Advertisements

பேபி மூன் – இது இன்னுமொரு தேனிலவு!

புதுமணத் தம்பதிகள் ஹனிமூன் செல்வது வழக்கம். அதுபோலவே இப்போது ட்ரெண்டாகிவரும் மற்றுமொரு சுற்றுலா, ‘பேபிமூன்’. அதாவது, கர்ப்பகாலத்தில் கணவனும் மனைவியும் தனித்து மேற்கொள்ளும் அன்னியோன்யப் பயணம். வெளிநாட்டில் பிரபலமான இது, தற்போது நம் நாட்டிலும் பலரால் விரும்பப்படுகிறது.

இங்கிலாந்து இளவரசர் வில்லியம், 2014-ம் ஆண்டில் அப்போது கர்ப்பமாக இருந்த தன் மனைவி கேத் மிடில்டனுடன் கரீபியன் தீவுக்கு இன்பச் சுற்றுலா சென்றார். அந்தப் பயணம் ‘பேபிமூன்’ என்று வர்ணிக்கப்பட்டு, உலகம் முழுக்கப் பரவ ஆரம்பித்தது. கணவன், மனைவிக்கு இடையே அன்பை அதிகரிக்கும் இந்தச் சுற்றுலாவில், வயிற்றுக்குள் வளரும் குட்டி உயிரின் பாதுகாப்பையும் உறுதிசெய்யவேண்டியது மிக முக்கியம். அதற்கான வழிகாட்டல்களை வழங்குகிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமமூர்த்தி.

பேபிமூன் ஏன் அவசியம்?

* கர்ப்பகாலம் என்பது, பெண் உடலில் நடக்கும் மாற்றங்களால் பெரும்பாலும் அவருக்கு மன அழுத்தத்தைத் தருவதாக இருக்கும். அதிலிருந்து அவரை மீட்டுப் புத்துணர்வு தரும் விதமாக கர்ப்பகாலத்தில் ஒரு பயணம் அமைந்தால், பிரசவ நிகழ்வினை மகிழ்வுடன் எதிர்கொள்ள அவர் மனம் தயாராகியிருக்கும்.

* பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் பெற்றோர், உறவினர்கள் சூழவே இருப்பார்கள். அப்போது தன் கணவருடனான தனிமைப் பொழுதுகள் அப்பெண்ணுக்குக் குறைந்துபோகும். அது சிலருக்கு ஏக்கத்தை உண்டாக்கலாம். அதுபோன்ற தம்பதிகளுக்கு ‘பேபிமூன்’ நல்ல அனுபவமாக அமையும்.

* கணவரின் அருகாமை கர்ப்பிணிக்கு எந்தளவுக்கு மகிழ்வும் தன்னம்பிக்கையும் தரும் என்பதுதான் பேபிமூன் மூலம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம். கர்ப்பகாலத்தில் தாம்பத்யம் சரியா என்ற கேள்வி பல பெண்களுக்கும் எழும். கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்கள் கழித்து, தாம்பத்யம் தொடரலாம். என்றாலும், ஒவ்வொரு பெண்ணின் உடல்நிலையைப் பொறுத்தும் இது மாறுபடும் என்பதால், மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளவும்.

* பிரசவத்துக்குப் பிறகான நாள்கள் பற்றி முன்னரே கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி, புரிந்துகொண்டு, முடிவெடுக்கவும் ‘பேபிமூன்’ நாள்கள் கம்பளம் விரித்துத் தரும். பிரசவத்துக்கான செலவு, மெட்டர்னிட்டி, பேட்டர்னிட்டி விடுமுறை நாள்கள், பிறக்கவிருக்கும் குழந்தையையும் தாயையும் கவனித்துக்கொள்வதற்கான ஏற்பாடுகள் என இவற்றைப் பற்றியெல்லாம் பேசி முன்னதாகவே திட்டமிட்டுக்கொள்ளலாம்.

* அதுவரை கணவன், மனைவியாக இருந்தவர்கள், விரைவில் பெற்றோர் என்ற பொறுப்புக்கு முன்னேறவிருக்கும் மகிழ்வையும், அந்தப் பொறுப்புக்கு உரிய கடமைகளையும் பற்றிப் பேசி அவற்றுக்குத் தயாராக பேபிமூன் நாள்கள் கைகொடுக்கும்.

* கர்ப்பகாலத்தில் தாயின் மகிழ்ச்சி கருவின் வளர்ச்சிக்கு முக்கியமானது என்பதால், இந்த பேபிமூனின் பலன்கள் தம்பதிக்கு மட்டுமல்லாது குழந்தைக்கும் கிடைக்கக்கூடியது. மேலும், கணவருடன் செலவிடும் முழுமையான அருகாமைப் பொழுதுகள் மனைவிக்கு மட்டுமல்லாமல், கருவுக்கும் கிடைக்கும் என்பதால், தந்தை – குழந்தைக்கு இடையேயான ஆத்மபந்தமும் அதிகரிக்கும்.

* கர்ப்பிணி மனைவியுடன் அதுவரை சரியாக நேரம் செலவழிக்காத, அதுவரை அவர்களின் அன்பை, தங்களின் பொறுப்பை உணராமல் இருக்கும் கணவர்களுக்கு இந்த பேபிமூன் நாள்கள் அழகான பாடமாக அமையும். மனைவியின் உடல்நிலையையும் மனநிலையையும் புரிந்துகொண்டு, தங்கள் மனநிலையில் இருந்து மாறி, பொறுப்போடு நடந்துகொள்வார்கள்.

பயணம் சிறக்க, கவனம் முக்கியம்!

* கர்ப்பகாலத்தின் 18 – 24 வார காலகட்டத்தில் மட்டுமே பேபிமூன் செல்லலாம்.

* தம்பதி தங்களுக்குப் பிடித்தமான காலநிலை நிலவும் இடத்துக்குச் செல்லலாம். தங்கும் இடத்துக்கு அருகில் நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனை இருக்க வேண்டியது அவசியம்.

* நிறைய இடங்களைப் பார்க்கவும், தொடர்ந்து பயணத்திலேயே இருக்கவும் விரும்ப வேண்டாம். பயணத்தைவிட, சவுகரியமான தனிமையை அனுபவிப்பதே பேபிமூனின் நோக்கம்.

* சிறிய தூரத்துக்கு கார், அதிக தூரத்துக்கு ரயில் என்று பயணம் மேற்கொள்ளலாம். பயணத்தில் தொடர்ந்து ஒரே நிலையில் அமர்ந்திருப்பதைத் தவிர்க்க, இடையே வாகனத்தை நிறுத்திவிட்டு ரிலாக்ஸ் செய்துகொள்ளலாம். கார் பயணத்தில் அடிவயிற்றுக்குத் தக்கபடி சீட் பெல்ட் பயன்படுத்த வேண்டும்.

* விமானப் பயணத்துக்கு மருத்துவரிடம் சான்றிதழ்களைப் பெற்றுச் செல்வது அவசியம். விமானம் தரை இறங்கும்போது அசவுகரியம் ஏற்படுபவர்கள், விமானப் பயணத்தைத் தவிர்க்க வேண்டும். கப்பல் பயணத்தை கர்ப்பிணிகள் மேற்கொள்ளக்கூடாது.

* குளிர் பிரதேசம் எனில், அதற்குத் தகுந்த உடை அவசியம். பொதுவாக பேபிமூனுக்கு பருத்தி ஆடையே சிறந்தது. அதிக லக்கேஜ் எடுத்துச் செல்லக்கூடாது.

* கர்ப்பிணிகள் பயண நேரத்தில் சிறுநீரை அடக்கிவைப்பது உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும். தாகம் இல்லாவிட்டாலும் அடிக்கடி தண்ணீர் பருகி, சிறுநீர் கழிக்க வேண்டும்.

* கர்ப்பகால சிகிச்சை பற்றிய விவரங்களையும், ஸ்கேன் ரிப்போர்ட்களையும் மொபைல் கேமராவில் போட்டோ எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒருவேளை பேபிமூன் நாள்களில் எதிர்பாராத விதமாகப் பிரசவ வலி ஏற்பட்டால், மருத்துவர்கள் சிகிச்சையை மேற்கொள்ள முந்தைய சிகிச்சை விவரங்கள் அவசியம்.

* புதிய உணவு வகைகள், குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும். எளிதாக செரிமானம் ஆகும் உணவுகளே சிறந்தவை.

* பேபிமூன் மேற்கொள்வதற்கு முன்பு டாக்டரின் முழுமையான ஆலோசனையைப் பெற வேண்டும். டாக்டர் பரிந்துரைக்கும் கர்ப்பகால மருந்துகளை எடுத்துச்செல்ல வேண்டும்.

* ஒரு டைரியில் உங்களுடைய பயண அனுபவங்களை ரசித்து எழுதுங்கள். அது உங்கள் வாழ்வின் மறக்கமுடியாத பொக்கிஷமாக நிச்சயம் இருக்கும்.

* மருத்துவர் பேபிமூன் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தினாலோ, பொருளாதார, சூழல் காரணங்களால் பேபிமூன் செல்லமுடியாத நிலை ஏற்பட்டாலோ… கவலை வேண்டாம். கர்ப்பிணிகள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே மகிழ்ச்சியாக பேபிமூனைக் கொண்டாடலாம். கணவருக்கும் மனைவிக்குமான தனிமை நாள்களை, பொழுதுகளை வீட்டுக்குள்ளேயே உருவாக்கிக்கொள்ளுங்கள்!


 

இவர்களெல்லாம் பேபிமூன் பயணம் செல்லக்கூடாது!

* ‘ஹை ரிஸ்க் பிரெக்னன்சி’ வகை கர்ப்பிணிகள் பேபிமூன் செல்லக் கூடாது. ஐவிஎஃப் மூலம் கர்ப்பமானவர்களும், ஒன்றுக்கு மேற்பட்ட சிசுக்களை கர்ப்பத்தில் தாங்குகிறவர்களும் பயணத்தைத் தவிர்க்க வேண்டும்.

* சிலருக்கு கர்ப்பகாலத்தில் பயணம் என்றாலே பயமாகவும், அலர்ஜியாகவும் இருக்கும். அவர்கள் பேபிமூனைத் தவிர்த்திடவேண்டும்.

* பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று மருத்துவரால் அறிவுறுத்தப்பட்டிருந்தால் பேபிமூன் ஆசை வேண்டாம்.

* அளவுக்கு அதிகமான வெயிலும், குளிரும் இருக்கும் இடங்களுக்குச் செல்லக்கூடாது.

* தட்பவெப்பநிலை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும் இடங்களுக்கும் செங்குத்தான மலைப்பகுதிகளுக்கும் பயணம் செல்லக்கூடாது.

Advertisements
%d bloggers like this: