அடம்பிடிக்கும் சுட்டீஸ் – அப்படியே சாப்பிட வைக்கும் சூப்பர் உணவுகள்

குழந்தையாகவே இருந்திருக்கலாம், அது ஒரு பொற்காலம்…’ `குழந்தைப் பருவம் போல் வருமா?’- இதுபோன்ற வசனங்களை நம்மில் பலர் அடிக்கடி சொல்வதுண்டு. ஆம்… குழந்தையாக இருந்தால், என்ன குறும்பு வேண்டுமானாலும் செய்யலாம்; அவர்களின் எண்ணங்களுக்குத் தடைகள் விதிக்கவோ, கனவுகளின் சிறகை உடைக்கவோ யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால், இருப்பதிலேயே கஷ்டமான விஷயம், பெற்றோராக இருப்பதுதான்.

 

பள்ளிக்குக் கிளம்புவதில் தொடங்கி, குளிப்பது, சாப்பிடுவது, தூங்குவது, ஹோம் வொர்க் செய்வது என எல்லாவற்றுக்கும் அடம்பிடிக்கும் குழந்தைகளைக் கையாள்வது பெற்றோருக்கு சவால் நிறைந்த பணியாகும். குறிப்பாகக் குழந்தைகள் தாம்  உண்ணும் உணவில் காய்கறிகளையும் பழங்களையும் ஒதுக்கிவிடுவார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளைச் சத்தான உணவுகளைச் சாப்பிடவைக்க என்ன செய்யலாம்?

எளிய வழிமுறைகளைச் சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ்.

* கடைகளுக்குக் காய்கறி வாங்கச் செல்லும்போது, குழந்தைகளை உடன் அழைத்துச் செல்லுங்கள். இதன்மூலம் ஒவ்வொரு காய்கறிகளைப் பற்றியும் அவற்றின் நன்மைகள் பற்றியும் அவர்களாகவே கேட்டுத் தெரிந்துகொள்ளும் சூழலை உருவாக்கலாம்.
குழந்தைகள் எப்போதும் பாராட்டு விரும்பிகள். ஆகவே உங்கள் குழந்தைகள் காய்கறி, பழங்களை ஒவ்வொருமுறை சாப்பிடும்போதும் அவர்களைப் பாராட்டுங்கள். அப்போது அருகே யாராவது நின்றால், ‘என் குழந்தை இந்தக் காய் சாப்பிடுவான், அந்தப் பழத்தை விரும்பிச் சாப்பிடுவாள்’ என அவர்கள் முன் பாராட்ட வேண்டும். இதனால் அடுத்தமுறை இன்னும் ஆர்வமாகக் காய்கறி, பழங்களை உண்பார்கள்.
ஜங்க் ஃபுட் விரும்பும் குழந்தைகளிடம் அவை ஏற்படுத்தும் தீமைகள் பற்றிக் கூறுங்கள். அதேநேரத்தில் எல்லா நேரங்களிலும் ஜங்க் ஃபுட் ஏற்படுத்தும் தீமை பற்றிக் கூறினால், அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்திவிடும். ஏனென்றால் நாம் எதைச் செய்யாதே என்கிறோமோ, அதை ரிஸ்க் எடுத்துச் செய்வது அவர்களின் குணமாக இருக்கும். எனவே, அவர்களின் மனஓட்டத்தை அறிந்து, அதற்கேற்றபடி விளக்கிக்கூறுங்கள்.
ஜங்க் ஃபுட் சாப்பிட்டே ஆகவேண்டும் எனக் குழந்தைகள் அடம்பிடித்தால், அவர்கள் விரும்பி உண்ணும் பீட்சா, பர்கர் போன்ற எல்லாவகை உணவுகளையும் கடைகளிலிருந்து வாங்கிக் கொடுப்பதற்குப் பதில் வீட்டிலேயே செய்து கொடுங்கள்.
உணவு தொடர்பான உண்மைகளைக் கற்றுக்கொடுக்கும்போது குழந்தைகளின் உளவியலைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம். ‘ப்ளே-வே’ என்றொரு கற்பித்தல்முறை உள்ளது. ஒரு விஷயத்தை, எளிமையாகவும் விளையாட்டுத்தனமாகவும் சொல்லிக் கொடுப்பதுதான் `ப்ளே-வே.’
சாப்பிடத் தூண்டுகிற, பசி உணர்வை அதிகப்படுத்தக்கூடிய உணவுகளைப் பரிமாறுங்கள். விதவிதமான வண்ணங்களில், அழகழகாகப் பரிமாறும்போது குழந்தைகள் சாப்பிட்டுவிடுவார்கள்.
சந்தையில் காய்கறிகளை வெட்ட விதவிதமான வடிவங்களில் கட்டர்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி உணவு தயாரித்துக் குழந்தைகளை ஆச்சர்யப்படுத்துங்கள். குறிப்பாக சாலட் செய்யும்போது கட்டர்களை மறக்கவேண்டாம். நிறைய காய்கறிகள் சேர்த்துச் செய்யக்கூடிய சாலட் வகைகளை அடிக்கடி கொடுங்கள். சாலட் செய்யும்போது அவர்களுக்குப் பிடித்த காய்கறிகளை, கூடுதலாகச் சேருங்கள்.
ஒரே வகை காய்கறிகளை அடிக்கடி செய்து கொடுக்காதீர்கள். மீண்டும் மீண்டும் ஒரே வகையாகச் சமைக்காதீர்கள். எந்தவித அட்டவணையும் இல்லாமல் புதுப்புதுக் காய்களை, புதுமையான விதங்களில் தயாரித்துக் கொடுங்கள்.
கேரட் வெள்ளரி ஸ்டிக்ஸ், தக்காளி சூப் எனப் எளிய ஸ்நாக் வகை உணவுகளைப் புதிது புதிதாக முயற்சி செய்யுங்கள். எல்லா நேரமும் இட்லி, தோசை, சாதம் என ஏதோ ஒரு ஃபார்முலாவை வைத்துக்கொண்டு அதன்படி தரவேண்டாம்.
வாரத்தில் ஓரிரு நாள்கள் என்ன சாப்பிடவேண்டும் என்பதைக் குழந்தைகளைக் கொண்டே தேர்வு செய்யச் சொல்லுங்கள். என்ன காய், எப்படிச் சமைக்க வேண்டும், எப்படிப் பரிமாற வேண்டும்  என அவர்களாகவே முடிவு செய்யட்டும். இதுபோன்ற நேரங்களில், அந்தச் சமையலை செய்வதற்கு சிறுசிறு உதவிகளைச் செய்யுமாறு அறிவுறுத்துங்கள். இதன்மூலம், அவர்களது தனிப்பட்ட ஒழுக்கம் வளரும்.
நீங்கள் தயாரிக்கும் உணவு, அவர்களுக்கு ஃபன் உணர்வைத் தரவேண்டும். உதாரணமாகப் பட்டாம்பூச்சி, ஆமை, நத்தை என விதவிதமான வடிவங்களில் பழங்களைப் பரிமாறுங்கள்.
பழவகைகள் மட்டுமன்றி, வேறு உணவுகளிலும் சத்துகளைச் சேர்க்கலாம். கீரை தோசை, கேரட் தோசை, கீரை வடை, கீரை சாம்பார், கேரட் குழிப்பணியாரம், பீட்ரூட் சப்பாத்தி, பாலக் சிக்கன், பாலக் பன்னீர் போன்ற உணவுகளை செய்துகொடுங்கள்.
என்னதான் உணவு ருசியாக இருந்தாலும், உணவை நோக்கிக் குழந்தைகளை இழுத்து வருவது உணவின் நிறம்தான். குழந்தைகளின் உளவியல்படி, கண்ணைக்கவரும் எந்த விஷயத்திலும் அவர்கள் எளிதாக ஈர்க்கப் படுவார்கள். பீட்ரூட், கீரை, கேரட், எலுமிச்சை, ஆப்பிள் என பல வண்ணங்களில் அழகூட்டி உணவைப் பரிமாறினால், சாப்பிட்டு விடுவார்கள்.
பழங்கள், காய்கறிகளைப் பொறுத்தவரை, சீசனில் அதிகளவு கிடைப்பவற்றை அந்தந்தக் காலத்தில் கொடுக்க மறக்காதீர்கள். சாதாரண நாள்களில் கிடைக்கும் சத்துகளைவிட, சீசன் நாள்களில் அவை அதிகளவு நன்மையைத் தரும்.
சமைக்கும்போது, குழந்தைகளை அருகில் வைத்துக்கொள்ளுங்கள். அவர்களுக்குக் கதை சொல்லிக்கொண்டே சமைத்து, அழகான விதத்தில் பரிமாறுங்கள். சமைக்கும்போது, நீங்கள் சோர்வாக இருந்தால் அந்த உணர்வைக் குழந்தைக்குக் கடத்திவிட வேண்டாம். அதேபோல, உங்களது கோபத்தையும் வேகத்தையும் குழந்தையிடம் திணிக்காதீர்கள். வெறுப்புடன் பரிமாறப்படும் உணவை, எந்தக் குழந்தையும் விரும்பாது.

வசந்தா – ஃபுட் ஸ்டைலிஸ்ட்

இப்படியெல்லாம் செய்து மகிழ்வியுங்கள்…!
இட்லி வித் ஃப்ரூட்ஸ் (Idly With Fruits)
தேவையானவை: இட்லி 2, ஆப்பிள், திராட்சை, கேரட், அன்னாசி, சாக்லேட் க்ரீம்

செய்முறை: குழந்தைகள் எடுத்துச் செல்லும் லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்புவதற்கு ஏற்ற உணவு இது. இரண்டு இட்லியையும் பேப்பர் மோல்டில் (Paper Mould) வைத்துக்கொண்டு அதைச் சுற்றிலும் ஆப்பிள், திராட்சை, அன்னாசிப் பழங்களை வைத்து அலங்கரிக்கவும். இட்லியின் மீது சாக்லேட் க்ரீமைக் கொண்டு கண், வாய்ப்பகுதிகளை வரைந்து கொள்ளவும். காது, மூக்குப் பகுதிகளைக் கேரட்டைக் கொண்டு உருவாக்குங்கள்.
நன்மை: இட்லியைப் போன்ற சிறந்த உணவு எதுவுமில்லை. செரிமானத்துக்கு அதிகம் உதவும் இட்லியில் நார்ச்சத்து, வைட்டமின், தாதுக்கள் எனப் பலவிதமான சத்துகள் உள்ளன. காய்கறிகள் கலந்த சாம்பார் அல்லது புதினா சட்னி போன்றவற்றை சைட்-டிஷ்ஷாகக் கொடுத்தால், கூடுதல் சிறப்பு.
கிவி ஆமை (Kiwi Tortoise)
தேவையானவை: கிவி பழம், அகர் அகர், கீரை, ஆப்பிள், வாழைப்பழம்.

செய்முறை: அகர் அகரை நீரில் வேக வைத்தால் ஜெல்லி வடிவம் கிடைக்கும். பாஸ்தா ஃப்ளேவர் அகர் அகரைப் பயன்படுத்துங்கள். கீரையை அரைத்து இதனுடன் கலந்து குழியாக உள்ள பாத்திரத்தில் ஊற்றி வையுங்கள். சிறிதுநேரம் கழித்துப் பாத்திரத்தைக் கவிழ்த்தால்,  வட்டமான ஓடு வடிவம் கிடைக்கும். இதன்மேல் கிவி பழத்தை மெலிதாக வெட்டி வைக்கவும். ஆப்பிளை வெட்டி, முகம் தயாரித்துக்கொண்டு, தயாரித்த ஓடுப் பகுதியுடன் சேர்த்துக்கொள்ளவும். வாழைப்பழத் துண்டுகளால் கால் பகுதிகளைச் செய்து ஒட்டிவைத்துக்கொண்டால், ஆமை ரெடி!
நன்மை: வைட்டமின் ஏ, இ, கே மற்றும் பீட்டா கரோட்டின், ஒமேகா 3 அமிலம் போன்றவை கிவியில் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு இது.
நத்தை வடிவ வெள்ளரிக்காய்
தேவையானவை: வெள்ளரிக்காய், சாக்லேட் இட்லி, பட்டாணி, கேரட், ப்ளம்ஸ்

செய்முறை: வெள்ளரிக்காயின் நடுப்பகுதியை நீக்கிவிட்டு, அதில் சாக்லேட் இட்லியை வைத்துவிடுங்கள். நுனியில் உள்ள இட்லியில் சிறிதாக ஓட்டை போட்டு, பட்டாணி, கேரட்டை படத்தில் காட்டியுள்ளபடி வையுங்கள். இட்லியின் மேற்பரப்பில் ப்ளம்ஸ், நட்ஸ் தூவினால், நத்தை வடிவ வெள்ளரி ரெடி.
நன்மை:  உடலில் நீர்ச்சத்துக் குறைவு (Dehydration) ஏற்படாமல் இருக்க வெள்ளரிக்காய் உதவும். சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் குழந்தைகளுக்கும் ஏற்படும். வெள்ளரிக்காய் அதைத் தவிர்க்க உதவும். இந்த உணவில் இட்லியும் இருக்கும் என்பதால், அதன் நன்மைகளும் வலு சேர்க்கும்.
டெடி பிரெட் ஆம்லெட் (Teddy Bread Omlet)
தேவையானவை: கோதுமை பிரெட், ஆம்லெட், பழங்கள்.

செய்முறை: கோதுமை பிரெட்டை, படத்தில் காண்பித்துள்ள முக வடிவம் போல வெட்டிக்கொள்ளவும். தனியாக ஆம்லெட் செய்து வைத்துக்கொள்ளுங்கள். தட்டில் ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களை வைத்து அதன்மேல் ஆம்லெட்டை விரித்து வையுங்கள். பாதி ஆம்லெட்டை அதன்மேல் விரித்து, மீதியை டெடியின் தலைக்கு அடியில் வைத்துவிடவும். இது டெடி படுத்திருப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும்!
நன்மை: குழந்தைகளுக்கு நல்ல கொழுப்பு அவசியம் தேவை. அதற்கான சிறந்த உணவு முட்டை. ஒருநாளைக்கு இரண்டு முட்டைகள் வரை குழந்தைகள் சாப்பிடலாம். கூடுதலாக பிரெட்டின் சத்துகளும் இதில் சேரும்.
பட்டர்ஃப்ளை பிரெட் சாண்ட்விச் (Butterfly Bread Sandwitch)
தேவையானவை: கோதுமை பிரெட், ஆரஞ்சு, கேரட், முள்ளங்கி, வெங்காயத்தாள் (Spring Onion).

செய்முறை: இரண்டு கோதுமை பிரெட்டை பட்டாம்பூச்சியின் இறக்கை அமைப்புக்கு ஏற்றவாறு வெட்டிக்கொள்ளுங்கள். தக்காளி, வெங்காயம், வெள்ளரியை பிரெட்டின் இடையே அடுக்கி வைத்தால், சாண்ட்விச் ரெடி! அடுத்து, முள்ளங்கியின் நடுப்பகுதியை மட்டும் மெலிதாக எடுத்துப் பட்டாம்பூச்சியின் முகமாக்கிக்கொண்டு வெங்காயத்தாள்மூலம் அதன் உணர்வுக் கொம்புகளை செட் செய்துகொள்ளவும். கடைசியில் கேரட்டால் பட்டாம்பூச்சியின் வயிற்றுப் பகுதியைச் செய்துவைத்தால் பட்டர்ஃப்ளை சாண்ட்விச் ரெடி!
நன்மை: கோதுமையில் உள்ள நார்ச்சத்துகள் வயிற்றைச் சுத்தமாக வைக்க உதவும். இதனால் உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாப்பதுடன் இதய ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். லிகான்ஸ் (lignans) சத்து, மலக்குடல் புற்றுநோயைத் (Colon Cancer) தடுக்க உதவும். குளூட்டன் சென்சிட்டிவாக உள்ள குழந்தைகளுக்கு கோதுமைப் பொருள்களை தவிர்த்திடுங்கள்.
மஷ்ரூம் லாலிபாப் (Mushroom Lollypop)
தேவையானவை: காளான், அரிசி மாவு, மிளகாய்த் தூள், கார்ன்ஃப்ளார் மற்றும் உப்பு, சாஸ், பிரெட் தூள், டூத் பிக் ஸ்டிக்.

செய்முறை: அரிசி மாவில் தேவையான அளவு மிளகாய்த் தூள், கார்ன்ஃப்ளார், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு கலந்துகொள்ளவும். அந்தக் கலவையில் மஷ்ரூமை நனைத்து, பிரெட் தூள் தூவி எண்ணெயில் வறுத்தெடுக்கவும். டூத் பிக் ஸ்டிக்கில் செருகிப் பரிமாறவும்.
நன்மை: காளான், புரதம் மற்றும் நார்ச்சத்துகளை அதிகம் கொண்டது. இதிலுள்ள செலினியம் என்ற தாதுப்பொருள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்; பட்டன் காளான்கள், புறஊதாக் கதிர்களின் வெளிச்சத்தில் வளரும் பட்சத்தில், வைட்டமின் ‘டி’ சத்தை அதிகரிக்கச் செய்யும்.
மினி இட்லி (Mini Idly)
தேவையானவை: இட்லி மாவு, சாக்லேட் சிரப், ரோஸ்மில்க் சிரப், டூத் பிக் ஸ்டிக்.

செய்முறை: சாக்லேட் சிரப் கலந்த இட்லி, ரோஸ்மில்க் சிரப் கலந்த இட்லி, நார்மல் இட்லி செய்துகொள்ளுங்கள். டூத் பிக் ஸ்டிக்கில் மூன்றையும் அடுக்கி வைத்து, குழந்தைகளை மகிழ்வியுங்கள்.
நன்மை: புழுங்கல் அரிசியில் செய்யப்படும் இட்லி, உடலுக்கு மிகவும் நல்லது. சோடியம் குறைவான உணவு என்பதால், இதயத்துக்கு மிகவும் நல்லது.
கேட்டர்பில்லர் பழங்கள் (Caterpillar Fruits)
தேவையானவை: சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ஆப்பிள், கறுப்புத் திராட்சை, முள்ளங்கி, கேரட்.

செய்முறை: ஆப்பிளைச் சிறிது சிறிதாக நறுக்கி, அதைப் புழுவின் உடல் பகுதியைப்போல அடுக்கிக்கொள்ளுங்கள். கால்பகுதிக்கு வெள்ளரியை `எல்’ வடிவத்தில் வெட்டி, உடல் பகுதிக்கு கீழே – முன் இரண்டு; பின் இரண்டு வைத்துக்கொள்ளவும். தோல் உரித்த ஆப்பிளில் ஒரு லேயரை எடுத்து அதன் முகத்துக்கு வைத்து, கண்களுக்கு மிளகும் காதுக்குக் கறுப்புத் திராட்சையையும் வைக்கவும். காதுகளுக்குக் கேரட் வைத்து இணைத்துவிட்டால், டிஷ் ரெடி!
நன்மைகள்: குறைந்த கலோரி உணவான ஆப்பிளில் வைட்டமின் ஏ, பி 1, 2 மற்றும் சி, அயோடின், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை உள்ளன. இது பல், குடல், நுரையீரலைப் பாதுகாக்கும். அதேபோல வெள்ளரியில் உள்ள வைட்டமின்கள் ஏ மற்றும் சி, குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
நூடுல்ஸ் நெஸ்ட் (Noodles Nest)
தேவையானவை: வீட் நூடுல்ஸ், பணியாரம்- 2, கேரட், தயிர்.

செய்முறை: நூடுல்ஸை நன்றாக வேகவைத்து, உப்பு, காய்கறிகளுடன் சேர்த்துச் சமைத்துத் தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு பணியாரங்கள் செய்து, அவற்றில் தயிர், மிளகு, கேரட் போன்றவற்றால் பறவையின் கண், மூக்கு, வாய் போன்று வடிவமைத்துக் கொள்ளுங்கள். சாப்பாட்டுத் தட்டில், பறவைகளின் கூடு போல நூடுல்ஸைச் சுற்றி வைத்து, பறவை வடிவில் செய்த பணியாரத்தை அதன் நடுவே வைத்துவிட்டால், நூடுல்ஸ் நெஸ்ட் ரெடி!
நன்மை: கோதுமையில் உள்ள கால்சியம், மக்னீசியம் போன்ற தாதுப்பொருள்கள் உடலுக்கு மிகவும் நல்லது. அதிலுள்ள லிகான்ஸ் (lignans) சத்து, மலக்குடல் புற்றுநோயைத் (Colon Cancer) தடுக்க உதவும். அதேபோல, குழந்தைகளுக்கு கோதுமை அதிகம் கொடுப்பதால் ஆஸ்துமா பிரச்னையைத் தடுக்கலாம்.

%d bloggers like this: