கிழங்குகளை எப்படி சாப்பிடலாம்?

கிழங்கை பொரித்துச் சாப்பிடுவதைவிட வேகவைத்து சாப்பிடுவது நல்லது. வெறும் கிழங்கை மட்டும் தனியாகச் சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல. சில கிழங்குகளில் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும்; சில கிழங்குகளில் தாதுப்பொருள்கள் அதிகம் இருக்கும்.
சாம்பார், குழம்பு வகைகள், சாலட், சூப் செய்யும்போது, காய்கறிகளோடு சேர்த்துக் கிழங்குகளை வேகவைத்துச் சாப்பிடலாம். அனைத்துச்

சத்துகளையும் ஒருசேர எடுத்துக்கொள்ளும் இந்த முறை, பேலன்ஸ்டு டயட் (Balanced Diet) எனப்படுகிறது. நிறையச் சத்து உடலில் சேரும்போது ஒன்றுக்கொன்று பேலன்ஸ் ஆகி, ஒரு சத்து மட்டும் அதிகரித்து, பாதிப்பு ஏற்படுவதை இது தடுக்கும்.
ஒவ்வொரு கிழங்கிலும் ஒவ்வொரு சத்து இருக்கும். எல்லோரும் எல்லாக் கிழங்குகளையும் சாப்பிடலாம். கிழங்கு எப்படி உட்கொள்ள படுகிறது, சாப்பிடும் நேரம், சமைக்கப்பட்ட முறை, எத்தனை கிழங்குகளைச் சாப்பிடுகிறோம் போன்றவைதான் பாதிப்பின் தீவிரத்தை அதிகரிக்கும். யாராக இருந்தாலும், அடிக்கடி கிழங்கு சாப்பிடுவது தவறு. எல்லோருமே, 15 நாள்களுக்கு ஒருமுறை சாப்பிடலாம்.
அப்படிச் சாப்பிடும்போது, வேகவைத்து, தோலோடு சேர்த்துச் சாப்பிட வேண்டும். பிற காய்கறிகளோடு, புரதச்சத்துகள் சேர கிழங்கைச் சாப்பிடவேண்டியது அவசியம். சர்க்கரை நோயாளிகள், கிழங்கு வகைகளைத் தவிர்ப்பது நல்லது.
இதயநோயாளிகளில் பெரும்பாலானவர்கள் சர்க்கரைநோய் பாதிப்பு உள்ளவர்களாக இருப்பார்கள். எனவே, இவர்கள் கிழங்கு வகைகளைத் தவிர்த்துவிடலாம். மாதத்துக்கு இருமுறை என்ற கணக்கில் உட்கொள்ளலாம்; அதிகம் சாப்பிடுவது தவறு. பேலன்ஸ்டு டயட் முறைப்படி கிழங்கைச் சாப்பிட்டால், பாதிப்பு இருக்காது. எப்படி, எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம். கிழங்கு சாப்பிட விரும்புகிறவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று, அவர்கள் சொல்வதுபோல சமைத்து, அவர்கள் குறிப்பிடும் நேரத்தில் சாப்பிடலாம்.
சாப்பாட்டுக்கு முன்னர், 120 மி.கி., சாப்பாட்டுக்குப் பின்னர் 180 மி.கி., எனச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள், கிழங்கு சாப்பிடலாம். அப்படி இல்லாதவர்கள், அவர்களின் உடல் அமைப்பு, சர்க்கரை அளவு அனைத்தையும் பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனையின்படி சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு கிழங்குகள் ஒவ்வாமையை எளிதாக ஏற்படுத்திவிடும் என்பதால், தவிர்ப்பதே சிறந்தது.
கிழங்குகள், பல்வேறு தாதுச்சத்துகளையும், வைட்டமின்களையும் கொண்டவை. அவை செரிமானமாக அதிக நேரத்தையும், அதிக உழைப்பையும் எடுத்துக்கொள்ளும். எனவே, உடலுழைப்பு அதிகம் இருக்கும் நேரத்தில் மட்டுமே கிழங்கு சாப்பிட வேண்டும்.
உதாரணமாக, காலை அல்லது மதிய நேரத்தில் கிழங்கு சாப்பிடலாம். இரவு நேரத்தில் சாப்பிட்டு, அதற்கான உழைப்பை நாம் தரவில்லை என்றால், செரிமானக் கோளாறுகள், வாய்வுத் தொல்லைகள், சரும பாதிப்புகள் ஏற்படக்கூடும். மதியம் சாப்பிட்டவுடன் தூங்கும் பழக்கம் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும்.

%d bloggers like this: