Advertisements

குழந்தையின்மைப் பிரச்னைக்கான இயற்கைவழித் தீர்வு

குழந்தையின்மை பிரச்னைக்குச் செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் மட்டுமே தீர்வல்ல; மாற்று மருத்துவத்தில் இயற்கை வழிகளைப் பின்பற்றலாம்’’ என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த இயற்கை மருத்துவர் ஒய்.தீபா, அந்த  சிகிச்சை விவரங்களைப் பகிர்ந்தார்.

* இயற்கை மருத்துவத்தைப் பொறுத்தவரை, இன்று குழந்தையின்மைப் பிரச்னை அதிகரித்துவருவதற்கான முக்கியக் காரணமாக, ஸ்ட்ரெஸ்ஸையே (மன அழுத்தம்) கூறுகிறோம். இதனால் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுகிறது. இவற்றைச் சரிசெய்ய வாழையிலைக் குளியல், எண்ணெய்க் குளியல், சன் தெரபி ஆகிய சிகிச்சைகள் தரப்படும். இவற்றின் மூலம் கிடைக்கும் வைட்டமின்-டி, உடலின் ஹார்மோன்களையும் வளர்சிதை மாற்றத்தையும் சீர்படுத்தும். இந்த இரண்டும் சீரானால், குழந்தையின்மை மட்டுமல்ல, உடலில் இருக்கிற ஹார்மோன் சார்ந்த மற்ற பிரச்னைகளும் சீராகிவிடும். தவிர, சூரிய ஒளி நம்முடைய உடலில் செரட்டோனின் என்ற ஹார்மோனைச் சுரக்கச்செய்யும். இது மகிழ்ச்சி அளிப்பதோடு, நல்ல உறக்கத்தையும் கொடுக்கும்.

* மன அழுத்தத்துக்கு அடுத்தபடியாக, குழந்தையின்மைப் பிரச்னையில் முக்கியப் பங்குவகிப்பது பருமன்தான். எனவே, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கவும் வயிறு சார்ந்த உறுப்புகளை வலிமைப்படுத்தவும் சக்தி பந்தாசனம், சிசிலி ஆசனம், பந்த கோனாசனம், தனுராசனம், புஜங்காசனம், வக்ராசனம் ஆகியவற்றைக் கற்றுத் தந்து தினமும் செய்ய சொல்வோம்.
* அடுத்ததாக, நீர் சிகிச்சை. இதில் சம்பந்தப்பட்ட ஆண்கள், பெண்களின் உடல்நிலையைப் பொறுத்து வெந்நீர் இடுப்புக் குளியல் அல்லது குளிர்நீர் இடுப்புக் குளியல் சிகிச்சை தருவோம். இந்தக் குளியல்கள் இனப்பெருக்க உறுப்புகளை வலிமையாக்கும்.
* உணவுமுறையைப் பொறுத்தவரை, மஞ்சள் பூசணி விதை, மாதுளம்பழம், செவ்வாழைப்பழம், பாதாம், காய்ந்த திராட்சை, அத்திப்பழம், கறிவேப்பிலை, சுண்டைக்காய், கருணைக்கிழங்கு ஆகியவற்றைச்் சாப்பிடச் சொல்வோம். மைதாவையும் சர்க்கரையை யும் முழுமையாகத் தவிர்க்கச் சொல்வோம். உடல்நிலைக்கு ஏற்ப, வாரம் ஒருநாள் வேகவைத்த உணவுகள் தவிர்த்துப் பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கச் சொல்வோம். நீரிழிவு இருப்பவர்களுக்கு இந்த சிகிச்சையில் தனிக் கவனம் கொடுக்கப்படும்.
* சினைப்பையில் நீர்க் கட்டிகள் இருப்பவர்களுக்கு சில பிரத்யேக ஆசனங்கள் கற்றுத்தருவோம். கூடவே நீராவிக்குளியல், மண் குளியல், அக்குபிரஷர் சிகிச்சைகளும் தருவோம். நார்க்கட்டிகள் இருப்பவர்களுக்கு இடுப்புக் குளியல் சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

* தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்குக் கழுத்தைச் சுற்றி ஈரத்துணி யால் பேக் போட்டு தைராய்டு ஹார்மோனை கட்டுப்படுத்துவோம்.
* சில பெண்களுக்குக் கருப்பையில் கருபதிந்து வளர்வதற்கான எண்டோமெட்ரியம் திசு  மெல்லியதாக இருக்கும். இவர்களுக்குச் செயற்கைக்  கருவுறுதல் செய்தால்கூட கரு கலைந்துவிடும். இவர்களுக்கு அடிவயிற்றில் சில `பேக்’குகளைப் போட்டும் இடுப்புக்குக் குளியல் தந்தும் செயற்கைக்  கருவுறுதலுக்குத் தயார்படுத்துவோம்.  
* பருமன் காரணமாகச் செயற்கைக் கருத்தரிப்பு செய்ய முடியாமல் தவிக்கிற பெண்களுக்கு, எப்சம் சால்ட் குளியல், மசாஜ், சூரியக் குளியல், முறை யான டயட் தந்து தயார் படுத்துவோம்.
* உயிரணு  குறைவாக இருப்பது, உயிரணு சீக்கிரம் இறந்துபோவது, உடல் சூடாக இருப்பது போன்ற ஆண்களின் பிரச்னைகளையும் இயற்கை மருத்துவத்தால் சரிசெய்ய முடியும். புகை / குடிப்பழக்கம் இருந்தால் கவுன்சலிங் கொடுத்து நிறுத்தச்செய்வோம். விறைப்புத்தன்மை குறைவாக இருப்பது, விந்து சீக்கிரம் வெளியேறிவிடுவது போன்ற பிரச்னைகளுக்கு  அடிவயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளை வலிமைப்படுத்துகிற உத்தான பாதாசனம், சேது பந்தாசனம், விபரீதகரணி, அஸ்வினி முத்திரை, லிங்க முத்திரை ஆகியவற்றைக் கற்றுத்தருவோம்.
* சிகிச்சை தேவையில்லாத அளவுக்கு உடல், மன ஆரோக்கியத்தில் அக்கறை யெடுப்பது அவசியம். அம்மா அப்பா ஆகும் மகிழ்வை அவர்களுக்குத் தரக்கூடிய வரம் அவையே’’ என்கிறார் தீபா.

Advertisements
%d bloggers like this: