ஆயுளை நீட்டிக்கும் முளைக்கட்டிய பயிறுகள்

நன்றாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், சிலருக்கு, அவ்வப்போது ஆரோக்கியம் பாதிக்கப்படும். அவர்கள், உடலுக்கு தேவையான சத்துக்களை எடுத்துக் கொள்ளாதது, இதற்கு முக்கிய காரணமாக இருக்கும். ஆரோக்கியம் பெற, முளைக்கட்டிய பயிர்கள் உதவும்.
உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான அதிகப்படியான உயிர்

சக்தியை, மிக எளிதாக, முளைக் கட்டிய பயிர்கள் மூலம் பெற முடியும். முளைக்கட்டிய தானியங்கள் என்பவை ஊட்டச்சத்துக்களும், புரதச்சத்துகளும் நிறைந்த இயற்கை உணவுகளாகும். முளைக்கட்டிய பயிர்களால், செரிமானத்தில் பிரச்னை ஏற்படுத்தும் பைரேட்ஸ் போன்ற எதிர் ஊட்டச்சத்துக்கள் குறைக்கப்படுகின்றன. இதனால், சிக்கலான ஸ்டார்ச்சுகள் உடைக்கப்பட்டு, செரிமானத்துக்கு உதவும் எண்ணற்ற என்ஸைம்கள் சுரக்கப்படுகின்றன.
முக்கியமாக, இதுபோன்ற முளை கட்டிய பயிறுகளிலிருந்து, வைட்டமின் சி என்ற உயிர்சத்து, மிக அதிகளவில் பெற முடியும். ஜீரணத்துக்கும் ஏற்றது. ஒருவரின் வாழ்நாளை நீட்டிக்கக்கூடிய தன்மை கொண்ட என்சைம்ஸ், முளைவிட்ட தானியத்தில் மிக அதிகமாக உள்ளது. உடல் தளர்ந்துபோன நிலையில், என்சைம்ஸ் நிறைந்த முளைவிட்ட பயிரை சாப்பிடும்போது புத்துணர்வு ஏற்படுகிறது.
முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால், சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். நோய்களை தீர்ப்பது மட்டுமல்ல, எவ்வித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும், முளைவிட்ட தானியங்களுக்கு உண்டு.
எவ்வகை தானியமாக இருந்தாலும், அதை நன்கு கழுவி, இரவு முழுவதும் சுத்தமான நீரில் ஊற வைக்க வேண்டும்.அடுத்த நாள், மெல்லிய துணியில், ஊறிய தானியங்களை கட்டி சூரிய ஒளி படும்படியான நல்ல காற்றோட்டமான இடத்தில் தொங்கவிட்டால், குறைந்தது எட்டு மணிநேரத்தில், பயிர்கள் முளைவிட துவங்கும்.
சில தானியங்கள் முளைவிட அதிக நேரம் எடுக்கும்; அப்போது தேவையான நீர் தெளித்து விட வேண்டும்; தவறினால், தானியம் காய்ந்துவிடும். இவ்வாறு முளைவிட்ட தானியங்கள் மற்றும் பயிறு வகைகளை, அப்படியே சாப்பிட்டால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.
பாதாம் கொட்டைகள் போன்றவற்றை முளைக்கட்டி வைக்கும் போது, அதில் மறைந்துள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் வெளிப்படுகின்றன. பாதாம் கொட்டைகளில் முளைக்கட்டும் போது, உடலின் கொழுப்பு அளவை குறைக்கக் கூடிய லைபேஸ் என்ற என்சைமை உருவாக்குகிறது. ஆக்ஸிஜன் எதிர்பொருட்கள் மிகுந்திருக்கும் முளைக்கட்டப்பட்ட தானியங்களை தொடர்ந்து சாப்பிடுவதால், முதுமை தள்ளிப்போகும். முழுமையான ஊட்டச்சத்துக்கள் எளிதாக கிடைக்க, முளைக்கட்டிய பயிர் வகைகள் துணை புரிகின்றன.
முளை கட்டிய வெந்தயம் சாப்பிடுவதால், சர்க்கரை அளவு கட்டுப்படும். கர்ப்பப்பை நோய்கள், வெள்ளைப்படுதல் மற்றும் அல்சரை குணப்படுத்தலாம். ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம். கொள்ளு முளைப்பயிரை தொடர்ந்து சாப்பிட்டால், அதிக உடல் சூடு, தொப்பை, கெட்ட கொலஸ்ட்ரால், நீரிழிவு நோய், உடல் பருமன் போன்ற பிரச்னைகளுக்கு மிகவும் நல்லது.

%d bloggers like this: