Advertisements

இது இந்திய மருந்துகளின் கதை

ருத்துவத்தில் மிக முக்கியப் பங்கு வகிப்பவை மருந்துகள். இன்று பலவகை மருத்துவங்கள் (சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி) பின்பற்றப்பட்டாலும் ஆங்கில மருத்துவம்தான் அதிக மக்களை ஈர்த்துள்ளது. அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் ஆங்கில மருந்துகள்தாம் மையமான காரணம். விரைவான நிவாரணம், துரிதமாகச் செயல்படும் குணம் என மக்களுக்குப் பெரும் தீர்வாக இது இருக்கிறது.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிசெய்த காலத்தில் இங்கு நடைபெற்ற உள்நாட்டுப் போர்களில் காயமுற்ற வீரர்களுக்காக இங்கிலாந்திலிருந்து மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாகச் சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே இந்தியாவில் ஆங்கில மருந்துகள் கிடைக்கத் தொடங்கின. சுதந்திரம் அடைந்த பிறகும், இந்தியாவில் பல பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் வர்த்தகம் செய்து வந்தாலும், தயாரிப்பு ஆலைகள் அவர்களின் தாய்நாடுகளிலேயே இருந்தன. இந்தச் சூழலில் புதிய மருந்துக்கொள்கை இந்தியாவில் உருவாக்கப்பட்டது. அதன் விளைவாக இன்று இந்தியா மருந்து உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவில் மருந்துகளின் உற்பத்தி, வர்த்தகம், தரக்கட்டுப்பாடு, விலை நிர்ணயம் என எல்லாவற்றுக்கும் தனியாக அமைப்புகள் உள்ளன. மருந்துகளைப் போலவே, உணவுசார் மருந்துகளுக்கும் அவற்றைக் கண்காணிக்கும் அமைப்புகள் இருக்கின்றன. மற்ற நாடுகளைப்போல அல்லாமல் இந்தியாவில் நிலவிய அன்றையச் சூழலுக்கேற்ப சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில், இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கும் சில அதிகாரங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், உலக அளவில் பல நாடுகளில் ஒரேவிதமான சட்டங்கள் இருப்பது சாதகமாகவும் இருப்பதோடு, சில பாதகங்களையும் உருவாக்கியுள்ளன. அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட எப்.டிஏ (F.D.A – உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம்) அமெரிக்கா மட்டுமில்லாமல் உலகத்துக்கே தர நிர்ணயம் செய்யும் அங்கீகார அமைப்பாக மாறியுள்ளது. அதற்கு ஒரு காரணம் உண்டு.
இந்தியா உட்பட சில நாடுகளில் மட்டுமே மருந்துகள் வர்த்தகப் பெயர் (BRAND NAME) கொடுத்து விற்கப்படுகின்றன. உதாரணமாக, ‘பாரசிட்டமால்’ எனும் மருந்து, காய்ச்சலுக்குப் பரிந்துரைக்கப்படுவது. அது இந்தியாவில் பல வர்த்தகப் பெயர்களில் (CALPOL, P-500…) கிடைக்கும். அதுபோலத்தான் எல்லா மருந்துகளுக்கும். பல மேற்கத்திய நாடுகளில் மருந்தின் மூலக்கூறின் பெயரிலேயே (BASIC INGREDIENT NAME) பரிந்துரைக்கப்படும். இப்படி அடிப்படையிலேயே மற்ற நாடுகளுக்கும் நமக்கும் பெரிய வேறுபாடு உண்டு.
ஏன் அமெரிக்கா?
மருந்து என்பது பொருளாதார ஆதிக்கம் மிக்க பொருள். பன்னாட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டவை. இங்கிலாந்து, சுவிஸ், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சில முக்கிய நிறுவனங்கள் இருந்தபோதிலும் அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கமே இன்று வரை தொடர்கிறது. இந்த நிலைமையில், அமெரிக்காவின் எப்.டி.ஏ-தான் உலக மருந்துகளின் தரத்தை நிர்ணயிக்கும் அதிகார மையமாக மாறியது. இதற்கு அரசியல் செல்வாக்கு மட்டுமே காரணமல்ல. ஆராய்ச்சியில், புதிய மருந்துகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் அவர்கள் கடைப்பிடித்த உறுதியான அணுகுமுறையே காரணம். ஒரு மருந்து ஆராய்ச்சி முடிந்தபிறகு, அது மனிதர்களுக்குப் பரிந்துரைக்கப்பட உகந்தது, பாதுகாப்பானது என அந்த அமைப்பே முடிவுசெய்யும். அமெரிக்க அமைப்பின் அங்கீகாரம் வாங்குவது அவ்வளவு எளிதல்ல. அதற்கான காலகட்டம் என்பது மருந்துக்கும், அதை உருவாக்கிய நிறுவனத்துக்கும் ஒரு  பிரசவ காலம் போலத்தான். தரக்கட்டுப்பாட்டில் அவர்கள் அவ்வளவு கவனம் எடுத்துக் கொள்கிறார்கள். அதேபோல ஒரு மருந்து தரமற்றது என இறுதி ஆய்வில் தெரியவந்தால், அது எக்காரணம் முன்னிட்டும் தயாரிப்புக்கு வர இயலாது. அங்கே ஒரு மருந்தை வியாபாரம் செய்வது எளிது. அதற்கான அங்கீகாரம் பெறுவதுதான் பெரும் காரியம். 

ஒரு மருந்தை எதற்காகப் பரிந்துரைக்க வேண்டும் என்பதற்கான ஆராய்ச்சியின் அனைத்து ஆதாரங்களையும், அறிவியல் ஆதரவு ஆராய்ச்சித் தரவுகளையும் சமர்ப்பிக்க வேண்டும். இது விதி. அதனால் அமெரிக்காவில் புதிய மருந்துகளுக்கான ஆராய்ச்சிக்குப் பெரும் தொகை தேவைப்படும். அதே அளவு தொகையை எஃப்.டி.ஏ அனுமதிக்காகவும் செலவிட வேண்டும். ஒரு மருந்து, எஃப்.டி.ஏ-வின் அனுமதி பெற்று வருகிறது என்றால், அதை எல்லா நாட்டு மருத்துவர்களும் சந்தேகமின்றி ஏற்றுக்கொள்வார்கள்.
அமெரிக்காவில் இன்னொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், அங்கே கூட்டு மருந்துகளே (COMBINATION DRUGS) கிடையாது. எல்லாமே ஒரு மருந்து (SINGLE DRUG)தான். இப்படி இந்தியாவைவிடப் பல விதங்களில் அங்கு வேறுபாடுகள் உள்ளன. எனினும், சமீபகாலமாக அமெரிக்காவின் மருந்து கார்ப்பரேட்களின் அழுத்தத்தால் எஃப்.டி.ஏ திணறுகிறது என்கிற சர்ச்சையான தகவலும் உண்டு. சிலபல விஷயங்களில் வளைந்து கொடுக்கிறது என்பதுபோன்ற புகார்களும் எழுந்துள்ளன. குறிப்பாக, இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனங்களின் மீது அபாண்டமாகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இந்தியாவின் அமெரிக்க ஏற்றுமதியை மறைமுகமாகக் முடக்குகிறது எனும் விவாதமும் எழுந்துள்ளது. அமெரிக்காவின் மருந்துச் சந்தை மிகப் பெரிது. அதில் இந்திய நிறுவனங்கள் குறைந்த விலையில் மருந்துகள் ஏற்றுமதி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாத அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள் எஃப்.டி.ஏவைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்ட வரலாறும் உண்டு. அதுபோலவே, ஒரு நோய்க்குப் புது மருந்து கண்டுபிடிக்கப்பட்டால், அதற்குமுன் அந்த நோய்க்குப் பரிந்துரைக்கப்பட்ட மருந்தை உடனடியாகத் தடைசெய்த சான்றுகளும் உண்டு.
இது இந்தியா!
உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் தான் மருந்துகளின் விலை குறைவானது என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்குக் காரணம் இந்தியாவில் 1970-ம் ஆண்டு இயற்றப்பட்ட காப்புரிமைச் சட்டம். அதன் விளைவாகவே இந்தியாவில் ஏராளமான நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. விலையும் குறைவாக இருக்கிறது.
சந்தையில் போட்டி அதிகமாகும்போது பொருளின் விலை குறையும் என்பது பொருளாதார விதி. இந்தியாவின் மொத்த மருந்து வணிகம் மாதம் ஒன்றுக்கு சுமார் 540 கோடி ரூபாய். இது தவிர, அரசுமூலம் வழங்கப்படும் மருந்துகளின் தொகையைக் கூட்டினால் அது ரூபாய் 600 கோடியைத் தாண்டும். நூறு கோடி மக்கள்தொகைக்கு இது ஒரு பெரிய தொகை இல்லையென்றாலும், மற்ற நாடுகளை ஒப்பிடும்போது பல சிறுநாடுகளின் மொத்த வரவு செலவைக் காட்டிலும் அதிகம். இந்தியாவில் மற்ற நாடுகளைப்போலவே மருந்துத் துறை கட்டுப்பாட்டு ஆணையம் செயலில் இருக்கிறது. அதுபோலவே, மருந்து விலைகளை ஒழுங்குபடுத்திடவும், தரக்கட்டுப்பாடு மற்றும் விற்பனை உரிமை பெறவும் தனித்தனியாக ஆணையங்கள் செயல்படுகின்றன. அப்படியிருந்தும் பலர் கேட்கும் கேள்விகள், ஏன் மருந்தின் விலை வித்தியாசப்படுகிறது, சில நிறுவனங்களின் மருந்து விலை குறைவாகவும், சில நிறுவனங்களின் விலை அதிகமாகவும் உள்ளதே? என்பதுதான்.
அதற்கும் காரணம் இருக்கிறது. இந்தியாவில் செய்முறைக்கான காப்புரிமைச் சட்டம் இப்போதுவரை அமலில் இருப்பதும், நிறுவனங்கள் தங்களின் திறனுக்கேற்ப உற்பத்தி செய்வதும், அதற்கேற்ப போட்டியான விலைகளைத் தீர்மானிப்பதும் இதற்குக் காரணங்கள். இந்தியாவில் ஒவ்வொரு மருந்துக்கும் அதிகபட்ச விலையை அரசின் மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் தீர்மானிக்கிறது. தயாரிப்புக்கான செலவுகளைப் பொறுத்தும், விளம்பரம் உள்ளிட்ட பிற செலவினங்களையும் உள்ளடக்கியே அதிகபட்ச விற்பனை விலை (MAXIMUM RETAIL PRICE) தீர்மானிக்கப்படுகிறது. இந்தியாவில் பொதுவாக விலையில் பெரிய வித்தியாசம் இருக்காது. அப்படியே இருந்தாலும், மூலப்பொருள் தருவிக்கப்படும் நாட்டைப் பொறுத்தும், தயாரிப்பில் செய்யப்படும் நவீன யுக்திகள், புதிய வடிவமைப்பு முறைகள், உறைகள் (PACKING INNOVATIONS) போன்றவையே சில விலை வித்தியாசங்களைத் தீர்மானிக்கின்றன.
இப்போது இந்தியாவில் அரசே சில மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக சில குறிப்பிட்ட வளர்ச்சி மண்டலங்களை (PRODUCTION ZONES) உருவாக்கி, அங்கு தொழிற்சாலைகள் தொடங்கவும், வர்த்தகத்தைப் பெருக்கவும் வரிச் சலுகைகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பல முன்னணி நிறுவனங்கள் அங்கே தொழிற்சாலைகள் அமைத்து, குறைந்த விலைக்கு உற்பத்தி செய்கின்றன. இந்தியாவில் ஓரளவுக்கு நடு மற்றும் குறு முதலீட்டாளர்கள் கூட இன்று மருந்து உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுகிறார்கள் என்பது நல்ல அம்சம். அதனால்தான் மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது விலை பல மடங்கு குறைவாகவே உள்ளது.
இந்தியாவில் பெரும்பாலும் கூட்டு மருந்துகள் (COMBINATION DRUGS) உற்பத்திக்கும் வர்த்தகத்துக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. இது ஒரு பிரத்யேக நிலைமை. உலகச் சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டு ஆணைகளை நிறைவேற்றும் ஆலைகளுக்கே உரிமம் வழங்கப்படுகிறது. நல்ல உற்பத்தி முறைகள் (GOOD MANUFACTURING PRACTICES) இருக்கின்றனவா எனவும் பார்க்கப்படுகிறது. இதனால்தான், இந்தியா இன்று உலகின் முன்னணி மருந்து ஏற்றுமதி செய்யும் நாடாக வளர்ந்து வந்துள்ளது.

இந்திய மருந்துகளே உலகத்துக்கு உதவும்!

மற்ற நாடுகளில் வர்த்தகப் பெயரில் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதில்லை என்றாலும், சில பிரத்யேக மருந்துகளை ஒரு நிறுவனம் மட்டுமே விற்பனை செய்யும் அனுமதி வழங்கப்படுகிறது (EXCLUSIVE MARKETING RIGHTS). அப்படி அனுமதி வழங்கப்படும்போது மருந்துகளின் விலையை நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. வெளிநாடுகளில் காப்பீட்டு முறை இருப்பதால், விலை அங்கே பெரிதாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. இங்கே அந்த முறை இல்லாததாலும், இந்திய மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையம் அதிகபட்ச விலைகளைத் தீர்மானிப்பதாலும் அதிக விலை வைக்க முடியாது. ஓர் எடுத்துக்காட்டு, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள்கூட இங்கிருந்தே மருந்துகளை வாங்கிச் செல்கின்றனர்.

அரசு மருந்துத் துறையில் இன்னும் சில முயற்சிகளை எடுத்து ஊக்கப்படுத்தினால், இந்தியாவின் ஏற்றுமதி அதிகமாகும். எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் உள்ள ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியாவே குறைந்த விலையில் மருந்து ஏற்றுமதி செய்கிறது. இதுவே இந்தியாவின் மருந்து ஏற்றுமதி சாதனையின் சாட்சி!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: