Advertisements

உறவுகள் இனிக்க உன்னதப் பழக்கங்கள்!

மும்பையைச் சேர்ந்தவர் ரித்துராஜ் சஹானி. மனைவியுடன், அமெரிக்காவில் வசிக்கும் இவர், அங்குள்ள, பிரபல, ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.  தந்தை இறந்துவிட,  இவருடைய தாய் ஆஷா சஹானி மட்டும் மும்பையில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.  ரித்துராஜ், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும்,

இந்தியா வந்து தாயைச் சந்தித்துவிட்டுச் செல்வது வழக்கம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்  இந்தியா வந்திருந்தார் ரித்துராஜ், நீண்ட நேரம், ‘காலிங்பெல்’ அடித்தும் அவரின் தாய் கதவைத் திறக்கவில்லை.  பூட்டை  உடைத்து வீட்டிற்குள் சென்ற ரித்துராஜுக்கு பெரும் அதிர்ச்சி. உள்ளே அவரின் தாய், இறந்து பல நாள்கள் ஆன நிலையில், எலும்புக்கூடாக கிடந்துள்ளார்.

விசாரணையில் 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தன் தாயுடன் கடைசியாகப் பேசியதாக  ரித்துராஜ் கூறியதைக் கேட்டுக் காவல்துறையினர் அதிர்ந்து போனார்கள். ஆஷா மகனிடம் கடைசியாக போனில் பேசும்போது,  “என்னால் தனியாக வசிக்க முடியவில்லை. முதியோர் இல்லத்திலாவது சேர்த்துவிடு” என்று வருத்தத்தோடு பேசியிருக்கிறார். ஆஷாவின் மரணம் ரித்துராஜை மீளாச் சோகத்தில் ஆழ்த்தியது.

இது, ஏதோ ஒரு திரைப்படத்தின் காட்சி என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். மகாராஷ்டிராவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்த உண்மைச் சம்பவம்.  நகர வாழ்க்கையில்,  பொருளாதாரத்தை மட்டுமே இலக்காக வைத்துச் செயல்படுகிற இயந்திரமய வாழ்க்கைமுறையால்,  பல பிள்ளைகளின் நிலை ரித்துராஜின் நிலைபோலவே மாறிவிடுகின்றன. இன்று குழந்தைகளோடு பேசி மகிழ பெற்றோர்களுக்கோ, வயதான பெற்றோர்களோடு பேசி மகிழப் பிள்ளைகளுக்கோ கொஞ்சமும் நேரமில்லை.

தன்னலமற்ற அன்பை அள்ளித்தர தாய், கண்டிப்பையும் கனிவையும் காட்டத் தந்தை, அரவணைக்கப் பாட்டி,  தட்டிக்கொடுக்கத் தாத்தா என்றிருந்த உன்னதமான குடும்ப உறவுகள் இன்றைய வாழ்க்கை முறையில் சிதைந்துவிட்டன. 

மேற்கத்திய மோகத்தால் நாம் காலங்காலமாகப் பின்பற்றி வந்த உழைப்பு மிக்க வாழ்க்கை முறையையும், ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தையும் தொலைத்துவிட்டோம்.  இதனால், 60 வயதுக்கு மேல்  வர வேண்டிய சர்க்கரை நோய், உடல் பருமன், இதய நோய்களெல்லாம், பருவ வயதிலேயே வந்து உயிர்ப் பலி கேட்கின்றன. அது மட்டுமல்லாது, சிறு வயதிலேயே மனஅழுத்தம், மன உளைச்சல், பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமை என மன ரீதியான பலவீனங்களும் அதிகரித்து விட்டன என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

மரபு சார்ந்த வாழ்க்கை முறைகளை மீட்டெடுப்பது எப்படி?

குடும்ப நல மருத்துவர் கவிதா

“நாம் இழந்துவிட்ட பண்பாடுகளில் மிக முக்கியமான ஒன்று கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை. இன்றைய இளம் தலைமுறை, கூட்டுக்குடும்ப வாழ்க்கையைச் சுமையாகக் கருதுகிறது. என் வாழ்க்கை, என் குடும்பம் என்ற தனித்த சிந்தனையுடனே வாழ விரும்புகிறது.  தனிக்குடும்ப வாழ்வில் அன்பு, பாசம், உறவு ஆகியவற்றிலிருந்து நாம் சிறிது சிறிதாக விலகி, தொலைவில் நிறுத்தப்பட்டு விடுகிறோம்.

‘நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்’ என்பார்கள். வீடு என்பது வெறும் வாழ்விடம் மட்டுமல்ல, அதுவே குழந்தைகள் கற்றுக்கொள்கிற முதல் கல்விக்கூடம். தாய், தந்தை, தாத்தா, பாட்டி எனப் பெரியவர்களிடம் இருந்தே பிள்ளைகள் நல்ல விஷயங்களையும் கெட்ட விஷயங்களையும் கற்றுக்கொள்கிறார்கள். எனவே, பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற கெட்டப் பழக்கங்கள் இருந்தால், குறைந்தபட்சம் அவற்றை குழந்தைகள் முன்பு செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

காய்கறி, பழங்கள் போன்ற சத்தான உணவுகளைப் பெற்றோர் சாப்பிடுவதுடன், குழந்தைகளுக்கும் கற்றுத்தர வேண்டும். ‘ஜங்க் ஃபுட்’ போன்ற உடல் ஆரோக்கியம் கெடுக்கும் உணவுப்பொருள்களைத் தவிர்க்கச் சொல்லித்தர வேண்டும். உலர்ந்த பழங்கள், கடலை மிட்டாய், எள்ளுருண்டை போன்ற ஆரோக்கியமான நம் பாரம்பர்ய உணவுகளைச் சாப்பிடப் பழக்கலாம்.

வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பழக்கம் முக்கியம். இதன்மூலம், குழந்தைகள் எதை அதிகம் சாப்பிடுகிறார்கள், எதை ஒதுக்குகிறார்கள் என்பதைக் கண்காணித்து, சரி, தவறுகளை  அவர்களுக்குப் புரிய வைக்கலாம். இதனால்,  வளர்ச்சிக் குறைபாடு, சத்துக்குறைபாடு போன்றவற்றிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் மரபு வழியாகத் தொடரக்கூடிய நோய்கள் குறித்து  விழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும். வயதுக்கேற்றார் போல் குடும்ப உறுப்பினர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். வீட்டில், இந்த வேலைகளை இவர்கள்தான் செய்ய வேண்டும் என்றில்லாமல், பகிர்ந்து செய்யலாம். காலை அல்லது மாலை நேரங்களில் குடும்பத்தோடு நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. இப்படி, நல்லதொரு குடும்பத்தைப் பிள்ளைகளுக்கு அளித்து நல்லவிதமாக வாழ வழி செய்யலாம்”.

உறவுகளைத் தக்கவைத்துக் கொள்ளும் உன்னத வழிமுறைகள்

பாசிட்டிவ் பார்வை

‘‘நம் குடும்பம், மற்ற குடும்பங்களை விடச் சிறப்பானது என்ற பாசிட்டிவ் எண்ணத்தை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மற்றவர்களுக்கு மதிப்பளித்தல்

குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் மற்றவருடன் மனம் விட்டுப் பேசக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.   மற்றவர்களின் உணர்வு களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

குடும்பத்துடன் நேரம் செலவிடல்

இன்றைய வாழ்க்கை முறையில் பணிச்சுமையும் தொலைக்காட்சியும் நமது பொன்னான நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இதை முற்றிலும் தவிர்க்க முடியாவிட்டாலும் கொஞ்சம் குறைத்துக்கொள்ளலாம்.  விடுமுறை நாள்களில் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடுவது, விளையாடுவது, வெளியே செல்வது போன்றவற்றை வழக்கமாக்கிக் கொள்ளலாம். பொருளாதாரத் தேடலுக்காகப் பிரிந்திருந்தாலும், அவ்வப்போது உறவினர்களுடன் கூடி மகிழ்ந்து உறவுகளையும் வளர்க்க வேண்டும்.

பிரச்னைகளைக் கையாளுதல்

குடும்பத்தில் நடக்கக்கூடிய எந்த விஷயத்தையும்  பெரிதாக்கக்கூடாது. அனைத்தையும் நேர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.   சிறியவர்கள், பெரியவர்கள் என்றில்லாமல், ஒருவர் தவறிழைக்கும்போது மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும்.

பொறுப்பை உணர்தல்

உறவுகளில் ஒவ்வொருவரும் அவர்களுக்கான கடமைகளையும் பொறுப்புகளையும் உணர வேண்டும். தங்கள் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கக் கூடாது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும் மற்றவர்களின் மீது அக்கறையுடனும் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக,  மற்றவர்களிடம் நம் குடும்பத்தையும் குடும்ப உறுப்பினர்களையும் விட்டுக்கொடுக்கக் கூடாது. நம் குடும்பத்தைப் பற்றி மற்றவர்களிடம் விவாதிக்கவும் வேண்டாம்.

குழந்தை வளர்ப்பில் கவனம்

குழந்தைகளுக்குச் சுதந்திரம் கொடுக்கும் அதேவேளையில் அவர்கள் மீது கண்காணிப்பும் அவசியம். அவர்களை மற்றவர்களுடன் எந்த வகையிலும் ஒப்பீடு செய்யக்கூடாது. குழந்தைகளின் சின்னச் சின்ன வெற்றிகளையும் கொண்டாடி, அவர்களுக்கு உற்சாகம் கொடுக்க வேண்டும்.

எதிர்பார்ப்புகள் கூடாது

மற்றவர்களுடன் ஒப்பிட்டு அவர்களைப் போல் நமக்கு வசதிகள் இல்லை என்று எண்ணக்கூடாது. எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். எது சாத்தியமோ அதற்கு மட்டுமே ஆசைப்பட வேண்டும். பேராசை கூடாது. நம்மிடம் உள்ளவற்றை வைத்து நாம் நலமாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.  இவற்றையெல்லாம் கடைப்பிடித்தால் நம் குடும்பத்தில் உறவுகள் இனிக்கும், வாழ்வும் சிறக்கும்!”


மகிழ்ச்சி… மகிழ்ச்சியைத் தவிர வேறில்லை!

எவ்வளவு டென்ஷனான வேலையாக இருந்தாலும், பிஸியாக இருந்தாலும் சாப்பிடும் நேரத்தில் அதைக் கொஞ்சம் ஓரங்கட்டிவிடுவது நல்லது. குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும். குறைந்தபட்சம் இரவு நேரத்திலாவது இந்தப் பழக்கத்தை வைத்துக்கொள்வது, உறவை மேம்படுத்தும். சாப்பிடும்போது அன்றைக்கு நடந்தவற்றைப் பகிர்ந்துகொள்வது உறவுகளுக்கிடையே பிணைப்பை உருவாக்கும்.

* வார இறுதி நாள்களில் பெரும்பாலான நேரத்தைப் பொழுதுபோக்கு அம்சங்கள் விழுங்கிவிடும் அபாயம் உண்டு. எனவே, குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றாக இருக்கும் அந்த நாளில், டி.வி., மொபைல்போன், வீடியோ கேம், சோஷியல் நெட்வொர்க், கம்ப்யூட்டர் என அனைத்துப் பொழுதுபோக்குகளையும் தவிர்க்க வேண்டும்.

‘இதை இவர்தான் செய்ய வேண்டும்’ என்று வேலைகளைப் பிரித்து வைக்காமல், எல்லோரும் எல்லா வேலைகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு நாள் சமையலுக்கான காய்கறிகளைத் தேர்வுசெய்வது, என்ன சமைப்பது என ஆலோசிப்பது, காய்கறிகளை நறுக்குவது என வீட்டு வேலைகளை அனைவரும் பகிர்ந்துகொள்வது, மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும். சேர்ந்து சாப்பிடுவது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்குச் சேர்ந்து சமைப்பதும், சேர்ந்து வீட்டு வேலைகளைச் செய்வதும் முக்கியம்.

வீட்டிலேயே சிறிய தோட்டம் ஒன்றை அமைத்துப் பராமரிக்கலாம். இதுபோன்ற பழக்கங்கள், குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையேயிருக்கும் இடைவெளியைக் குறைக்கும். புத்தக அறிவைத் தாண்டிப் புதுப்புதுத் தகவல்களை, தாவரங்களைக் குறித்துக் குழந்தைகள் தெரிந்துகொள்ள உதவும்.

இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. குழந்தைக்கு நல்லது, கெட்டது இரண்டையும் எடுத்துச் சொல்லி வளர்க்க வேண்டும். வாழ்க்கையில் நீங்கள் சந்தித்து வரும்/வந்த பிரச்னைகள், அவற்றிலிருந்து எப்படி மீள்வது/மீண்டு வந்தீர்கள் என அனைத்தையும் அவர்களிடம் ஆலோசியுங்கள்.

குழந்தைளோடு செலவழிக்க நேரத்தை ஒதுக்குங்கள். அவர்களோடு சேர்ந்து விளையாடுங்கள். விளையாட்டு, திரைவழி அல்லது டிஜிட்டல்மயமாக இருக்க வேண்டாம். சேர்ந்து விளையாடும் பழக்கம், விளையாட்டுக்கே உரிய சந்தோஷத்தை இரட்டிப்பாக்கி, உடலையும் மனதையும் பாதுகாக்கும்.

*
  மகிழ்ச்சியான குடும்பத்துக்கான அடித்தளமே, ஆரோக்கியமான உடல்தான். எனவே, உடல்நலத்தில் கவனமாக இருங்கள். உடல் தொடர்பான எந்த பாதிப்பையும் விளையாட்டாக நினைக்காமல், மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்.

* நிறைய நடுத்தரக் குடும்பங்கள் செய்யும் தவறு, தங்களின் பொருளாதாரச் சூழலை குழந்தையிடம் மறைப்பது. அதைச் செய்யாதீர்கள். ‘மகிழ்ச்சியாக இருப்பதற்கு பணம் தேவையில்லை’ என்பதைச் சொல்லிக் கொடுத்து அவர்களை வளர்க்கப் பாருங்கள். பணம் எங்கெல்லாம் எதற்கெல்லாம் தேவை, தேவைக்கு அதிகமான பணம் என்ன செய்யும், சேமிப்பு எதற்கு என்பதையெல்லாம் குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்கவும்.

* விடுமுறை நாள்களில் குடும்பத்தோடு சுற்றுலா செல்லுங்கள். சுற்றுலாவுக்கு அதிகம் செல்லும் குடும்பம், மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்க, ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் மனக்கசப்புகள், கேள்விகள், தயக்கங்கள் விலகவும் சுற்றுலா சிறந்த தீர்வாக இருக்கும்.

Advertisements
%d bloggers like this: