Advertisements

தனிக்கட்சி ஐடியாவில் ஓ.பி.எஸ்?

சிங்கம் ஒன்று புறப்பட்டதே…’’ எனப் பாடியபடி வந்தார் கழுகார்.
‘‘யாரைச் சிங்கம் என்கிறீர்?’’ என்றோம்.
‘‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சொல்கிறேன். பூ ஒன்று புயலாகி வருவதாகத் தகவல்கள் சொல்கின்றன’’ என்றபடி ஆரம்பித்தார் கழுகார்.

‘‘2017 பிப்ரவரியில் அமைதியாக தியானப் புரட்சி செய்து, சசிகலாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார் ஓ.பி.எஸ். இப்போது தேனியில் செயல் வீரர்கள் கூட்டத்தில் சத்தமாகப் பேசியதன் மூலம், எடப்பாடிக்கு எதிராகத் திரியைக் கொளுத்தியுள்ளார் ஓ.பி.எஸ்.’’
‘‘அது ஏதோ தினகரனுக்கு எதிராகப் பேசியது போலத்தானே இருக்கிறது?’’
‘‘மேலோட்டமாகப் பார்த்தால் அப்படித்தான் தெரியும். ஆனால், இதை முதல்வர் – துணை முதல்வர் மோதலாகத்தான் சொல்கிறார்கள். எடப்பாடிக்கும் பன்னீருக்கும் செல்வாக்கையும், செல்வத்தையும் பகிர்ந்துகொள்வதில்தான் பிரச்னை. அடுத்தடுத்து சத்தமில்லாமல் எடப்பாடி செய்யும் உள்குத்து வேலைகளால் பன்னீர் உச்சகட்ட எரிச்சல் அடைந்துள்ளார்.
ஓ.பி.எஸ்ஸை வெறுப்பேற்ற கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்களைப் பயன்படுத்துகிறார் எடப்பாடி. அவர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைக் கச்சிதமாகச் செய்து, அவ்வப்போது பன்னீர்செல்வத்துக்குக் கண்ணீர் வரவழைக்கிறார்கள்.”
‘‘ஓஹோ.’’
‘‘கடந்த வாரம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‘தினகரன் அணியில் உள்ள தங்க தமிழ்ச்செல்வன் எங்கள் பக்கம் வந்தால், அவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக உறுதி மொழி கொடுத்திருந்தோம்’ என்று குறிப்பிட்டார். அதுவரை உள்ளுக்குள் கசந்து கொண்டிருந்த பன்னீருக்கும் எரிச்சல் உச்சத்தில் ஏறியது. தேனி அரசியலில் பன்னீருக்கும், தங்க தமிழ்ச்செல்வனுக்கும் ஜென்மப் பகை. அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்திருப்போம் என்று பேசியதில் பன்னீர் கோபம் எல்லை கடந்தது. சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் உள்ளாட்சித் துறை சம்பந்தமான ஒரு விஷயம் பேசப்பட்டுள்ளது. உள்ளாட்சித் துறையின் சார்பில்தான் அதிகமான வேலைகள் நடக்கின்றன. அது தொடர்பான ஆதாயங்கள் எதுவும் ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பக்கம் வருவதில்லை. ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுக்குப் பிறகு சுமார் 2,000 நிர்வாகிகளை எடப்பாடியும் பன்னீரும் இணைந்து நீக்கியுள்ளனர். ‘இந்த இடங்களுக்குப் புதிய ஆட்களைப் போட மறுக்கீறீர்கள். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என்ற சூழலில் எல்லாரையும் நீக்கிக் கொண்டே இருந்தால், கட்சியை எப்படிக் காப்பாற்றுவது… தேர்தலை எப்படிச் சந்திப்பது’ என்று எடப்பாடியிடம் கேட்டுள்ளார் பன்னீர். இந்தப் பதவிகளை இருவரின் ஆதரவாளர்களுக்குள் பகிர்ந்துகொள்வதில் சிக்கலாம். அதில் வாக்குவாதமாகி, அந்தக் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறும் மனநிலைக்கு வந்தார் ஓ.பி.எஸ். அதற்கு மறுநாள்தான் தேனியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் ஓ.பி.எஸ் அதிரடியாகப் பேசினார் என்கிறார்கள்.’’

‘‘தேனியில் மோடி பெயரை இழுத்து ஓ.பி.எஸ் பேச என்ன காரணம்?”
‘‘பிரதமர் மோடியைப் பற்றி வேண்டுமென்றேதான் பன்னீர் குறிப்பிட்டார். ‘மோடி சொன்னதால்தான் எடப்பாடியுடன் இணைந்தேன்’ என்றார் அவர். இதன்மூலம், ‘தனக்கும் எடப்பாடிக்கும் நடக்கும் பஞ்சாயத்தை டெல்லிதான் தீர்த்து வைக்க வேண்டும்’ என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ‘இல்லாவிட்டால், விலகிச்சென்று தனிக்கட்சி தொடங்கும் ஐடியாவில் இருக்கிறார்’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்..’’
‘‘சரி, எடப்பாடி என்ன திட்டத்தில் இருக்கிறார்?’’
‘‘எடப்பாடியோடு சசிகலாவின் தம்பி திவாகரன் நல்ல தொடர்பில் இருக்கிறார். ‘இந்த ஆட்சி கவிழ்ந்துவிட்டால், சசிகலா குடும்பம் கட்சியைக் கைப்பற்றிவிடும்’ என்ற கணிப்பு எடப்பாடிக்கு இருக்கிறது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், தினகரனைச் சமாளிக்க திவாகரன் தேவை என்பதால், எடப்பாடி இதைச் செய்கிறார். அதோடு, தினகரனிடமும் மூத்த அமைச்சர் ஒருவரைத் தூது அனுப்பியுள்ளார். ‘ஒருவேளை சசிகலா குடும்பம் கட்சியில் மீண்டும் தலைதூக்கினால், ஓ.பி.எஸ்ஸைப் பலிகொடுத்துவிட்டு, நாம் அவர்களிடம் சரண்டராகிவிடுவோம்’ என்பது எடப்பாடியின் எண்ணமாக இருக்கிறது என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.’’
‘‘தினகரனின் தனிக் கட்சி ஆரம்பிக்கும் திட்டம் என்ன ஆனது?’’
‘‘அதை நோக்கித்தான் தினகரன் நகர்ந்து கொண்டிருக்கிறார். அதுதான் தனக்கு நல்லது என்றும் அவர் திட்டவட்டமாக நம்புகிறார். அதுபற்றி சசிகலாவிடம் பேசுவதற்குத்தான் பிப்ரவரி 19-ம் தேதி திங்கள்கிழமை பெங்களூரு பயணம். அதில், எடப்பாடி-ஓ.பி.எஸ் மோதல், திவாகரன் – எடப்பாடி கூட்டு, பி.ஜே.பி-யுடன் விவேக்கும் கிருஷ்ணப்பிரியாவும் வைத்துள்ள தொடர்புகள் என எல்லாவற்றைப் பற்றியும் விவாதித்திருக்கிறார். அதோடு ஜெயா டி.வி-யையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைக்கிறார் தினகரன்.’’
‘‘ஜெயா டி.வி விவேக் கட்டுப்பாட்டில்தானே இருந்தது?’’
‘‘ஆம். ஆனால், அது தனக்குச் சாதகமாக இல்லை என்று தினகரன் கருதுகிறார். அந்தத் தொலைக்காட்சியைக் கையில் வைத்துக்கொண்டு விவேக் தனி லாபி செய்கிறார் என்பது தினகரனின் எண்ணம். அதனால், அதையும் தன் வசப்படுத்த நினைக்கிறார். ‘நிகழ்ச்சிகளின் பொறுப்பை விவேக் பார்த்துக்கொள்ளட்டும். செய்திகளை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கேட்டுள்ளார் தினகரன். தினகரனின் இந்த மூவ்மென்ட்டைப் புரிந்துகொண்ட விவேக், ‘ஒரு நிறுவனத்துக்கு இரண்டு நிர்வாகிகள் இருக்கமுடியாது; மொத்தமாக நான் சேனலைப் பார்த்துக்கொள்வதென்றால் சரி. இல்லையென்றால், எனக்கு சேனலே தேவையில்லை’ என்று சசிகலாவுக்குச் செய்தி அனுப்பியுள்ளாராம். இந்தப் பஞ்சாயத்தால் விவேக் இரண்டு வாரங்களாக ஜெயா டி.வி அலுவலகத்துக்கு வரவில்லையாம்’’ என்ற கழுகார், கிளம்பும் நேரத்தில் ஒரு தகவலைச் சிதறவிட்டுவிட்டுப் போனார்.
‘‘அடுத்த வாரம் அகமதாபாத்தில் மிக முக்கியமான சந்திப்பு ஒன்றை டெல்லி பி.ஜே.பி நடத்த உள்ளது. அது நடந்தால், தமிழக அரசியலில் எல்லாம் தலைகீழாக மாறும்!”

Advertisements
%d bloggers like this: