Advertisements

உணவு: உலவும் நம்பிக்கைகளும் உண்மைகளும்

ணவு குறித்து நம்மில் நிலவும் நம்பிக்கைகள் ஏராளம். போகிற போக்கில் ஒருவர் `ஜூஸ் குடிப்பா… உடம்புக்கு நல்லது’ என்று சொன்னால் அப்படியே நம்பிவிடுவோம். எடை குறைக்க, சர்க்கரைநோய் தீர, உடல் வலுவாக… என வாட்ஸ்அப்பிலும்,

ஃபேஸ்புக்கிலும் வலம்வரும் செய்திகளைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுபவர்கள் நம்மில் அதிகம். அவற்றை அப்படியே நம்பிவிடலாமா… `கூடாது’ என்பதே மருத்துவர்களின் பதிலாக இருக்கிறது. அப்படி நம்மிடையே உலவும் ஆறு நம்பிக்கைகளையும் அவற்றின் உண்மைத் தன்மைகளையும் விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ்.

நம்பிக்கை:

பழங்களை ஜூஸாக்கிக் குடிப்பதைவிட அப்படியே சாப்பிடுவது நல்லது!

உண்மை:

சரி. பழங்களை ஜூஸாக்கினால் அவற்றிலிருக்கும் நார்ச்சத்து போய்விடும். அப்படியே சப்பிடுவதுதான் நல்லது. கடைகளில் சுத்தமான நீரில் செய்கிறார்களா, ஐஸ் கட்டிகள் சுத்தமான நீரில் செய்யப்பட்டவையா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. எனவே, வீடுகளில் தயாரிக்கப்படும் ஜூஸ்தான் ஆரோக்கியமானது. சர்க்கரை சேர்க்காமல் ஜூஸ் அருந்தினால் இன்னும் சிறப்பு.

நம்பிக்கை:

எலுமிச்சை அசிடிட்டிக்கு (Acidity) நல்லது!

உண்மை:

தவறான நம்பிக்கை. அசிடிட்டி இருந்தால், அமிலத்தன்மையுள்ள உணவுகளை உட்கொள்ளக் கூடாது.
டீ, காபி, காரம், புளிப்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். நோயாளிகளுக்கு வெறும் வயிற்றில், எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு ஜூஸ் போன்ற அமில உணவுகளைக் கொடுத்தால், ஏற்றுக் கொள்ளாது. பால் மற்றும் பால் பொருள்களைச் சாப்பிட்டால் அசிடிட்டி பிரச்னை இன்னும் தீவிரமாகும் என்று  சொல்வதும் தவறு. அசிடிட்டி உள்ளவர்கள் சாப்பிடுவதற்கு முன்னதாக பால் அல்லது தயிர் சாப்பிடலாம். ஆனால், புளிப்பான தயிரைச் சாப்பிடக் கூடாது.

நம்பிக்கை:

வெளியிடங்களில் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல!

 

உண்மை:

முழுக்கச் சரியான கருத்தல்ல…  ஹோட்டல்களில் நாம் சாப்பிடும் உணவு வேகவைக்கப்பட்டதா, பேக்கிங் முறையில் தயாரானதா, வறுத்ததா, முழுதானியங்களில் தயாரிக்கப்பட்டதா என்பதையெல்லாம் கவனத்தில்கொண்டு சாப்பிட வேண்டும். அவற்றில் எது சரியான உணவு என ஆராய்ந்து, தேர்ந்தெடுத்துச் சாப்பிட வேண்டும். ஹோட்டல்களில் சாலட்டாகக் (Salad) கிடைக்கும் நறுக்கிய காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அதேபோலக் காய்கறிகளை உடனே சேர்த்துச் செய்யும் ஃப்ரைடு ரைஸ், புலாவ் போன்றவற்றையும் தவிர்க்கவும். அங்கே உடனடியாக, அவ்வப்போது காய்கறிகளை நறுக்கிப் பரிமாற மாட்டார்கள். ஏற்கெனவே நறுக்கிவைத்திருப்பதைத்தான் கொடுப்பார்கள்; உணவில் சேர்ப்பார்கள். அந்தக் காய்கறிகளிலும் பழங்களிலும் பாக்டீரியாக்கள் சேர்ந்திருக்கும். எனவே, சாலட்டை வீட்டில் செய்து சாப்பிடுவதே நல்லது. முதலில் ஹோட்டல்களில் விற்கப்படும் ஆரோக்கியமான உணவுகள் குறித்து அறிந்துகொள்வது நல்லது.

நம்பிக்கை:

நம் உடலுக்குத் தேவையான கால்சியத்துக்காக தினமும் பால் குடிக்க வேண்டும்!

உண்மை:

சரியான கருத்து. ஆனால், பாலிலிருந்து 32 சதவிகிதம் கால்சியத்தை நம் உடல் எடுத்துக்கொள்ளும். எள், கீரைகள், அத்திப்பழம், கேழ்வரகில் கால்சியம் அதிகமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு நம் உடலுக்குச் சராசரியாக 600 மில்லிகிராம் கால்சியம் தேவை. எனவே, பால் நல்லது.

நம்பிக்கை:

ஆர்கானிக் உணவுகள் சாப்பிடுவதால் மட்டும் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படாது. அவை எளிதாகக் கிடைப்பதுமில்லை.

உண்மை:

தவறான கருத்து. நாம் வீட்டிலேயே வளர்க்கும் அல்லது தெரிந்தவர்கள் வளர்க்கும் ஆர்கானிக் காய்கறிகளில் மருந்துகள் தெளிக்கப்படுவதில்லை. கடைகளில் மத்திய அரசின் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ (FSSAI) அங்கீகார முத்திரையுடன் விற்கப்படும் ஆர்கானிக் காய்கறிகளைத் தாராளமாக வாங்கிச் சாப்பிடலாம். அரசின் முத்திரை இல்லாமல் விற்கப்படுபவை ஆர்கானிக் காய்கறிகளே அல்ல… இப்போது பரவலாக சிறு நகரங்களில்கூட ஆர்கானிக் காய்கறிகள் கிடைக்கின்றன.

நம்பிக்கை:

சைவ உணவுகளில் புரதச்சத்து குறைவு

உண்மை:

தவறு. சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்களுக்கு பெரும்பாலும் அவர்கள் சாப்பிடும் உணவுகளிலிருந்தே புரதச்சத்து கிடைத்துவிடும். பால், பால் பொருள்கள், முளைகட்டிய தானியங்கள், பருப்பு வகைகள், பட்டாணி, பனீர் எனப் புரதச்சத்துள்ள உணவுகளின் பட்டியல் பெரிது. பாலே குடிக்காதவர்களுக்குத்தான் புரதச்சத்து குறைபாடு ஏற்படும். மேலும், ஒருவரின் ஒரு கிலோ எடைக்கு ஒரு நாளைக்கு 1 கிராம் புரதம் தேவை. இந்த அளவு வயதுக்கு ஏற்ப மாறுபடும். நடுத்தர வயதுள்ள ஒருவருக்கும், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள்… என ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் புரதத்தின் அளவு மாறுபடும்.

Advertisements
%d bloggers like this: