Advertisements

பல் கூச்சத்தை தவிர்க்கலாம்!

பல் வலியை விட, கூச்சம் மிகவும் தொல்லை தரும் பிரச்னை. பல் கூச்சம் என்பது ஒரு பொதுவான பிரச்னை மற்றும் உலகில் உள்ள மக்களில் 70 சதவீதம் பேர், இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சூடான, மிகவும் குளிர்ந்த உணவு அல்லது மிகவும் இனிப்பான மற்றும் புளிப்பான உணவுகளை சாப்பிட்டால், பல் கூச்சம் ஏற்படும். சில சமயம், நீர் அருந்தினால் கூட இந்த கூச்சம் உண்டாகும். இதற்கான முக்கிய காரணம், பற்களின் மேலிருக்கும் எனாமல் அடுக்கு குறைவது தான் என்கின்றனர், மருத்துவர்கள்.

மக்களில் சிலர், தூக்கத்தில், பற்களை கடிப்பதை வழக்கமாகவோ அல்லது அறியாமலோ கொண்டிருப்பர். இந்த நிலை ப்ரூக்சிசம் என்று அறியப்படுகிறது. இதுவும் பற்களில் உள்ள கடினமான எனாமல் பகுதியை இழக்க செய்து பல் கூச்சத்திற்கு வழிவகுக்கும். இந்த மென்மையான பகுதி, பற்களின் உணர் நரம்புகளை கொண்டது. இந்த பகுதி வெளிப்படும் போது கூச்சம் ஏற்படுகிறது. அதிகளவு இனிப்பு, சாக்லேட், ஐஸ்கிரீம், அமில உள்ளடக்கம் கொண்ட உணவுகள், கோலா போன்ற பானங்கள், பற்களில் உள்ள எனாமலை குறைத்து, பல் கூச்சத்துக்கு வழி வகுக்கிறது.
மவுத் வாஷில் உள்ள அமில உள்ளடக்கங்கள் பற்களில் உள்ள எனாமலை பலவீனமடைய செய்யும். வெண்மையான பற்களை பெற செய்யப்படும் சிகிச்சைகளும் இதற்கு வழிவகுக்கும். பல் கூச்சம் என்பது பற்களின் வேர்பகுதிகளில் இருக்கும் நரம்புகள் பலவீனமடைந்து, ஈறுகளில் பிரதிபலிக்கும். கிருமிகளின் தொற்று, பற்களின் சிதைவு, அல்லது எனாமல் போகும்படி, அதிக செறிவு மிகுந்த பேஸ்ட், நிறைய அமிலங்கள் உள்ள குளிர்பானங்கள் குடிப்பது ஆகியவற்றால், இதுபோன்று கூச்சம் வரும்.
தேங்காய் எண்ணெயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட், ஈறுகளில் ஏற்படும் பாதிப்பை சரி செய்யும். வெதுவெதுப்பான உப்பு நீரும், கிருமிகளை அழித்து, பல் கூச்சத்திலிருந்து மெல்ல, மெல்ல விடுபட செய்யும். தினமும் காலை, மாலை இதுபோன்று செய்தால், ஈறுகள் பலப்பட்டு, பல் கூச்சத்திலிருந்து விடுவிக்கும். தினமும் பல் துலக்கியதும், வெதுவெதுப்பான நீரில், கல் உப்பு சேர்த்து கரைத்து, ஈறுகளில் படுமாறு சில நிமிடங்கள் வைத்து, வாய் கொப்பளித்தால் பிரச்னையில் இருந்து விடுபடலாம். கல் உப்பை சேர்த்துக் கொள்வது நல்லது.
கிராம்பு எண்ணெயை, ஈறுகளில் மெதுவாக மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்; தினமும் இருதடவை செய்யலாம். கொய்யா இலைகளில் அதிக ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளன. இவை கிருமிகளை எதிர்த்து போராடும்; ஈறுகளை பலப்படுத்தும். கூச்சம் கட்டுப்படும். தினமும், இரண்டு கொய்யா இலைகளை, மென்று தின்று வரலாம்.
சிட்ரஸ் வகை உணவுகள் பல் கூச்சம் இருக்கும் போது குறைவாக எடுத்துக் கொள்ளவேண்டும். கார்பனேட்டட் குளிர்பானங்களையும் தவிர்ப்பது நல்லது. இதுமட்டுமல்லாது அதிக நேரம் பல் துலக்கினாலும், பல் எனாமல் போய் விடும். பல்கூச்சம் அதிகரிக்கும். புதினா கலந்த டூத் பேஸ்டை உபயோகித்தால், ஈறுகளுக்கு புத்துணர்ச்சி தரும்; பல் கூச்சமும் குறையும்.
வெண்மையான பற்களை பெற சிகிச்சைக்கு செல்லும் முன், ஒரு பல் மருத்துவரிடம் அது ஏற்படுத்தும் சேதம், விளைவுகள் குறித்து கேட்டறிந்து கொள்ளவும். மருத்துவர் தரும் ஆலோசனையின் படி செயல்பட்டால், பற்களை தற்காத்து கொள்ளலாம்.

Advertisements
%d bloggers like this: