தடுமாற்றமா? தலைச்சுற்றலா? – காதுகளைக் கவனியுங்கள்!

காது கேளாமைக்கான அறிகுறிகள் சில நேரங்களில் வித்தியாசமாக இருக்கலாம். ஆரம்பநிலையிலேயே அறிகுறிகளை உணர்ந்தால் ஆபத்துகளைத் தவிர்க்கலாம். அப்படிச் சில அறிகுறிகளை அறிவோமா?

* காதுக்குள் `ஙொய்…’ என்று ஒரு சத்தம் வந்து வந்து போகிறதா..? அது, காது கேளாமைக்கான ஆரம்ப அறிகுறி. தனியறையில், இரைச்சலில்லாத சூழலில் இருக்கும்போது அதிகமாக, அடிக்கடி, தொடர்ந்து இப்படி காதுக்குள் சத்தம் கேட்டால், உங்கள் காது நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.

காதுகள் பாதிக்கப்படுவதில் மிக முக்கியப் பங்காற்றுபவை ஹெட்போன்கள். அதிகமாக ஹெட்போன் பயன்படுத்துபவர்களுக்கு எட்டிலிருந்து பதினைந்து நிமிடங்களுக்கு அதிக வால்யூமில், ஹெட்போனில் பாடல் கேட்டால், நிரந்தரமாகக் காது கேட்கும் திறன் பறிபோக வாய்ப்பிருக்கிறது. ஹெட்போனை எடுத்த பிறகும்கூட காதுகளில் சத்தம் கேட்கிறதா..? நீங்கள் அதிகச் சத்தத்தில் பாடலைக் கேட்டிருக்கிறீர்கள் என்பதற்கான குறிப்பு அது. `சத்தத்தைக் குறைக்கும் ஹெட்போன்களை’ (Over the ear noise cancelling Headpohones) வாங்கிப் பயன்படுத்துவது காதுகளுக்குப் பாதுகாப்பு. ஏனென்றால், இவை ட்ராஃபிக் சத்தம் போன்ற சுற்றுச்சூழல் சத்தங்களைக் குறைத்துவிடும். அதனால், வால்யூமை அதிகம் வைத்துக் கேட்கவேண்டிய அவசியம் ஏற்படாது.

இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் சிறிய அளவிலான `இயர் பட் ஹெட்போன்கள்’ (Ear Bud Headphones) ஆபத்தானவை. இவை செவிப்பறைக்கு மிக அருகே பொருத்தப் படுகின்றன. நேரடியாகக் காதுக்குள் சத்தம் போகும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஹெட்செட்கள் காதுக்குள் இருக்கும் ஜவ்வில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
அஜாக்கிரதையாக இருக்கும் நேரம் தவிர, சாதாரணமாகவே தடுமாறி விழுவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா? காது கேளாமை பிரச்னைக்கான அறிகுறியாகவும் அது இருக்கலாம். நமக்குக் காது கேட்பதில் பிரச்னை ஏற்பட்டால், சிறு ஒலியைக் கேட்பதற்குக்கூட அதிகமாக மெனக்கெடவேண்டியிருக்கும். அதாவது, குறைந்த அளவுக்குக் கவனம் செலுத்தவேண்டிய செயலுக்கும் மூளைக்கு அதிக வேலை கொடுக்கவேண்டியிருக்கும். காதுக்குள்ளிருக்கும் மெல்லிய குழாய்கள், நன்றாகக் கேட்க வேண்டும் என்பதற்கான சிக்னலை மூளைக்கு அனுப்பும்.  இது அடிக்கடி நடப்பதால், மூளையில் சிறு பாதிப்பு ஏற்பட்டுத் தலைசுற்றுவதுபோன்ற நிலை ஏற்படும்.
வயதான காலத்தில் ஏற்படும் காது கேளாமை பிரச்னை என்றாலும்கூட, அது நினைவாற்றல் குறைவதற்கான அடையாளம்தான். அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் வெளியிடும், `ஜாமா இன்டெர்னல் மெடிசின்’ (JAMA Internal Medicine) பத்திரிகை 70 வயதுக்கு மேற்பட்ட 2,000 பேரிடம் ஓர் ஆய்வை நடத்தியது. அந்த ஆய்வில் காது கேளாமை பிரச்னை உள்ளவர்களின் யோசிக்கும் திறன், நன்றாகக் காது கேட்பவர்களைவிட மிக வேகமாகக் குறைவதாகக் கண்டறிந்திருக்கிறது. செவித்திறன் பாதிக்கப்படும்போது, மூளை நினைவுகளைச் சேமித்துவைக்கவும், யோசிக்கவும் அதிகச் சக்தியைச் செலவழிக்க வேண்டியிருக்கும். 
சுரங்கப்பாதையில் நடக்கும்போது எழும் ரயிலின் சத்தமோ, வாகனங்களின் ஹாரன் சத்தமோ எரிச்சலை ஏற்படுத்தலாம்; ஆனால், வலியை ஏற்படுத்துவதில்லை. அந்த நேரங்களில் காதுகளில் வலி ஏற்பட்டால், அது காதுகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதைக் குறிக்கும். “உங்களுக்குக் காது கேளாமை ஏற்பட்டால், மிக அதிகமான ஒலிபெருக்கிச் சத்தத்தைக்கூட, மிகக் குறைந்த சத்தமாகக் கேட்பதற்குக் காதுகள் திணறும். இதனால் வலி உண்டாகும். அந்த வலி எப்படி இருக்கும் என்று விவரிப்பது கடினம். காதில் ஏதோ குத்துவது போலவோ,  இழுத்துப் பிடிப்பதுபோலவோ இருக்கலாம்’’ என்கிறார்கள் நிபுணர்கள். இரைச்சல் நிறைந்த திரையரங்குகள், ரெஸ்டாரன்ட்களில் இருக்கும்போது காது கேட்கவில்லை என்றால், அந்தச் சூழலை, சுற்றி இருப்பவர்களைக் குறை சொல்லாதீர்கள். நன்றாகச் செயல்படும் காதுகளால் இரைச்சலான அறையிலும், தனக்குத் தேவையானதை மட்டும் தேர்ந்தெடுத்துக் கேட்க முடியும். அப்படிக் கேட்க முடிவில்லையென்றால், அது கேட்கும் திறனில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பைக் குறிக்கும்.

%d bloggers like this: