Advertisements

குறி வைக்கப்படும் சிதம்பரம்!

ழுகார் நம் முன் ஆஜரானபோது, கருணாநிதி கிரிக்கெட் விளையாடும் வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அதைப் பார்த்த கழுகார், ‘‘கருணாநிதி லேசாக பேச ஆரம்பித்துள்ளதாகவும் சொல்கிறார்கள். விரைவில், ‘அன்பார்ந்த உடன்பிறப்புகளே…’ என அவர் பேசுவதையும் வீடியோவில் எடுத்து அனுப்புவார்கள்” என்றார். அவரிடம், ‘‘கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரியான டி.எஸ்.பி பாண்டியன் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளாரே?” என்றோம்.

“2006-2011 ஆட்சிக்காலத்தில், கருணாநிதி தமிழக முதலமைச்சராக இருந்தார். அப்போது, அவருக்குப் பாதுகாப்பு அதிகாரியாக டி.எஸ்.பி பாண்டியன் நியமனம் செய்யப்பட்டார். அவரைப் போல கணேசனும், விநோதனும் அந்தப் பணியில் இருந்தனர். முதலமைச்சரின் பாதுகாப்புப் பணியில் இருந்ததால், இவர்களுக்குக் காவல்துறை வட்டாரத்தில் செல்வாக்கும் கூடியது; காழ்ப்பு உணர்வும் அதிகரித்தது. டி.எஸ்.பி பாண்டியனுக்கு, ஏ.டி.எஸ்.பி பதவி உயர்வு கொடுப்பதற்காகவே, அவருடைய பேட்ஜ் அதிகாரிகளுக்கான பதவி உயர்வு அப்போது நிறுத்திவைக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. அந்தக் காலகட்டத்திலேயே ஏகப்பட்ட புகார்களும் வந்தன. முதலமைச்சர் விருப்புரிமை கோட்டாவில் முகப்பேரில் இவருக்கு இரண்டு கிரவுண்டு நிலம் ஒதுக்கப்பட்டது. அது, பாண்டியனின் மனைவி மீனா பெயரில், ‘சமூக சேவகர்’ என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டது.”
‘‘அதில் என்ன புகார்?”
“அன்றைக்கு அந்த நிலத்தின் சந்தை மதிப்பு ரூ. 2 கோடி. ஆனால், அது ரூ. 75 லட்சத்துக்குக் கொடுக்கப்பட்டது. அந்த நிலத்தை தன் பெயருக்கு பத்திரப்பதிவு செய்யாமல், நேரடியாக வேறொருவருக்கு விற்பனை செய்தார் பாண்டியனின் மனைவி. இதுதொடர்பாக, அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடரப்பட்டது. ஏகப்பட்ட சர்ச்சைகளும் கிளம்பின. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், டி.எஸ்.பி பாண்டியன்மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. அது, இப்போதுவரை நிலுவையில் இருக்கிறது. பிப்ரவரி 28-ம் தேதி ஓய்வுபெற இருந்த நிலையில், அவர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதால், அவரை சஸ்பெண்டு செய்து டி.ஜி.பி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.”

“கடைசி வரைக்குமே அவர்தான் பாதுகாப்பு அதிகாரியா?”
“ஆம். இப்போது கருணாநிதி முழுமையான மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதால், அவருக்குப் பாதுகாப்பு அதிகாரிகள் 24 மணி நேரமும் தேவைப்படுவதில்லை. அதனால், ‘நீங்கள் வேறு ஒரு பொறுப்புக்குப் போங்கள். சென்னையில் சட்டம்-ஒழுங்கைப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று அரசுத் தரப்பில் இரு முறை பாண்டியனிடம் சொல்லப்பட்டது. அதை, பாண்டியன் நிராகரித்துவிட்டார். தனக்குச் சொந்தமான இடம் ஒன்றில் வீடு கட்டும் வேலைகளை அவர் பார்த்துக் கொண்டிருந்தார். ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் கருணாநிதியை அவர் சந்தித்தார். அவரிடம், ‘இனிமேல் நிரந்தரமாக நான் எப்போதும் உங்களைப் பார்த்துக்கொள்வேன்’ என்று பாண்டியன் தெரிவித்தாராம். அதற்கு மறுநாள்தான் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.”
“கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளாரே?”
“எப்போதோ எதிர்பார்த்ததுதான். மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வந்தார் ப.சிதம்பரம். மோடியின் பேச்சுகளிலும் சிதம்பரத்தைக் குறித்து கடுமையான வார்த்தைகள் இருக்கும். இந்த சூழலில்தான் ப.சிதம்பரம், தனக்கு நெருக்கமானவர்களிடம், ‘என்னை ஒழிக்க என் குடும்பத்தை முடக்குகிறது பி.ஜே.பி’ என்று புலம்பிக்கொண்டிருந்தார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கும், வெளிநாட்டு முதலீடுகளும், வங்கிப் பரிவர்த்தனைகளும் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக உள்ளன. அதைத்தான் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் 2017 நவம்பர் மாதம், உச்ச நீதிமன்றத்தில் சீலிட்ட கவரில் வைத்துச் சமர்ப்பித்திருந்தார். கார்த்தி சிதம்பரமும், எப்படியும் லண்டனில் போய் தங்கிவிடுவார் என்ற எதிர்பார்ப்பும் சி.பி.ஐ-க்கு இருந்தது.”
“அதனால்தான் வந்ததுமே விமான நிலையத்தில் கைது செய்தார்களா?’’
‘‘ஆமாம். இந்த வழக்கின் விவரங்கள், கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரின் ஆடிட்டர் பாஸ்கரராமனிடம் கைப்பற்றப்பட்ட ஹார்டு டிஸ்க், இ-மெயில் விவரங்கள், ஆவணங்கள், இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம் ஆகியவற்றிலேயே உள்ளன. அதில் கையெழுத்து வாங்க வேண்டிய வேலை மட்டும்தான் பாக்கி. சி.பி.ஐ-க்கும் கார்த்தி சிதம்பரத்துக்கும் மோதல் அதிகமாக இருக்கிறது. ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் சிதம்பரத்தையும் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. அதை நோக்கித்தான், பிரதமர் மோடியின் நடவடிக்கைகளும், பி.ஜே.பி-காரர்களின் பேச்சும் நடவடிக்கைகளும் இருக்கின்றனவாம். இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தில் ப.சிதம்பரம் குறித்தும் விஷயங்கள் உள்ளன. சிதம்பரம் குறிவைக்கப்பட்டு விட்டார் என்றே டெல்லி தகவல்கள் சொல்கின்றன” என்ற கழுகாரிடம், ‘‘ஏதோ முக்கியமான அறிவிப்பை பிப்ரவரி 28-ம் தேதி சொல்லப்போவதாகச் சொன்னாரே டி.ராஜேந்தர்?” என்றோம்.
“ரஜினி, கமல், விஷால் என நடிகர் பட்டாளம் அரசியலை நோக்கிக் குவிவதைப் பார்த்துப் பதறிப்போனார் டி.ராஜேந்தர். ‘இத்தனை ஆண்டுகளாக நாம் அரசியலில் இருக்கிறோம். புதிதாக அரசியலுக்கு வரும் நடிகர்களுக்குத்தான் அதிகமான வரவேற்பு கிடைக்கிறது’ என்று நொந்துகொண்டாராம். ‘எல்லாரும் கருணாநிதியைப் போய் பார்க்கிறார்கள். கட்சி ஆரம்பிக்கிறார்கள். ஆனால், கருணாநிதிக்கு உண்மையான செல்லப்பிள்ளை நான்தான்’ என்றும் ராஜேந்தர் சொன்னாராம்!”

“அதனால்தான், கருணாநிதியைப் புகழ்ந்து அறிக்கை வெளியிட்டாரா ராஜேந்தர்?”
“பிப்ரவரி 28-ம் தேதி முக்கியமான அறிவிப்பு வெளியிடப் போகிறேன் என்றவர், தனது இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயர்ப் பலகையில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் படங்களுடன் ஜெயலலிதா படத்தையும் சேர்த்து திறந்தார். ஆனால், அவர் வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதியை அதிகமாகப் புகழ்ந்தார்.”
‘‘திறந்தார்… புகழ்ந்தார் என எதுகை மோனையில் பின்னுகிறீரே?”
“டி.ராஜேந்தர் அறிக்கையைப் பார்த்துவிட்டு வந்தேன் அல்லவா? அதன் எஃபெக்ட். ‘கருணாநிதியிடம் சென்று ஆசிபெற்று சிலர் புதிதாக கட்சி தொடங்குகிறார்கள். இது காலத்தின் கட்டாயம்’ என்ற பீடிகையுடன் அவர் வெளியிட்ட அறிக்கையில், தன்னைப் புகழ்ந்து கருணாநிதி சொன்னது அனைத்தையும் பட்டியலிட்டுள்ளார் டி.ராஜேந்தர்.”
“சில நாள்களுக்கு முன்பு சிம்புவைப் புகழ்ந்தாரே ராஜேந்தர்?”
‘‘ஆமாம். ‘முருகப் பெருமானைப் போல புத்திசாலித்தனமாக பேசக்கூடியவன் சிம்பு’ என்றும் சொன்னார். தேர்தல் நேரத்தில் இலட்சிய தி.மு.க.வுக்காக சூறாவளி சுற்றுப்பயணத்தை சிம்பு மேற்கொள்வாராம். அதற்கான முன்னோட்டம்தானாம் இது!” என்ற கழுகார் பறந்தார்.

Advertisements
%d bloggers like this: