Advertisements

ஸ்டாலின் ரகசியமும் வைகோ பிரகடனமும்!

அ.தி.மு.க தலைமைக்கழகத்தில் இருக்கிறேன். போட்டோகிராபரை அனுப்பி வைக்கவும்’’ என்று செய்தி அனுப்பினார் கழுகார். அடுத்த அரை மணி நேரத்தில் நம்முன் ஆஜரானார் கழுகார்.
‘‘அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் என்ன விசேஷம்?” என்றோம்.
“ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி, அவரது உருவச்சிலை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை பகுதியில்

தயாரிக்கப்பட்ட இந்தச் சிலை, இரண்டு மாதங்களுக்கு முன்பே சென்னை வந்துவிட்டது. தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை அளவுக்கே ஜெயலலிதாவின் சிலையும் வைக்கப்பட உள்ளது. சிலையில் கண் பகுதி சரியாக அமையவில்லையென்று, தயாரித்த இடத்துக்குச் சிலையை மீண்டும் எடுத்துச் சென்றனர். ஓரிரு தினங்களில் சரிசெய்யப்பட்டு, மீண்டும் சென்னை வர உள்ளது. சிலையை முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கவுள்ளார்.”
‘‘சசிகலா சிறைக்குச் செல்வதற்கு முன்பே ஜெயலலிதாவுக்குச் சிலை வைப்பதற்கான வேலை நடந்ததே?”
‘‘ஆமாம். சிலைகூட தயார் செய்யப்பட்டது. தலைமை அலுவலகத்தில் வைக்கும் சிலையைப் போலவே, மாவட்டம்தோறும் சிலை வைப்பதற்கும் முடிவானது. சசிகலா சிறைக்குச் சென்றதால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. சசிகலா தரப்பு உருவாக்கிய சிலையை நிராகரித்த எடப்பாடி தரப்பு, புதிதாக சிலைக்கு ஆர்டர் கொடுத்தது.”

‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்தித்துள்ளாரே?”
‘‘பஸ் கட்டண உயர்வு, போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னை ஆகியவற்றை ஆய்வுசெய்து, 27 பரிந்துரைகளைத் தி.மு.க தயார் செய்திருந்தது. அதை முதல்வரிடம் அளிக்க ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டது. உடனே நேரம் ஒதுக்கப்பட்டது. முதல்வர் அறைக்குள் ஸ்டாலின் நுழைந்ததும், முதல்வர் எழுந்து நின்று வரவேற்றார். அப்போது துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் இருந்தனர். தான் கொண்டுவந்த ஃபைலை முதல்வரிடம் கொடுத்து, ‘இந்தப் பரிந்துரைகளை நீங்கள் அமல் செய்தாலே, பஸ் கட்டணத்தை உயர்த்தத் தேவை இருக்காது’ என்று ஸ்டாலின் சொன்னார். அந்த ஃபைலைத் திறந்துகூட பார்க்காமல், ‘பரிசீலனை செய்கிறேன்’ என்று எடப்பாடி சொன்னார். அருகில் இருந்த விஜயபாஸ்கரிடம், ‘நீங்களாவது படித்து இந்த விவகாரத்தில் நல்ல முடிவு எடுங்கள்’ என ஸ்டாலின் சொன்னார். அனைவருக்கும் தேனீர் பரிமாறப்பட்டது. 15 நிமிடங்களில் சந்திப்பு முடிந்தது. கண்புரை அறுவை சிகிச்சை செய்துள்ளதால் முதல்வர் அந்த அறிக்கையைப் படிக்கவில்லையாம்.” 
“மதுரையில் வைகோ பேசியிருப்பதைக் கவனித்தீரா?”
“ஆமாம். பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து தி.மு.க கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடந்தன. மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ பேசிய பேச்சு, தி.மு.க-வினரை உற்சாகமடைய வைத்தது. ‘14 ஆண்டுகள் கழித்து தி.மு.க கொடி பறக்கும் மேடையில் மதுரையில் பேசுகிறேன். திராவிட இயக்கத்தை வீழ்த்துவோம் என்று சிலர் கிளம்பியிருக்கிறார்கள். கழகங்கள் இல்லாத தமிழகம் என்கிறார்கள். இந்த நிலையில், தி.மு.க-வை ஆதரிப்பது மட்டுமே சரியானது என்ற முடிவோடு வந்திருக்கிறேன். தளபதி ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவோம். இதைத் தவிர எங்களுக்கு வேறு நோக்கம் இல்லை’ என்றார் வைகோ.”
“அப்படியா?”
“ஸ்டாலினும் வைகோவும் பழைய பகையை மறந்து ஒன்றுசேர்ந்துள்ளார்கள். யாராவது உள்ளே புகுந்து அவர்களுக்குள் குழப்பம் ஏற்படுத்தி விடக்கூடாது. அதனால்தான், வெளிப்படையாகவே இதனைச் சொல்லிவிட வைகோ முடிவெடுத்தாராம். ‘இரண்டு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் இதுபற்றிப் பேசிவிட்டார்கள். ஆனாலும், மீடியாவால் கிளப்பப்படும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வைகோ நினைத்திருக்கலாம்’ என்கிறார்கள் தி.மு.க-வில். ‘வைகோவை முழுமையாக ஸ்டாலின் ஏற்றுக்கொண்டதால்தான், மதுரை மாநகரில் அவர் பேசுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். மிகப் பிரமாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தி.மு.க-வினர் தயக்கமின்றி வேலை பார்த்தார்கள்’ என்றும் அவர்கள் சொல்கிறார்கள்!”

‘‘ஸ்டாலின் பேச்சில் இது வெளிப்பட்டதா?”
‘‘திருவள்ளூரில் பேசிய ஸ்டாலின் இந்த மேட்டரைத் தொடாமல், அ.தி.மு.க ஆட்சியைக் காய்ச்சியெடுத்தார். ‘இந்த ஆட்சியைக் கலைக்க ஒரு நிமிடம் போதும்’ என்று சொன்னதுதான் ஹைலைட்!”
‘‘எந்த அர்த்தத்தில் அப்படிச் சொன்னார்?”
‘‘அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவர் ஸ்டாலினிடம் பேசியது குறித்து சில மாதங்களுக்கு முன்பு சொன்னேன். அவர்களைத் தி.மு.க தரப்பு கொஞ்சம் அழுத்தியிருந்தால், அப்போது ஆட்சி அமைக்கப் போதுமான அளவு எம்.எல்.ஏ-க்கள் தி.மு.க பக்கம் தாவியிருப்பார்கள். அந்தப் பேச்சுவார்த்தையில் சில பசையான விஷயங்கள் பேசப்பட்டன. அதனால், தி.மு.க தரப்பு அதனை அப்படியே ஆறப்போட்டது. மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த அந்த விஷயத்தைத் திருவள்ளூர் கூட்டத்தில் ஸ்டாலின் மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார். ‘நீங்கள் ஏன் இந்த ஆட்சியைக் கவிழ்க்கவில்லை என்று கேட்கிறார்களே, கவிழ்க்கலாம். ஆனால், அப்படிப்பட்டவர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தால், மக்களுக்கான திட்டங்களைத் தீட்ட முடியுமா?’ என்று பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்தார் ஸ்டாலின்!”
“இவையெல்லாம் எடப்பாடிக்குத் தெரியாதா?”
‘‘தெரியும். அதனால்தான், எம்.எல்.ஏ-க்கள் ஒவ்வொருவரையும் அவர் தனித்தனியாக வளைத்து வைத்துள்ளார். தினகரன் பக்கம் போன 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் தொடர்பான தீர்ப்புத் தனக்கு எதிராக வந்தாலும், அதைச் சமாளிக்கும் முடிவோடு இருக்கிறார் முதல்வர். அந்த 18 பேரில் 13 பேரை வளைக்கும் காரியங்களில் அமைச்சர்கள் இறங்கியுள்ளார்கள். ‘தங்க தமிழ்ச்செல்வனுக்கும் அமைச்சர் பதவி தர நினைத்திருந்தோம். அவர்தான் அந்தப் பக்கமாகத் தங்கிவிட்டார்’ என்று அமைச்சர் வேலுமணி சொல்லியிருப்பதும், தூண்டில் வார்த்தைகள்தான். இதைத் தெரிந்துகொண்ட தினகரனும், தன் தரப்பில் உள்ள எம்.எல்.ஏ-க்களைத் தக்கவைக்கும் காரியங்களைப் பார்த்து வருகிறார். ‘நான் முதலமைச்சர் ஆக மாட்டேன். உங்களில் ஒருவரைத்தான் முதலமைச்சர் ஆக்குவேன்’ என்று அந்த எம்.எல்.ஏ-க்களிடம் சொல்லி வருகிறாராம். இந்த ஆட்டம் எதுவரை நீடிக்குமோ தெரியவில்லை’’ என்ற கழுகார் பறந்தார்.

Advertisements
%d bloggers like this: