வந்தபின் ஆப்பரேஷன் தான் தீர்வு!

வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள், பலவீனமாகும் போது, இயற்கையாகவே உள்ள துவாரங்கள், உதாரணமாக, தொப்புள் வழியாக, குடல் மற்றும் குடல் பகுதியில் உள்ள கொழுப்பு, தோலுக்கு அடியில் இறங்கும். இதுதான், ‘ஹெர்னியா’ எனப்படும் குடலிறக்கம்.
பெண்களுக்கு அடுத்தடுத்து, சிசேரியன் மற்றும் அறுவை சிகிச்சைகள் செய்யும் போது, வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள், பலவீனம் அடைய வாய்ப்புகள் அதிகம்.

சிசேரியன் செய்து, தையல் போட்ட பின், அந்த இடத்தில் உள்ள காயம், முழுமையாக ஆறாமல், குறிப்பிட்ட இடத்தில் உள்ள தசையில், துவாரம் ஏற்படலாம்; இதன் வழியாக, குடல் வெளியில் வருகிறது.
காரணம், கர்ப்ப காலத்தில் குழந்தையின் எடை அதிகரிப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது… இதனால், வயிறு மற்றும் இடுப்பை சுற்றியுள்ள பகுதியில் உள்ள தசைகள், பலவீனமாகி விடும்.
ஹெர்னியாவில் பல வகைகள் இருந்தாலும், பெரும்பாலும், பெண்களுக்கு குழந்தை பெற்ற பின், வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள், பலமிழந்து போவதால் வரும், ஹெர்னியா பிரச்னை தான் பொதுவானது.
இதுதவிர, ‘பெமரல் ஹெர்னியா’ எனப்படும், தொடையின் மேல் பகுதியில், சிறிய வீக்கமாகவும் வரலாம். நீண்ட நாட்களாக மலச்சிக்கல், சிறுநீர் கழிப்பதில் தொந்தரவு, இருமல் இருந்தாலும், ஹெர்னியா வரலாம். மிகச் சிறிய அளவில் வயிற்றில் வீக்கம் இருந்து, வலி அல்லது வேறு தொந்தரவுகள் இல்லாமல் இருந்தால், பிரச்னை இல்லை.
இது, தசைகளால் ஏற்படும் பிரச்னை என்பதால், மருந்துகளால் சரி செய்ய முடியாது.
ஹெர்னியா வராமல் இருக்க, தசைகளை பலப்படுத்தும் உடற்பயிற்சிகள் தவறாமல் செய்யலாம்; வந்தபின், அறுவை சிகிச்சை மட்டும் தான் இதற்கு ஒரே தீர்வு!
டாக்டர் அமுதா ஹரி, மகப்பேறு சிறப்பு மருத்துவர், சென்னை.
dr_amudha@yahoo.co.in

%d bloggers like this: