Advertisements

முதல்வர் பதவியைக் கொடுங்கள்!” – எடப்பாடிக்கு பன்னீர் கெடு

து காமெடி அல்ல… நிஜம்’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார்.
‘‘சொல்லும்’’ என்றோம்.
‘‘அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டம். முடித்துவிட்டு விடுவிடுவென கீழே இறங்கி வருகிறார்

ஓ.பன்னீர்செல்வம். ஏதோ சிந்தனைகளோடு அவசரமாகக் காரில் ஏறப்போகிறார். பின்னால் ஓடிவந்த செக்யூரிட்டி அதிகாரி, ‘சார்… இது முதல்வரின் கார்’ என்று நினைவுபடுத்த, சட்டென சுதாரித்துக்கொண்டு, சற்று முன்னால் இருந்த தன்னுடைய காரில் ஏறினார். ‘இந்தக் காட்சி தற்செயலானது அல்ல. பன்னீரின் அடிமனதில் முதல்வர் பதவி நினைப்பு கிடந்து அல்லாடுகிறது. அதன் வெளிப்பாடுதான் இது’ என்கிறார் எடப்பாடி அணியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர்’’ என்ற கழுகாரை இடைமறித்தோம்.
‘‘தனிக்கட்சி ஐடியாவில் ஓ.பி.எஸ் இருப்பதாகக் கடந்த இதழில் சொல்லியிருந்தீர்கள். அதன் தொடர்ச்சியாக நிறைய காட்சிகள் அ.தி.மு.க-வில் அரங்கேறி வருகின்றனவே?’’ என்று கேட்டோம். 
‘‘அவர் என்ன மூடில் இருக்கிறார் என்பதே சஸ்பென்ஸாக இருக்கிறது. இப்போதெல்லாம் அதிகம் சென்னையில் இருப்பதில்லை. பணிவின் அடையாளமாகக் கருதப்பட்டவரின் பேச்சில் கனல் தெறிக்கிறது. பி.ஜே.பி-யினரையும் விமர்சிக்கிறார். ‘கொஞ்ச நாளைக்கு முன்பு வரை அவர் இப்படி இல்லை. இப்போது திடீரென ஏன் இப்படிப் பேசுகிறார்? இது அவருடைய தனிப்பட்ட கருத்தா அல்லது கட்சியின் கருத்தா?’ என்று புரியாமல் கட்சியின் சீனியர் தலைவர்களே குழம்பிப் போயிருக்கிறார்கள். கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மௌனம் காக்கிறார். இருவருக்கும் பனிப்போர் உச்சத்தில் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.’’

‘‘என்னதான் இருவருக்குள் பிரச்னை?’’
‘‘இருவருக்கும் கட்சியின் தலைமைப் பதவி, முதல்வர் இருக்கை… இரண்டையும் குறிவைத்து மனஸ்தாபம். முதலில் முதல்வர் இருக்கையைப் பற்றிச் சொல்கிறேன். ஆட்சியின் முக்கிய விவகாரங்கள் பற்றி பன்னீரை ஆலோசிப்பதில்லை எடப்பாடி. காவிரி பிரச்னையில் ஆரம்பித்து எதுவானாலும் முதல்வரே தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். எடப்பாடி முதல்வராகப் பதவியேற்று, பிப்ரவரி 15-ம் தேதியோடு ஓராண்டு முடிந்தது. இதைச் சுட்டிக் காட்டிய பன்னீர், ‘ஒரு வருடம் நீங்கள்… அடுத்த வருடம் நான்… இப்படித்தான் பிரதமர் மோடி சொன்னார். அந்தவகையில் நான் முதல்வர் பதவியில் அமர வேண்டிய நேரம் இது’ என்று சொல்லியிருக்கிறார். அணிகள் இணைப்பு நேரத்தில் பேசப்பட்ட இந்த ரகசியத்தை இப்போதுதான் பன்னீர் தரப்பு வெளியில் கசிய விடுகிறது.’’
‘‘ஆச்சர்யமாக இருக்கிறதே… இதற்கு எடப்பாடி என்ன சொன்னாராம்?’’
‘‘எடப்பாடி பளிச்சென, ‘உங்கள் பின்னால் 11 எம்.எல்.ஏ-க்கள் இருந்தார்கள். இப்போது அவர்கள் உங்கள் விசுவாசிகளா? என் பின்னால் மெஜாரிட்டியான எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அனைவரும் என்னைத்தான் முதல்வராகத் தொடரச் சொல்கிறார்கள். பதவியை உங்களுக்குக் கொடுப்பதற்கு நாம் என்ன ஒப்பந்தமா போட்டோம்’ என்று கேட்டாராம். இதைக் கேட்ட பன்னீர்செல்வம் ஷாக் ஆகிவிட்டாராம்.’’
‘‘அடடா!’’
‘‘கட்சியில் தனக்கு இருக்கும் ஒருங்கிணைப்பாளர் என்ற அதிகாரத்தை வைத்து எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று பார்த்தால், அங்கும் எடப்பாடியின் ஆதிக்கம்தான் அதிகமாக இருக்கிறது. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி, தமிழகம் முழுவதும் தினகரன் ஆதரவாளர்கள் சுமார் 600 பேரைக் கட்சியை விட்டு நீக்கும் விஷயத்தில் முட்டுக்கட்டை போடுகிறாராம். ஏற்கெனவே காலியான இடங்களுக்கும்  புதியவர்களை இதுவரையிலும் நியமிக்கவில்லை. இதுவே பன்னீருக்கு வைக்கப்பட்ட ‘செக்’ என்கிறார்கள். பன்னீர் மோதலில் இறங்கினால், அவருக்குக் கும்பிடு போட்டுவிட்டு, தினகரன் அணியுடன் கைகுலுக்கும் ஐடியாவில் எடப்பாடி இருக்கிறாராம். அப்படி ஒரு சூழல் வந்தால், இப்போது நீக்கப்பட்ட தினகரன் ஆதரவாளர்களுக்கு மீண்டும் பதவிகளைத் தரவேண்டி வரலாம். இடையில், புதியவர்களை நியமித்தால் அவர்களை நீக்கி எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டியிருக்கும். இதை மனதில் வைத்தே, புதியவர்கள் நியமனத்தை எடப்பாடி தள்ளிப்போடுவதாகப் பன்னீர் நினைக்கிறாராம்.’’
‘‘ஓஹோ… கதை இப்படிப் போகிறதா?’’

‘‘பன்னீரின் பின்னால் இருந்த எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களுக்கு வேண்டியதைச் செய்துகொடுத்து வளைத்துவிட்டார் எடப்பாடி. அதனால் அவர்கள் எடப்பாடியின் விசுவாசிகளாக மாறிவிட்டார்கள். பெயரளவில் பன்னீர் பின்னால் இருக்கிறார்கள். அதனால்தான் எடப்பாடி துணிச்சலாகப் பன்னீரை ஒதுக்க நினைக்கிறார். அவராகவே விலகிப்போகட்டும் என்பது எடப்பாடியின் எதிர்பார்ப்பு.’’
‘‘பன்னீர் விலகுவாரா?’’
‘‘எப்படி விலகுவார்? ‘முதலில் கட்சி நம் கட்டுப்பாட்டில் வர வேண்டும், அடுத்ததாக முதல்வர் பதவி. இல்லாவிட்டால் தனிக்கட்சி. தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்து இரட்டை இலையை முடக்கி, நாம் யாரென்று காட்டுவோம்’ என ஆதரவாளர்கள் பன்னீரை நெருக்குகிறார்கள். ‘இரண்டும் சரிப்பட்டு வரவில்லை என்றால், பி.ஜே.பி-யில் சேருங்கள்’ என டெல்லியிலிருந்து இன்னொரு பக்கம் பிரஷர் வருகிறது. சமீபத்தில் மதுரை போயிருந்தார் பன்னீர். அப்போது திடீரென மதுரை எம்.பி-யான கோபாலகிருஷ்ணனின் அலுவலகத்துக்குக் காரைத் திருப்பச் சொன்னார். அவருடன் காரில் இருந்த புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பாவைப் பாதி வழியில் இறக்கிவிட்டுவிட்டார். தனி அறையில் முக்கால் மணி நேரம் கோபாலகிருஷ்ணனுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் லெவலில் கோபாலகிருஷ்ணன், தனக்கென ஒரு லாபி வைத்திருக்கிறார். கோபாலகிருஷ்ணனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து, உடனே டெல்லிக்குக் கிளப்பிப்போகச் சொன்னாராம். கோபாலகிருஷ்ணனை எதிர்பார்த்து, டெல்லியில் மைத்ரேயன் காத்திருந்தாராம். இருவரும் கூட்டாக பி.ஜே.பி-யின் முக்கியத் தலைவர் ஒருவரைச் சந்தித்தார்களாம். ‘என்ன பேசினார்கள், என்ன கடிதம் அது?’ என்பது தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் தெரிந்தது. தமிழக அரசின் முறைப்படியான அழைப்பிதழ் இல்லாமலே பிரதமர் மோடி, சென்னையில் இருசக்கர வாகனம் தரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக அறிவிப்பு வெளியானது.’’
‘‘அப்படியானால், பன்னீருக்கு டெல்லியில் செல்வாக்கு இருக்கிறதா?’’
‘‘அப்படித்தான் தெரிகிறது. எடப்பாடியும் வெவ்வேறு வழிகளில் டெல்லியின் குட்புக்ஸில் இருக்கிறார். இருந்தாலும், தினகரனை பி.ஜே.பி அடியோடு வெறுக்கிறது. எடப்பாடி தரப்பினர் தினகரனுடன் ரகசிய பேரம் நடத்தி வருவதாக மத்திய உளவுத்துறை மூலம் டெல்லிக்குத் தகவல் போயிருக்கிறது.’’
‘‘இது நிஜமா?’’
‘‘பெங்களூரில் தினகரன் பேச்சைக் கவனித்தீரா? முதலில் ‘ஊழல் அமைச்சர்கள் அனைவரையும் நீக்கவேண்டும்’ என்றார். அந்த எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டே வந்தார். இப்போது மேலும் ஒரு படி இறங்கி, ‘மூன்று அமைச்சர்களை நீக்கினால் போதும். நாங்கள் எடப்பாடி அரசுடன் இணைந்துவிடுவோம்’ என்கிறார். தங்கமணி, வேலுமணி மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவர் மீதும் தினகரன் கோபத்தில் இருக்கிறார். எடப்பாடி தரப்பில், ‘இந்த மூவரையும் நீக்கமுடியாது. வேண்டுமானால், இப்போது அவர்கள் வகிக்கும் பவர்ஃபுல் பதவிகளிலிருந்து விலக்கி டம்மி துறைகளை ஒதுக்கித்தருகிறோம்’ என்று சொன்னதாகத் தகவல். தினகரன், இந்த  விஷயத்தில் தீவிர ஆலோசனையில் இருக்கிறாராம். ‘இப்படி ஒரு சூழ்நிலை வந்தால், அரசியலை விட்டுப் போய்விடுவேன்’ என்று தங்கமணி கூறி வருவதாகத் தகவல். வேலுமணியும், ஜெயக்குமாரும் கொஞ்சம் பீதியில் இருக்கிறார்கள்.’’
‘‘ஆனால், பிப்ரவரி 21-ம் தேதியன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும், காவிரிப் பிரச்னை தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்திலும் பன்னீரும் எடப்பாடியும் ஒன்றாகக் கலந்துகொண்டார்களே?’’
‘‘கத்திரிக்காய் முற்றினால், கடைக்கு வந்துவிடப்போகிறது! அதுவரை இந்த மாதிரியான ‘போஸ்’கள் தொடரத்தான் செய்யும். ‘பிரதமர் மோடி சென்னை வந்து ராஜ்பவனில் தங்கியிருக்கும்போது, இருவருக்கும் இடையே நடக்கும் பனிப்போரை நிறுத்துவதற்கான யோசனைகளைச் சொல்வார்’ என்று அ.தி.மு.க-வின் சீனியர் தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.’’
‘‘அதாவது, பஞ்சாயத்துச் செய்து வைக்கப்போகிறாரா?’’
‘‘அதை ஏன் அப்படிச் சொல்கிறீர்? ‘கட்சியிலும் ஆட்சியிலும் அதிகாரப்பகிர்வு பற்றிப் பேசக்கூடும்’ என்று சொல்லும். ஜெயலலிதா படத்திறப்புக்கோ, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கோ வரத் தேதி கொடுக்காத பிரதமர் மோடி, திடீரென வருகிறார் என்றால், அதில் அர்த்தம் இருக்கும் அல்லவா? இதற்காகப் புதுச்சேரி நிகழ்ச்சியையும் ஒருநாள் தள்ளி வைத்திருக்கிறார்கள். மோடி சொல்வதை எடப்பாடி எப்படி ஏற்றுக்கொள்வார் என்று தெரியவில்லை.பன்னீர் இதற்காகத்தான் காத்திருக்கிறார். மோடி டெல்லி திரும்பியபிறகு அ.தி.மு.க-வில் முக்கிய மாற்றங்கள் நடக்கலாம்.’’

‘‘காவிரி விவகாரத்துக்கான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் என்ன நடந்தது?’’
‘‘கருணாநிதி முதல்வராக இருந்தபோது இதே காவிரிப் பிரச்னைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு அதே பிரச்னைக்காக இப்போது கூட்டம் நடைபெற்றுள்ளது. அழைக்கப்பட்டவர்களில் பகுஜன் சமாஜ் கட்சியினரைத் தவிர அனைவரும் வந்திருந்தனர். கட்சிகள் சார்பில் இரண்டு பிரதிநிதிகளும், அமைப்புகள் சார்பில் ஒருவரும் பங்கேற்க அனுமதி உண்டு. இருக்கைகளில் சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காக, எந்தக் கட்சிக்கு எந்த இருக்கை என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு அதன்படி அமர வைத்தனர். பத்தரை மணிக்குக் கூட்டம் தொடங்கியது. பத்தே காலுக்கு ஓ.பி.எஸ் வர, அடுத்த சில நிமிடங்களில் முதல்வர் எடப்பாடி வந்துவிட்டார். அதன்பிறகுதான் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், துரைமுருகனோடு வந்து சேர்ந்தார்.’’
‘‘கூட்டத்தில் சலசலப்பு ஏதும் ஏற்பட்டதா?’’
‘‘அப்படி எதுவும் ஏற்படவில்லை. ஸ்டாலின் தனது பேச்சில், ‘அனைத்துக் கட்சியினரையும் அழைத்துச் சென்று பிரதமரைச் சந்திக்க வேண்டும்’ என்றார். காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பி.ஜே.பி-யைக் குறை கூறுவது போன்று பேசியதும் ஓ.பி.எஸ் குறுக்கிட்டு, ‘இங்கு அனைத்துக் கட்சியினரும் இருக்கிறார்கள். யாரும் யாரையும் குறைகூற வேண்டாம்’ என்று வேண்டுகோள் விடுத்தார். திருமாவளவன் பேச்சோடு பேச்சாக,‘மத்திய அரசு ஒத்துவரவில்லை என்றால் அனைத்து எம்.பி-க்களும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று சொன்னதும்,முதல்வர் உள்பட ஆளும்கட்சியினர் பதறிவிட்டனர்.’’
‘‘கூட்டம் நீண்ட நேரம் நடந்ததே?’’
‘‘கலந்து கொண்ட அனைவருக்கும் பேச வாய்ப்புத் தரப்படும் என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டதால், மதியத்துக்கு மேலும் கூட்டம் தொடர்ந்தது. அதனால், அனைவருக்கும் தமிழ்நாடு ஹோட்டலிலிருந்து மதிய உணவு கொண்டுவரப்பட்டது. சிலர் சொந்த வேலை காரணமாக மதியத்தோடு கிளம்பிவிட்டார்கள். யாரும் போனில் தகவல் சொல்லக்கூடாது என்பதால், கூட்ட அரங்கில் ஜாமர் கருவியைப் பொருத்தியிருந்தனர்.இதனால், உள்ளே இருந்தவர்கள் தவித்துப் போனார்கள்’’ என்ற கழுகார் பறந்தார்.

Advertisements
%d bloggers like this: