்கலாம். கலையை ரசிப்பவராக இருக்கலாம். ஆனால் கலைத்திறன் கொண்ட பொருட்களை சரியாக பராமரித்தலும் அவசியம். உதாரணமாக, ஜன்னல்கள் என்று எடுத்துக் கொண்டால், அதிலேயே பலவிதமான சித்திரங்கள் செதுக்கப்பட்டவை, வரையப்பட்டவை என காணப்படுகின்றன. மிக அழகான ஓவியம் கொண்ட ஜன்னல் கம்பிகளை உங்களுக்கு துடைத்து பராமரிப்பது கடினமாக இருக்கலாம்.
சிம்பிள் டிசைன்கொண்டதாகயிருந்தாலும், பராமரிப்பு சுலபம் என நினைத்தால் அத்தகையவற்றை தேர்ந்தெடுக்கலாம். மரச்சோபா செட்டுகளில் கூட நிறைய கலையம்சம் கொண்டவை கிடைக்கின்றன. மிகத் துல்லியமான இடுக்குகளில் சுலபமாக அழுக்குகள் சேர்ந்து அடர்த்தியாக உள்ளே அழுக்குகளாக அடைந்து விடுகின்றன. துல்லியமான இடங்களை மெல்லிய பஞ்சினால் துடைக்க அழுக்குகள் அகலும். எந்த ஒரு பொருளும் அது சின்னதோ பெரியதோ விலை குறைவானதோ, அதிகமானதோ அதனைப் பார்த்து பார்த்து வாங்குவதிலும் அதனை பராமரிப்பதிலும் அமைந்திருக்கிறது நமது வீட்டின் அழகு.

நன்றி குங்குமம் தோழி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: