மண்ணும் மருந்தாகும் அதிசயம்!

நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் தரிசனம் –

ண்ட சராசரங்களையும், அமரர்களையும் காப்பாற்றி அருளும் பொருட்டு, ‘ஆலம் தானுகந்து அமுது செய்தானை’ என்று சுந்தரர் போற்றிப் பாடியபடி, பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தைத் தாம் ஏற்று அருள்புரிந்தவர், சிவபெருமான். அதன் காரணமாகவே அவருக்கு நஞ்சுண்டேஸ்வரர் என்றும் திருநீலகண்டர் என்றும் திருப்பெயர்கள் ஏற்பட்டன. இது நம் எல்லோருக்கும் தெரிந்த திருக்கதைதான். 

பூவுலக மக்களைக் காப்பாற்றும்பொருட்டு, பூமிதேவியின் வேண்டுகோளின்படி மற்றுமொரு முறையும் சிவபெருமான் நஞ்சினை ஏற்று அருள்புரிந்தார். ஐயனின் அந்தத் தியாகத் திருவிளையாடல் நடைபெற்ற திருத்தலம்தான் இதோ நாம் தரிசித்துக் கொண்டிருக்கிறோமே இந்த நஞ்சன்கூடு திருத்தலம். ஐயனின் அந்த அருளாடலைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, நாம் கோயிலை வலம் வந்துவிடலாமே.
கபில நதி என்னும் கபினி நதியின் கரையில் அமைந்திருக்கும் நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கோபுரம், தொலைவிலிருந்து பார்க்கும்போதே செங்காவி நிறத்தில் பளிச் சென்று காட்சி தருகிறது. வண்ணமயமான கோபுரங்களையே தரிசித்திருந்த நமக்கு, செங்காவி நிறத்தில் காட்சி தந்த கோபுரம் மட்டுமல்ல, கோயிலில் உள்ள மண்ணும்கூட செங்காவி நிறத்தில் காட்சி தந்ததும் புதுமையாகத்தான் இருந்தது.
முறைப்படி ஆலய வலம் வந்து இறைவனைத் தரிசிக்கச் சென்றோம். கருவறையில், ஐயன் நஞ்சுண்டேஸ்வரர் எழிலார்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். சுவாமியின் லிங்கத் திருமேனியில் வெட்டுப்பட்ட தழும்பு ஒன்று காணப்படுகிறது.
அதற்குக் காரணம் என்ன தெரியுமா?
பரசுராமரால் ஏற்பட்ட தழும்பு!
தந்தை ஜமதக்னி முனிவரின் ஆணைக்கிணங்க, தன் தாயாகிய ரேணுகாதேவியை சிரச்சேதம் செய்துவிடுகிறார் பரசுராமர். அதனால் பரசுராமருக்கு மாத்ரு ஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. மனம் கலங்கி வருந்தி நின்றார் பரசுராமர். தோஷம் நீங்கிட வழி கூறியருளும்படி தந்தையிடம் மன்றாடிக் கேட்டார். 

காலபுரி என்னும் இடத்தில் கபில நதியும் கௌண்டினி நதியும் சங்கமிக்கும் இடத்தில் நீராடி, சிவபெருமானை பூஜிக்கும்படிக் கூறினார் ஜமதக்னி முனிவர். அதன்படி காலபுரி நோக்கிச் சென்றார் பரசுராமர். செல்லும் வழியெங்கும் புதர் மண்டியிருந்ததால், கோடரியால் வெட்டியபடி பாதை ஏற்படுத்திக்கொண்டு சென்றார். ஓரிடத்தில், கோடரி பட்டதுமே ரத்தம் பெருக்கெடுத்தது. புதர்களை விலக்கிப் பார்த்த பரசுராமர் அப்படியே திடுக் கிட்டு நின்றுவிட்டார். அங்கே, ஐயன் தம் லிங்கத் திருமேனியில் ரத்தம் வடியும் நிலையில் காட்சி தந்தார். 
‘ஐயோ, என்ன கொடுமை, தாயைக் கொன்ற பாவத்தைத் தீர்க்க வந்த இடத்தில், சிவபெருமானை வேறு காயப்படுத்தி, பெரும் பாவத்தைத் தேடிக்கொண்டேனே. இனி என்னு டைய பாவங்களை எங்கே போய் போக்கிக் கொள்வேன்’ என்று மனம் வருந்தியவராக, தம்மை மாய்த்துக் கொள் வதற்காக கோடரியைத் தம் நெஞ்சுக்கு நேராக உயர்த் தினார். அப்போது சிவபெருமான் தோன்றி, `‘பரசுராமா! வருத்தம் வேண்டாம். உன் உயிரைப் போக்கிக்கொள்ளவும் வேண்டாம். நீ இங்கிருந்தபடியே கபிலநதியில் நீராடி, என்னை வழிபடுவாயாக’’ என்று வரம் அருளினார்.  பரசு ராமரின் மழுவால் உண்டான தழும்பையே சுவாமியின் லிங்கத் திருமேனியில் காண்கிறோம்.
ஐயனின் சந்நிதிக்கு இடப்புறத்தில் அம்பிகை பார்வதி தனிச் சந்நிதியில் காட்சி தருகிறார். நஞ்சுண்டேஸ்வரர் வடகிழக்கு திசையை நோக்கியபடி காட்சி தருவதால், நந்தியும் சிவபெருமானின் பார்வையில் படும்படியாக சற்று விலகியிருக்கிறது. இங்குள்ள இறையனாருக்கு விஷ நாசகர் என்றொரு திருப்பெயரும் உண்டு. அதற்கான காரணத்தை நம்முடன் வந்த அன்பர் ஒருவர் பகிர்ந்து கொண்டார்.
மன்னரைக் காப்பாற்றிய இறைவன்!
மைசூரை ஆட்சி செய்த உடையார் வம்சத்து மன்னர் களில், ராஜ உடையார் என்பவர் மிகவும் புகழ் பெற்றவ ராகவும் மக்களின் பேரன்பைப் பெற்றவராகவும் இருந் தார். வாரம் தவறாமல் நஞ்சுண்டேஸ்வரரை தரிசித்து வழிபடுவது அவருடைய வழக்கம்.
இந்நிலையில், ராஜ உடையாரின்  எதிரிகள் அவரைக் கொன்றுவிடவேண்டும் என்று தீர்மானித்தனர். அதே நேரம், அவருடைய மரணம் இயல்பானதாக இருக்க வேண்டும் என்றும் நினைத்தனர். எனவே, நஞ்சுண்டேஸ் வரரின் தீர்த்தப் பிரசாதத்தில் விஷம் கலந்துவிட முடிவு செய்து, அர்ச்சகரையும் மிரட்டிப் பணிய வைத்துவிட்டனர்.  

ஒருநாள், தரிசனம் முடிந்ததும் தீர்த்தப் பிரசாதம் கொடுக்க வந்த அர்ச்சகரின் கை வழக்கத்துக்கு மாறாக நடுங்குவதைக் கண்டார். அர்ச்சகரிடம் காரணம் கேட்டார். இனியும் மன்னரிடம் எதையும் மறைக்கக்கூடாது என்று நினைத்த அர்ச்சகர், உண்மையைக் கூறிவிடுகிறார். மன்னர் அவரிடம், ‘‘நீங்கள் கொடுக்க வந்த தீர்த்தத்தை இறைவனின் பிரசாதமாக நினைத்துக் கொடுத்தீர்களா அல்லது விஷம் என்று நினைத்துக் கொடுத்தீர்களா?’’என்று கேட்டார்.
‘‘மன்னர் பெருமானே, புனிதமான சுவாமியின் பிரசாதத்தை, விஷமாக்கிவிட்டோமே என்று நான் வருந்தினாலும், ஈசனின் பிரசாதத்தில் எத்தகைய கொடிய விஷத்தைக் கலந்தாலும், அதன் தன்மை தீர்த்தத்தில் கலக்காது என்பதில் எனக்கு மிகவும் நம்பிக்கை இருந்தது. ஆகவே, சுவாமி பிரசாதமா கவே கொடுத்தேன்’’ என்றார்.
‘‘உங்களுக்கு நஞ்சுண்டேஸ்வரரிடம் இந்த அளவுக்கு பக்தி இருக்குமாயின், அதே அளவு பக்தி எனக்கும் உண்டு. ஆகவே, விஷம் கலந்த தீர்த்தத்தைக் கொடுங்கள்’’ என்று கேட்டு வாங்கிப் பருகினார். என்ன ஆச்சர்யம்! மன்னருக்கு ஒரு தீங்கும் விளையவில்லை. தீர்த்தத்தை வாங்கிய உள்ளங்கை மட்டும் கறுத்துப்போனது.  

நஞ்சுண்டேஸ்வரரின் அருளை எண்ணிப் பரவசப்பட்ட மன்னர், சிவபெருமானை ‘விஷ நாசகர்’ என்று பெயரிட்டு வழிபட்டார்.
மண்ணே மருந்து…
கட்டுரையின் தொடக்கத்தில், கோயில் கோபுரமும், கோயிலுக்குள் இருக்கும் மண்ணும் செங்காவி நிறத்தில் இருப்பதாகப் பார்த்தோமல் லவா? அதற்கான காரணத்தின் பின்னணியில் அமைந்த சம்பவம் இது. இந்த சம்பவத்தின் போதுதான் ஈசன் மற்றுமொரு முறை நஞ்சினை விரும்பி ஏற்றுக்கொண்ட தியாகத் திருவிளையாட லையும் நிகழ்த்தினார்.
சாகா வரம் பெற விரும்பிய கேசி எனும் அரக்கன், கடும் தவமிருந்து சிவபெருமானால் மட்டுமே தான் கொல்லப்படவேண்டும் என்பதாக வரம் பெற்றுக்கொண்டான். பின்னர் கருணா மூர்த்தியான சிவபெருமானை தினமும் வழிபட்டு வரத் தொடங்கினான். தம்மை வழிபடுபவரை கருணாமூர்த்தியான சிவபெருமான் அழிக்க மாட்டார் என்று நம்பினான்.
வரம் பெற்றுவிட்ட செருக்கில், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மக்களுக்கும் பல வகைகளிலும் துன்பம் விளைவித்து வந்தான். அனை வரும்  சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். தம்மை பக்தி சிரத்தை யுடன் பூஜித்த கேசியைக் கொல்ல சிவபெருமானுக்கு மனம் வரவில்லை. ஆனாலும், அசுரனின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனதால், கேசியை வதம் செய்துவிடுகிறார்.
இறக்கும் தருணத்தில் கேசி, ‘ஐயனே, என் தவறுகளை மன்னித்து, என்னை ஆட்கொள்ளும். மேலும் என்னுடைய ரத்தத்தால் இங்கே எந்தப் பகுதியெல்லாம் சிவப்பு நிறத்தில் காட்சி தருகிறதோ, அந்த மண்ணெல்லாம் வியாதியைப் போக்கும் தன்மை கொண்டதாக மாறவேண்டும்’’ என்று வரம் கேட்டான். சிவபெருமானும் அப்படியே வரம் தந்து அருளினார். அதன்படி நஞ்சன்கூடு மண்ணின் மகிமை எங்கெங்கும் பரவிற்று. நஞ்சன் கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் பிரசாதமாகத் தரப்படும் மண்ணுடன் சிறிது தும்பைப்பூ சேர்த்து நீரில் கலந்து அருந்தினால், எப்படிப்பட்ட நோயும் குணமாவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.
கேசி இறந்துவிட்டாலும், அவன் செய்த கொடுஞ்செயல்கள் மற்றும் தீய எண்ணங்களின் விளைவாகச் சுற்றிலும் ஏற்பட்டிருந்த அதிர்வலைகள் கடும் விஷத் தன்மை கொண்டதாக மாறி, பல உயிர்களையும் அழித்தன. எனவே, பூமிதேவி சிவபெருமானிடம் பிரார்த்தித்தாள். பூமிதேவியின் பிரார்த்தனைக்காகவும், உலக உயிர்களைக் காப்பாற்றவும் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், பூமியில் பரவியிருந்த விஷத்தைப் பருகிவிட்டார். இறைவனின் அளவற்ற கருணைத் திறத்தினை வியந்து போற்றிய தேவர்களும் முனிவர்களும், நஞ்சுண்டேஸ்வரரைப் பணிந்து வணங்கி, நஞ்சன்கூடு திருத்தலத்திலேயே எழுந்தருளி, மக்களுக்கு அருள்புரியும்படி வேண்டிக்கொண்டனர். அதன்படி ஐயன் இந்தத் தலத்தில் எழுந்தருளினார்.
காலப்போக்கில் புதர் மண்டி மண்ணுக்குள் மறைந்துவிட்ட  ஈஸ்வரர், பிற்காலத்தில் பரசுராமருக்கு வெட்டுப்பட்ட திருமேனியராகக் காட்சி தந்து, இன்றளவும் நமக்கு அருள்புரிந்த வண்ணம் இருக்கிறார்.
நம்பொருட்டு இரண்டாவது முறையாகவும் நஞ்சினை உகந்து ஏற்ற ஐயனின் கருணைத்திறத்தினைப் போற்றியபடி, தரிசனம் முடித்துத் திரும்பினோம். நீங்களும் ஒருமுறை நஞ்சுண்ட நாதனைத் தரிசித்து வாருங்கள்; உங்களது பிரச்னைகளை எல்லாம் களைந்து நல்வாழ்வு அருள்வார் நஞ்சன்கூடு நமசிவாயன்!


தாமரை பீடத்தில் வீரபத்திரர்!
ஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் வீரபத்திரர் சந்நிதி கொண்டிருக்கிறார். தம் திருக்கரங்களில் கத்தி, வில், அம்பு மற்றும் தண்டு வைத்துக்கொண்டு காட்சி தருகிறார். பொதுவாக வீரபத்திரருக்கு அருகில் பத்ரகாளிதான் காட்சி தருவார். ஆனால், இங்கே தாட்சாயினி கையில் தாமரைத் தண்டுடன் காட்சி தருகிறார். வீரபத்திரருக்கு வலப் புறத்தில் தட்சனும் இருக்கிறார். மூவரும் தாமரைப் பீடத்தின் மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்கள். தட்ச யாகத்தின்போது தம்மை அவமதித்த தட்சனைக் கொன்றதுடன், யாககுண்டத்தில் விழுந்துவிட்ட தாட்சாயினியைத் தூக்கிக்கொண்டு நடனமாடினார். தன் கணவரும், மகளும் இறந்தது கண்டு கதறி அழுத தட்சன் மனைவி பிரசுத்தாதேவி, சிவபெருமானிடம் தன் கணவரையும், மகளையும் உயிர்ப்பித்துத் தரும்படி பிரார்த்தித்தாள். சிவபெருமானும் தட்சனையும் தாட்சாயினியையும் உயிர்த்தெழச் செய்கிறார். அதன் காரணமாகவே இங்கே வீரபத்திரருக்கு அருகில் தாட்சாயினியும், தட்சனும் காட்சி தருகின்றனர்.


தினம் தினம் அன்னாபிஷேகம்!
பொ
துவாக சிவன் கோயில்களில் ஐப்பசி மாதப் பௌர்ணமியன்றுதான் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆனால், நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் தினமும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் சுக்கு, வெண்ணெய், சர்க்கரை ஆகிய மூன்றையும் கலந்து செய்த ‘சுகண்டித சர்க்கரை’ எனும் மருந்தை பிரதான நைவேத்தியமாகப் படைக்கின்றனர்.


கபில நதியின் வரலாறு…
லத்தின் சிறப்புக்கு சிறப்பு சேர்க்கிறது இங்கு பாய்ந்தோடும் கபில நதி! தந்தையின் அசுவமேத யாகக் குதிரையை கபிலமுனிவர்தான் திருடிவிட்டார் என்று குற்றம் சாட்டியதால், சகர மன்னர்களின் மைந்தர்களை சாபத்தால் எரித்துவிட்டார் கபிலமுனிவர். பின்னர், `அவசரப்பட்டு சகர குமாரர்களை சபித்துவிட்டோமே’ என்று வருந்திய கபில முனிவர், அதனால் தாம் இழந்துவிட்ட தவவலிமையை மறுபடியும் பெற விரும்பி, சிவபெருமானின் கட்டளையினை ஏற்று, தவம் புரிவதற்காக நீலாகல மலைக்குச் சென்று, நெடுந்தவம் மேற்கொண்டார். காலப்போக்கில் கபில முனிவரின் உடலிலிருந்து நறுமணம் மிக்க திரவம் ஊற்றெடுத்து, பூமியை நோக்கி வடிந்து, ஒரு துளசிச் செடியின் அருகில் விழுந்தது. அந்த திரவம்தான் கபில நதியின் ஊற்றுப் பெருக்கு. எனவேதான் அந்த நதிக்கு `கபில நதி’ என்னும் பெயர் ஏற்பட்டது.


எங்கிருக்கிறது… எப்படிச் செல்வது..?
மை
சூரிலிருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது நஞ்சன்கூடு. மைசூரிலிருந்து பேருந்து வசதி உள்ளது. 
நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6 முதல் பகல் 1 மணி வரை; மாலை 4 முதல் 8.30 மணி வரை

One response

  1. mikavum payanulla seithikal.nanry.

%d bloggers like this: