ஜீரண மண்டல கேன்சர்

ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், எந்த கேன்சரையும் முழுமையாக குணப்படுத்த முடியும். இது பற்றிய போதிய விழிப்புணர்வு இருந்தாலும், பயம் மற்றும் தயக்கம் காரணமாக, தாமதமாகவே கேன்சர் சிகிச்சைக்கு வருகின்றனர்.

ஜீரண மண்டலத்தில் ஏற்படும் கேன்சர் அறிகுறிகளை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். காரணம், மிக அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய கேன்சர்களில் ஒன்றாக இது உள்ளது. ஆரம்ப அறிகுறிகளில் கவனமாக இருந்தால், எளிதாக சரி செய்து விடலாம்.
முதலில் வாயிலிருந்து துவங்கலாம். நாக்கு, ஈறுகள் உட்பட, வாயின் உள்பகுதியில் ஏற்படும் புண், நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை ஆறாமல் இருந்தால், கேன்சராக இருக்கலாம்.
அடுத்து, எந்தப் பிரச்னையும் இல்லாமல், எதிர்பாராமல் திட உணவு விழுங்குவதில் சிரமம் எனில், அதிலும், 30 வயதிற்கு மேல் இந்தப் பிரச்னை வந்தால், உடனடியாக, மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
பொதுவாக, 40 வயதிற்கு மேல், இரைப்பையில் பிரச்னை வரலாம். தொடர்ந்து, ஒரு மாதமாக அஜீரணம், சிறிது சாப்பிட்டாலும் வயிறு உப்புவது போன்ற உணர்வு, காரணமே இல்லாமல், உடல் எடை குறைவது போன்ற தொந்தரவுகள் இருந்தால், ‘எண்டோஸ்கோபி’ பரிசோதனை செய்து பார்க்க வேண்டியது முக்கியம்.
அடுத்தது, கல்லீரல்… இதில் கேன்சரை கண்டுபிடிப்பது சிரமம். ஹெப்பாடிடிஸ் பி, சி தொந்தரவு இருந்தால், தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மதுவால் மட்டுமல்ல, மஞ்சள் காமாலையாலும், கல்லீரல் செல்கள் செயலிழக்கும் தன்மையான, ‘சிரோசிஸ்’ வரும்.
பாதிக்கப்பட்ட கல்லீரல், கேன்சர் வருவதற்கான, வளமான நிலம் போன்றது. இதனால், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, ‘அல்ட்ரா சவுண்டு’ மற்றும் ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும்.
அடுத்தது, பித்தக் குழாய். பித்தக் குழாயின் நுனியிலோ, வால் பகுதியிலோ, மிகச் சிறிய அளவில், கேன்சர் இருந்தாலும், மஞ்சள் காமாலை வரலாம். மஞ்சள் காமாலை வந்து, 15 நாட்கள் சிகிச்சை எடுத்த பின்னும், குணமாகவில்லை எனில், கேன்சருக்கான முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
கணையத்தின் தலைப் பகுதியில் கேன்சர் இருந்தால், முதல் அறிகுறி, மஞ்சள் காமாலை தான். வால் பகுதியில் வந்தால், கண்டுபிடிக்கவே முடியாது. சிறுநீரகங்களில் அல்லது சிறுநீரக உறுப்புகளில், கேன்சர் இருந்தால், சிறுநீரில், ரத்தம் கலந்து வெளியேறும்.
அடுத்தது பெருங்குடல்… இது மிகப் பெரிய உறுப்பு. இதுவரை இந்த பிரச்னை இருந்ததில்லை.
மலச்சிக்கலும், வயிற்றுப்போக்கும் அவ்வப்போது மாறி மாறி வருவது, ரத்த சோகை, வலி இல்லாமல் மலத்துடன், ரத்தம் வெளியேறுவது, ஆசனவாயில் புதிதாக புண் அல்லது கட்டி… இதுபோல, பிரச்னை எனில், அது கேன்சரின் அறிகுறியாக இருக்கலாம்.
எதிர்பாராத அறிகுறிகள் எதுவாக இருந்தாலும், உடனடியாக, மருத்துவ ஆலோசனை பெற்று, கேன்சர் இல்லை என்பதை உறுதி செய்து கொள்வது பாதுகாப்பானது.

டாக்டர் ரவீந்தரன் குமரன்,
ஜீரண மண்டல அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர், சென்னை.
ravindrankumeran@gmail.com

%d bloggers like this: