இனி எல்லாம் சுகமே!

‘‘பெண்களின் சிந்தனைப் போக்கிலும் மாற்றம் தேவை. தங்களை ஓர் ஆண் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிற அதேநேரத்தில், அவனது மனோபாவத்தையும் பெண் புரிந்துகொண்டு அவனைக் கையாண்டால் வாழ்க்கை இனிமையாக இருக்கும்’’ என்கிறார்

உளவியல் மருத்துவரான அசோகன்.
‘‘இயல்பாகவே பெண்ணின் மூளையின் அமைப்பு எதையாவது யோசித்துக் கொண்டே இருக்கும் தன்மை கொண்டது. இந்த அமைப்பின் காரணமாகத்தான் Overthinking என்ற பிரச்னைக்கும் பெண்கள் ஆளாகிறார்கள்.
ஒரு நிமிடம் கூட பெண்களால் எதையும் யோசிக்காமல் இருக்கவே முடியாது. அதேநேரத்தில் ஆண்களால் நிமிடக்கணக்காக எதையுமே யோசிக்காமல் இருக்க முடியும். ஆண்களைக் காட்டிலும் பெண்களின் உணர்வுகளும், எதிர்பார்ப்புகளும் சற்று அதிகம் என்றே உளவியலும் கூறுகிறது.
இதன் அடிப்படையில்தான் பெண் தன் எதிர்காலம் குறித்தும் தன்னுடைய வாழ்க்கைத் துணை பற்றியும் அதிகம் கனவு காண்கிறாள். ஆனால், கனவுக்கும் எதார்த்தத்துக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது என்பது புரியும்போது மனம் உடைந்துபோகிறாள்.
பெண்களின் எதிர்பார்ப்புகளை சில நேரங்களில் ஆண்களால் பூர்த்தி செய்ய முடியாமல் போகும்போது, அதற்கு ஆண்கள் சொல்லும் நியாயமான காரணங்களைப் பெண்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஆண் அன்பானவராக, அழகானவராக, அதிக சம்பளம் வாங்குபவராக, எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவராக இருப்பதோடு தனது எதிர்பார்ப்புகள் அனைத்தையும் உடனடியாக பூர்த்தி செய்யும் நபராக இருக்க வேண்டும். தனக்கென இடமும், நேரமும் ஒதுக்க வேண்டும். தன்னைப் பாராட்டுவதோடு, ரசிக்கவும், வர்ணிக்கவும் வேண்டுமென்று பெண்கள் எதிர்பார்ப்பதுண்டு.
இப்படி சர்வ லட்சணமும் பொருந்திய ஓர் ஆணை திருமணம் செய்துகொள்ள நினைப்பதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், எல்லா மனிதரிடத்திலும் நிறைகுறைகள் இருக்கும். ஒருவர் எல்லாவிதத்திலும் சிறந்தவராக இருப்பது சாத்தியமில்லை.
நமக்குப் பிடித்த மாதிரி எல்லா தகுதிகளுடனும் ஒருவரை உருவாக்க வேண்டும் என்றால், ‘எந்திரன்’ திரைப்படம் போல ஒரு ரோபோவைத்தான் ஆர்டர் செய்து தயாரிக்க வேண்டியிருக்கும்.
‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்பதுபோல காதலரோ, கணவரோ அவரது குறைநிறைகளுடன் ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும். எல்லா மனிதர்களுமே குறைகள் உடையவர் என்பதைப் புரிந்துகொண்டு வாழ்க்கையின் நல்ல விஷயங்களைப் பார்க்கும் Optimist மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
கணவர் பெரிய வேலையிலும் இருக்க வேண்டும். அதேநேரத்தில் தான் சினிமாவுக்குக் கூப்பிட்டாலும் வர வேண்டும், வெளியூரில் நடக்கும் தன்னுடைய உறவினர் வீட்டு விசேஷத்துக்கும் வர வேண்டும் என்று இரட்டைக் குதிரை சவாரி செய்ய விரும்புவது எல்லா நேரத்திலும் சரி வராது.
பெரிய வேலையில் ஒருவர் இருந்தால், அதற்கேற்றார்போல் அலுவலகத்திலும் அவருக்கு வேலை அதிகமாகத்தான் இருக்கும். அதை புரிந்துகொள்ளாமல் ‘என்னைவிட வேலை முக்கியமா’ என்று கேட்பதால், சண்டை சச்சரவுகள்தான் மிச்சமாகும்.
இன்னொரு முக்கிய விஷயத்தையும் பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். உளவியல்ரீதியாகவே ஆண்களைவிட அதிகம் மனப்பக்குவம் கொண்டவர்கள் பெண்கள். 20 வயது பெண்ணுக்கு இணையான மெச்சூரிட்டி, 20 வயது ஆணுக்கு இருப்பதில்லை.
அதனால், ஆண்களைக் கவனமாக / ஒரு குழந்தையைப் போல் பாவித்துக் கையாண்டால், அவர்கள் தங்களால் முடிந்த அளவுகடந்த நன்மைகளை பெண்களுக்குச் செய்வார்கள். அதேபோல், அவர்களுடைய தொழிலுக்கு உதவியாகவும் நடந்துகொண்டால் ஆண்களின் நன்மதிப்பை ஒரு பெண் பெற முடியும்.
மற்ற ஆண்களோடு ஒப்பிட்டு தரம் தாழ்த்துவதும், அவர்களை மட்டம் தட்டுவதுபோல பேசுவதும் பலன் தராது. மனைவியை நேசிக்கிறேன் என்பதற்காக ஒருவர் தினமும் ஐ லவ் யூ சொல்ல வேண்டும் என்று அவசியமும் இல்லை. தினசரி வாழ்க்கை போராட்டங்களிலும், தொழில்ரீதியிலான பிரச்னையிலும் இருக்கும் ஆணுக்கு அதற்கெல்லாம் ஏற்ற மனநிலை எல்லா நேரங்களிலும் இருக்காது.
கணவன், மனைவி இடையே சரியான புரிதல் இருத்தல், தன் இணையரின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்தல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல், ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வது, பொது இடத்தில் மற்றவர்கள் மத்தியில் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பேசுதல், யார் தவறு செய்தாலும் தனியாக அழைத்து அதை அவருக்கு புரியும் விதத்தில் எடுத்துரைத்தல், இருபாலரும் அவர்கள் சார்ந்துள்ள குடும்பம், சமூகம் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளை புரிந்து நடத்தல் போன்றவற்றைப் பின்பற்றினால், அது மேற்சொன்ன பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவியாக இருக்கும்’’ என்கிறார் அசோகன்.

நன்றி குங்குமம் டாக்டர்

%d bloggers like this: