Advertisements

தொழில்நுட்பங்களும் பாதுகாப்பும்!

ந்தியா… உலகளவில் சாலை விபத்துகளில் அதிக மரணங்களைச் சந்திக்கும் நாடு என்ற அவப்பெயரைப் பெற்றிருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் ஒருசில கார் தயாரிப்பாளர்களே தமது தயாரிப்புகள்

அனைத்திலும், பாதுகாப்பு வசதிகளை ஸ்டாண்டர்டாக அளிக்கின்றனர். இதற்கு வெளிநாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியச் சாலைகளில் வாகனங்களின் சராசரி வேகம் குறைவு என்பதே காரணமாகச் சொல்லப்படுகிறது. இதனாலேயே, சில விலை அதிகமான பாதுகாப்பு உபகரணங்கள், நம் ஊரில் விற்பனை செய்யப்படும் கார்களில் இல்லாமல் போனாலும், இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாடலில் இருக்கும் அவலம் நீடிக்கிறது. ஏனெனில், பாதுகாப்பு வசதிகள் என்பது, இன்னுமே கார் தயாரிப்பாளர்கள் தவிர்க்கும் விஷயமாகவே இருந்துவருகிறது. இதற்கு மக்களாகிய நாமும் ஒரு காரணம். ஆம், காரின் விலையைக் குறைக்க வேண்டுமென்றால், நாம் பாதுகாப்பு வசதிகள் இல்லாத வேரியன்ட்டையே வாங்கும் மனநிலையில்தான் இருக்கிறோம். எனவே, எந்த காரை வாங்குவது என்பதில் தரும் முக்கியத்துவத்தை, அதில் இருக்கக்கூடிய பாதுகாப்பு வசதிகளிலும் காட்டுவது நன்மை தரும். ஆக, ஒரு புதிய காரில் கட்டாயமாக இருக்கவேண்டிய பாதுகாப்பு வசதிகளின் தொகுப்பே இந்தக் கட்டுரை!


காற்றுப்பைகள் (SRS Airbags)

முன்பு எந்த காராக இருந்தாலும், அதன் டாப் வேரியன்ட்டில் மட்டுமே காற்றுப்பைகள் இருக்கும். ஆனால், தற்போது அனைத்து வேரியன்ட்டிலும் ஆப்ஷனலாகவோ ஸ்டாண்டர்டாகவோ முன்பக்கம் 2 காற்றுப்பைகள் வழங்கப்படுகின்றன. மிகவும் முக்கியமான பாதுகாப்பு வசதியான இது, விபத்து நேரத்தில் உங்களைக் காயங்களில் இருந்தோ சில நேரங்களில் உயிரையோ காப்பாற்றக்கூடிய திறனைக் கொண்டிருக்கிறது. க்ராஷ் சென்ஸார்களுடன், ஒரு ப்ராஸசர் இணைக்கப்பட்டிருக்கும். இதுதான் விபத்து நேரத்தில் காற்றுப்பையை விரிவடையச் செய்கிறது. முன்பக்கத்தில் இருக்கும் காற்றுப்பைகள், முன்பக்கத்தில் இருக்கும் பயணிகள், காரின் டேஷ்போர்டு, ஸ்டீயரிங் வீல், விண்ட் ஷீல்டு ஆகியவற்றின்மீது மோதாமல் தடுக்க உதவுகிறது. ஒருசில கார்களின் பக்கவாட்டுப் பகுதியில் இருக்கும் காற்றுப்பைகள், விபத்தின்போது பயணிகள் காரின் கதவுகள் மீது மோதாமல் இருக்கச் செய்துவிடுகின்றன. எனவே, பக்கவாட்டுக் காற்றுப்பைகள் இல்லாவிட்டாலும், உங்கள் காரில் முன்பக்கக் காற்றுப்பைகள் இருப்பது அவசியம்.


3 பாயின்ட் சீட்பெல்ட் (3 Point ELR SeatBelt)

இது காரின் அடிப்படையான பாதுகாப்பு வசதி என்றாலும், மிகவும் முக்கியமானது. இதன் Shoulder Strap இல்லாவிட்டால், நமது உடலின் மேல்பகுதி மொத்தமும் விபத்து நேரத்தில் பாதிப்படைவதற்கான சாத்தியங்கள் அதிகம். ஒருசில கார்களில், முன்பக்க இருக்கைகளுக்கு மட்டுமே 3 பாயின்ட் சீட் பெல்ட் இருக்கும்; ஒருவேளை முன்பக்க – பின்பக்க இருக்கைகளுக்கு 3 பாயின்ட் சீட் பெல்ட் இருந்தாலும், பின்பக்க இருக்கையின் நடுவில் இருப்பவருக்கு 3 பாயின்ட் சீட் பெல்ட் இருக்காது. எனவே, நீங்கள் புதிதாக வாங்கப்போகும் காரில் பயணிக்கக்கூடிய அனைவருக்கும், 3 பாயின்ட் சீட் பெல்ட் இருக்கிறதா என்பதை செக் செய்துகொள்ளவும்.


அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் (Adjustable Head Restraints)

பெயருக்கு ஏற்ப, பலர் ஹெட்ரெஸ்ட்டைத் தலை வைக்கும் பகுதியாகவே நினைத்துவருகின்றனர். ஆனால், உங்கள் காரின் பின்பகுதியில் யாராவது மோதினால், உங்களின் கழுத்து மற்றும் தோல் பகுதியைக் காப்பதே இவற்றின் வேலை. அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்களை, பயணிகளின் உயரத்துக்கு ஏற்ப பொசிஷன் செய்துகொள்ளவது நலம். அப்படி இல்லாவிட்டால், விபத்து நேரத்தில் இவற்றால் உங்களுக்கு எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை. பொதுவாகவே, கண்ணுக்கும் காதுக்கும் இடையேயான பொசிஷனில், ஹெட்ரெஸ்ட் இருப்பது சரியாக இருக்கும். எனவே காரை ஸ்டார்ட் செய்வதற்கு முன்பு, ஹெட்ரெஸ்ட் சரியான இடத்தில் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளவும்.


ஆன்ட்டி லாக் பிரேக் சிஸ்டம் (ABS)

பட்ஜெட் ஹேட்ச்பேக்குகளைத் தவிர, ஏறக்குறைய அனைத்து கார்களிலும் ஏபிஎஸ் இருப்பதைப் பார்க்கமுடியும். ஏபிஎஸ் இல்லாத கார்களில் திடீரென பிரேக் பிடித்தால், வீல்கள் லாக் ஆவதையும், அதன் விளைவாகக் கார் ஸ்கிட் ஆவதையும் நம்மால் பார்க்கமுடியும்.  எனவே இதன் விலை கொஞ்சம் அதிகம் என்றாலும், இதுதான் நீங்கள் அதிக வேகத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென பிரேக் பிடித்தாலும், காரின் வீல்களை லாக் ஆகவிடாமல் தடுத்துவிடுகிறது. மேலும் நீங்கள் திருப்பங்களில் செல்லும்போது பிரேக் பிடித்தாலும், செல்லும் திசையில் இருந்து விலகாமல் தொடர்ந்து சீராகப் பயணிக்கலாம்.


எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோகிராம் (ESP)

கணினித் தொழில்நுட்பமான இது, காரின் நிலைத்தன்மையை அதிகரிக்கும் பணியைச் செய்கிறது. கார் தனது நிலைத்தன்மைய இழக்கிறது என உணர்ந்த அடுத்த கணத்திலேயே, ESP காரின் பிரேக்குகளைக் கட்டுபடுத்த ஆரம்பித்துவிடும். எந்த வீலில் ரோடு க்ரிப் குறைவாக இருக்கிறதோ, அதன் பிரேக் இயங்கி, Oversteer அல்லது Understeer ஆவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படுகிறது. இதனால் கார் தானாகவே தான் செல்லவேண்டிய திசைக்கு வந்துவிடும். பெரும்பாலும் பிரீமியம் கார்களில் மட்டுமே இருக்கும் இந்த பாதுகாப்பு வசதி, விரைவில் பட்ஜெட் கார்களிலும் இடம்பெறும் என நம்பலாம்.


பின்பக்க வைப்பர் & டிஃபாகர் (Rear Wiper & Defogger)

இது கேட்பதற்குச் சின்ன விஷயமாகத் தெரிந்தாலும், இதன் பணி மிகச் சிறப்பானது. மழைக் காலங்களில், காரின் முன்பக்க – பின்பக்க விண்ட் ஸ்க்ரீன் அழுக்காவதுடன், பனி படர்ந்து விடுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கிறது. இதனால் காரிலிருந்து வெளிச்சாலை சரியாகத் தெரிவது தடைபடும் என்பதுடன், இது சில நேரங்களில் பாதிப்பையும் தரலாம். எனவே, விண்ட் ஸ்க்ரீனின்மீது படிந்திருக்கும் பனியை டிஃபாகர் விலக்கிவிடுகிறது என்றால், வைப்பர் விண்ட் ஸ்க்ரீனில் தேங்கியிருக்கும் தண்ணீர் மற்றும் அழுக்கைச் சுத்தப்படுத்திவிடுகிறது. ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவிகளில் மட்டுமே பின்பக்க வைப்பர்கள் இருக்கின்றன. ஆகவே, உங்கள் புதிய காரில் குறைந்தது டிஃபாகர் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

Advertisements
%d bloggers like this: