கட்சியைத் தொடங்கிவிட்டு எல்லோரும் பயணம் செல்வார்கள். கமல்ஹாசனோ மூன்று மாவட்டங்களில் பயணத்தை முடித்துவிட்டுக் கட்சியைத் தொடங்கினார். என்னதான் உலக அரசியல் பேசினாலும், தான் பிறந்த பரமக்குடி அமைந்திருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து தன்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்கி, ‘
பல்ஸ்’ பார்த்திருக்கிறார் கமல். கட்சிப் பெயர் மற்றும் கட்சியின் கொடி குறித்தும், நிகழ்ச்சி நடத்தப்பட்ட விதம் குறித்தும் சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுந்தாலும், எல்லோரும் உற்றுக் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. அது, ‘அ.தி.மு.க., தி.மு.க என்ற வித்தியாசம் இல்லாமல் அத்தனை கட்சிகளும் கமலை விமர்சனம் செய்வதில் ஒரே அணியில் இருக்கின்றன’ என்பது! ‘ஸ்டாலின் கருத்தோடு ஒத்துப்போகிறேன்’ என அமைச்சர் ஜெயக்குமார் சொல்வதெல்லாம், கமல் அரசியலுக்கு வருவதால்தானே நிகழ்கிறது!
கட்சித் தொடக்க நிகழ்ச்சிக்காக பிப்ரவரி 20-ம் தேதி மதியம் மதுரை வந்த கமல், காளவாசல் தங்கம் கிராண்ட் ஓட்டலில் தங்கினார். அன்று இரவு ராமேஸ்வரத்துக்குப் புறப்பட்டார். நிகழ்ச்சிகளை அவருடைய ஈவென்ட் டீமே கவனித்துக்கொண்டது. தன்னுடைய அரசியல் கட்சி வளர்ச்சிக்கு கமல் மக்களை நம்பினாரோ இல்லையோ, மீடியாக்களை நம்பினார். அதிலும் வட இந்திய ஊடகத்தினர் அதிகமானோர் ராமேஸ்வரம் வந்திருந்தனர்.
21-ம் தேதி காலை ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் வீட்டுக்குச் செல்வதற்கு கமல் தயாராகிக் கொண்டிருந்தபோது, ஹோட்டலுக்கு வெளியில் அவரின் ரசிகர்கள் தேவராட்டம், தப்பாட்டங்களளை ஆடி மகிழ்ந்தனர். கமல், குறிப்பிட்ட சிலருடன் கிளம்பிச் சென்று, காலை 7.40 மணிக்கு கலாமின் வீட்டுக்குள் நுழைந்தார். கலாமின் சகோதரர் முகம்மது முத்து மீரா மரைக்காயர், ‘‘உங்களுடைய பயணம் வெற்றியடையட்டும்’’ என்ற ‘துவா’ செய்து கமலை வாழ்த்தினார். கலாம் வீட்டிலேயே காலைச் சிற்றுண்டியை முடித்தார் கமல்.
கலாம் பயின்ற ராமேஸ்வரம் நடுநிலைப்பள்ளிக்குச் செல்ல இருந்த கமல்ஹாசனுக்குச் சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. கல்வி நிறுவனத்தை அரசியலுக்குப் பயன்படுத்துவதாகக் கண்டித்தனர். அதனால், ஏராளமான போலீஸார் பள்ளியின்முன் குவிக்கப்பட்டிருந்தனர். பள்ளி காம்பவுண்ட் சுவர் மீது ஏறி நின்றபடி, கமலைக் காணத் திரண்டனர் மாணவர்கள். பள்ளிக்குள் செல்லாமல், வாசலருகே காரை நிறுத்தி அதிலிருந்தவாறே மாணவர்களையும் அங்கு கூடியிருந்த ரசிகர்களையும் பார்த்துக் கை அசைத்துச் சென்றார் கமல்.
அடுத்து, ‘நம்மவர் மீனவர் சந்திப்பு’ நிகழ்வு. கமல் சுருக்கமாகப் பேசிவிட்டுக் கிளம்ப, மீனவர்கள் தங்கள் பிரச்னைகளைக் கமல் கேட்கவில்லையே என ஆதங்கப்பட்டனர். அதனால், பத்திரிகையாளர் சந்திப்பு நடக்க இருந்த அரங்குக்கு மீனவர்களை அழைத்துவரச் செய்தார் கமல். அங்கு கமலைச் சந்தித்த மீனவர்கள், ‘‘கஷ்டத்தில் தத்தளிக்கும் எங்களுக்கு நீங்கள் துடுப்பாக வந்துள்ளீர்கள். எங்களுக்கு நல்லது செய்தால் உங்கள் பின்னால் வரத் தயாராக இருக்கிறோம்’’ என்றனர்.
அடுத்து கலாமின் நினைவிடத்துக்குச் சென்றார் கமல். அங்கும் பெரும் கூட்டம் கூடியிருந்தது. கமலை வி.ஐ.பி-கள் செல்லும் பிரதான வாசல் வழியே அனுமதிக்காமல், பார்வையாளர்கள் செல்லக் கூடிய மேற்கு வாயில் வழியாக அழைத்துச் சென்றனர். கலாம் நினைவிடத்தில் மலர் தூவியபிறகு, கமல் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
சினிமா தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷின் சொந்த ஊரான மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல், அங்கு சில நிமிடங்கள் பேசிவிட்டு ராமநாதபுரம் சென்றார். அங்கு அரண்மனை முன் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். அங்கு மேடையேறிய கமல், கூட்டத்தைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டார். ‘‘45 வருஷம் கழிச்சு இங்க வந்துருக்கேன். ஊர் கொஞ்சம் மாறி இருக்கு. ஆனா மக்கள் நிலை மாறவில்லை. எவ்வளவு அன்பிருந்தால் இந்த வெயிலிலும் உங்க ஊரு பையனைப் பார்க்கக் காத்துக்கிட்டு இருப்பீங்க? இங்கு நிறைய வேலை இருக்கிறது. அதனை முடிப்பதற்காக மீண்டும் இங்கு வருவேன்’’ என்றார்.
ராமநாதபுரம் அரண்மனையில் மன்னர் குமரன் சேதுபதி, கமல்ஹாசனுக்கு மதிய விருந்தளித்தார். அங்கிருந்து தனது பிறந்த மண்ணான பரமக்குடிக்குச் சென்ற கமலை வரவேற்க, ஐந்து முனைச் சாலை அருகே தனி மேடை அமைத்து ஏராளமானோர் காத்திருந்தனர். ஆனால், கமலின் கார் நிற்காமல் வேகமாக அவர்களைக் கடந்து சென்றது. சிறிது நேரத்துக்குப் பின் கார் திரும்பி வந்தது. மேடைக்குச் செல்லாமல் காரில் நின்றபடியே சொந்த ஊரில் பேசிய கமல், ‘‘உங்கள் அன்புக் கட்டளைக்குப் பணிந்து கடமையாற்ற வந்திருக்கிறேன். மதுரை நிகழ்ச்சிக்கு வரும் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை வரவேற்க வேண்டிய மாண்பின் காரணமாக உடனடியாகச் செல்ல வேண்டியுள்ளது. அதற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’’ என ஓரிரு நிமிடம் மட்டுமே பேசிவிட்டுக் கிளம்பினார். அதைப்போலவே சிவகங்கை மாவட்டம், மானாதுரையிலும் திருப்புவனத்திலும் சில வார்த்தைகளைப் பேசிவிட்டு மதுரைக்குச் சென்றார். சர்க்யூட் ஹவுசில் தங்கியிருந்த கெஜ்ரிவாலை அழைத்துக்கொண்டு 7 மணிக்கு மேடைக்கு வந்தார்.
மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் மாலை ஐந்து மணிக்கே பொதுக்கூட்டம் தொடங்கிவிட்டது. இரண்டு மணி நேரம் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மிகப் பெரிய டிஜிட்டல் திரை கொண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையருகில் ஒருங்கிணைப்பு இல்லை. ஓர் அரசியல் கூட்டத்தை நடத்திய அனுபவம் இல்லை என்பதால், எல்லோரும் குழம்பியிருந்தார்கள். ‘நம்மவர்’ என்று பிரின்ட் செய்யப்பட்ட டி-ஷர்ட்டுகள் அணிந்த வாலன்டியர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார்கள். ஆரம்பத்திலிருந்தே காவல்துறையினர் பெரிய அளவில் பாதுகாப்பு கொடுக்கவில்லை. கெஜ்ரிவால் வருகிறார் என்பதால்தான் பொதுக்கூட்ட மைதானத்தில் கொஞ்சமேனும் பாதுகாப்பு அளித்தனர்.
ஆறு கைகள் இணைந்த வெள்ளை நிறக் கொடியை ஏற்றிய கமல்ஹாசன், தன் கட்சியின் பெயர் ‘மக்கள் நீதி மய்யம்’ என்று அறிவித்தார். கமல் நற்பணி இயக்கப் பொறுப்பாளராக இருந்த தங்கவேலுவே கட்சியின் அகில இந்தியப் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டார். மாவட்டச் செயலாளர்கள், உயர் மட்டக் குழுவினர் அறிவிக்கப்பட்டனர்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆங்கிலத்தில் பேசினாலும், அனைவருக்கும் புரியும் வகையில் நிறுத்தி நிதானமாகப் பேசினார். ‘‘கமலின் ரசிகராக இருந்தேன். சமீபகாலமாகத் தலைவராகப் பார்க்கிறேன். அவர் வெளிப்படுத்தும் கருத்துகள் சிறப்பானவை. டெல்லியில் எங்கள் வெற்றியின் சாதனையைத் தமிழகத்தில் கமல் முறியடிப்பார். ஊழல் வேண்டுமென்றால் மற்றவர்களுக்கு வாக்களியுங்கள். நேர்மை வேண்டுமென்றால் கமலுக்கு வாக்களியுங்கள்’’ என்ற கெஜ்ரிவால், மேடையில் இருந்த மற்ற பிரமுகர்கள் பேசத் தயங்கிய ஒரு விஷயத்தைச் சொன்னார். ஆம், ‘‘அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு மாற்றுசக்தியாக கமல் இருப்பார்’’ என உரத்துச் சொன்னார்.
சிறப்புரை ஆற்றிய கமல், ‘‘இன்னும் எத்தனை காலம் அநீதிகளைப் பார்த்துக் கொண்டிருப்போம்? இன்று பேசும் நாள். நாளை செயல். இஸமெல்லாம் நமக்கு ஒரு கருவிதான். இடதா, வலதா என்றெல்லாம் யோசிக்காமல் மக்கள்நலன்தான் என்பதை கெஜ்ரிவால் பிரதிபலித்தார். இங்கே பணத்துக்குப் பஞ்சமில்லை. நல்ல மனதுக்குத்தான் பஞ்சம். நல்ல கல்வி, தரமான கல்வி எல்லோருக்கும் போய்ச்சேர வேண்டும். சாதியைச் சொல்லிச் சொல்லி விளையாடிய விளையாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும். இங்கு எல்லாக் குறைகளும் பேராசையால் வந்தவை.பேராசைக்கு அளவே கிடையாது. படித்தவர்கள் எத்தனையோ பேர் வேலையின்றி இருக்கிறார்கள், வேலையின்மையை ஒழித்துக் கட்ட முடியும். ‘கிராமங்களைத் தத்தெடுப்பதில் புதிதாக என்ன இருக்கிறது’ எனக் கிண்டலடித்தார்கள். எட்டுக் கிராமங்களை முன்னேற்றிக் காட்டுகிறோம். என்ன கொள்கை என்று கேட்கிறார்கள்.எல்லா நல்ல முதலமைச்சர்களுக்கும் இருக்கும் கொள்கைகள்தான் எங்கள் கட்சிக்கும் இருக்கின்றன. கொள்கைகளைப் புத்தகம் போட்டுக் கொடுக்க முடியும். அதற்கான வேலை நடந்துகொண்டிருக்கிறது’’ என்றார்.
‘‘உங்கள் அன்பு எனும் கடலில் நீந்த வந்துள்ளேன்’’ என ராமநாதபுரத்தில் மக்கள் முன்பு நெகிழ்ச்சியோடு சொன்னார் கமல். அவர் கரை சேர்வாரா?