Advertisements

சந்தோஷ ஓ.பி.எஸ்… சரண்டர் எடப்பாடி… சமாதான மோடி!

ள்ளே வந்த கழுகார், ‘‘பிரதமர் மோடியின் விழாக்களுக்குப் போய்விட்டு வந்தேன்’’ என்றபடி பேச ஆரம்பித்தார். அமைதியாகக் கேட்டோம்.
‘‘பெண்களுக்கு மானிய விலை டூவீலர் வழங்குவது மாநில அரசின் விழா. ‘இதில் பிரதமர் கலந்துகொண்டது சரியா?’ எனச் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். சென்னையில் மெட்ரோ ரயில் தொடக்க

விழாவுக்குக்கூட பிரதமர் மோடி வரவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழக அரசின் விழாக்களுக்கு பிரதமர் மோடி வந்ததில்லை. ஜெயலலிதாவுக்குப் பிறகும் அதே நிலைதான் தொடர்ந்தது. தமிழக அரசு சார்பில் பலமுறை அழைத்தும், அவர் வரவில்லை. இந்த முறை பிரதமரே வருவதாகச் சொன்ன பிறகுதான், விழா ஏற்பாடுகள் நடந்தன. இன்னொரு முக்கியமான தகவல். முதலில், விழாவில் பேச பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதைக் கேள்விப்பட்ட மோடி கோபமாகிவிட்டார். எடப்பாடியுடன் பிரதமர் அலுவலக அதிகாரிகள் பேசிய பிறகுதான், ‘வரவேற்புரை – பன்னீர்’ என்று சேர்க்கப்பட்டது.’’

‘‘அப்படி என்ன அக்கறை?’’
‘‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலிருந்து அதிக எம்.பி-க்களை பி.ஜே.பி பெற்றாக வேண்டும். தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ரெடியாகிவிட்டது. அ.தி.மு.க-வுடன்தான் பி.ஜே.பி போகவேண்டி வரும். ஆனால், அ.தி.மு.க-வுக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள். அதைத் தீர்த்துவைத்தால்தான், தேர்தலில் ஜெயிக்க முடியும் என்பது மத்திய உளவுத்துறையின் கணக்கு. தமிழக மக்கள் மத்தியில் ஓரளவுக்காவது இமேஜ் உள்ள பன்னீரை முதல்வர் பதவியில் உட்கார வைத்துவிட்டு, தேர்தலில் கூட்டணி வைக்க மோடி நினைக்கிறார். அதனால்தான், சென்னைக்கு அவர் ஓடோடி வந்தார். அதேசமயம், ‘இரண்டு தரப்பிலிருந்தும் தனித்தனியாக வந்து சந்தித்தால், சங்கடம் தரும் விமர்சனங்கள் எழும். எனவே, இருவர் சார்பிலும் ஒருவரே வந்து பேசட்டும்’ என்று பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது. பிறகுதான், அந்த வேலைக்காக மின் துறை அமைச்சர் தங்கமணி நியமிக்கப்பட்டார்.”

“அவரை இதற்குத் தேர்ந்தெடுத்ததற்கு என்ன காரணம்?”
“முதல்வர் நாற்காலியில் திடமாக எடப்பாடி அமர்ந்திருப்பதற்கான வேலைகளை டெல்லிக்கும் சென்னைக்கும் அலைந்து திரிந்து செய்தவர்களில் தங்கமணி முக்கியமானவர். ஓ.பி.எஸ்-எடப்பாடி அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் நடந்தபோது, தங்கமணியும் அங்கே இருந்தார். இணைப்புப் பேச்சுவார்த்தைகளில் விதிக்கப்பட்ட நிபந்தனை கள், ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் என எல்லாம் தங்கமணியின் முன்னிலையில்தான் நடந்தன. ஹிந்தியைப் புரிந்துகொள்ளவும், பதில் சொல்லும் அளவுக்குப் பேசவும் அமைச்சர் தங்கமணிக்குத் தெரியும். இந்த ப்ளஸ் பாயின்ட்களால்தான் பிரதமருடன் பேச தங்கமணி நியமிக்கப்பட்டார். முதலில், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை நியமித்திருந்தார்கள். கடைசி நிமிடத்தில் மாற்றி தங்கமணியை அனுப்பினார்கள்.”
“ஆனால், அவர் வெயிட்டிங் மினிஸ்டர் என ‘புரோட்டோகால்’படி பிரதமர் நிகழ்ச்சிகளைத் தமிழக அரசு சார்பில் மேற்பார்வை செய்பவர். அவர் உள்கட்சிப் பிரச்னைகளையெல்லாம் பிரதமரிடம் பேசியிருப்பாரா?”
“கவர்னர் மாளிகையில் பிரதமர் மோடி தங்கியிருந்ததால், அங்கு இரண்டு வகையான புரோட்டோகால்கள் ஃபாலோ செய்யப்படும். ஒன்று, கவர்னர் புரோட்டோகால்; மற்றொன்று, பிரதமர் புரோட்டோகால். அவற்றைச் சரியாகப் பின்பற்றினால், இதுபோன்ற பிரச்னைகளைப் பிரதமரிடம் தங்கமணி பேச முடியாது. ஆனால், ஓ.பி.எஸ் தனி அணியாகச் செயல்பட்டபோது, டெல்லியில் பிரதமர் மோடியைத் தனியாக ஐந்து முறை சந்தித்துப் பேசினார். அப்போது ஓ.பி.எஸ் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, வெறுமனே எம்.எல்.ஏ என்ற அந்தஸ்தில் மட்டுமே இருந்தார். புரோட்டோகால் முறைகளை அரசியல் சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற்போல பிரதமர் நினைத்தால் மாற்றிக்கொள்ளலாம். ”
“சரி… விஷயத்தைச் சொல்லும். என்ன நடந்தது?’’
‘‘தங்கமணியிடம் பிரதமர் சுருக்கமாக, ‘அணிகள் இணைக்கப்பட்டபோது சொன்ன வார்த்தைகளைக் காப்பாற்றுங்கள். விரைவில் அதற்கான வேலைகளை முடித்துவிட்டு டெல்லி வாருங்கள்’ என்று சொன்னாராம். அதைக் கேட்டு ஓ.பி.எஸ் கூடாரம் குதூகலத்தில் இருக்கிறது. கடந்த சில நாள்களாக டென்ஷனில் இருந்த பன்னீர், விமானநிலையத்தில் பிரதமரை வழியனுப்பிவிட்டு மதுரை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கிளம்பிப்போய்விட்டார். அங்கே, அவரின் முகத்தில் ஒரே சிரிப்பு. ‘இவரை இப்படிப் பார்த்து ரொம்ப நாளாச்சே’ என்று உடன் இருந்தவர்கள் ஆச்சர்யப்பட்டனர்.”
“பிரதமர் மோடியிடம் ஒட்டுமொத்தமாக எடப்பாடி சரண்டர் ஆகிவிட்டாரா?”
“ஆமாம். ஐ.ஏ.எஸ் மாறுதலில் ஆரம்பித்து முக்கிய நிகழ்வுகள் வரை எடப்பாடியிடம் பேசும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ‘கவர்னர் ஆபீஸ்’, ‘டெல்லி மேலிடம்’ என்கிற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துகிறாராம். அதனால், எடப்பாடி கப்சிப். ‘எத்தனை நாளுக்கு நம்மை முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்திருக்க விடுவார்களோ’ என்கிற கவலை ரேகைகள் எடப்பாடியின் முகத்தில் நன்றாகவே தெரிகின்றன.’’

‘‘கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ-வான பிரபு, பிரதமரின் சென்னை விசிட்டுக்கு ஒரு நாள் முன்னதாக தினகரன் கோஷ்டிக்குத் தாவிவிட்டாரே?”
“அவரை அனுப்பி வைத்ததே எடப்பாடி கோஷ்டிதான் என ஓ.பி.எஸ் தரப்பு சந்தேகப்படுகிறது. இவரைப்போல மேலும் பலரை அனுப்பினால், மெஜாரிட்டி குறையும்.ஓ.பி.எஸ் முதல்வராக உட்கார முடியாது அல்லவா? இப்படி ஒரு ‘செக்’ வைக்க எடப்பாடி கோஷ்டி திட்டமிடுவதாகவும் உளவுத்துறைக்குத் தகவல் போயிருக்கிறது. எடப்பாடியின் பதவி போனால், தேர்தல்தான் நடக்க வேண்டுமே தவிர, ஓ.பி.எஸ்ஸை உட்கார வைக்கக்கூடாது என்பதில் சிலர் தீவிரமாக இருக்கிறார்கள்.”
‘‘தமிழக வக்பு வாரியத் தலைவர் பதவிக்கான தேர்தல் இழுத்துக்கொண்டே செல்கிறதே?’’
‘‘முன்னாள் வக்பு வாரியத் தலைவர் தமிழ்மகன் உசேனை மீண்டும் தலைவராக்க எடப்பாடி தரப்பு நினைக்கிறதாம். இதுபற்றி அமைச்சர் நிலோஃபர் கபில், வக்பு வாரிய உறுப்பினர்களிடம் பேசியுள்ளார். ஆனால், மொத்தம் உள்ள 11 உறுப்பினர்களில் ஏழு பேர் இதை எதிர்க்கிறார்கள். எம்.பி-யான அன்வர் ராஜாவைக் கொண்டு வருவதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளார்கள். ஆனால், அரசு தரப்பு அதற்கு ஒத்துழைக்க மறுப்பதால், இரண்டு முறை தேர்தல் தள்ளி வைக்கப் பட்டது. மீண்டும், பிப்ரவரி 26-ம் தேதி திங்கள்கிழமையன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி, கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனால், வக்பு வாரியத்துக்குள் குழப்பம் அதிகரித்துள்ளது. விரைவில் நீதிமன்றம் சென்று தேர்தல் நடத்தக் கோர உள்ளனர். தேர்தல் நடைபெற்றால், அன்வர் ராஜாவுக்கே அதிக வாய்ப்பு என்கிறார்கள்’’ என்ற கழுகார் பறந்தார்.

Advertisements
%d bloggers like this: