Advertisements

இயற்கை எனும் இனிய சிகிச்சை

யற்கை என்பது நாம் சுற்றுலா செல்லும் இடமாக இருக்கக் கூடாது. அது நமது வீடாக இருக்க வேண்டும்” என்று பிரபல அமெரிக்க சுற்றுச்சூழல் ஆர்வலர் கேரி ஸ்னைடர் கூறியிருக்கிறார். ஆனால், இன்று எலெக்ட்ரானிக் சாதனங்கள் சூழ வாழ்ந்துகொண்டிருக்கும் நகரவாசிகளான நமக்கு இயற்கையை நினைக்கவே

நேரமிருப்பதில்லை. அப்படியே நினைத்தாலும் நம்மைச்சுற்றி எங்கே இயற்கை சார்ந்த விஷயங்கள் இருக்கின்றன? இப்படி நாம் இயற்கையிடம் இருந்து தள்ளிச்சென்றுகொண்டேயிருக்க, நமது ஆரோக்கியமும் நமக்குக் கையசைத்து வழி அனுப்பிவைக்கிறது.
உணவே மருந்து என்று சொல்வது போன்று இயற்கையுடன் ஒன்றி வாழ்வதும் மருந்தே என்று மருத்துவம் கூறுகிறது. இதை மனம்சார்ந்த நோய்கள் இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பதும் உண்டு. இதைப்போன்ற ஒரு சிகிச்சையைத்தான் மருத்துவத் துறையினர் ‘ஹார்டிகல்சர் தெரபி’ (Horticulture Therapy) என்று அழைக்கின்றனர். தோட்டக்கலை மற்றும் அதைச் சார்ந்த விஷயங்களின்மூலம் ஒருவரை இயற்கையுடன் ஒன்றச்செய்து அதன்மூலம் மனநோய்களைக் குணப்படுத்தும் முறையே ஹார்டிகல்சர் தெரபி.

குழப்பமின்மை
நம்மில் பலருக்கும் முக்கியமான விஷயத்தில் முடிவெடுக்கும் முன் பல குழப்பங்கள் வரும்.  யோசிக்க யோசிக்க அது நமக்கு மனஅழுத்தத்தையும் தரும். இப்படி இருக்கும் மக்களைத் தெளிவான மனநிலையை அடையச் செய்து, பதற்றமும், குழப்பமும் இன்றி முடிவுகள் எடுக்கவும் தோட்டக்கலை உதவுமாம்.
பொறுப்பு உணர்வு
அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள், தன்னம்பிக்கை  அற்றவர்கள், அடிக்கடி பதற்றமாகக்கூடியவர்கள் என அனைவருக்குமே ஒரு தோட்டத்தைப் பராமரித்துப் பாதுகாப்பதென்பது புதிய உத்வேகத்தைத் தரும். ஒரு செடிக்கு எந்த அளவு தண்ணீர் ஊற்றவேண்டும் என்பதைத் தினமும் கண்காணித்துக் கண்டுபிடிப்பதைப் போன்ற சிறு விஷயங்கள்கூட ஒருவரது மனதைக் கட்டுப்படுத்தப் பெரிதும் உதவும். இதனால் ஒருவரிடம் பொறுப்பு உணர்ச்சி அதிகரிப்பதையும் பார்க்க முடியும்.
மகிழ்ச்சி
தோட்டக்கலையில் மணல்சார்ந்த செயல்களில் ஈடுபடும்போது மன அழுத்தத்துக்குக் காரணமான கார்டிசால் ஹார்மோன் குறைந்து மகிழ்ச்சியைத் தரும் ஹார்மோன்களான செரோட்டோனின் மற்றும் டோபமைன் ஆகியவை அதிகம் சுரக்கும். இயற்கையுடன் அதிகநேரம் செலவிட்டால் நினைவாற்றலும் யோசிக்கும் திறனும் மேம்படும்.


மனதுக்கு மருந்து
‘‘ஹார்டிகல்சர் தெரபி என்பது பொதுவாக ஆட்டிசம், டவுண் சிண்ட்ரோம், ஸ்கிசோஃப்ரினியா போன்ற மனநலம் சார்ந்த நோய்கள் உள்ளவர்களுக்கும்,  பார்வைக்குறைபாடுகள் உள்ளவர்களுக்கும், புற்றுநோயாளிகளுக்கும் முறைப்பட்ட ஒரு பயிற்சியாக வழங்கப்படுகிறது. மற்றவர்களும் வீட்டில் இரண்டு, மூன்று செடிகள் வளர்த்தால்கூட வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை உணரமுடியும். மனஅமைதியை உணர முடியும். பூங்காக்களுக்கு, மலைப்பிரதேசங்களுக்குப் போகும்போது உங்கள் மனம் ரிலாக்ஸ் ஆவதை நீங்கள் உணர முடிவது இதனால்தான். வானவில்லின் நடுவில் இருப்பது பச்சை நிறம். அந்த வானவில் நிறங்களில் சிவப்பை நோக்கிச் சென்றால் அதிகமான உணர்ச்சிகளையும், அதற்கு இந்தப் பக்கம் வந்தால் உணர்ச்சிகள் குறைந்து சோர்வையும் நம்மால் உணர முடியும். எனவே, தோட்டத்தின் பச்சை நிறம் என்பது உங்களின் உணர்வுகளை நிலைப்படுத்த உதவும்.

மனிதனின் மனநிலையை எளிதில் மாற்றக்கூடிய தன்மை மணத்திற்கு உண்டு. செடிகளும் மரங்களும் கொடுக்கும் வாசத்தில் மன அழுத்தத்தின் உச்சத்தில் இருப்பவர்கூட சட்டென அமைதி ஆகிவிடுவார். ஹார்டிகல்சர் தெரபியில் மனதளவில் பாதிக்கப்பட்ட மக்களைச் செடிகளுடன் பேசவைக்கும் பயிற்சி ஒன்று உண்டு. அதில் பலரும் தங்களை அறியாமல் அழுவதைப் பார்க்க முடியும். இயற்கை என்பது அவ்வளவு சக்தியுடையது.
உளவியல் நன்மைகளைக் கடந்து உடல்சார்ந்த பலன்களும் இதில் உண்டு. ஒருவிதமான உடற்பயிற்சியாக அமைகிறது; தூய்மையான காற்றுடன் தினம் கொஞ்சநேரம் கழிப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. ஹார்டிகல்சர் தெரபி கொடுக்கவே ஸ்பெஷல் தெரபிஸ்ட்களும், பெரிய தோட்டங்களும் பலநாடுகளில் உண்டு. நீங்கள் அவற்றையெல்லாம் தேடிச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டின் அருகில் நீங்கள் வளர்க்கும் சின்னச் செடிகூட உங்கள் அன்றாட வாழ்க்கையின் உளவியல் பிரச்னைகளுக்கு மருந்தாகும்.’’

Advertisements
%d bloggers like this: